இன்னம்பூரான்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? ‘சக்தி’ மகத்தான ஆற்றல் படைத்த பெண் தெய்வம் என்று ஹிந்து மத வழிபாடு தெரிவிக்கிறது. மனித உருவில் அதனுடைய சாதனையை கேளுங்கள். முதல் உலக யுத்தத்தின் போது சோற்று பஞ்சமும், நிம்மதியற்ற வாழ்க்கையும் ரஷ்ய பெண்ணுலகத்தை பெரிதும் பாதித்தது. இன்னலும், கொடுமையும் தாங்கமுடியாமல் பெண்ணினமே போர்க்கோலம் பூண்டது; கொதித்தெழுந்தார்கள்; புரட்சி செய்தார்கள். இது நடந்த தினம்: பிப்ரவரி மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை. (கிரகேரியம் நாட்காட்டி படி, மார்ச் 8, 1917) நாலே நாட்களில் ஜார்ஜ் மன்னன் முடி துறந்தான். புரட்சியில் வாகை சூடி அமைக்கப்பட்ட தற்காலிக அரசு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. 1917 வருட ரஷ்ய புரட்சிக்கு பின்னணிகள் பல. ஆனால், ‘சக்தி’யின் போர்க்கோலத்தை புறக்கணிக்கலாகாது.

இன்றைய தினம் உலகின் பல நாடுகளில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. தேசம், இனம், மொழி, கலாச்சாரம், நிதி நிலை, அரசியல் போன்ற எல்லைகள் நற்பண்புகளை துண்டு துண்டாக பிரித்து அலசக்கூடும். முதற்கண்ணாக, அந்த எல்லைகளை கடந்து, பெண்ணின் பெருமையை பேசுவோமாக. அவர்களின் சாதனைகளை புகழுவோமாக. பெண்மையின் எதிர்நீச்சல்களின் பாமரகீர்த்தி செப்புவோமாக. வருங்கால சந்ததியினருக்கு கொடுப்பினையாக இருக்கப்போகும் பெண் என்னும் சக்தியையும், அதனுடைய ஆற்றல்களையும் ஊக்குவிப்போமாக. தமிழக நடைமுறை, இந்திய பண்பாடு என்று அதை ஒரு குறுகிய வட்டத்தில் பனிக்கட்டி போல் உறைய வைக்காமல், உலகளாவிய பரந்த நோக்கில் யாவரும் காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

முதலில் வரலாற்றின் மைல்கல்களை பார்ப்போம். பெண்களுக்கு என்று சில தொழில்கள் -ஆசிரியை, தாதி, தையல் இத்யாதி. நியூ யார்க்கில் தொழிற்சாலைகள் பெருகப் பெருக, ஆடை தைப்பதற்கு அணி அணியாக பெண்கள் அமைக்கப்பட்டு, கொத்தடிமையாக கொடுமைப்படுத்தப்பட்டனர். அதை எதிர்த்துப் போராட, அமெரிக்காவின் சோஷலிஸ்ட் கட்சி ஃபெப்ரவரி 28ம் தேதியை மகளிர் தினமாக அனுசரித்தது. (தற்காலம், துணிமணி தைக்க நாங்கள் செல்வது, அமெரிக்காவின் நகர் ஒன்றில் வசிக்கும் ஒரு ரஷ்ய அகதிப் பெண்ணிடம். அவருக்கு எஜமானி, அவர் தான்.)

அதற்கு அடுத்த வருடமே, உலகளாவிய சோஷலிஸ்ட் அமைப்பு, ஐரோப்பாவின் கோபன்ஹேகன் நகரில் கூடி, இதற்கு ஆதரவு நாடினர். 17 நாடுகளிலிருந்து நூறு பெண்மணிகள், இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

அதற்கு அடுத்த வருடமே, மார்ச் 19ம் தேதியை மகளிர் தினமாக ஐரோப்பிய நாடுகளில் விமரிசையாக கொண்டாடினர். பத்து லக்ஷம் மகளிர் பங்கு கொண்டு, வாக்குரிமையும், பதவிகளில் பங்கும், வேலை வாய்ப்பும் நாடினர். மகளிரை தாழ்த்தி நடத்தும் பாரபக்ஷம் ஒழியவேண்டும் என்று குரல் எழுப்பினர்.

ஐ.நா. ஸ்தாபனம் மார்ச் 8, 1975 அன்று முதன்முறையாக மகளிர் தின விழா எடுத்தது. அந்த அந்த நாடு, அவரவர் மரபுக்கேற்ப, எந்தவொரு தினத்திலும் இந்த விழா எடுக்கலாம். பெண்ணின் உரிமையும், உலக சமாதானமும் இணைத்துக் கொண்டாடப்படட்டும் என்றது, டிஸெம்பர் 1977ல் அந்த ஸ்தாபனத்தின் பொது மன்றம். இந்த இணைப்பின் முக்கியத்துவத்தை கவனிக்கவும், இந்த கட்டுரையை திறக்கும் செய்தியிலிருந்து.

எனினும், உலகமுழுவதிலும் வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க அமைப்புகள் இருப்பதும், அவை தேவையாக இருப்பதும், தலைமுறை தலைமுறையாகக் கண்கூடு. அகில உலகமும் ‘மகளிர் தினமாகக்’ கொண்டாடும் மார்ச் 8ம் தினமன்று, இது விஷயமாக, ஒரே ஒரு கோணத்தை மட்டும் முன் வைக்கிறேன்.

ஆளுமை என்பது அண்டிப் பிழைப்பவர்களை மேய்க்கும். பல நூற்றாண்டுகளாக, சமுதாயம் அந்த ஆளுமையை ஆண் இனத்திற்கு அளித்துள்ளது. போதாக்குறையாக, கருத்தரிப்பது, பெண்களை, ஆணின் கைப்பாவையாக, அமைத்துவிட்டது. இந்த சூழலிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்றத் தேவை யாதெனில்:

பெண்ணின் பெருமையை ஆண்கள் சாற்றினால், பெண்களுக்கு உவகை பொங்கும். ஆண்களுக்கும் அவ்வாறே. இந்த நடைமுறையை அன்றாடம் நாம் நல்ல இல்லறங்களில் கண்டு வருகிறோம். இலக்கியமும், வரலாறும் அடிக்கடி உரைக்கும் உண்மை இதுதான். அன்பின் அரவணைப்புதான் இந்த பண்பின் மூலாதாரம்.

இந்த தின விழாவைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லவும்; எந்த அளவுக்கு, சம்பிரதாயமாகவும், நடைமுறையிலும் இந்திய/தமிழ் சமுதாயம் பெண்ணின் பெருமையைப் போற்றி வருகிறது என்பதை ஆய்வு செய்யவும்.

1 thought on “பெண்ணின் பெருமை

Leave a Reply

Your email address will not be published.