அமெரிக்கப் பெண்களின் நிலை
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்கப் பெண்களின் நிலையையும் இந்த மகளிர் தினத்தன்று பார்ப்போம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்று பல பெண்கள் குரல் எழுப்பினாலும் அமெரிக்கப் பெண்களுக்கு 1919-ஆம் ஆண்டில்தான் ஓட்டுரிமை கிடைத்தது. அப்போதும் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கவில்லை. ஓரளவாவது படித்திருக்க வேண்டும், சொத்து இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் இருந்தன. எந்த வித நிபந்தனையும் இல்லாமல் எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடைக்க பல தசாப்தங்கள் பிடித்தன. அதே மாதிரிச் சொத்து உரிமையும் இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களுக்குக் கிடைத்தது.
திருமண விஷயத்திலும் ஆண்களுக்குத்தான் முதல் உரிமை. ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சந்தித்து, இருவருக்கும் மற்றவரைப் பிடித்துப்போய், பின் இருவரும் ஒன்றாகக் கணவன், மனைவி போலவே சேர்ந்து வாழ்ந்து வந்தாலும் திருமணம் என்ற சொல்லை ஆண்தான் முதலில் எடுக்க வேண்டுமாம். சில ஜோடிகளின் விஷயத்தில் அவர்கள் பல வருடங்கள் ஒன்றாகப் பழகிய பிறகும் ஆண் திருமணப் பேச்சையே எடுக்காமல் இருக்கிறான். கணவன், மனைவியான எங்கள் நண்பர்கள் இருவருக்கு 65 வயது இருக்கலாம். அவர்கள் அந்தக் காலத்திலேயே ஐந்து வருடங்கள் சேர்ந்து பழகினார்கள். ஏன் அத்தனை நாட்கள் திருமணம் செய்து கொள்ள எடுத்தீர்கள் என்றால் கணவனின் பக்கம் கையைக் காட்டுகிறார் மனைவி.
இவர் இரண்டு வருடங்களிலேயே திருமணத்திற்குத் தயாராகி விட்டாராம். ஆனால் கணவர்தான் திருமணத்திற்கு இசைவு தர ஐந்து வருடங்கள் எடுத்தாராம். இதற்கு முன் பெண்ணுடைய தாயார் மற்ற ஆண்களோடு இவருக்குப் பரிச்சயம் செய்து வைக்க முயன்றாராம். அப்போதெல்லாம் அவருக்கு எரிச்சல், எரிச்சலாக வருமாம். இப்போதைய கணவருக்காகப் பொறுமையாகக் காத்திருந்தாராம்.
நிறைய ஜோடிகளின் விஷயத்தில் இப்படித்தான். பெண்களுக்கு ஒரு ஆணைப் பிடித்து விட்டால் அவனோடு இணைவதற்குத் தயாராகி விடுகிறார்கள். ஆனால் இந்த ஆண்கள் அப்படி எளிதில் முடிவுக்கு வருவதில்லை.
ஒருவரையொருவர் பிடித்து, சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் போதும் உடலுறவு வைத்துக்கொள்ளப் பெண்கள் விரும்பவில்லை என்றால் அப்படி இருக்கும் பெண்களோடு சேர்ந்து வாழ ஆண்கள் விரும்புவதில்லை. இதனால் பல தாய்மார்களே தங்கள் பெண்களைக் கட்டுப்பாட்டை விடுவதற்கு ஊக்குவிக்கிறார்கள்.
ஒரு பெண் இப்படித்தான் பல மாதங்கள் இருந்து விட்டுப் பின் வேறு வழியில்லாமல் உடலுறவு வைத்துக்கொள்ள இணங்கினாள். அப்படியும் அந்த ஆண் எளிதில் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஒரு வழியாக அவனை வற்புறுத்திச் சம்மதிக்க வைக்க ஆண்டுகள் பல கழிந்தன.
இப்போது கணவன் மனைவி போல் திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்வதில் இழப்பு பெண்களுக்குத்தான். எனக்குத் தெரிந்த ஒரு பெண் தன் குழந்தையைக் கூட்டி வரப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றாள். “உனக்குக் கல்யாணம் ஆகி விட்டதா?” என்று கேட்டால் ‘எனக்கு அந்த அளவிற்கு அதிர்ஷ்டம் இல்லை’ என்கிறாள். சில பெண்கள் குழந்தை ஒன்று பெற்றுக் கொண்டால் எப்படியும் தன்னைக் கல்யாணம் செய்து கொள்வான் என்று நினைத்துக் கருத்தடைச் சாதனம் இல்லாமலேயே உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள்.
அப்படி நடந்தாலும் பல ஆண்கள் அந்தப் பெண்களை மணந்து கொள்வதில்லை. குழந்தையை வளர்க்கும் பொறுப்பு இவளுடையதாகிறது. சில பெண்கள் தங்களால் வளர்க்க முடியாமல் தத்துக் கொடுத்து விடுகிறார்கள். சிலர் தனித் தாய்மார்களாக இருந்து கஷ்டப்படுகிறார்கள்.
அமெரிக்காவில் இப்போது திருமணத்தின் போது கன்னியாக இருக்கும் பெண்களை, மிகப் பழைய கத்தோலிக்கக் குடும்பங்களில் தவிர, பார்க்க முடியாது. இப்படித் திருமணத்திற்கு முன்பே பெண்கள் கன்னித்தன்மையை இழந்து விடுவதால் கன்னித்தன்மையை இழக்காதவர்களை மற்றவர்கள் ஏளனமாகப் பார்க்கிறார்களாம். ஏன் தெரியுமா? இந்தப் பெண்களை எந்த ஆணுக்கும் பிடிக்கவில்லை என்பதால்தான் இவர்கள் கன்னித்தன்மை கெடாமல் இருக்கிறார்களாம்!
சமீப காலம் வரை கன்னிப்பெண் (virgin)என்ற நிலை அப்படியொன்றும் அவமானப்பட வேண்டிய நிலை அல்ல (Virginity is not a dirty word) என்று விளம்பரம் செய்தார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் கன்னித்தன்மையை இழக்காமல் இருக்கும் பெண்களை அமெரிக்கச் சமூகம் ஏதோ பெரிய குறை உள்ளவர்கள் என்று எண்ணுகிறது.
அந்த அளவிற்கு அமெரிக்காவில் உடலுறவு என்பது சாதாரணமாக ஆகி விட்டது. இதில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான்.
இந்தியாவில் திருமணம் செய்து கொள்வதும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும் ஒன்றாக இணைந்து போக வேண்டிய விஷயங்கள். ஆனால் அமெரிக்காவில் அப்படியில்லை. குழந்தை பெற்றுக் கொள்வதற்காகத் திருமணம் செய்து கொள்வதோ பெண் கருவுற்று விட்டால் அவளைத் திருமணம் செய்து கொள்வதோ அமெரிக்காவில் கேள்விப்படாத விஷயங்கள்.
இரண்டும் வெவ்வேறு பாதைகளில் சென்று கொண்டிருக்கின்றன. நாங்கள் வசிக்கும் பல மாடிக் கட்டிடத்தின் மேனேஜருக்கு வயது நாற்பது. இருபது வருஷங்களுக்கு முன் இவள் பெற்றுக்கொண்ட பெண் குழந்தை உடல்வளர்ச்சி இன்றிப் பிறந்ததாம். அப்படிப்பட்ட குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கும் ஆராய்ச்சிக்குப் பணம் திரட்டிக் கொண்டிருக்கிறாள். இப்போது எட்டு வயதில் இன்னொரு பெண் குழந்தை இருக்கிறது. அடுத்த வருஷம் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள். திருமணம் விரும்பினால் வேண்டும்போது செய்து கொள்ளும் நிகழ்ச்சி ஆகி விட்டது.
எது பெண்களின் முன்னேற்றம்? இந்த முன்னேற்றம் கண்டிப்பாக இந்தியப் பெண்களுக்கு வேண்டாம்.
படத்திற்கு நன்றி:http://www.familyanatomy.com/2009/12/17/living-together-part-marry-first-or-just-move