பன்முக நாயகர் முகில் தினகரன்-ஓர் அறிமுகம்

0

அன்பு நண்பர்களே,

நண்பர் முகில் தினகரன் அவர்கள், சமூகவியல், மனித வள மேம்பாடு ஆகியவைகளில் முதுநிலைப் பட்டம் பெற்று மத்திய அரசு சார்பு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகப் பணி புரிகிறார். இதுவரை 600 சிறுகதைகள் எழுதியுள்ளார். 300க்கும் மேற்பட்ட கதைகள் பல்வேறு பிரபலமான பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. 40 நாவல்களும், 70 கட்டுரைகளும், 200க்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார். பெரும்பாலானவைகள், மேடைகளிலும் வாசிக்கப் பட்டுள்ளன. 100 மேடைகளுக்கும் மேல் பட்டி மன்றமும் கண்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் சிறுகதை எழுதுவது எப்படி என்ற பயிற்சிக் களமும் அமைத்துக் கொண்டிருக்கிறார். அமரர் டி.வி.ஆர். சிறுகதைப் போட்டி, தினகரன் நாளிதழ் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு சிறுகதைப் போட்டி, மாலைமுரசு நாளிதழ் நடத்திய பொங்கல் சிறுகதைப் போட்டி, உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய அமரர் சேஷசாயி நினைவு சிறுகதைப் போட்டி, ஈரோடு தமிழ்ச்சங்கம் மற்றும் துளி மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி உலகக் கலைத் தமிழ் மனறம் கோவை நடத்திய ஆண்டு விழா சிறுகதைப் போட்டி, இப்படி இவர் பரிசு வாங்காத சிறுகதைப் போட்டிகளே இல்லை எனலாம்.

இதுவரை இவர் வாங்கியுள்ள விருதுகளின் விவரம்:

தமிழ்ச்சிற்பி”– தில்லி தமிழ்ச் சங்கம், புது தில்லி
“கவிக்கோ”— கோவை வானொலி நேயர் பேரவை, கோவை
“கொங்கு தமிழ் கவி மணி”—தமிழ்நாடு புதிய வெளிச்சம் அமைப்பு, கோவை
“சிறுகதைச் சுரபி”— உலக கலைத் தமிழ் மன்றம்,கோவை
“சிறுகதைச் செம்மல்”— சோலை பதிப்பகம் சென்னை
“பைந்தமிழ்ப் பாவலர்”-தமிழ் வயல் இலக்கிய அமைப்பு, கோவை
“தமிழ் வள்ளல்” —சோலை பதிப்பகம், சென்னை
“சிறுகதை மாமணி” — உலக கலைத் தமிழ் மன்றம,; கோவை
“புலவர் சு.ரா.நினைவு விருது”–அனைத்துலகத் தமிழ் மாமன்றம் திண்டுக்கல் “பாவேந்தர் பாரதிதாசன் நினைவு விருது”-அனைத்துலகத் தமிழ் மாமன்றம்,திணடுக்கல் “வண்ணப் பூங்கா விருது” -வண்ணப் பூங்கா மாத இதழ், சென்னை.. கொங்கு மண்டலம், கோவையில் தற்போது வாழ்ந்து வருகிறார். நம் வல்லமைக்கு இவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

அன்புடன்

ஆசிரியர்.

பந்தயப் புறாக்கள். (சிறுகதை)

‘த பாருங்க மாப்ள…எங்க பரம்பரைல தலைச்சன் குழந்தைகள் எல்லாமே பெண் குழந்தைகதான்….அதனால…என் தங்கச்சி கலாவுக்கும் நிச்சயம் பெண் குழந்தைதான் பொறக்கப் போவுது” கலாவின் அண்ணன் பரந்தாமன் உற்சாகமாய்ச் சொல்ல,

‘அதுதான் இல்லைங்கறேன்…எங்க வம்சத்துல எல்லாருக்குமே முதல் குழந்தை ஆண் குழந்தைதான்…அதனால கண்டிப்பா என் மனைவியும் ஒரு ஆண் குழந்தையைத்தான் எனக்குப் பெத்துக் குடுக்கப் போறா…” குணசேகரன் தன் மனைவியின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னான்.

தன் அண்ணனுக்கும், கணவனுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த சந்தோஷ உரையாடலை புன்சிரிப்புடன் ரசித்தபடி ஆஸ்பத்திரிக் கட்டிலில் அமர்ந்திருந்தாள் கலா. அவள் கை அவளையுமறியாமல் தன் நிறை வயிற்றைத் தடவியது.

‘ம்ஹூம்…நீங்க வேணாப் பாருங்க மாப்ள பெண் குழந்தைதான்.” இது பரந்தாமன்.

‘பாவம்…ஏமாறப் போறீங்க….ஆண் குழந்தைதான் பிறக்கப் போவுது” இது குணசேகரன்.

‘சரி…பந்தயம் வெச்சுக்குவோமா மாப்ள?”

‘தாராளமா”

‘எவ்வளவு வெச்சுக்கலாம்? நீங்களே சொல்லுங்க”

‘ம்ம்…எப்படியும் ஜெயிக்கப் போறவன் நான்தான்..அதனால தோக்கப் போற நீங்களே சொல்லுங்க” குறுஞ்சிரிப்புடன் சொன்னான் குணசேகரன்.

அவனுடைய அந்தக் குறுஞ்சிரிப்பு பரந்தாமன் மனதில் ஒரு கோப அலையைத் தட்டி விட, ‘எனக்கெல்லாம் எத்தனை ஆனாலும் குடுக்கறதுக்கு வக்கிருக்கு…அதனால பாவம் நீங்களே உங்க வசதிக்கேற்ப நிர்ணயம் பண்ணிக்குங்க மாப்ள” என்றான்.

‘அப்படின்னா….நான் வக்கில்லாதவனா?” ‘வெடுக்‘கென்று கேட்டான் குணசேகரன்.

‘அப்பத் தொகையைச் சொல்ல வேண்டியதுதானே?…ஆயிரமா?…லட்சமா?ன்னு”

பரந்தாமன் கேட்ட தொனி குணசேகரனுக்கு ரோஷத்தை உண்டாக்கி விட, ‘ஒரு லட்சம் பந்தயம்…ரெடியா?” என்றான் கத்தலாய்.

‘ஓ.கே…சம்மதம்” என்று அவசரமாய்ச் சொல்லி விட்ட பரந்தாமன், ஒரு விநாடி யோசித்து விட்டு, ‘மாப்ள… ஏற்கனவே ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டுப் பேசலையே?” தன் சந்தேகத்தைக் கேட்டான்.

‘சேச்சே…அப்படியெல்லாம் ஃப்ராடு பண்ற வம்சமில்லை எங்களோடது”

பரந்தாமன் அதை நம்பாதது போல் தன் தங்கையைப் பார்க்க, அவளும் ‘இல்லை‘என்று கூறும் விதமாய் இட வலமாய்த் தலையாட்டினாள்.

‘ஓ.கே!…இது வரை ஸ்கேன் பார்க்கலைங்கறதை நம்பறேன்…அதே மாதிரி இனிமேலும் பார்க்கக் கூடாது…அதுதான் பந்தயத்தோட நிபந்தனை…என்ன சம்மதமா?”

‘சரி…பார்க்க மாட்டோம்…ஆனா பந்தயத்துல தோத்துட்டு…‘சும்மா வாய்ப் பேச்சுக்குத்தான் சொன்னேன்…வெளையாட்டுக்குத்தான் சொன்னேன்‘னு சமாளிக்கக் கூடாது…”குணசேகரன் தன் மைத்துனனை நம்பாமல் கேட்டான்.

‘அந்த மாதிரி ஆளு நானில்லை மாப்ள…வாக்குச் சுத்தமான ஆளு”

‘எப்படி நம்பறது?” நக்கலாய் குணசேகரன் கேட்டுவிட,

‘ஹூம்…பொறக்கப் போற அந்தக் குழந்தை மேல சத்தியம்யா… போதுமா?” பரந்தாமன் விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கத்த,

நடுங்கிப் போனாள் கலா. பிரசவத்திற்கு டாக்டர் குறித்த நாளைக்கு மூன்று தினங்கள் முன்னதாக வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிப் படுத்திருந்தவளுக்கு அந்த இருவரின் விவாதமும், பந்தயமும் ஒரு அச்சத்தையே உருவாக்கியது. ‘கடவுளே…இதுல யார் ஜெயிச்சாலும் இன்னொருத்தருக்கு மனக்கசப்பு வந்துடுமே…!…அப்படித்தான் பந்தயம் கட்டின தொகையாவது சின்னத் தொகையா?…போனாப் போகுதுன்னு விட்டுடறதுக்கு…ஹூம்…ஆவேசத்துல ரெண்டு பேரும் லட்சத்துக்கில்ல போயிட்டாங்க!…நிச்சயமா தோத்துப் போறவங்களுக்கு அந்தத் தொகை ஒரு பெரிய நஷ்டமாத்தானே இருக்கும்..!…என்ன பண்றது?…எப்படி இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கறது?”

அண்ணனும், கணவனும் சென்ற பிறகு நிதானமாய் யோசித்துப் பார்த்தாள். பிறப்பு வாசலிலேயே தன் குழந்தை ஒரு பெரிய மனப் பிளவுக்கும்…உறவுப் பிரளயத்திற்கும்….காரணமாகிப் போய் விடுமோ?…என்கிற கவலை அவளை ஏகமாய் ஆக்கிரமிக்கத் துவங்குகையில் அடி வயிற்றில் ‘சுளீர்‘ என்று அந்த வலி ஆரம்பித்தது. ஆம்!…மூன்று நாட்கள் கழித்து வர வேண்டிய பிரசவ வலி அந்த நிமிடத்திலேயே எட்டிப் பார்த்தது.

கீழுதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு, ‘அ…ம்…மா…!” சிரமப்பட்டுத் தாயை அழைத்தாள். கதவுக்கு வெளியே நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்த அவள் தாய், ‘என்னம்மா…?” கேட்டபடியே அவசர அவசரமாய் உள்ளே வந்தாள்.

கலா தன் நிலைமையைச் சொல்ல, நர்ஸை அழைத்து வர ஓடினாள் அவள்.

அங்கே பரபரப்பு பற்றிக் கொள்ள, அடுத்த சில நிமிடம் கலா பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப்பட்டாள். அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பிரசவ அறைக்குள்ளிருந்து வேக வேகமாய் வெளியே வந்த லேடி டாக்டர் ‘இங்க யாரும்மா…கலாவோட ரிலேஷன்ஸ்?”

‘சொல்லுங்க டாக்டர், நான்தான் கலாவோட அம்மா”

‘நார்மல் டெலிவரிக்குத்தான் இத்தனை நேரம் முயற்சி பண்ணினோம்…பட்…அதுக்கு சான்ஸ் இல்லை போலிருக்கு…ஸோ…சிசேரியன்தான் பண்ணி ஆகணும்…அவங்க ஹஸ்பண்ட் இருக்காரா?”

‘இப்ப வந்துடுவார் டாக்டா;”

‘ஓ.கே….வந்ததும் சொல்லுங்க…ஆபரேஷன் ஆரம்பிச்சிடுவோம்”

சில நிமிடங்களிலேயே குணசேகரன் வந்து சேர்ந்ததும், ஒப்புதல் கையொப்பங்களுக்குப் பிறகு ஆபரேஷன் துவங்கியது.

எங்கிருந்தோ வந்து சேர்ந்தான் பரந்தாமன்.

ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே படபடக்கும் இதயத்துடன் இருவரும் காத்திருந்தனர்.

ஒரு புறம் கலாவின் தாய், ‘எப்படியாவது மகளுக்கு நல்ல முறையில் பிரசவம் ஆகி…தாயும் சேயும் எந்தவித சேதாரமும் இல்லாமல் பிழைச்சு வரணும்‘ என்று எல்லாக் கடவுளர்களையும் வேண்டிக் கொண்டிருக்க,

‘பெண் குழந்தை பிறக்கணும்…முருகா..” என்று பரந்தாமனும்,

‘ஆண் குழந்தையைத்தா அய்யப்பா” என்று குணசேகரனும், தனித் தனியே தங்களுக்குப் பிடித்த கடவுள்களிடம் மனுப் போட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு லட்ச ரூபாய் பரந்தாமனுக்கும் குணசேகரனுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

எல்லோருடைய பார்வையும் ஆபரேஷன் தியேட்டர் கதவின் மீதே அமர்ந்திருக்க,

நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது.

‘க்ளக்” கதவு திறக்கப் பட,

வெளியே வந்த நர்ஸ் எல்லோருடைய முகத்தையும் ஒரு முறை கூர்ந்து பார்த்து விட்டு, ‘கலா புருஷன்..?”

‘சொல்லுங்க சிஸ்டர்…நான்தான்” குணசேகரன் ”திக்..திக்” நெஞ்சுடன் முன் வந்தான்.

‘உங்க…வொய்புக்குப்….பெண் குழந்தை பிறந்திருக்கு”

தொங்கிப் போனது குணசேகரனின் முகம். ‘ச்சே…ஒரு லட்சம் போச்சா?”

‘ஹா…ஹா…”பரந்தாமன் சூழ்நிலை மறந்து கத்திச் சிரித்தான்.

அந்த நர்ஸூக்குப் பின்னாடியே வந்த இன்னொரு நர்ஸ், ‘கலா வீட்டுக்காரரு யாருங்க?” சத்தமாய்க் கேட்க,

சலிப்புடன் தலையைத் தூக்கிப் பார்த்தான் குணசேகரன்.

‘ஆண் குழந்தை பொறந்திருக்குங்க உங்களுக்கு”

பாய்ந்து வந்தான் பரந்தாமன், ‘ஹேய்…என்ன வெளையாடுறீங்களா…?…அந்த நர்ஸ் ‘பெண் குழந்தை”ங்குது…நீ வந்து ”ஆண் குழந்தை”ங்கறே..என்ன எங்களையெல்லாம் பைத்தியம் பண்ணுறீங்களா?”

‘ஹலோ…மொதல்ல நீங்க யாரு அதச் சொல்லுங்க” நர்ஸ் சிரித்தவாறே கேட்க,

‘அண்ணன்மா…கூடப் பொறந்த அண்ணன்”

‘அப்படின்னா டபுள் ஸ்வீட் குடுங்க மாமா…உங்க தங்கச்சி ஆண் ஒண்ணு…பெண் ஒண்ணுன்னு ரெட்டைக் குழந்தையைப் பெத்திருக்கா”

எல்லோருடைய முகத்திலும் பிரகாசம் பரவ, அங்கே சிரிப்பொலி சேதாரமின்றி வந்தது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழா விமரிசையாக ஏற்பாடாகியிருந்தது.

‘மாப்ள….எங்க வம்சத்துல முதன் முதலாப் பொறக்கற பெண் குழந்தைக்கு எப்போதுமே…எங்க குலதெய்வமான ‘விசாலாட்சி‘ அம்மனோட பெயரைத்தான் வெப்போம்…” பரந்தாமன் தன் தங்கையின் பெண் குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு சொல்ல,

‘ம்ஹூம்…அதெல்லாம் முடியாது….நாங்க எங்க கொள்ளுப் பாட்டியோட பேரைத்தான் வெப்போம்” குணசேகரன் வீறு கொண்டு எழுந்தான்.

கலாவின் நினைவில் பிரசவத்தின் போது அந்த ரெண்டு பேருக்குமிடையில் நிகழ்ந்த அந்தக் கசப்பான போட்டி ஞாபகத்தில் வந்து போனது. ‘ச்சூ…ரெண்டு பேரும் கொஞ்சம்…சும்மா இருக்கீங்களா?…என்னோட குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கறதுன்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணி வெச்சிருக்கேன்…அதைத்தான் வைக்கப் போறேன்..” கலா ஆணித்தரமாகச் சொன்னாள்.

‘அட..அப்படியா?….சொல்லு…சொல்லு என்ன பேரு?” பரந்தாமன் பறந்தான்.

‘ம்ம்ம்…பொண்ணு பேரு…பவதாரிணி….பையன் பேரு…நித்தின்”

குணசேகரன் ஏதோ சொல்ல வாயெடுக்க,

‘பாருங்க…யாரும் எதுவும் கேட்கக் கூடாது…என்னோட முடிவுதான் இறுதி முடிவு” கணவனை அடக்கினாள் கலா.

அதை ஏற்றுக் கொள்ளும் விதமாய்த் தலையாட்டியபடி குணசேகரன் பரந்தாமனைப் பார்க்க,

அவனோ!.. தன் மடியில் கிடந்த தங்கையின் மகளை, ‘பவதாரிணி…பவதாரிணிக்குட்டி…எங்க உன்னோட தம்பி…நித்தின்?” என்று கொஞ்சிக் கொண்டிருந்தான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.