தி. சுபாஷிணி

இருபத்து ஐந்து வருடங்களுக்குமுன், இதுபோல் -ஓர் இரவுதான் அதுவும். எந்தச் சூழ்நிலையிலும் நான் பொருந்துவேன் என்று தெளிந்து என்னை அறிந்து என்னைப் பெற்றவர்களிடம் விடை பெற்று, என் வாழ்வின் அடுத்த கட்டமாகிய குடும்ப வாழ்வைத் தொடங்குவதற்குப் புறப்பட்டு வந்தேன். முப்பத்து முப்பது கோடித் தேவர்களும் நட்சத்திரங்களாய் என்னுடன் வந்து வழியனுப்பியதாய் மகிழ்ந்து இருந்தேன். அது உண்மையெனும்படிதான் அன்று நான், ஏன் பல வருடங்கள் கழித்தும் அது பொருள்படா எண்ண ஏற்றம் என்று எண்ணவில்லை. ஆனால் இன்று முன்னிரவில் நடந்த நிகழ்வு என் பொறுமையையும் தாய்மையையும் உரசிப்பார்க்கும் என்று எள்ளளவும் நான் எண்ணவில்லை. அதன் நீட்சி இன்னமும் வீட்டில் வளைய வருகிறது. அதை வெட்டிவிடவே விரும்புகின்றேன். அதன் அழுத்தம், என்னைப் புதைகுழியில் தள்ளி, எழமுடியாத அளவு அழுத்துகிறது.

அதன் உள்ளே உட்கருவிற்குள் அமிழ்ந்தே போகிறேன். தேடித்தேடித் தேர்ந்தெடுத்த பெயர், பெயருக்கேற்று விளங்குவாள் என்னும் நம்பிக்கையில், நாமகரணம் சூட்டிய பெயர், சுற்றம் சூழ, தொட்டிலிட்டுச் செவிவழியில் உட்செலுத்திய பெயர், அடிமனத்தில் கரைந்துபோன விந்தையின் மயக்கத்தை உற்றுப்பார்க்கின்றேன். பல வருடங்களுக்குப்பின் குடும்ப வாழ்வின் சுழற்சியில், மெதுமெதுவே ஆணின் ஆளுகைக்கு உட்பட்ட இல்லறமாட்சியில் கழன்றுபோன அப்பெயரைத் தேடியது நினைவில் வருகின்றது. தன் பெயர் மறந்து போன ஈ ஒவ்வொரு விலங்கிடம் சென்று “என் பெயர் எனன வென்று தெரியுமா” என்று கேட்கும். எல்லா விலங்கும் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிடும். இறுதியில் குதிரை ‘ஈ’யென இளிக்கும். சட்டென்று அதுதான் தன் பெயர் என்று நினைவிற்கு வந்துவிடும். நிம்மதியாய் பறந்து போகும். பெயர் மறந்துபோன அந்த ‘ஈயின்’ மயக்கநிலையின் வலி என்னையன்றி வேறு யார் அறிய இயலும்! “பெயர்” என்பது வெறும் ஒரு ஆளை அழைக்கும் ஏற்பாடு மட்டும்தானா என்ன? அதைக் கூட்டிக் குறைத்து குழைந்துக் கூப்பிடும்போது வரும் கிறக்கம் இருக்கிறதே… அனுபவித்தால்தான் அறிய முடியும். எனக்கு அப்படியொரு அனுபவம் கிடைத்திருக்குமா? நினவலையில் அப்படியொன்றும் பதிவானதுபோல் தெரியவில்லை. பெயருக்குப்பின் அமிழ்ந்து போன நான் யாருக்கும் புலப்படவில்லை.

புதைகுழியின் அழுத்த அலைகளின்று என்னை மீட்க எழ முயலுகின்றேன். அவ்வாறு எழமுயலுங்கால், ஒருநாள் எதேச்சையாய் செய்தித்தாளில் என் புகைப்படம் வெளிவந்திருப்பதாக என்னைச் சுற்றியிலுள்ள அனைவரும் கூறியது காட்சியாய் நிற்கிறது. “இதோ, முதல் வரிசையில் அமர்ந்திருப்பது நான்தான்” என்-று பல கரங்கள் சுட்டிக் காண்பிக்கின்றன. இதுவா நான்? இதுதான் என் முகமா? அவ்வுருவம் அணிந்திருக்கும் அதே புடவைதான் அன்றும் அணிந் திருந்தேன். என்னில் நான்தான். எப்படி இப்படி மாறிப்போனேன்! எப்படி இருப்பேன் நான்! யோசிக்க யோசிக்க பின் மண்டை வலித்தது. வெற்றிடமாக உணர்ந்தேன். ‘ஆசைமுகம் மறந்து போச்சே’ என்று பாடிய பாரதி தேவையில்லாமல் இடை புகுகிறார். எனினும் சிறு சந்தேகம்! அப்போது அவ்வமயம் என்னைக் கடந்து சென்ற வேலைக்காரப் பெண்ணை அழைத்து ‘இது யாரு தெரிகிறதா?’ என வினவ, “என்னம்மா நீங்கள்! விளையாடுகிறீர்களா? நீங்கள்தான்” என்கிறாள். எனக்கு இன்னும் அப்போது என்மனம் ஒப்பாது தவித்த தவிப்பு, அறிவு அறிவுறுத்திய இருப்பு. அறியவில்லை உணர்கின்றேன். அப்படியென்றால், என் பெயர் மாதிரி, என் வடிவமும் என் நினைவினின்று நிழலாகிச் சென்று விட்டதா? இக்கேள்விற்கு விடை இருக்கிறதா? தெரியவில்லை.

நேரத்திற்கு நேரம் நேர்த்தியாய்
வண்ணம் மாற்றும் வானம் &
வாங்குவது நல்லியா? குமரனா?

என்று எழுதிய என்கவிதைத் துண்டில் இருந்த எழுத்துக்கள் சிதைந்து இருப்பதாய் என் உறவு ஒன்று கூறிய பின்தான் நானும் உணர்ந்தேன். சிதைந்தது என் பெயர் மட்டுமல்ல? முகம் மட்டுமல்ல? என் கையெழுத்தும் என்று எனக்குப் புரிய வந்தது.

பின்னோக்கிச் செல்லுங்கால், படிக்குங் காலத்தே கையெழுத் திற்காக கூடுதல் மதிப்பெண் வாங்கிய மகிழ்ச்சி. இப்போது இலேசாக பனிவிலக்கிய விடியலாய் உணர்கின்றேன்… இந்த எழுத்துச் சிதைவு எப்போது நடந்தது! ஆம்! எப்போது நடந்திருக்கலாம்! திருமணம் முடிந்து முதல் மகள் பிறந்த பின்னா? இல்லை கணவரது உறவுகள் எல்லாம் வீடு நிறைய வந்து போய்க் கொண்டிருந்த போழ்தா? இல்லை இரண்டாவது மகளின் பிறப்பிற்குப் பின்பா? ஒன்றின் சிதைவோ, சிறப்போ திடீரென்று நடப்பதல்லவே! மெல்ல மெல்ல அது நடந்து கொண்டு இருந்திருக்கின்றது நான் உணராமலே. நாம் எழுதப் படிக்கத் தெரிந்தவர் தாமா என ஐயமே எழும் சில சமயங்களில். ஆம் ஒவ்வொரு முறை விண்ணப்பங்களில், காசோலைகளில் கையெழுத்திடும்போதும், என் ஈரக்குலை நடுங்கிப்போகும். என் பெயருக்கு வரும் எழுத்துக்களை நினைவிற் கொண்டு வருவதற்குள் நான் படும்பாடு இருக்கிறதே! அப்பப்பா? ஆண்டவனை ஆயிரம் முறை வேண்டி, ஒவ்வொரு எழுத்தாக மனதிற் கூறிக்கொண்டு என் பெயர் எழுதுவதற்குள் முதுகுத்தண்டு சில்லிட்டுவிடும். இதைத்தொடரும் கணவரின் பெயரை வெகு எளிதாக எழுதிவிடுவேன். விந்தையிலும் விந்தையே! அப்படியொரு ஆளுகை அவருக்கு என் மேல் இருந்திருக்கின்றது. இவ்வழுத்தங்களும் ஆளுகைகளும் ஒரு நாளில் நடைபெற்றதல்ல. என்னுடைய அறிவிற்கும் உணர்விற்கும் இடையேயுள்ள இடைவெளியில் அமர்ந்து, என்னை அறியாது செய்தவைகள்தாம்.

எண்ணப் புதைகுழியிலிருந்து மீண்டு வெளிவருகிறேன். என் சிதைவுகள், அழிவுகள் யாவற்றையும் கணக்கெடுத்துக் கொண்டுதான் வருகின்றேன். பாதிப்பின் முழுத்தாக்கம் பொங்கி வழிந்து கொண்டுதான் இருக்கின்றது. என் வீடு கடற்கரையை ஒட்டிய வீடாய் இருப்பினும் நான் உமிழும் உணர்வுக் கொப்பளிப்புகளின் தகிப்பைத் தாங்காது வீடு நெளிகிறது. நிகழ்வின் தொடக்கத்தில் எங்கே அமர்ந்தேனோ அங்குதான் இன்னமும் நான் இருக்கின்றேன். இரவுமட்டும் நகர்ந்து இருமணிக்கூராயிற்று. இந்நீட்சியைத்தாங்காது, என்னுள் பலமுறை சொல்லிக் கொள்கிறேன். ‘‘இக்கணத்திலிருந்து நான் ஒரு தனி மனுஷி” என்று. எனக்குள் இது நடந்து கொண்டே இருக்கிறது.

இரவின் மெல்லிய குளிர் உடலை உரசுகிறது. இருபத்து ஐந்து வருட உறவு என்கிறது. சட்டை பண்ணவில்லை நான். கடல் ஒடுங்கி காற்றும் பேய்க்கூச்சல் ‘‘ஆ ஊ” என்று அதிரடிக்கிறது. நான் அமர்ந்த நிலையினின்று கூறுகின்றேன்; யாருக்காக வீட்டை விட்டு வந்தேனோ, யாருடன் எந்தச் சூழ்நிலையிலும் பொருந்துவேன் என்று நினைத்து வாழ்வைத் துவங்கினேனோ, அவரிடம் என்னை சொல்லால் முன் வைக்கின்றேன், ‘‘இக்கணத்திலிருந்து நாம் தனி மனிதர்கள்” என்று. விடுபட்டுத் தெறித்து விழுந்த சொற்கள் ஒவ்வொன்றிலும் என் பொறுமையையும் வேதனையையும் பொறுப் பையும் சுமந்து அவரைப் பார்த்தன. இவ்விரவுக் கடலொலியில் என் சொல்லொலி காணாது போய்விடுமோ என்று பதறினேன்; பயந்தேன். அவர் இதை எதிர்பார்க்கவில்லை. ஏன் நம்பவும் முடியவில்லை அவரால். ஏனெனில் நான் எதையும் தாங்கும் பாறை என்று அவருக்குத் தெரியும். வழக்கமாய் அவர் சீண்டிப்பார்க்க, நான் பதறி, பின் சுருங்கிக்கொள்வேன். இன்றிரவு அமைதியாய் இருந்த வானவெளி திடீரென்று மாறியதுபோல் மாறியது. ஒரு பிழை திருத்தம். நான் சீண்டி வேடிக்கைப் பார்க்கவில்லை. வேதனையில் விளைந்த விளைவு இது. நான் விதைத்துப் பயிராக்கிய பயிர் அழிந்துவிடக் கூடாதே என்ற பாதுகாப்பின் பயம் இது. ‘‘நீயா?” என்று தன் பொருள் ஒவ்வொன்றையும் எடுத்து அடுக்கி வைக்கும்போது பார்த்த பார்வை. உன் இயல்பு இது அல்லவே எனக்கூறியது என் அடிநெஞ்சை அறுக்கத்தான் செய்கிறது. நான் அசையவே இல்லை. கல்லாய் அமைந்து இருக்கிறேன்.

அந்த இரவின் அணு ஒவ்வொன்றிலும் அந்த நிகழ்வு நிழற்படமாய்த் தெரிகிறது. நிகழ்வின் சூத்திரதாரி நழுவுகிறார். ஆனால் அவர் விட்டுச் சென்ற நிகழ்வின் துகள்கள் மெதுவாக மூச்சு முட்டுகிறது. நேரம் நழுவ நழுவ மூச்சுத் திணறுகிறது. மெதுமெதுவே இரவின் அடர்த்தியை உணர்கின்றேன். அது அடர்த்தியாக அடர்த்தியாக நிகழ்வின் நீட்சி, நிழல் எல்லாம் சுருங்கி ஒன்றுமிலாது ‘இருட்டு’ மட்டும் இருக்கின்றது. வீடு ஆபத்திலிருந்து மீண்டு பாதுகாப்பில் வந்து விட்டதுபோல் ஓர் உணர்வு. அதனுள் என்னை அப்படியே ஒடுக்கிக் கொள்ள விரும்புகின்றேன். என்னை விட்டு நீங்கிய அம்மாவின் கதகதப்பை உணர்கின்றேன். பாவம் அவள்: கர்மயோகி. எங்களுக்கு அதைத்தான் விட்டுச் சென்றாள். ‘அம்மா’ தான் இருட்டாய் வந்திட்டாளோ? இருக்கலாம். நான் அதை விலக்க விரும்பவில்லை ‘இருட்டு’ இருக்கட்டும், என்னுடன் அது விரும்பும் வரை, அல்லது நான் அதை விரும்பும் வரை.

மெல்ல மெல்ல என் மனம் விரிவடைய விரிவடைய இரவின் மணம் ஆட்கொள்கிறது. அது எனக்கு சுதந்திரத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது. என் மனம் உணர வைக்கிறது. ‘அடங்குதல், அச்சம் ஒருபொருள் நிமித்தம் இல்லை, ஒருவர் பொருட்டு என்பது இல்லை’ என்று இரவின் ஓரிதழ் புரியவைத்தது. உன் விருப்பத்தை அச்சமில்லாது செயல்படுத்தலாம். இலக்கியம் படிக்கலாம். அதை நாடிச் செல்லலாம். இனி உறவின் பிறப்பு இறப்புகளின் சந்தோஷத் தையும் துக்கத்தையும் நிதானமாய் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அன்று, அப்பாவின் மரணத்தை யாருடைய அப்பா மரணம்போல் கலந்து கொண்ட நிலை.

அன்று… ஆம். ஏன் பெண்ணாய்ப் பிறந்தோம் என்று ஆத்திரமும் ஆதங்கமும் மாறி மாறி எழுந்தது. காரணமும் உண்டு. மருத்துவமனையில் அப்பா தன் உயிருக்கும் போராடிக் கொண்டிருந்தார். மகளாய்ப் போய்ப் பணிவிடை செய்யாவிடினும் “அப்பா” என அன்பாய்ப் பார்க்கக் கூட இயலாத அன்றாட குடும்ப வேலை இருந்தது. வீட்டில் யாருக்கும் அப்படியொரு எண்ணமே கொள்ளவில்லை. மாமனார் மட்டும் மருத்துவமனையில் இருந்திருந்தால், குடும்பமே அங்கே குடிகொண்டிருக்கும். அன்று நான் தவித்த தவிப்பை, என் கால் நகக்கண் வரை வலித்த வலியை இப்போதும் நன்கு உணர்கின்றேன். ஒரு நிலையில் இனி என்னாய் தாங்காது என மருத்துவமனைக்கே கிளம்பிச் சென்று விட்டேன்.

அப்பா… அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எங்களை இயல்பாய் இருக்கச் செய்தவர். அவர் இருக்கும் அறைக்குள் சென்றேன். அப்பா கட்டிலில் படுத்திருந்தார். அவரைச் சுற்றி அவருடைய அனைத்து நெருக்கமான நண்பர்களும் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. உடல் நலம் இல்லாதவர் அறைபோலவே இல்லை. ஏதோ விழாவிற்காக அவரை அழைக்க வந்ததைப்போல் சூழ்நிலை அங்கு இருந்தது. கலகல என சிரிப்பு அலை மோதுகிறது. ஆம்! அப்பா! மிகவும் நயம்பட நகைச்சுவையாய் பேசுபவர். அவர் இருக்குமிடம் ஆனந்தம் பொங்கிவழியும். அவர் எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் கொண்டாட்டம்தான் குடிகொள்ளும். இதோ! மருத்துவமனையில் அந்த அறை முழுவதும் நோயின் வேதனையையே விரட்டி அடித்துக் கொண்டிருந்தார். அறைவாசலில் நின்றேன். ‘வாவா’யென உள்ளம் நிறைய வாய்வழி வரவேற்றார். அப்பாவை நான் நோக்கினேன். “கவலைப்படாதே! நான் சரியாகிவிட்டேன்” என்று புன்னகைத்தார் அவர்.

அவருக்காக நான் தயாரித்த கஞ்சி, அவருக்குப் பிடித்த ரசம், பழங்கள் எல்லாம் நிறைந்த பச்சைநிறக் கூடையை அவர் அருகிலேயுள்ள மேசையில் வைத்தேன். அதைப் பார்த்து அப்பா சிரித்தார். ஆம்! நான் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் அவருக்குப் பிடித்தவைகளை நிரப்பிக் கொண்டு அந்தப் பச்சைக் நிறக்கூடை என்னுடன் வரும். இன்றும் இந்த அவசரத்திலும் வந்தது. அப்பாவை மிகவும் பிடிக்கும். அவர் எங்களுக்கு அன்பை, நட்பை, காதலை, உறவை மதிக்கக் கற்றுக் கொடுத்தவர். அவரிடம் எப்போதும் எந்தவிதப் போட்டியும் பொறாமையும் வன்வார்த்தைகளும் இருக்காது. அவ்வளவு மென்மையான ஆண்மகனைச் சுற்றி எப்போதும் மூன்று தலைமுறைகள் குடியிருக்கும்.

அஞ்சு நிமிடங்கள் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். (எனக்கு அப்போது தெரியாது. இனி அவரை எப்போதும் பார்க்கப் போவதில்லையென்று). அதுவரை புன்னகைத்த இதழ்கள் கோணின. கைகள் அலைபாய்ந்து எதையோப் பற்றிச் கொள்ளத் துடித்தன. எல்லாம் வினாடிப் பொழுதுதான். அப்பா அமைதியானார். மீளாத இடத்திற்குச் சென்றுவிட்டார் என்பதை நாங்கள் அப்போது உணர வில்லை. மருத்துவர்கள் வந்தார்கள். அவர்களால் இதை நம்ப முடியவில்லை. “மாஸிவ் ஹார்ட் அட்டாக்’’ என்றனர். எங்களுக்கு அப்போது புரிபடவில்லை. சந்தோஷமாய் இருந்தவருக்கு இது எப்படி நிகழும் என்றே அறிய முடியவில்லை. யமன் அழைத்தபோழ்து, அவர் வரமாட்டேன் என்றுதான் கூறியிருப்பார். ஏனெனில் அப்பாவிற்கு வாழ மிகவும் பிடிக்கும். சாகப்பிடிக்காது. ஏனெனில் அப்பா எங்களுக்கு எப்படி ஆனந்தமாய் வாழ்வது என்றுதான் கற்றுக் கொடுத்து இருக்கிறார். 5 நிமிடங்களுக்கு முன்பு இருந்த சூழ்நிலை இப்போது மாறிவிட்டது. கொண்டாட்ட அலைகள் அவரிடம் போய் அடைந்துவிட்டன. எனக்கு மிகவும் பிடித்த அப்பாவை விட்டு விட்டு நழுவத் தொடங்கினேன். என் பிரதி நிதியாய் பச்சை நிறக்கூடை அங்கு அமர்ந்து இருந்தது. என் வீட்டு யதார்த்தம் என்னுள் உறைக்க, எனக்கு மிகவும் பிடித்த அப்பாவை விட்டுவிட்டு மூன்றாவது மனுஷிபோல் வீடு திரும்பினேன்.

இதை நான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நேர் செய்ய இயலாது. இனி உறவுகளின் நட்புகளின் விழாக்களுக்கு, உதவிக்கரம் நீட்டுவதற்கு முன்அனுமதி கேட்டு நான் நிற்க வேண்டாம். பாதி விழாவில் பதறி அடித்துக்கொண்டு ஓடி வரவேண்டாம். அன்று என் சித்தி பெண் திருமணத்திற்-கு அனுமதி பெறுவதற்குள் நான் 5 நாட்கள் பார்த்த ஒத்திகை, அதற்காக வீட்டில் கூடுதலாக உழைத்தவை எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருந்தது இந்த இரவுதானே. இனி அந்த சிரமம் இல்லை. நானும், என் வழி வந்தவர்களும் தங்குதடையின்றி எங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இப்படியாக இரவு தன் ஒவ்வொரு இதழ்களை விரித்து விளக்கி என்னை ஆற்றுப்படுத்தியது. அதற்கு நான் இருபத்து ஐந்து வருட உறவை விலையாய்க் கொடுத்திருக்கின்றேன் என்றேன் அதனிடம். ‘ம்’ ஆமாம். என்ன செய்வது’ என்று ஆமோதித்தது இரவு.

இருந்த இருக்கையைவிட்டு கொஞ்சம் எழுவோம் என எழுகின்றேன். ‘சட சட’வென்று சத்தம் என்னைச் சுற்றிக் கேட் கின்றன. என் தளைகள் கட்டவிழ்கின்றன. இன்றைய இரவு இதற்கு ஒரு புன்னகை விரிக்கின்றது. இருட்டு இதழ் விரித்துப் புன்னகைக்கும் புன்னகையைப் பார்த்திருக்கிறீர்களா? இடையில் வெட்டும் மின்னல் கீற்றாய் பளிச்சென்று தெரியும். அதன் மகிழ்ச்சி வெள்ளமாய் நம்மை ஒட்டிக் கொள்ளும்.

இரவுகள் மட்டும் எனக்குத் துணையில்லாதிருந்தால் நான் சவமாய் இருந்திருப்பேன். ஒவ்வொரு இரவும் நான் அதன் மடியில் மடிந்து, அதன் அணைப்பில் புத்துயிர் பெறுவேன். அது என் ரகஸியங்களை என்னிடமிருந்து பெற்று அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்துப் பின் எனக்கே அளிக்கும். என்னை நான் இரவிற்குத்தான் ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். இன்றும் அப்படித்தான். பகலில் பட்ட பரவசங்கள், துயரங்கள், அவமானங்கள், கிடைத்த உறவுகள், பிரிக்கப்பட்ட பிரிவுகள், நான் இணைந்ததில் கிடைத்த பெருமிதங்கள், சந்தோஷங்கள், உடல்மெய்வலி எல்லாவற்றையும் அதற்குத்தான் ஒப்புக் கொடுத்துப் பழகியிருக்கின்றேன். இதுதான் என்னை ‘நானாக’ இருத்தியல் செய்ய உதவுகிறது. இது என் தாயின் சீதனமாகக் கூட இருக்கலாம். ஏனெனில் அவள் எதையும் யாரிடமும் பகிர்ந்து கொண்டு நான் பார்த்ததில்லை. தர்மத்தைச் செய்யும் யோகியாகத்தான் திகழ்ந்தாள்.

இப்பொழுது யாமத்தில் ‘நள்’ளொலி தவிர வேறெந்த ஒலியும் கேட்கவில்லை. இரண்டாம் யாமமாக இருக்கலாம். கடல் ஒலியும் அடங்கிய மாதிரி இருக்கின்றது. சுவர் கோழி போடும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. இதுவரை நான் பார்த்ததேயில்லை. இருட்டும் இதழ் விரித்து என்னிடம் உரையாடியதில், தன் அடர்த்தி குறைந்து பாரதி கூறிய குறைந்த ஒளி இரவாகி விட்டது.

இரவின் அடர்த்திக் குறையக் குறைய, அவர் குடும்பத்திற்காக தலைமையேற்று நடத்திய சிறப்பு, குழந்தைகளை வளர்த்த விதம், அறிவு புகட்டிய நேர்த்தி, தன் உறவுகளைக் கொணர்ந்து வேலை வாங்கிக் கொடுத்து, தன் வீட்டில் வைத்துப் பராமரித்து, திருமணம் செய்து கொடுத்த கடமை உணர்வு, தன் மருத்து அறிவைப் பகிர்ந்து கொண்டது, நேரங்காலம் பார்க்காது பக்கத்து வீட்டுப் பிள்ளை களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்த தன்மை, நேர்மை, தனக்கு இரு ஆடைகளுக்கு மேல் வைத்துக்கொள்ளாத எளிமை, தன் செலவைச் சுருக்கிய பாங்கு அனைத்தும் ஒன்றன்மேல் ஒன்றாக எழும்புகின்றன. இந்த இரவு சொல்லும் இவை அத்தனையும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மைதான்.

பகலின் நீட்சிதான் இரவு. பகலில் நடந்த நிகழ்வுகளுக்கு ஒப்புமை வாக்குமூலங்கள் இரவில் நடக்கின்றன. இரவும் நேர்மையாய் நடந்து கொள்கிறது. அது அனைவரின் உண்மை இயல்புகளையும் ரகஸியங்களையும் அறியும். நாம் அதனிடம் மறைக்கவோ, மறுக்கவோ இயலாது.

மூன்றாம் யாமம் மலர்கின்றது என்று நினைக்கின்றேன். என் கண்மலர்கள் தானாகவே மூட யத்தனிக்கின்றன. இதன் வாசனையை என் நாசியும் மனமும் உணர்கின்றது. இது தனித்தன்மை வாய்ந்தது. ஒரு பகலைவிட இரவில்தான் வாழ்கின்றேன். நம்மைத் தெளிய வைத்ததும் தெளிவின் வாசனையை உணர்த்தும் காலத்தின் வாசனை வழிதானே பிறவிகள் என்பார்களே!

வேதனையிலிருந்து விடுபட்டு, மனது நிர்மலமாகின்றது. அது என் உடல் முழுவதும் படர்கிறதை உணர்கின்றேன். மெல்லியதாய் வெண்மையான மஸ்லின் துணி நம்மேல் படர்ந்தால் எவ்வளவு மென்மையாய் உணர்வோமோ அவ்வளவு மென்மையாய், ஆனால் பாதுகாப்பின் வன்மையையும் உணர்கின்றேன். யாமங்கள் கடந்திருக்கலாம். ஏனெனில் அதன் மணமும் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கின்றது. ‘கடல் ஊருக்குள் வருகிறது’ என்னும் பெருங் கூக்குரல் எழுப்பி விட்டது. நான் அலங்க மலங்க விழிக்கின்றேன். இரவு தன் பாகாப்புப் போர்வையை எடுத்து நேரமாயிற்றுப் போலும்.

நன்றி : வண்ணத்திரை.

படத்திற்கு நன்றி :

http://www.aurorahunter.com/freebird.php

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *