பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 19
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
மின்தமிழ் இணையக் குழுமத்தில் விவாதித்த கேள்வியை அண்ணாகண்ணன் வழி பெற்றுப் பேராசிரியர் பதில் அளித்துள்ளார். அந்தக் கேள்வி:
கட்டாயமா, அவசியமா, நிச்சயமா, கண்டிப்பா முதலான சொற்களைப் பெருமளவில் யாருமே சரியாப் புழங்குறது இல்லை. ‘கட்டாயம்’ன்னா, நிபந்தனையின் பேரில் செய்வது; ‘அவசியம்’ன்னா, தவிர்க்க முடியாமையினால் செய்வது; ‘நிச்சயம்’ன்னா, நிர்ணயத்தின் பேரில் செய்வது; ‘கண்டிப்பா’ன்னா, நிர்ப்பந்தத்தின் பேரில் செய்வது…. compulsorily, necessarily, certainly, surelyன்னு ஆங்கிலத்துல மட்டும் சரியாப் பாவிக்கிறீங்களே?
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
தமிழைத் துல்லியமாகப் பயன்படுத்துவதில் தமிழர்கள் கரிசனம் காட்டுவதில்லை என்பதில் உண்மை இருக்கிறது. தூய தமிழ் எழுதுவதில் காட்டுமளவு அக்கறை, துல்லியத் தமிழில் காட்டுவதில்லை. அலங்காரத் தமிழுக்கு இருக்கும் பாராட்டு, நேர் தமிழுக்கு இல்லை. தமிழர்கள் தங்கள் மொழியின்மீது கொண்டுள்ள எண்ணப் பாங்கே இதற்குக் காரணம். தமிழ் வீட்டு மொழி; அதை எப்படியும் எழுதலாம் என்பது ஒரு எண்ணப் பாங்கு. அவைக்கு வந்தால்தானே ஆடை சரியாக இருக்க வேண்டும் என்னும் மனநிலை. தமிழ் ஆராதனைக்கு உரிய மொழி; அதை எப்படிப் பயன்படுத்தினாலும், போற்றிப் புகழ்ந்தால் போதும் என்பது இன்னொரு மனப் பாங்கு. இஷ்டப்படி காரியம் செய்துகொண்டு சாமியைக் கும்பிட்டுவிட்டால் போதும் என்னும் மனநிலை.
துல்லியமாக எழுத வேண்டும் என்பதில் கருதும் பொருளை உரிய சொல்லில் தர வேண்டும் என்பதும் அடங்கும். சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு, வழக்கு மரபால் ஏற்படுவது. வழக்கு மாறினால் பொருளும் மாறும். இன்றைய ஜனநாயக சமூகத்தில் வழக்கு பெரும்பான்மை வழக்கைக் குறிக்கிறது; கலாச்சார ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்தாலும் சரி, அரசியல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்தாலும் சரி, சமூகத்தில் அதிகாரம் உள்ளவர்களுடைய வழக்கை மட்டுமல்ல.
ஒரு சொல்லின் பொருளில் மாற்றம் ஏற்படும்போது, அதன் பொருள் சொல்லின் வேர்ச்சொல்லின் பொருளிலிருந்து விலகலாம். அதனால், பொருள் தொடர்புடைய பல சொற்களை ஒப்பிடும்போது, வேர்ச்சொல்லை வைத்து அவற்றை வித்தியாசப்படுத்த முடியாது. மேலும், வேர்ச்சொல்லை வைத்துப் பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது வழக்கைப் புறக்கணிப்பதாகும். இந்தச் சொல்லுக்கு இந்தப் பொருள்தான் என்று விதி செய்வது மொழியின் பயன்பாட்டை உள்ளபடி விவரிப்பதாகாது. ஆங்கிலச் சொற்களை வைத்துப் பொருள் வேறுபாட்டைக் காட்டுவது சிக்கலைத் தரும். இரு மொழிகளில் எல்லா வகையிலும் பொருள் ஒத்திருக்கும் சொற்கள் இருப்பது அபூர்வம்.
எந்த மொழியிலும் எல்லா வகையிலும் ஒத்திருக்கும் பொருளொக்கும் சொற்கள் (synonyms) இருப்பது அபூர்வம் என்பது மொழியியலில் ஒரு கொள்கை. பொருள் ஒத்திருந்தாலும் நடை (style), சொற்சேர்க்கை (collocation) முதலியவற்றில் வேறுபாடு இருக்கும். இதை ஏற்றுக்கொண்டால், கேள்வியில் உள்ள சொற்களுக்கிடையே (அந்த நான்கு சொற்களோடு ‘உறுதி’யையும் சேர்த்துக்கொள்ளலாம்) பொருள் வேறுபாடு இருக்கிறதா, பயன்பாட்டு வேறுபாடு இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்.
கட்டாயமாக, அவசியமாக, நிச்சயமாக, உறுதியாக, கண்டிப்பாக என்ற ஐந்து சொற்களில் முதல் மூன்றும் – ஆக என்ற உருபு இல்லாமலே வினையடையாக வரும்: ‘கட்டாயம், அவசியம், நிச்சயம் வருகிறேன்’. இவற்றில் முதல் இரண்டு சொற்களே வேண்டிய என்னும் பெயரெச்சத்தின் பின் வரும்: வர வேண்டிய கட்டாயம், அவசியம். முதல் நான்கு சொற்கள் உருபு இல்லாமல் பயனிலையாக வரும்: ‘அவள் வருவது கட்டாயம், அவசியம், நிச்சயம், உறுதி’. கடைசி நான்கு சொற்களும் – ஆன உருபேற்றுப் பெயரடையாக வரும்: ‘அவசியமான, நிச்சயமான, உறுதியான, கண்டிப்பான கொள்கை’. இந்த வினையடைகள் முழு வாக்கியத்தையும் தழுவாமல், வினையை மட்டும் தழுவி நிற்கும்போது கடைசி இரண்டு சொற்கள் மட்டுமே வரும்: ‘கொள்கையில் உறுதியாக, கண்டிப்பாக இருப்பார்’.
இது போன்ற இலக்கணக் கூறுகளால் ஐந்து சொற்களின் பயன்பாட்டிலும் வேறுபாடு இருப்பதைக் காணலாம். அவை வருமிடம் வித்தியாசப்படுவதைக் காணலாம். வருமிட வேறுபாடு இந்தச் சொற்களின் பொருள் வேறுபாட்டால் வரலாம்; அல்லது வேறு காரணத்தாலும் இருக்கலாம். பொருள் வேறுபாடு இருக்கிறதா என்று அறிய க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியைப் பார்க்கலாம். இந்த அகராதி 75 லட்சம் வார்த்தைகளைக் கொண்ட தரவு வங்கியைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டது. எனவே, இதில் தரப்படும் பொருள் வழக்கின் அடிப்படையில் இருக்கும். இந்தச் சொற்கள் என்னென்ன பொருளில் வழங்கப்பட வேண்டும் என்பதல்லாமல், என்னென்ன பொருளில் வழங்கப்படுகின்றன என்ற உண்மை தெரியும்.
இந்த அகராதி தரும் பொருள்கள்:
கட்டாயமாக: அவசியம், தவறாமல்; அவசியமாக: கட்டாயமாக, நிச்சயமாக; நிச்சயமாக: கட்டாயம், உறுதியாக; உறுதியாக: மாறாமல், நெகிழாமல்; கண்டிப்பாக: உறுதியாக
இந்த அகராதிப் பதிவிலிருந்து பிரச்சனையில் உள்ள ஐந்து சொற்களும் ஒன்றுக்குப் பதில் ஒன்று வரலாம் என்று தெரிகிறது. மேலே சொன்னபடி, மொழியில் பொருளொன்றிய சொற்கள் (perfect synonyms; words with identical meaning) இருக்காது; பொருளொத்த சொற்களே (synonyms, words with similar meaning) இருக்கும் என்றால், அகராதியில் தரப்படும் பொருள் ஒத்த பொருளே; ஒரே பொருள் அல்ல. அகராதிச் செய்தியின்படி, ஐந்து சொற்களிடையே பொருள் ஒப்புமை உண்டு என்று தெரிகிறது; மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளால் இலக்கண வேற்றுமை உண்டு என்று தெரிகிறது. இந்தச் சொற்களைத் தற்காலத்தில் பயன்படுத்தும்போது, ஒன்றுக்குப் பதில் மற்றொன்று வரலாம்; ஆனால் எல்லா இடத்திலும் அப்படி வராது.
தமிழர்கள் தமிழைத் துல்லியமாக உபயோகிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் இந்த நிலை மாறலாம். இலக்கண வேறுபாடு, பொருள் வேறுபாட்டில் பிரதிபலிக்கலாம்.
=====================================
(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)