ராம நாமத்தின் தேனைப் பருகிய ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்
விசாலம்
பகுள பஞ்சமி வந்தாலே மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், நம் முன் தம்பூராவை மீட்டியபடி, ஸ்ரீராம விக்ரஹம் முன்னால் அமர்ந்த நிலையைக் காண்கிறோம். உடனே திருவையாறும் அங்கு நடக்கும் “ஸ்ரீ தியாகராஜ ஆராதனை”யும் நம் முன் வரும். ஏனெனில் அன்றுதான் அவர் சித்தியடைந்தார்.
தை மாதத்தை சம்ஸ்கிருதத்தில் புஷ்ய மாதம் என்கிறார்கள். பகுள என்பது தேய்ப்பிறையைக் குறிக்கும். திதிகளில் பஞ்சமி என்பது அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள். இதனால் தான் ஸ்ரீ தியாகராஜ ஆராதனையை அவர் சித்தியடைந்த நாளான புஷ்ய பகுள பஞ்சமியில் திருவையாற்றில் நடத்துகிறார்கள்.
1925ஆம் ஆண்டு, அவருடைய பக்தர் பெங்களூரு நாகரத்தினம்மாள், தியாகராஜரின் சமாதி இருக்குமிடத்தில் ஒரு கோவில் கட்ட ஆசைக்கொண்டார். இதற்காக தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்துச் செலவு செய்து, ஓர் அழகான கோயில் கட்டினார். 1907இலிருந்து தொடர்ந்து ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளுக்கு ஆராதனை விழா நடந்து வருகிறது. முன்பெல்லாம் வானொலியில் ஒலிபரப்புவது வழக்கம். இப்போது உலகம் முழுதும் பார்த்தும் கேட்டும் ரசிக்கும்படி தொலைக்காட்சியில் மிகவும் அழகாக ஒளிப்பரப்பாகிறது.
பகுள பஞ்சமிக்கு முன்பாகவே அங்குக் கச்சேரிகள் களை கட்டும். அவர் இயற்றிய பாடல்களை இசைக் கலைஞர்கள் பலர், பக்க வத்தியங்களுடன் பாடுவார்கள். பகுள பஞ்சமியன்று அவருக்குக் கிரமப்படி அபிஷேகங்களும் அஷ்டோத்திர பூஜைகளும் நடக்க, அந்த நேரத்தில் புகழ் பெற்ற பாடகர்கள், பாடகிகள் பலர், அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனங்களைப் பாட ஆரம்பிப்பார்கள்.
நாட்டை ராகத்தில் “ஜகதானந்தகாரக” என்ற கீர்த்தனைத் தொடங்க, கூடவே பல வயலின்கள், பல வீணைகள், பல புல்லாங்குழல்கள் ஆகியவை, அந்த இசையில் சேர்ந்துகொள்ள, நாம் நம்மையே மறக்கிறோம். பல்லாண்டுகள் குன்னக்குடி அவர்கள், இந்த விழாவைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். ஆனால் இன்று அவர் இல்லாதது, ஒரு பெரிய இழப்புத்தான்.
தன் மகன் ஸ்ரீ தியாகராஜன் இசையில் மிகவும் சிறப்பாக தேர்ச்சிபெற வேண்டும் என்று தாய் சீதம்மாவின் ஆசை. குழந்தை கருவில் இருக்கும் போதே அந்தத் தாய் ஒரு கனவு கண்டார். நாரதரின் இசை அம்சமும் சரஸ்வதியின் கலைகளும் வால்மீகியின் அம்சமும் கொண்டு அந்தக் குழந்தை பிறக்கும் எனவும் பிற்காலத்தில் மிகப் பெரிய இடத்தைப் பிடிப்பான் என்றும் கனவில் தெரிந்தது. தந்தை ராமபிரும்மம் அவர்களும் இதே கனவைக் கண்டார். பிறந்த குழந்தைக்கு அந்த ஈசன் கட்டளைப்படி திருவாரூர் ஸ்ரீ தியாகேசனது பெயரையே மிக்க மகிழ்ச்சியுடன் சூட்டினார். தன் மகன் தன்னைப் போலவே மகா பண்டிதராக, நல்லாசிரியராக வர வேண்டும் என ஆசைப்பட்டார்.
சங்கீதம் பாட, நல்ல குரல் வளம் வேண்டும். இயற்கையாகவே தியாகராஜரிடம் நல்ல குரல் வளமும் சங்கீத ஞானமும் தகுந்த உழைப்பும் இசைத் திறமையும் மிக அபாரமாகவே இருந்தது.
இவர் சம்ஸ்கிருத கல்லூரியில் நாலு வருடங்கள் சம்ஸ்கிருத மொழியைப் படித்தார். வால்மீகி ராமாயணமும் படிக்க நேர்ந்தது. அப்போதுதான் ராம நாமத்தின் தேனைப் பருகி, ராம நாம பக்தியில் தன்னையே மறக்க ஆரம்பித்தார்.
தந்தை ராமபிரும்மம் அவர்கள், ஸ்ரீராமரது உருவத்திற்கு ஒருநாள், பூஜை செய்துகொண்டிருந்தார். மகன் ஸ்ரீ தியாகராஜர் தன்னிடமிருந்த பூக்களை
உதிரியாக எடுத்து அவரிடம் கொடுத்து வந்தார். அவரது கைகள் இந்த வேலையைச் செய்தனவே தவிர, அவரது கண்கள் ஸ்ரீராம விக்ரஹத்திலேயே
லயித்து நின்றது. மனம் முழுவதும் ஸ்ரீராமரிடம் ஒன்றிவிட்டது. அவரையும் அறியாமல் இசை பிறந்தது.
“நமோ நமோ ராகவாய அநிசம்
நமோ நமோ ராகவாய”
இதுவே இவரது முதல் கீர்த்தனை. இதன் ராகமோ, மனத்தைக் கொள்ளைக் கொள்ளும் தேசிய தோடி ராகம்.
அந்தப் பாடலின் சாராம்சம்:
“அப்பா ஸ்ரீ ராமா, உன்னை எப்போதும் நமஸ்கரிக்கிறேன். உலகத்திற்கெல்லாம் ஒரு கருணைக் கடல் நீதான். நீ, தஞ்சம் அடைபவர்களை ரட்சிப்பவன். இருளை அகற்றும் சூரியனைப் போல், பாவங்களை எல்லாம் அகற்றுபவன். ஆயுள் ஆரோக்கியத்தை அருள்பவன். அற்புதக் கவிகளைப் பரிபாலிப்பவன். ஆதி சேஷன் மீது பள்ளி கொண்டவன், தியாகராஜனால் வணங்கப்பெறுபவன்.”
பெற்ற தாயான சீதம்மாவுக்கு ஆனந்தக் கண்ணீர்….. அப்படியே தன் மகனுக்கு ஆசிகள் பல வழங்கியபடி மிகப் பெருமையுடன் பார்க்கிறார்.
அன்றைய தினத்திலிருந்து ஆரம்பித்த இசை அருவி, தெலுங்கிலும் சம்ஸ்கிருதத்திலும் பெருக்கெடுத்து ஒடியது. 2400 கீர்த்தனைகள் பாடியிருந்தார். ஆனால் நம்மிடையே ஆயிரம் பாடல்கள்தான் உள்ளன. அந்த மகான் கடைசியாகப் பாடிய பாடல், “கிரிபை நெலகொந்த ராமுதி’. ‘சஹானா” ராகம். இந்தப் பாடலைப் பாடி முடித்தவுடன் தன் சிஷ்யர்களை அழைத்து, “வரப்போகும் புஷ்ய பகுள பஞ்சமி தினம் ஒரு அற்புதம் நிகழும்” என்றார்.
பின் திடீரென்று பரமஹம்ஸ பிரும்மானந்தேந்திர சுவாமிகளை வரவழைத்து, சன்யாசம் வாங்கிக்கொண்டார். பின் சிஷ்யர்களிடம் “நாளை காலை 11 மணிக்கு ஸ்ரீ ராமன் என்னை அழைத்துக்கொண்டு போவான்” என்றார். இதைத் தொடர்ந்து அகண்ட பஜனை நிகழ்ந்தது.
அவரும் வாகதீச்வரி ராகத்தில் “பரமாத்முடு வெலிகே முச்சட” என்ற பாடலைப் பாடுகிறார். கைகளைக் கூப்பி அந்த ராமனுக்கு வணக்கம் தெரிவிக்கிறார். ஆம். அந்தப் பரம பாவன ராமன், அவரை அழைத்துப் போக வந்துவிட்டான்.
ஒரு நிமிடம்தான். இதோ அவரது கபாலத்திலிருந்து ஜோதி புறப்பட்டு, ஆகாய மார்க்கமாகச் சென்று நீல வானத்தில் கலக்கிறது. எங்கும் ராம நாமம். அந்த இடம் ராம நாம ஒலியால் நிரம்பி, வெகுதூரம் எதிரொலிக்கிறது.
“எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு”.
=====================================
Picture courtesy: RK’s Archives
படத்திற்கு நன்றி – http://neelanjana.wordpress.com