கனம் கோர்ட்டார் அவர்களே! – 8
இன்னம்பூரான்
இருதலைக்கொள்ளித் தவிப்பு இந்திய மத்திய அமைச்சரகத்திற்கு!
இந்தத் தொடரின் ஆறாவது பகுதியில், 2ஜி உரிமங்களை ரத்து செய்து, வரலாறு படைத்த உச்சநீதி மன்ற தீர்வை அலசும்போது,, ‘சட்டம் ஒரு கழுதை தான். மற்றவர்களின் அழுக்குப் பொதியையும் சுமக்கிறது அல்லவா!’ என்று நான் எழுதியதை உறுதி படுத்தும் வகையில், ஒரு செய்தி சில நிமிடங்கள் முன்னால் கிடைத்தது. அந்தத் தீர்வை உதட்டளவில் ஏற்று, மனதில் அதை கொள்ளாத மத்திய அமைச்சரகம் தேடிய குறுக்கு வழிகளில் ஒன்று: அரசியல் சாஸனத்தின் ஷரத்து 143 ஐ கையிலெடுத்து, ஜனாதிபதி மூலமாக, உச்சநீதி மன்றத்திடம் ஆலோசனை கேட்பது. கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பினால் என்ன செய்வது என்ற அச்சமோ, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அக்ரமத்தின் பின் விளைவுகளை எதிர்நோக்க வெட்கமோ, பழங்கதைகளை கிளற நேரிடுவதால் எந்த எந்த தலைகள் உருளுமோ என்ற பீதியோ, அந்த ஷரத்தை கையில் எடுக்கலாமா? வேண்டாமா? என்று கூட தீர்மானிக்க முடியவில்லை. ஒரு வாரத்துக்கு தள்ளிப்போட்டு வைத்திருக்கிறார்கள். அரசு வக்கீலின் சாக்ஷியமும், ஆலோசனையும் தேவை என்று நினைக்கிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு வாரம் முன்னால், உச்சநீதிமன்றம் முன்னால், அரசு ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்தது. அதில், மேற்கூறப்பட்ட தீர்வு அரசியல் நிர்வாகத்தில் தலையீடாக அமைந்து விட்டது என்றும், இயற்கை வளங்களை, உச்சநீதி மன்றம் ஏலம் போடச்சொல்வது, அரசியல் இலக்கணத்துக்கே முரண் என்றும் விண்ணப்பிக்கப்பட்டது. பேஷ்!
அந்த ஷரத்து 143 (சாராம்சம்): சட்டரீதியான பிரச்சனையோ அல்லது ஒரு நடப்பின் பிரச்சனையோ, அதன் முக்கியத்துவத்தின் காரணமாக, உச்சநீதி மன்றத்தின் ஆலோசனை கேட்க தேவை ஏற்பட்டால், ஜனாதிபதி கோர்ட்டை அணுகலாம்; அவர்களும் அதை அளிக்க வேண்டும்.
இந்திய அரசியல் சாஸனம் கிள்ளுக்கீரையல்ல. ஒவ்வொரு ஷரத்தும் ஒரு சான்றோர் சபையில் தீர்க்கமான வாத பிரதிவாதங்களுக்குப் பிறகு ஒருமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை.