காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: இந்த வாரம் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் சகல சௌபாக்யங்களையும் அனுபவிக்கும் வாரமாக அமையும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் ஒற்றுமை குறைய இடம் கொடுக்காதவாறு வியாபாரிகள் செயல்பட்டால், எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும். இந்த வாரம் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குச் சகஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பிருப்பதால், பேச்சில் கவனமாக இருப்பது அவசியம். வீண் பிரச்னைகளில் ஈடுபடாமல், சக மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதன் மூலம் மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் வாங்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். சிக்கனமாகவும் கவனமாகவும் செயல்பட்டால் சுய தொழில் புரிபவர்கள் கடன் தொல்லையின்றிச் செயல்பட முடியும். கலைஞர்கள் வரவுக்கு மீறிய செலவுகளைக் குறைத்தால் வாழ்க்கை நிம்மதியாகச் செல்லும்.

ரிஷபம்: நாடகம், நாட்டியம் போன்ற கலை சம்பந்தமான தொழில்களில் இருப்பவர்களுக்குத் தங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த வாரம் அமையும். பொது வாழ்வில் இருப்பவர்கள், சிக்கலான காரியங்களில் தங்களுடைய சாமர்த்தியத்தியத்தால், தங்கள் பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்கள். சுய தொழில் புரிபவர்களுக்குத் தொழில் வகையில் இருந்து வந்த போட்டிகளும், சங்கடங்களும் விலகி, எதிர்காலத் திட்டம் தீட்ட கிரகங்கள் இந்த வாரம் உறுதுணையாய் இருப்பார்கள். பெண்களுக்கு உடல் நலனில் சற்றுக் கவனம் தேவை. மேலும் வீண் பிரச்னைகளில் தலையிடாமல் இருந்தால், உள்ள அமைதி குறையாமலிருக்கும். வியாபாரிகளுக்குத் தொழிலில் சிறிய சங்கடங்கள் ஏற்பட்டாலும் சுமூகமான அணுகுமுறையால் நிலமையைச் சீர் செய்தால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் இந்த வாரம் செலவுகளில் கவனமாக இருந்தால் கடன் தொல்லை தரும் நெருக்கடிகளிலிருந்து தப்பித்து விடலாம்.

மிதுனம்: அரசாங்க வழியில் வர வேண்டிய உதவித் தொகைகள் கைக்குக் கிடைப்பது சற்று தாமதப்படும் வாய்ப்பிருப்பதால், வியாபாரிகள் பெரிய நிறுவனங்களுக்குக் காசோலைகளை அளிப்பதில் கவனமாக இருக்கவும். உறவுகளுக்குள் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பெண்கள் பொறுமையைக் கையாண்டால் மனஸ்தாபங்கள் தானே மறைந்து விடும். இந்த வாரம் கலைஞர்கள் உற்சாகமாக வேலைகளில் ஈடுபடும்படியான சூழ்நிலை உருவாவதோடு, ஓரளவு பண வரவும் கையில் வந்து சேரும். வியாபாரிகள் தேவையற்ற வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் பண விரயத்தைத் தடுக்கலாம். மாணவர்களுக்கு நல்ல நண்பர்களால் அனுகூலமும், எதிரிகளால் சில தொல்லைகளும் தோன்றி மறையும். வேலையின் பொருட்டுச் சிலர் வீட்டைப் பிரிந்து வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். சுய தொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளில் இறங்கும் யோசித்துச் செயல்படவும்.

கடகம்: உறவுகளின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். தாமதம் அடைந்து வந்த சுப காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பிருப்பதால், பெண்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். இந்த வாரம் உயர் கல்விக்காக மாணவர்கள் மேற் கொள்ளும் முயற்சிகளில் சிறிது குழப்பம் இருந்தாலும், வார இறுதியில் நிலைமை அவர்களுக்குச் சாதகமாக அமைந்து விடும். கலைஞர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் விவாதங்களைத் தவிர்த்தால், மன உளைச்சல் இன்றி வேலைகளைச் செய்து முடிக்கலாம். தொழிலில் சில நெருக்கடிகள் இருந்தாலும், கலைஞர்கள் திறமையாகச் செயல்பட்டால், நிலைமை ஓரளவு சுமூகமாக இருக்கும். முதியவர்களுக்கு உடல் ரீதியான உபாதைகளால் மன உற்சாகம் குறைந்து காணப்படலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளில் கவனமாக இருப்பது அவசியம்.

சிம்மம்: பெண்களுக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்தச் சூழலிலும் இடம், பொருள் அறிந்து பேசினால், நற்பெயருக்குப் பாதிப்பு வராமலிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கிற்கு ஏற்பச் செயல்பட்டால், குடும்ப அமைதி சிதறாமல் இருக்கும். கடும் முயற்சியின் பேரில் வியாபாரிகள் பழைய கடன் பாக்கிகளை அடைக்க வேண்டி இருக்கும். கலைஞர்கள் கூடுதல் உழைப்பால் மட்டுமே புதிய ஒப்பந்தங்களைப் பெற இயலும். வேலையில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமலிருக்க, வேலையில் கண்ணும், கருத்துமாக இருப்பது முக்கியம். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இது சிறப்பான வாரமாக அமையும். மாணவர்கள் வேண்டாத பிரச்னைகளால் மனக்குழப்பம் அடையும் வாய்ப்பிருப்பதால், எதிலும் கவனமாக இருப்பது அவசியம்.

கன்னி: வேலையில் இருப்பவர்கள் சந்தித்த உட்பூசல் விலகி, சக ஊழியர்களுடன் இணைந்து வேலை செய்து நல்ல பெயரைப் பெறுவார்கள். இந்த வாரம் பெண்களுக்குச் செலவுகளும், அலைக்கழிப்புகளும் அதிகரித்தாலும், எந்த விவகாரத்தையும் சமாளிக்கும் தைரியத்தால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் எந்தச் சூழலிலும், தவறான திசைப் பக்கம் திரும்பாமலிருந்தால் எதிர்பார்க்கும் நன்மை யாவும் உறுதியாய்க் கிட்டும். வியாபாரிகள் பொருளாதாரத்தில் அகலக் காலை வைக்காமல், கட்டுக் கோப்பாய்ச் செயல்பட்டால், லாபத்திற்குக் குறைவிராது. பொது வாழ்வில் இருப்பவர்கள் தீய மனப்பான்மை உள்ளவர்களுடன் மோதலைத் தவிர்க்கவும். இரவு கண் விழித்துப் பணி புரிபவர்கள் அவ்வப்போது தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ள ஆரோக்கியம் குன்றாமலிருப்பதோடு பணியிலும் முழுக் கவனம் செலுத்த இயலும். கலைஞர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தைச் சாதிக்கலாம்.

துலாம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமாகும். மாணவர்களின் ஞாபக சக்தியும், புத்திக் கூர்மையும் அவர்களின் வளர்ச்சிக்கு வித்தாய் அமையும். வியாபாரிகள் சரக்குகளின் போக்குவரத்தின் மீது தங்கள் கவனத்தைப் பதிய வைத்தால், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது சுலபமாக இருக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்ளலாம். பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதைச் சற்று ஆறப் போடவும். பெண்கள் பிறருக்கு வழங்கும் பணம், ஆலோசனை இரண்டிலும் கவனமாய் இருந்தால், மன அமைதி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த வாரம் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வரவுகள் வருவது சற்றே தாமதமாகலாம். வாகனங்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற சற்றுச் சிரமப்பட நேரிடும்.

விருச்சிகம்: மறதிக்கு இடம் கொடாதவாறு செய்யும் வேலைகளைப் பட்டியலிட்டுக் கொள்வது, அதன் படி நடப்பது ஆகிய இரண்டையும் பொது வாழ்வில் உள்ளவர்கள் கடைப் பிடித்தால், பணிகள் தேங்காமலிருக்கும். பெருந்தொகையைக் கையாளும் காசாளர்கள், பணத்தைக் கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம். கமிஷன், காண்டிராக்ட் தொழிலில் இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருந்தால், அவப்பெயர் அருகில் வராமலிருக்கும். பெண்கள் உறவுகளின் போக்கறிந்து பக்குவமாக நடந்தால், குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழில் புரிந்து கொண்டிருந்தவர்களின் முன்னேற்றம் மெச்சத் தகுந்த வகையில் இருக்கும். இந்த வாரம் பங்குச் சந்தையில் முடங்கியிருந்த பணம் ஓரளவு கைக்குக் கிடைக்கப் பெறுவதால் வியாபாரிகளுக்குப் பணத் தட்டுப்பாடு நீங்கி விடும். வயதானவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் புதிய மருந்துகளை உண்ணும் முன் மருத்துவ ஆலோசனை பெற்றுச் செயல்பட்டால் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.

தனுசு: கலைஞர்கள் வாயிற்கதவைத் தட்டும் வாய்ப்புக்களை நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கை வசதிகள் பெருகும். உறவினர்கள் அளிக்கும் ஆதரவால், பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள். இந்த வாரம் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் போராடி உயர்கல்வியில் இடம் பிடிப்பார்கள். வியாபாரிகள் கவனமாகச் செயலாற்றினால், அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாதபடி சோதனைகள் ஏற்படலாம். எனவே பிறருக்கு வாக்குக் கொடுக்கும் முன் யோசனை செய்வது நல்லது. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இல்லை என்றால், உங்கள் பணம் அடுத்தவரிடம் போய்ச் சிக்கிக்கொள்ளும். சொந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இல்லத்தை அழகு படுத்தி மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்: பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட விரும்புவர்கள், தினசரி நிலவரத்தைக் கவனித்துச் செயல்படுவது அவசியம். இந்த வாரம் பிரதிநிதிகளாகப் பணியாற்றுபவர்கள் இலக்கை எட்டும் நிர்ப்பந்தத்திற்காக, அலைந்து திரிய நேரிடும். கலைஞர்கள் தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், வீண் வம்பு முளைக்காமலிருக்கும். கவலைகள் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைக்காதவாறு மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். வியாபார வட்டத்தில் சிறு சலசலப்பும், சலிப்பும் உண்டாகும் சூழலிருப்பதால், வியாபாரிகள் சரக்கு வினியோகத்தில் குளறுபடிகள் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கங்களின் மீது கவனம் வைப்பதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி விடலாம். பெண்கள் கண்ணில் பட்ட பொருளையெல்லாம் வாங்குவதைக் குறைத்துக் கொண்டால், உங்கள் சேமிப்பு குறையாமலிருக்கும்.

கும்பம்: வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால் எந்தத் தொல்லையும் தோன்றாது. கலைஞர்கள் சிறிது பொறுமை காத்தால், புதிய ஒப்பந்தங்கள் மூலம் முழுமையான லாபமும் நல்ல பெயரும் பெறலாம். பணியில் இருப்பவர்கள் உங்களைத் தேடி வரும் இட மாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள். அது நல்ல திருப்பு முனையாக இருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலவும் சூழலுக்கேற்பத் திட்டங்களையும் உங்கள் அணுகுமுறைகளையும் மாற்றினால், பெறுகின்ற லாபம் கணிசமாக இருக்கும். மாணவர்கள் கணினி, புகைப்படக் கருவி போன்ற விலையுயர்ந்த பொருட்களைப் பத்திரமாக வைப்பதுடன், அவற்றைக் கவனமாகவும் கையாண்டால் வீண் விரயங்களைத் தவிர்த்து விடலாம். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் சிறு சங்கடங்கள் தோன்றினாலும் இயல்பான வேலைகள் சீராக ஓடிக்கொண்டிருக்கும்.

மீனம்: மாணவர்கள் கோபத்தைக் கை விட்டுச் செயல்பட்டால், எடுத்த காரியம் நினைத்ததது போல் முடியும். இந்த வாரம் பணியில் இருப்பவர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் சிறப்பாக இருக்கும். பெண்கள் செய்யும் முயற்சிகள் வெற்றி பெற உறவுகள் உறு துணையாய் இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத தொல்லைகளினால் மனவேதனை அடையலாம். வியாபாரிகள் வெளி நாட்டில் இருந்து எதிர்பார்த்த வர்த்தக உதவி தக்க சமயத்தில் வந்து சேரும். சிறு தொழில் புரிபவர்கள் வாகன சம்பந்தமாகத் தேவையற்ற செலவுகளைச் சமாளிக்க வேண்டி வரும். செய்யும் செயல்களுக்கு உரிய பாராட்டு கிடைப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் மீண்டும் சுறுசுறுப்புடன் செயலாற்றி நல்ல பெயர் பெறுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை ஓரளவு குறையும். கலைஞர்கள் வெளி இடங்களுக்குச் செல்லும் போது ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *