வாசகர்களின் பதில் வேண்டி…….
அன்பு நண்பர்களே,
வல்லமை வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமாயிருக்கும் திரு.இன்னம்பூரான் அவர்கள் நமக்கு வரைந்த மடலை, அவர் வேண்டுகோளுக்கிணங்க வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ஆசிரியர்
அன்பார்ந்த வல்லமை வாசகர்களே,
திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் என்ற ஆன்மீக நூலின் அவையடக்கம், ‘ தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்/எம்மை உடைமை எமை இகழார்/ தம்மை உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில்/புணராமை கேளாம் புறன்’ என்று பகர்ந்ததின் உள்ளொலி என்னை இந்த மடலை எழுதும் துணிவை அருளியது.
பல துறைகளில் வல்லுனர்கள் நிறைந்த நிகழ்காலத்தில் சராசரி மனிதர்கள், அழுத்தம் திருத்தமாக, அவரவர் கருத்தை, சகட்டுமேனியாக, ஆதாரசுருதியாக இழைத்து அளிப்பது இரு துறைகளில்: பொருளியலும், உளவியல் எனப்படும் மனோதத்துவ விசாரணையும். இந்த பின்னணியில் வல்லுனர்களின் ஆய்வு முடிபுகள் காணாமல் போய் விடுகின்றன. ஆதாரமற்ற சுருதி கலைந்த சுருதி. அது இசையை குலைத்து விடும். வல்லுனர்கள் மறந்து போவதோ, இரு துறைகளிலும் சராசரி மனிதன் தான் சூத்ரதாரி என்பதும், அவன்/அவள் அவற்றின் இலக்கு என்பதும். இரு துறைகளிலும், ஆதாரமுள்ள சுருதிகளின் நல்வரவாகவும், வல்லுனர்களின் ஆய்வின் / அனுபவத்தின் / சிந்தனையின் வெளிப்பாடுகளை இணைத்து, வாசகர்களுக்கு வேண்டிய விஷயங்களை திட்டமிட்டு ஒரு கோர்வையாக இரு தொடர்கள் துவக்க அவா. முதலில், இந்த தொடரில் மனோதத்துவ விசாரணை. அது ஒரு கேள்வியுடன் தொடங்குகிறது. உங்கள் எல்லாருடைய பதிலை பொறுத்துத் தான், அடுத்த கட்டம் பயனளிக்கும். பின்னூட்டத்தில் பதில் தரலாம். எனக்கு தனி மடல் அனுப்பலாம், ஆசிரியருக்கு எழுதலாம். உங்கள் வசதி. பெயர் குறிப்பிட விரும்பாதவர்களின் தனிமடலின் பிரத்யேகத்துவம் காப்பாற்றப்படும்.
கேள்வி: ‘ ஒரு வாழ்வியல் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும், உங்களால். அது எத்தனை சிக்கலானதாக தோன்றுகிறது என்பதை கீழ்க்கண்டவாறு ஒரு அளவுகோலில் குறிப்பிடுங்கள்:
அளவு கோல்: 1 -10: 1: பிரச்னையே இல்லை. 2. சற்றே கடினம்……9. மெத்த கடினம். 10: தீர்வே இல்லை.
ஐந்து தடவை, நாள் தோறும்: காலை எழுந்தவுடன், வேலைக்கு கிளம்பும் முன், மதிய ஓய்வு நேரம், மாலை, இரவு படுக்கும் முன்.
பத்து நாட்களுக்கு.
விளக்கம்: துல்லியமான புள்ளிவிவரம் தேவையில்லை. உங்கள் ஆதாரசுருதி போதும்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
01 03 2012
படத்திற்கு நன்றி :
http://winnipegpublibrary.wordpress.com/
