பாத்ரூமில் தாலி
விசாலம்ஒரு சமயம் என் உறவினர் வீட்டிற்குச் சென்று இரு நாள் தங்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்துக் காரடைநோம்பு என்று சொல்லப்படும் சாவித்திரி சத்தியவான் நோம்பு வந்தது. காலை குளிக்க பாத்ரூமுக்குச் சென்றேன். அங்கு ஒரு ஆணியில் அந்த வீட்டு மருமகளின் தங்கத்தாலி மாட்டியிருந்தது.
நான் அது திருட்டுப்போகாமல் இருக்க பத்திரமாகக் கழட்டி என் மாமியிடம் கொடுத்தேன். “என்ன மாமி. கமலா தாலியை பாத்ரூமில் மாட்டிட்டு மறந்து போய்ட்டாளே. எதுக்கு இப்படிச் செய்யறா?”
“அத ஏன் கேக்கற போ. இன்னிக்கு ஜீன்ஸ் போட்டுண்டு ஆபீஸ் போயிருக்கா. மேலே டீஷர்ட் மாதிரி ஒண்ணு வேற! அதான் மேட்சிங் ஆகாதுன்னு கழட்டி வச்சிருக்கா”
“மாமி இன்னிக்கு காரடையான் நோம்பு ஆச்சே .இன்னிக்கு கூடவா இப்படி”
“அதெல்லாம் கண்டுக்கப்டாது… நம்ம மரியாதயைக் காப்பாத்திக்கனும்னாக்க…’ இந்தக்காலப் பொண்ணுகள என்னன்னு சொல்ல. அவ ஆம்படையானுக்குப் பிடிச்சிருக்கு. அதான் அவளும் இப்படிச் செய்யறா. நீ கொஞ்சம் எடுத்துச் சொல்லேன்”
மாலை ஆபீஸிலிருந்து கமலா வந்தாள். சரியான சந்தர்ப்பம் பார்த்து அவள் நல்ல மூடில் இருக்கும்போது பேசினேன்.
“என்ன கமலா தாலியை ஏன் கழட்டி வைக்கற?”
“அதுவா …சில டிரெஸுக்கு அது சூட்டாகல… தவிர தாலி கட்டிண்டாதான் கணவன் மனைவியா? மனசால பொருந்தணும். நானும் சுந்தரும் ரொம்ப க்ளோஸ். தாலியப் பெரிசா எடுத்துக்கலை”
“இன்னிக்குக் காரடையான் நோம்பு, தெரியுமா உனக்கு கணவன் நலத்துக்குச் செய்யற பூஜை”
“நான் ஆபீஸ்ல பெரிய போஸ்டில் இருக்கேன். இஷ்டப்படி லீவு எடுக்க முடியல. .ஹிந்திக்காரா கர்வாசௌத்ன்னு இத மாதிரி விரதம் வச்சுப்பா. அப்போ நான் அவாளோடு சேர்ந்து விரதம் செய்வேன். அப்போ என்னப் பாக்கணும் நீங்க. கையில மெஹந்தியோடு அத்தனை நகையும் போட்டுண்டு பட்டினி கிடந்து, நைட்ல மூனைப்பார்த்துட்டு தான் சாப்படனும். அது வரைப் பச்சத்தண்ணிக்கூட குடிக்க மாட்டேன். என் சுந்தருக்காக, ஐ லவ் ஹிம் எ லாட்”
“ஓ.. அப்படியா. சரி, அதுவும் இதுபோல ஒரு விரதம் தானே? ‘ஊரோடு ஒத்து வாழ்’ன்னு சொல்லுவா. அதப் போல நீயும் செய்யறே. இதெல்லாம் சும்மாதான் கேட்டேன் தப்பா நினைச்சுக்காதே” என்று சொல்லியபடியே சமையல் அறைக்குச் சென்றேன்
என் பாட்டிக்கால வாழ்க்கை என் மனதில் ஓடியது. மாசியும் பங்குனியும் கூடும் நேரம். காரடை செய்து கணவனது நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்திக்கும் பூஜை.
உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் படைக்கிறேன், ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாத வரம் தா” என்று என் பாட்டிக் காலத்திலிருந்தே வழக்கம் வழக்கமாக வந்து கொண்டிருக்கிறது. அன்று வெல்ல அடை, உப்பு அடை, வெண்ணெய் இரண்டையும் ஒரு நுனி இலையில் படைத்துச் சாவித்திரி கதையும் படித்து நோம்பு நோற்றுப் பின், பெண்கள் கழுத்தில் மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள். இது எல்லோருக்கும் தெரியும், புதிதல்ல.
அதைப் போல் சாவித்திரியின் கதையும் தெரிந்திருக்கும். சத்யவானின் மனைவி சாவித்திரி செய்த நோம்பு இது. சத்தியவானைப் பார்த்தவுடன் இவர்தான் என் கணவர் என்று அவளின் மனம் சொல்ல அந்தக் கணவன் வெகு சீக்கிரமே மரித்துப் போவான் என்று தெரிய வந்தும் தன் சக்தியினால் யமனுடன் போராடிச் சாதுர்யாமாகப் பேசி இறந்த சத்தியவானை மீட்டு வந்த உத்தமி அவள்.
இது மாசி மாதம் முடிய பங்குனி தொடங்கும் போது வரும் நோன்பு, இதைத்தவிர அன்னை காமாட்சி இந்த நோம்பு நோற்றுச் சிவனின் பாதி உடலில் ஐக்கியமானாள் என்றும் சொல்கிறார்கள்.
இந்தக் காலத்தில் சில பெண்மணிகள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்காக இந்த நோம்பைச் செய்ய வேண்டுமே என்று செய்கிறார்கள். இந்தக் காலத்தில் இரு மனமும் சேராமல் சண்டை பிடித்து, விவாகரத்து வரை வந்து கொண்டிருக்கும் இவர்கள், இந்த நோம்பைச் சமூகத்திற்காகச் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. மனம் பொருந்தாமல் மஞ்சள் சரடு என்ன செய்யும். இரு மனம் ஒன்று பட அதை விடப் பலமான பந்தம் வேறொன்றுமில்லை.
இதைத்தான் அந்தக்கமலாவும் சொல்கிறாளோ!. முன் காலத்தில் எத்தனை பிரச்சனை வந்தாலும் அது கணவன் மூலம் வந்தாலும், அவன் அவளை அடித்தாலும் ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று இருந்து வாழ்க்கையைத் துக்கம் சுகம் என்று இரண்டும் கொண்ட சக்கரமாக நினைத்துக் கடைசி வரைச் சேவை மனப்பான்மையில் வாழ்ந்தனர்.
ஆகையால் இந்த நோம்பும் அவர்களுக்கு மனம் பிடித்துச் செய்யும் ஒன்றாக இருந்தது. அதே போல் கடைசி வரை மனநிறைவும் கிடைத்தது. இந்தக்காலம் அப்படி இல்லை. மகளிர் தங்கள் உரிமையை நிலை நாட்டும் காலம் இது. அது கிடைக்கவில்லை என்றால் போராடுகின்றனர். மகளிர் மன்றம் நீதி வழங்கப் பாடுபடுகிறது, ஆனால் இந்த நோம்பு, இந்தக் கால மகளிர் அழகாக அழகு நிலையம் போய்த் தங்களை அழகு படுத்தி, வண்ணச்சேலை உடுத்தி, மெஹந்தி டிசைன் கையில் போட்டு வளைய வர ஒரு வாய்ப்பு.
வடக்கில் கர்வாசௌத் என்ற இது போல் கணவன் நலத்திற்காக நோம்பு நோற்கும் பண்டிகையில் எல்லோரும் சினிமா நடிகை போல் தான் இருப்பார்கள், அத்தனை மேக்கப்.
அது சரி, எப்போதும் பெண்களே தங்கள் சகோதரருக்காக, கணவனுக்காக என்று ஆண்களுக்காக அவர்கள் நல் வாழ்வுக்காக விரதம் வைத்துக் கொள்கிறார்கள். ஆண்களுக்குத் தங்கள் மனைவியின் நல் வாழ்விற்காக ஏதாவது விரதம் உண்டா?
படத்திற்கு நன்றி:http://www.speakingtree.in/spiritual-blogs/seekers/faith-and-rituals/karadayan-nonbu-2012-karva-chauth
கர்வாசௌத் படத்திற்கு நன்றி:http://www.travelindia-guide.com/festivals_holidays/karva_chauth_ka_vrat_in_punjab.php
என்னம்மா இப்படி கேட்டுட்டீங்க? ஆண் செய்யும் எல்லா கர்மாக்களிலுமே வேண்டுகிறது குடும்ப நலன்தானே?