இன்னம்பூரான்

என்னது இது? இந்த வருட இந்திய பட்ஜெட் இந்தக் கேள்வியை தான் எழுப்புகிறது. 21 வருடங்கள் முன்னால், அன்றைய நிதி அமைச்சர் (இன்றைய பிரதமர்) ஒரு சூரியோதய பட்ஜெட் அருளினார். இந்திய பொருளாதாரம் ஒளி வீசிற்று. இன்றைய பட்ஜெட்டோ ஆட்டம் கண்ட நாற்காலியாக (ஆம். அரசு நாற்காலி, காலொடிந்த முக்காலி போல் ஆடியது.) தடுமாறுகிறது. சூரிய அஸ்தமனம் போல் தோன்றுகிறது. ‘9’ என்ற இலக்கிலிருந்து ஜி.டி.பி. தலைகீழாய் போய் ‘6’ ஆகி விட்டது. மார்ச் 31, 2012 முடிவில், நிதி பற்றாக்குறையும் ஜி.டி.பி.யின் 5.9% என்கிறார், நிதி அமைச்சர். எல்லாம் கூட்டிக்கழித்தால், அது 9% என்பது தான் யதார்த்த உண்மை. மற்றபடி ஆருடங்கள். அவற்றைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? சர்வம் ஹேஷ்யமயம்! இது வரை ஹேஷ்யங்கள் லேகியமாகத்தான் உருகிப்போயின!

அதா அன்று. அடுத்த படியாக, பட்ஜெட்டின் ஆக்கப்பூர்வமானவை என்று, நிலக்கரி இறக்குமதி வரியைக் குறைத்தும், விமான கம்பெனிகள் உலகளாவிய கடன் வாங்க (வட்டி பறக்கும் வட்டி) அனுமதித்ததும், வரிச்சலுகை கடன் பத்திரங்களை அதிகப்படுத்தியதும், ‘பொய்க்கால் குதிரை ஆட்டம்‘ போல என்று லண்டன் எகானமிஸ்ட் கேலி செய்கிறது. (India’s budget:Unbalanced:Mar 16th 2012, 16:10). வாஸ்தவம் தான். தொழிலதிபர்களுக்கு ஒரே ஏமாற்றம். அரசின் ஏகாதிபத்தியம் குறைவதாக, அறிகுறி ஒன்றுமில்லை. வரி சீர்திருத்தம் ஒன்றும் தென்படவில்லை. வெளிநாட்டு முதலீடு பற்றி மனமாற்றம் காணவில்லை.

இதெல்லாம் அரசியல் தொடைநடுக்கத்தின் பிரதிபலிப்பு. திரு.பிரணாப் முக்கர்ஜியை பேசவிடவில்லை, எதிர்க்கட்சிகள். போதாக்குறைக்கு, ரயில்வே பட்ஜெட்டின் நியாயமான கட்டண உயர்வை திருநாமூல் காங்கிரஸ் ( அது என்ன காங்கிரஸ்ஸோ!) சேம்சைட் கோல் போடும் விந்தை! இதெல்லாம் என்ன? அரசு எப்படி இருந்தாலும், இந்தியாவின் நிதி நிலை நன்றாக இருக்கும் என்பர், சிலர். இந்த பேச்செல்லாம் எத்தனை நாட்கள் செல்லும்? வெறுங்கையால் முழம் போட முடியுமா? பாயிண்ட் மேட். அரசு, அரசமரம் போல், அசையாது இருந்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தெனாலி ராமன் கதை போல தான்.

இந்த அழகில், ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சியின் உப கைங்கர்யமான பணவீக்கத்தைப் பற்றி கவலைப்படுகிறதோடு சரி. வட்டி விகிதாச்சாரத்தைத் தொட நடுங்குகிறது. வங்கிகளும், அடிக்கடி கடன் வாங்க வேண்டிய நிர்பந்தத்தை நினைத்து, அழுகின்றன. கேட்டால் இதெல்லாம் ஒரு டெக்னிகல் சமாச்சாரம் என்பார்களாம். இது லண்டன் எகானமிஸ்டின் கேலி. அதை மறுக்கமுடியவில்லையே.

இன்னம்புரான்

16 03 2012.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பட்ஜெட் ஃபட்ஃபட்டி!

 1. நகைச்சுவையாக எழுதப்பட்டிருந்தாலும் அதன் பின்னணியிலுள்ள மனச்சுமையும், மானப் பிரச்சினையும் புரிகிறது.

  சிலேடை மொழியில் பேசவேண்டுமென்றால் – ரிசர்வ் வங்கியைப் போலத்தான் பொது மக்களும் பணவீக்கம் பற்றிக் கவலைப் பட அவர்களுக்கும் ஒழிவதில்லை.

  ஜிடிபி என்றால் ஜிலேபி போல் ஒரு தின் பண்டம என்று கூட நினைக்கும் நபர்கள் இருப்பார்களோ என்கிற அளவுக்கு நம் மக்கள் நாட்டுப் பொருளாதாரம் பற்றிய பிரக்ஞையில்இருக்கிறார்கள். 
  பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளை – அதன் விழுமிய சாராம்சங்களை அறியாத பாமரர்ககள் இருக்கும் வரை –

  நாட்டு நலத்தில் அவர்களுக்கு உள்ள நாட்டத்தை கவனியாமல் – அரசியல் தலைவர்களின் சாமுத்ரிகா லட்சணங்களைக் கவனிக்கும் அப்பாவியான போக்கு நிலவும் வரை – நம்மூர் அரசியலுக்கு முன்னே அறிவியலாகட்டும், பொருளியலாகட்டும் எடுபடப்போவதில்லை.

  உங்கள் பொருளாதார வர்ணனையை இங்குள்ள குழந்தைகளுக்குப் படித்துக் காட்டினேன் – ஒரு பெண் குழந்தை ஆர்வமாய்க் கேட்டாள் தெனாலி இராமன் கதையில் எந்தக் கதையை இங்கு குறிப்பிட்டிருக்கிறார் இன்னம்பூரான் என்று.
  இந்த அறிவுக் கேள்விக்கு என்னால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை.
   அதைச் சொன்னால், அவளது ஐயத்தைத் தீர்க்க முடியும். 

  கடினமான கருத்துக்களையும் சுவையான முறையில் சொன்னால் அது சுலபமாய்க் குழந்தைகளைச் சேர்கிறது – தங்கள் – உளப்பாங்குக் கல்வி அணுகுமுறை பாராட்டுதற்குரியது. 

 2. பட் என ஜெட் வேகத்தில் வரிகளை ஏற்றுவதுதான் பட்ஜெட்.

  பட்ஜெட் கூத்தை விட மம்தா கூத்து தான் கேலிகூத்து…இவர் கட்சி அமைச்சரே கட்டணத்தையும் ஏற்றுவாராம். அதை இவரே கண்டிப்பாராம்.அதையும் இந்த உலகம் நம்புதே?அதை சொல்லணும்

 3. கருத்தளித்த இருவருக்கும் நன்றி. அந்த பெண் குழந்தைக்கு விவராமான பதில் சொல்லவேண்டும். சிறார்களின் கேள்விகள் சிந்தனையை தூண்டும். எனவே, ஒரு தொடர் கட்டுரை அனுப்பியுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *