தத்து – பாசத்திற்காகவா? பணத்திற்காகவா?

1

நீலகண்டன் (செம்பூர் நீலு, மும்பை)

செம்பகம் கணவரின் ஃபோட்டோவின் முன்னால் நின்று கொண்டிருந்தாள். கன்னத்தின் வழியாக வழிந்த கண்ணீர் தரையில் சொட்டியது.

“இப்படி என்னை விட்டுட்டு ஒரு கவலையும் இல்லாமல் நீங்க போயிட்டீகளே. இது உங்களுக்கே பொறுக்குதா. அன்னிக்கு அடிச்சு அடிச்சுச் சொன்னீகளே, அன்னிக்கு இந்த மரமண்டையிலே ஒன்னும் ஏறலியே. கூடப் பிறந்த பாசமும் குளந்தை ஆசையும் என் கண்ணை மறைச்சிடிச்சே. இப்பொ நான் இந்த கூறு கெட்ட புள்ளையை வைச்சிட்டு என்ன பண்ணுவேன். என் பணத்திலேதான் குறியா இருக்கானே தவிர, இப்படி பாசமே இல்லாம இருக்கானே“ என்று அழுதபடி ஒப்பாரி வச்சுக்கிட்டு இருந்தாள். காலையில தான் பெருமாள் வந்து கத்திக் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணியதை நினைத்துப் பார்த்தாள்.

”ஏ கிளவி, இந்தப் பத்திரத்திலே ஒப்பு போடு. நான் புத்தேரியிலுள்ள அந்த வீட்டை விக்கப் போறேன். அந்த வீட்டிற்கு ஒரு நல்ல விலை கிடைச்சிருக்கு”

” எதுக்குடா அந்த வீட்டை விக்கணும். அது மாமாவின் குடும்ப வீடு. அதை விக்க நான் சம்மதிக்க மாட்டேன். அந்த வீட்டை விக்கிற அளவுக்கு என்ன செலவு உனக்கு. இரண்டு நாள் முன்னாலே தானே நெல்லு வித்த பணத்திலே 3000 ரூபாய் வாங்கிட்டுப் போனே. ஏதோ மோட்டார் சைக்கிள் வாங்கணும்னு சொன்னே. காலையிலும் ராத்திரியும் வீட்டிலேதான் கொட்டிக்கிறே. எப்போப் பார்த்தாலும் கோயில் மரத்தடியிலே வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு சீட்டு விளையாட வேண்டியது, இல்லை கூட்டாளிகளுடன் சினிமாவுக்குப் போக வேண்டியது. இல்லையானா அங்கே போறேன் இங்கே போறேன் என்று ஊர் சுத்த வேண்டியது. இதை விட்டா உனக்கு வேற என்ன வேலை. இரண்டு நாள் முன்னால முருகேசன் வந்து சொல்லிட்டுப் போனது உனக்கு நினைவில் இருக்கா. வயல் அறுத்து நெல்லெல்லாம் காயப்போட்டுக் களத்திலே கட்டி வச்சிருக்கு. அதைப் போயிப் பாத்தாக் குறைஞ்சா போயிடும். என்னிக்கு இந்த மனிசன் என்னை விட்டுட்டுப் போனாரோ, அன்னெயிலிருந்து ஒரு வீட்டு வேலை பாக்குறதில்லை. நான் ஒருத்தியே என்ன தான் பண்ணுவேன் எல்லாம் என் தலயெளுத்து” என்று சொல்லவே,

“இப்போ ஒப்பிடப்போறையா இல்லையா என்று தீர்மானமாச் சொல்லு. இல்லைனா எப்படி அதை விக்க முடியும் என்று நானே பாத்துக்கறேன்” என்று கத்தி விட்டுச் சென்று விட்டான். ஒன்றும் செய்ய முடியாமல் தன் தலையில் அடித்துக் கொண்டு தன் விதியை நினைத்துச் செம்பகம் அளுதாள். அதே சமயம் அவளது உள் மனது “ஏண்டீ செம்பகம், நீ சிதம்பரத்தை மறந்து விட்டையா. ஏன் இப்படிப் புலம்பறே. வக்கீலைக் கொண்டு சிதம்பரத்துக்குத் தகவல் கொடுக்க சொல்லு“ என்று சொல்லவே வக்கீலை கூட்டிக் கொண்டு வர ஆளை அனுப்பினாள்.

செம்பகம் அய்யாவு பிள்ளையின் ஒரே மகள். நல்ல பெரிய இடத்திலெ கட்டிக் கொடுத்து ஒரு குறைவும் இல்லாமல் நல்லாவே இருந்தாள். தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற குறையைத் தவிர. செம்பகத்தின் வீட்டுக்காரரான சுப்பிரமணிய பிள்ளை நஞ்சையும் புஞ்சையுமா நல்ல வசதியுடன் செட்டிகுளம் பஞ்சாயத்தில் கௌரவத் தலைவரா இருந்தார். ராமவர்மபுரத்தில் பெரிய சொந்த வீட்டில் இருந்தார். நல்ல செல்வாக்கு. எவ்வளவோ வைத்தியர்களைப் பார்த்தாகி விட்டது. கோவில் குளம் என்று போயாச்சு எல்லாம் அந்த கடவுள் விட்ட வழி என்று மனசைச் சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தார்.

அவருடைய நல்ல குணத்தின் காரணமாகத் தன்னுடைய ஆத்தாளின் யோசனையான இரண்டாவது கலியாணத்திற்குக் கூட ஒத்துக் கொள்ளவில்லை. அந்த ஆத்தாளும் தனக்கு ஒரு பேரக்குழந்தை இல்லையே என்ற குறையுடன் கண்ணை மூடினாள். ஆத்தாளைப் பிரிந்த ஏக்கமும் தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற வருத்தமும் சுப்பிரமணிய பிள்ளையை வாட்டி எடுத்தது. இதை மறப்பதற்கு ஒரு வடிகாலாகச் சுப்பிரமணிய பிள்ளை மார்த்தாண்டத்தில் ஒரு சின்ன அண்டிப் பருப்புத் தொழிற்சாலையை தன்னுடைய பால்ய நண்பரும் தூரத்து உறவினருமான குமரேசனுடன் கூட்டாகத் தொடங்கினார்.

குமரேசனுக்கு இந்தத் தொழிலில் நல்ல அனுபவம் இருந்ததால் அவனும் கொஞ்சம் முதல் போட்டு இருவருமாக நடத்தினார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் சுப்பிரமணிய பிள்ளை மார்த்தாண்டத்தில் தங்க ஆரம்பித்தார். இது செம்பகத்துக்கும் தெரியும். அவளும் எப்படியோ தன் கணவன் ‘தனக்கு குழந்தை இல்லையே’ என்ற கவலையை மறப்பதற்கு இந்த ஏற்பாடு நல்லது என்று நினைத்தாள். குமரேசனும் மார்த்தாண்டத்தில் குடியிருந்தான். வாரத்தில் மூன்று நாட்கள் மார்த்தாண்டத்தில் தங்க வேண்டிய கட்டாயத்தினால் குமரேசனில் வீட்டின் பக்கத்தில் ஒரு வீடு எடுத்துத் தங்கினார். சில வாரங்களில் செம்பகமும் ஒரு மாற்றத்திற்காக மார்த்தாண்டத்தில் சுப்பிரமணிய பிள்ளையுடன் வந்து தங்குவது வழக்கமாயிற்று. மார்த்தாண்டத்தில் இருந்த சமயத்தில் சுப்பிரமணிய பிள்ளையின் காப்பி டிபன், மதியம் மற்றும் இரவுச் சாப்பாடு எல்லாமே குமரேசனின் வீட்டில்தான். விரைவில் குமரேசனின் மனைவி கற்பகமும் செம்பகமும் நல்ல நெருக்கமான தோழிகள் ஆகி விட்டனர். தொழில் நல்லபடியாக நடந்து வந்தது. நல்ல முன்னேற்றமும் அடைந்தது. குமரேசனுக்கு 3 வயதில் ஒரு மகன் உண்டு.

இந்த நேரத்தில் தான் விதி விளையாட ஆரம்பித்தது. குமரேசன் அண்டிப்பருப்பு விற்பனை நிமித்தம் அடிக்கடி திருவனந்தபுரம் செல்வது வழக்கமாயிருந்தது. அதற்காக ஒரு மோட்டார் சைக்கிளைப் பயன் படுத்தினான். ஒரு நாள் ராத்திரி திருவனந்தபுரத்திலிருந்து வரும் வழியில் மோட்டார் சைக்கிள் ஒரு லாரியுடன் மோதியது. குமரேசனுக்குத் தலையில் நல்ல அடிபட்டது. திருவனந்தபுரம் ஆசுபத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். ஆனால் அவனுக்கு நினவு திரும்பவில்லை. ஒரு மாதத்தில் அவன் நினைவு திரும்பாமலேயே இறந்து போனான். அப்போது குமரேசனின் பிள்ளைக்கு 3 1/2 வயது. குமரேசனின் மனைவியும் கொஞ்சம் படித்த பெண்ணாய் இருந்ததால் சுப்பிரமணிய பிள்ளை அவளைக் கட்டாயப்படுத்தித் தொழிற்சாலை நிர்வாக வேலைக்கு அவளைத் தயார் செய்தார். அவளும் கணவனை இழந்த கவலையை மறப்பதற்கு இது ஒரு நல்ல வடிகாலாக இருக்கும் என்று ஒத்துக் கொண்டாள். இப்படியே நாட்களும் சென்றது.

‘உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது’ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு மார்த்தாண்டம் ஊர், சுப்பிரமணிய பிள்ளையையும் குமரேசனின் மனவி கற்பகத்தையும் இணைத்துப் பேச ஆரம்பித்தது. சுப்பிரமணிய பிள்ளை துடித்துப் போய் விட்டார். ஒரு நாள் செம்பகத்திடம் இது பற்றி மனது விட்டுப் பேசினார்.

செம்பகத்திற்கோ தன்னுடைய கணவன் ஆத்தாளின் ஆலோசனைப்படி குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக இரண்டாவது கலியாணத்திற்குக் கூட சம்மதிக்கவில்லை என்று நன்றாகவே தெரியும். செம்பகம் உடனே, “என்னாங்க உங்களைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும். நீங்க ஒரு தப்பான வழிக்கும் போக மாட்டீக. ஆனால் இப்போ ஊர் வாயை மூட ஒரு வழி தான் இருக்கு. நீங்க குமரேசன் பொஞ்சாதி களுத்திலே ஒரு தாலியைக் கட்டி அவளை உங்க மனைவியா ஏத்துக்குங்க. எப்போதும் போல வாரத்திலே 3 நாள் அங்க இருங்க. பாக்கி 3 நாள் இங்க இருங்க. இது பற்றி யாருக்கும் சொல்லவேண்டிய அவசியமில்லை. ரகசியமாகவே இருக்கட்டும். நான் இந்த திருமணத்திற்கு மனப்பூர்வமா சம்மதிக்கிறேன். அவளுடைய மகனையும் உங்க மகனா ஏத்துக்குங்க. அதற்கு உங்களை பக்குவப் படுத்திக் கொள்ளுங்க. அந்தத் தகப்பன் இல்லாத பிள்ளைக்குத் தகப்பனாக இருங்க.” என்று சொன்னதும் செம்பகத்தின் பெருந்தன்மையை நினைத்து அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார். இப்படியே சுப்பிரமணிய பிள்ளையும் இரண்டு குடித்தனங்களுடன் வாழ்ந்து கொண்டு இருந்தார். ஆனால் அவர் இந்த இரண்டாவது கலியாணத்தை மனதோடு ஏற்றுக் கொள்ளவில்லை.

என்னதான் செம்பகம் பெருந்தன்மையாக நடந்தாலும் அவளுடைய மனத்தில் தனக்கென்று ஒரு வாரிசு இல்லையே என்ற வருத்தம் வளரத் தொடங்கியது. அதே சமயத்தில் குமரேசனின் மகனைத் தன்னுடைய வாரிசாக ஏற்றுக்கொள்ள அவளுடைய மனது இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் கற்பகத்துடன் நல்ல உறவை வைத்துக் கொண்டிருந்தாள். சில சமயங்களில் விடுமுறை நாட்களில் சுப்பிரமணிய பிள்ளை, குமரேசனின் மகனான சிதம்பரத்தை ராமவர்மபுரம் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வருவது வழக்கம். சிதம்பரமும் செம்பகத்தை பெரியம்மா என்று அழைத்து அவளுடன் நன்றாக ஒட்டுறவுடன் பழகினான். செம்பகமும் அவனிடம் பாசத்தோடு பழகினாள். அவனுக்குப் படிப்பில் நல்ல நாட்டம் இருந்தது. கற்பகம் தொழிற்சாலையில் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்ததால் காலை 7 மணி முதல் சாயங்காலம் 7 மணி வரை மும்முரமாக இருந்தாள். அந்த காரணத்திற்காகவே சுப்பிரமணிய பிள்ளையிடம் கலந்து ஆலோசித்துச் சிதம்பரத்தைத் திருவனந்தபுரத்திலுள்ள போர்டிங் ஸ்கூலில் சேர்த்தாள். அவனும் பொறுப்புடன் நன்றாகப் படித்தான்.

கொஞ்ச நாட்களில் செம்பகத்தின் தந்தையான ஐயாவு பிள்ளைக்குத் தன் மகளின் வருத்தத்தைப் போக்குவதற்கு ஒரு யோசனை மனதில் பட்டது.

ஐயாவு பிள்ளைக்கு மூன்று ஆம்பிளைப் பிள்ளைகள். மூத்தவன் சிவலிங்கம் கல்யாணம் கழிந்து குடும்பத்துடன் மலேசியாவுக்குப் போய் விட்டான். இரண்டாமத்தவன் வீரப்பன். தன்னுடைய மாமனின் ஒரே மகளைத் திருமணம் செய்து கொண்டு வீட்டு மாப்பிள்ளையாக அழகிய பாண்டிபுரத்தில் இருக்கிறான். அடுத்தது செம்பகம், கடைசி மகன் சுடலை. அவன் இளம்பிள்ளை வாதத்தினால் அவதிப்பட்டு வந்ததால் சரியாக நடக்க முடியாது. ஐயாவு பிள்ளையின் மனைவி சுப்பம்மா, சொடலையைப் பெற்ற இரண்டு வருடங்களுக்குள் விஷ ஜுரம் வந்து காலமானாள். அதற்கப்புறம் ஐயா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. ஐயாவு பிள்ளையின் அக்கா தங்கம், சின்ன வயதில் விதவையாகி ஐயாவு பிள்ளையுடன் இருந்தாள்.

சுப்பம்மா மறைவுக்குப் பிறகு வீட்டோடு இருந்த தங்கம் தான் 4 குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கினாள். ஐயாவு பிள்ளை சொடலைக்கு ஒரு கடை வைத்துக் கொடுத்து அதை அவன் நடத்தி வந்தான். அவனுடைய பொஞ்சாதி வீரமாகாளி சரியான பாண்டிக்காரி. அய்யாவு தான் அவளைப் பார்த்துச் சொடலைக்குக் கல்யாணம் பண்ணி வைத்தார். சொடலை பாவம் விவரம் தெரியாதவன். இவளாவது அவனைச் சரிக்கட்டிக் குடும்பத்தை நடத்துவாள் என்ற நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது. சரியான ராங்கிக்காரி. சொடலையையே ஆட்டுவிக்கத் தொடங்கினாள். அவளுக்கு மூன்று பிள்ளைகள். அதில் ஒரு பிள்ளையைத்தான் செம்பகத்துக்குத் தத்துக் கொடுக்க வேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஐயாவு பிள்ளைக்கு ஒரு எண்ணம் இருந்தது.

ஐயாவு பிள்ளை ‘தனக்கு ஒரு பொண்ணு பிறக்காதா’ என்று ஏங்கி ஏங்கிக் கடைசியில் குடும்ப குல தெய்வமான அந்த முத்தாரம்மனின் அருளால் ஒரு பெண் பிறந்தாள். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் விரதமிருந்து செம்பகப் பூவினால் தன் கையால் மாலை கட்டி அம்மனுக்கு அணிவித்து அந்த அம்மனுடைய அருளினால் பிறந்த பெண் என்பதால் செம்பகம் என்று பேரு வைத்து ரொம்பச் செல்லமாக வளர்த்தார். அந்த அருமைப் பெண்ணுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்காதா என்று போகாத கோயில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை, பார்க்காத வைத்தியர் இல்லை. பொறுத்துப் பொறுத்து ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு நாள் செம்பகத்தையும் மாப்பிள்ளையையும் பார்த்து தன்னுடைய முடிவான கருத்தைச் சொல்லுவதற்காக ராமவர்மபுரத்திலுள்ள செம்பகத்தின் வீட்டிற்குச் சென்றார். ரொம்ப நாள் கழித்து ஐயா வந்திருக்கார் என்று உபசரித்தாள் செம்பகம். விருந்து வைக்காத குறை தான். சாப்பிட்டு முடிந்த பிறகு செம்பகத்தையும் மாப்பிள்ளையையும் அருகில் வைத்துக் கொண்டு தன்னுடைய மனதில் ரொம்ப நாளாக வைத்திருந்த எண்ணத்தைக் கூற ஆரம்பித்தார்.

”செம்பகம், மாப்பிள்ளை.. எனக்கு ரொம்ப நாளாகவே மனதில் ஒரு எண்ணம் இருக்கு. நீங்களும் அதை ஒத்துக் கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் இங்கு வந்திருக்கிறேன். ஒங்க ஆத்தாளும் செம்பகத்திற்கு ஒரு குளந்தை பிறக்காதா என்று தவமிருந்து அது பலிக்காம அவங்களும் போயிட்டாக. எனக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுது. நம்ப சுடலைக்கு மூணு ஆம்பிளைப் பிள்ளைக. அதிலெ கடைசிப் பிள்ளையைச் செம்பகத்துக்குத் தத்துக் கொடுக்கலாம் என்று ஒரு எண்ணம். நீங்க இரண்டு பேரும் சரி சொன்னா நான் சொடலை கிட்டெ பேசி ஒரு நல்ல நாளைக்கு முத்தாரம்மன் கோயில்லெ அம்மனுக்கு முன்னால் நீங்க அவனை உங்க பிள்ளையா ஏத்துக்குங்க. செம்பகத்துக்கு அந்தப் பிள்ளை மேல பாசம் இருக்கு. சொடலை தன் அக்கா செம்பகத்து மேல ரொம்ப பாசமாக இருக்கான். அவன் வேண்டாம் என்று சொல்ல மாட்டான். அந்த மருமகப் பெண்ணு வீரமாகாளிதான் கொஞ்சம் சிணுங்கும். அவளை நான் சரிக்கட்டி விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க என்ன சொல்லுறீக“ என்று சொன்னவுடன் செம்பகம் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தாண்டவமாடியது. அதே சமயத்தில் தன்னுடைய கணவன் இதற்கு ஒத்துப்பாரா என்று கணவனின் முகத்தைப் பார்த்துக் கண்ணால் கெஞ்சினாள். சுப்பிரமணிய பிள்ளையோ “மாமா எனக்கு இரண்டு நாள் யோசிக்க அவகாசம் வேண்டும். நானே உங்களுக்குத் தகவல் சொல்லி அனுப்புகிறேன் ” என்று கூறினான்.

“சரி மாப்பிள்ளை ஒரு நல்ல முடிவாச் சொல்லி அனுப்புங்க” என்று சொல்லி விட்டு ஐயாவு பிள்ளை கிளம்பிப் போனார். ஐயாவு பிள்ளை போனதும் “என்னாங்க, எனக்கு ஒரு கொளந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை செத்துப் போயாச்சு. நாமும் இனி எத்தனை நாட்களுக்கு ஒருவரை ஒருவர் மூஞ்சியைப் பாத்துக்கிட்டு இருக்கப் போறோம். நமக்குன்னு ஒரு பிள்ளை இருந்தால் அதுவும் நல்லதுதான். கடைசிக் காலத்திலே கொள்ளி வைக்க ஒரு பிள்ளை வேணும் இல்லையா. நீங்க சரின்னு சொல்லுங்க“ என்று அழாத குறையாகச் சொன்னாள்.

“செம்பகம் உன்னுடைய வருத்தம் எனக்குப் புரியாமல் இல்லை. நமக்கு ஒரு குளந்தை பிறக்கவில்லையே என்று எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கு, என்ன செய்வது. இந்த ஜன்மத்தில் நமக்குக் குளந்தை பாக்கியம் இல்லை என்று அந்த ஆண்டவனே முடிவெடுத்த போது நாம் என்ன செய்ய முடியும்.”

’எனக்குச் சொடலையின் பிள்ளையைத் தத்து எடுப்பதில் எந்த வில்லங்கமும் இல்லை. ஆனால் அந்தப் பிள்ளைக்கு 9 வயசு. இவ்வளவு நாள் அவங்க அம்மா அப்பாவிடம் வளர்ந்துட்டு எப்படி அவன் நம்மிடம் மனம் விரும்பிப் பாசத்துடன் ஒட்டுவான் என்று ஒரு சந்தேகம் மனதை உறுத்துகிறது. அவன் நம்ப வீட்டில் வந்து ஒரு வாரம்/10 நாள் எல்லாம் இருந்திருக்கான். இல்லை என்று சொல்லவில்லை. அதனால் தான் ஆலோசிக்கிறேன்‘ என்று சுப்பிரமணிய பிள்ளை சொல்லவே செம்பகம் அழ ஆரம்பித்து விட்டாள். இரண்டு நாள் சாப்பிடவில்லை கணவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. பித்து பிடித்தவள் மாதிரி மனசு உடைந்து உம் என்றிருந்தாள். மூன்றாவது நாள் காலையில் எழுந்திருந்து சுப்பிரமணிய பிள்ளைக்கு செம்பகத்தின் நிலைமையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. “11 மணிக்கு பஞ்சாயத்து மீட்டிங் இருக்கு” என்று செட்டிகுளம் சென்று விட்டார்.

வீட்டிற்கு மாலையில் திரும்பி வந்ததும் “வீட்டில் அடுத்த வீட்டுப் பெண்கள் எல்லோரும் ஒரு கவலையுடன் கூடி இருந்தார்கள். செம்பகம் ஒரு மயக்க நிலையில் என்னவெல்லாமோ பிதற்றிக் கொண்டிருந்தாள். சுப்பிரமணிய பிள்ளைக்கு மனத்தில் ஒரு கவலை வந்து விட்டது. உடனே டாக்டர் வந்து பார்த்து விட்டு அவளை ஆசுபத்திரியில் சேர்த்தார். அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆசுபத்திரியில் இருக்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வரும் போது டாக்டர் “சுப்பிரமணிய பிள்ளை, உங்க பொஞ்சாதி செம்பகம் மனசு உடஞ்சு இருக்கா. இந்தச் சமயத்தில் நீங்கள் அவள் மனதை நோகடிக்காமல் நடந்து கொள்ளுங்கள். இப்போதைக்கு இது தான் மருந்து“ என்று சொல்லவே சுப்பிரமணிய பிள்ளை ஆடிப் போய் விட்டார். ராத்திரி முழுக்கச் சுப்பிரமணிய பிள்ளை தூங்கவே இல்லை. செம்பகத்தின் நிலைமையை அறிந்தும் டாக்டர் சொன்னதையும் நினைத்து நினைத்து. ‘நடப்பது நடக்கட்டும் விதியை யாராலும் மாற்ற முடியாது’ என்று ஒரு முடிவுக்கு வந்தார். இதற்கு மருந்து சொடலையின் பிள்ளையைத் தத்து எடுக்கச் சம்மதிப்பதுதான் என்று முடிவெடுத்தார்.

அடுத்த நாள் காலையில் “செம்பகம் உன் விருப்பப்படிச் சொடலையின் பிள்ளையைத் தத்து எடுக்கலாம். நானே மாமாவைப் பார்த்துச் சொல்லி விட்டு வருகிறேன்“ என்று சொன்னவுடன் செம்பகத்திற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சுப்பிரமணிய பிள்ளையின் கையைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். இரண்டு நாட்களில் செம்பகம் பழைய நிலைமைக்கு வந்து விட்டாள்.

சுப்பிரமணிய பிள்ளையின் முடிவைத் தெரிந்து கொண்ட ஐய்யாவு பிள்ளை சொடலையைக் கூப்பிட்டுத் தன்னுடைய எண்ணத்தைச் சொல்லவும் அவன் “ஐயா நீங்க எந்த முடிவு எடுத்தாலும் அது நல்லதாகத்தான் இருக்கும். எதுக்கும் என் பொஞ்சாதி என்ன சொல்லுறா பார்ப்போம். அவளையும் அவ அம்மாக்காரியையும் நினைச்சாத்தான் கவலையாய் இருக்கு. எதுக்கும் நான் பேசிட்டு ஒங்க கிட்டெ சொல்லுறேன்“ என்று சொல்லி விட்டுக் கடைக்குச் சென்றான்.

கடையில் வைத்து வீரமாகாளியிடம் ஐயாவின் எண்ணத்தைச் சொன்னவுடன் அவளுடைய முகத்தில் கோபம் தாண்டவமாடியது. ”ஒங்க ஐயா என்ன தான் நினச்சுகிட்டிருக்காக. நான் என்ன நாய் குட்டியா பெத்துப் போட்டிருக்கேன். சும்மா குடுன்னதும் குடுக்கிறதுக்கு.. விளக்கு வைக்கட்டும் வீட்டிற்குப் போய் நான் ஐயாகிட்டெ பேசிக்கிறேன். நீங்க வாயை மூடிக்கிட்டு இருங்க. இன்னைக்கு சாயங்காலம் என் ஆத்தா வர்றா. அவகிட்டெ ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு என்ன முடிவு எடுக்கணும்ன்னு நான் முடிவெடுக்கிறேன்“ என்று கடைன்னு பார்க்காமல் லோ லோன்னு ஒரு கத்து கத்தி விட்டுப் போனாள்.

சாயங்காலம் ஐயாவு பிள்ளை, வீரமாகாளி, அவங்க ஆத்தா, சொடலை எல்லாரும் இருந்தார்கள். ஐய்யாவு பிள்ளைதான் பேச்சை ஆரம்பித்தார். “வீரமாகாளி எனக்கு ரொம்ப நாளாவே மனசில் ஒரு எண்ணம் இருக்கு. அது பற்றிச் சொடலை கிட்டே சொல்லியிருக்கேன். அவன் உன்கிட்டெ சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன். அதுக்கு நீ என்ன சொல்லுதே? ஒங்க ஆத்தா என்ன சொல்லுறாக? ஒரு முடிவு தெரிஞ்சா எனக்கும் சௌகரியமா இருக்கும்“

உடனே வீரமாகாளி “என்ன மாமா நீங்க அப்படி சொல்லிப்பிட்டீக. எங்களுக்கு வசதி குறைவுதான். இல்லைன்னு சொல்லலை. அதனாலே எங்க பிள்ளைகளைக் கூழோ கஞ்சியோ குடுத்து வளர்க்கறதுக்கு எங்களுக்குத் தெம்பு இருக்கு. அதில் ஒண்ணை செம்பகம் அக்காளுக்குத் தத்து கொடுக்கணும் என்று நீங்க என்னை ஒரு வார்த்தை கூட கேக்காம முடிவெடுத்தது எனக்குச் சரின்னு படலை“ என்று வெடுக்கென்னு சொன்னதும் ஐயாவின் முகம் மாறியது. இவ இல்லைன்னு சொல்லிடுவாளோ என்று ஒரு பயம் பிடித்துக் கொண்டது. சொடலை உடனே “சும்மா இரு புள்ள நீ, ஐயா கிட்டெ பேசற பேச்சா இது“ என்று அவளை அடக்கினான்.

ஐய்யாவு பிள்ளையும் அமைதியுடன் வீரமாகாளியின் ஆத்தாளைப் பார்த்து “அம்மா பெரியவங்க நீங்க சொல்லுங்க. உங்களுக்குச் சரின்னு படுதா“ என்று கேட்டதும் அந்த அம்மா “ஐயா உங்க குடும்ப விசயத்திலெ நான் தலையிடறேன்னு நீங்க நினைக்கப்படாது. என் மகள் சொன்னதிலும் ஒரு ஞாயம் இருக்கு. நான் ஒன்னு சொல்லுறேன். எம்பொண்ணுக்கு வசதியில்லை. செம்பகம் நல்ல வசதியோட இருக்கா. நீங்க அவளுக்குன்னு எழுதி வச்சிருக்கிற மஞ்சக்காணிச் சொத்தை இவ பேருலெ எழுதி மாத்திருங்க. அவளுக்கும் கொஞ்சம் மனச் சமாதானமாக இருக்கும்“ என்று சொன்னவுடனே ஐயாவு பிள்ளை “அம்மா நான் இந்த முடிவை முன்னமே எடுத்தாச்சு. நீங்க பெரிய மனசு பண்ணி உங்க மகளுக்குப் புத்தி சொல்லி அவளைச் சரின்னு சொல்ல வையுங்க அது போதும்“ என்று சொல்லி விட்டுக் கோயிலுக்குச் சென்று விட்டார்.

ஆத்தாவும் மகளும் “என்னா வீரமாகாளி நாம பேசி வைச்ச மாதிரி ஐயா ஒத்துக்கிட்டார் பாத்தியா. நீ பேசாமச் சரின்னு சொல்லு. 9 வயசுப் பிள்ளையை இப்பொ தத்துக்குடுத்தா அவங்க குடும்பத்திலே ஒட்டாது, அவனை ஒட்டவும் விடப்படாது, அது உன் கையிலேதான் இருக்கு. இந்தத் தத்துக் கொடுத்த பிள்ளையை வைச்சுச் செம்பகம் கிட்டெ இருந்து எப்படிப் பணம் பறிக்கணும் என்று நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன். அதை வேளை வரும் போது சொல்லுறேன்“ என்று சொன்னதும் வீரமாகாளி “ஆத்தா நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை“ என்று சொல்லி விட்டுச் சமயக்கட்டிற்குச் சென்றாள்.

அன்று ராத்திரியே வீரமாகாளி தன்னுடைய மூன்றாவது பிள்ளையான பெருமாளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு “பெருமாளு உனக்குச் செம்பகம் அத்தையை ரொம்பப் பிடிக்கும் இல்லையா. அடுத்த மாசம் முதல் நீ அவங்க வீட்டிலே தான் இருந்து படிக்கணும். அங்கு தான் இருக்கணும். உனக்கு என்னை எப்பொ பார்க்கணும்ன்னு தோணிச்சோ அப்ப வந்து என்னைப் பார்க்கலாம். என் கண்ணு இல்லையா நான் சொன்னது உனக்கு விளங்குச்சா“ என்று சொன்னதும் “ஆத்தா என் அண்ணன்களும் என்னைப் பார்க்க வருமா, நீ என்னைப் பார்க்க வருவியா“ என்ற வெகுளித்தனமான கேள்வியைக் கேட்ட உடன் வீரமாகாளிக்குத் துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. என்ன இருந்தாலும் அவளும் ஒரு அம்மாதானே. அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அடுத்த ஒரு மாதத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து ஐயாவு பிள்ளை இந்தத் தத்துக் கொடுக்கும் சடங்கை ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் முத்தாரம்மன் கோயிலின் முன்புறம் உள்ள இடத்தில் பந்தலிட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். செம்பகத்தின் புகுந்த வீட்டு சொந்தங்களும் ஐயாவு பிள்ளையின் சொந்தங்களும் வீரமாகாளி வீட்டு சொந்தங்களும் இரண்டு நாள் முன்னாடியே ஐயாவு பிள்ளையின் வீட்டிற்கு வந்து விட்டனர். வீட்டில் கல்யாணக் களை கட்டியிருந்தது. செவ்வாய் கிழமை காலையில் கோயிலின் முன்பு எல்லோரும் கூடியிருந்தனர். முத்தாரம்மன் கோயில் பூஜாரி மந்திரம் சொல்லித் தத்துப் பத்திரிகையை வாசிக்க, வீரமாகாளியும் சொடலையும் பட்டு உடுத்தி, மாலையிட்ட பெருமாளைப் புறங்கையால் பிடித்து முகத்தை திருப்பிக் கொண்டு செம்பகம்/சுப்பிரமணிய பிள்ளையின் கைகளில் கொடுத்தனர்.

செம்பகமும் சுப்பிரமணியும் பெருமாளை அணைத்து உச்சி முகந்து இரண்டு கைகளாலும் பெற்றுக்கொண்டனர். செம்பகத்தின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதே சமயத்தில் மகனைத் தத்து கொடுக்கிறோமே என்ற வருத்தத்தில் வீரமாகாளி அழுது ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். உறவினர் பெண்கள் எல்லோரும் அவளை அழைத்துச் சென்று சமாதானப் படுத்தினார்கள். ஐயாவு பிள்ளை வாக்குக் கொடுத்தபடி செம்பகத்தின் மஞ்சக்காணிச் சொத்தான இரண்டு ஏக்கர் நன்செய் நிலத்தைச் சொடலையின் பேரில் மாற்றி எழுதிய பத்திரத்தை வீரமாகாளியின் கையில் கொடுத்தார். எல்லாம் நன்றாக முடிந்த நிம்மதியில் அன்று இரவு நன்றாக உறங்கினார் ஐய்யாவு பிள்ளை..

செம்பகமும் மாப்பிள்ளையும் பெருமாளைக் கூட்டிக் கொண்டு குலதெய்வக் கோயிலான திருச்செந்தூருக்குச் சென்றார்கள். இந்தச் சடங்கிற்கு 10 நாள் முன்னால் செம்பகமும் சுப்பிரமணிய பிள்ளையும் கற்பகத்தைப் பார்த்து பெருமாளைத் தத்து எடுக்கப் போகிற விஷயத்தைச் சொன்னார்கள். சுப்பிரமணிய பிள்ளை “கற்பகம் இந்தத் தத்தினாலே உன்னையோ சிதமபரத்தையோ நான் என்னைக்கும் கை விட மாட்டேன். செம்பகமும் நீயும் எனக்கு ஒரே மாதிரிதான். இந்த மார்த்தாண்டத்திலுள்ள தொழிற்சாலை, இங்குள்ள வீடு, நில புலன்கள் எல்லாத்துக்குமே எனக்கப்பறம் நீயும் சிதம்பரமுமே வாரிசு. அதில் எந்த சந்தேகமும் இல்லை. வேளை வரும் போது அதற்கான உயிலை எழுதி வைக்கிறேன் “. என்று செம்பகத்தின் தலையில் கை வைத்துச் சத்தியம் செய்து சொன்னார்.

“இந்த விஷயம் நம்ப மூணு பேருக்கும் தெரிந்த ரகசியம். அதனால் நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே“ என்று செம்பகம் சொல்லவும் கற்பகம் “அக்கா நீங்களும் இவரும் இருக்கும்போது எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் எந்த விஷயத்திலும் தலையிட மாட்டேன். இது நான் குடுத்த வாக்குறுதி” என்று சொன்ன கற்பகத்தை ஆர தழுவிக் கொண்டாள் செம்பகம். இருவருடைய இந்த ஒற்றுமையான போக்கைப் பார்த்துச் சுப்பிரமணிய பிள்ளைக்கு மனது சமாதானமாயிற்று.

இரண்டு வாரம் கழிந்து செம்பகம் பெருமாளைக் கூட்டிக்கொண்டு ஐயாவு பிள்ளையைப் பார்க்கிறதுக்காக வந்திருந்தாள். பெருமாளும் வீரமாகாளியை பார்த்ததும் “ ஆத்தா உன்னப் பாக்காம எனக்குத் தூக்கமே வர்றதில்லை. இன்னைக்கு நான் இங்க இருந்துட்டுப் போறேன். அத்தை கிட்ட சொல்லு“ என்று எல்லாரையும் வைத்துக் கொண்டு சொன்னவுடன் ஐயாவு பிள்ளை, “செம்பகம் அவன் சின்னப் பிள்ளை. நீயும் இங்கே இருந்துட்டு காலையிலெ போயேன். நான் சுப்பிரமணிக்குப் போன் பண்ணிச் சொல்லறேன். கொஞ்ச நாள்லெ எல்லாம் சரியாகி விடும்“ என்று சொன்னவுடன் செம்பகமும் சரி என்று சொன்னாள்.

இப்படியே வாரங்கள் மாதங்கள் என்று நாட்கள் வேகமெடுக்கத் துவங்கியது. பள்ளிக்கூட நாட்கள் தவிர பாக்கி எல்லா விடுமுறை நாட்களிலும் பெருமாள் சைக்கிளை எடுத்துக் கொண்டு கோட்டாற்றிலுள்ள ஐயாவு பிள்ளையின் வீட்டிற்கு வந்து விடுவான். சரி போனால் போகட்டும் என்று செம்பகம் அவன் கையில் அரிசி, அவல், பருப்பு, தோட்டத்தில் விளைந்த தேஙகாய் என்று ஏதாவது கொடுத்து அனுப்புவாள். நாளுக்கு நாள் பெருமாளுடைய அணுகு முறையில் சில மாற்றங்களைக் கண்டார் சுப்பிரமணி.

செம்பகத்திடம் மனதொட்டிப் பழகவில்லை. ஒரு பாசத்துடன் இருக்கவில்லை என்று. இதைப் பேச்சு வாக்கில் ஐயாவு பிள்ளையிடம் சொன்னார் சுப்பிரமணி. ஐய்யாவு பிள்ளையும் சொடலையும் எத்தனையோ முறை பெருமாளிடம் சொல்லியும் அவன் கேட்ட பாடில்லை. வீரமாகாளிக்கு மனதில் உள்ளூர ஒரு மகிழ்ச்சி. தான் நினத்தபடி எல்லாம் நடக்கிறது என்று. செம்பகமும் மன வருத்தத்துடன் இந்தப் பிள்ளை நம்மிடம் ஒட்டுறவாய் இருக்க மாட்டேங்கிறானே, தன்னை அம்மா என்று கூப்பிடுவதில்லை என்று மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள். பெருமாளும் செம்பகத்தை அத்தை என்றே கூப்பிட்டான். பெருமாள் அவளிடம் சரியாக முகம் கொடுத்துப் பாசத்துடன் பழகுவதில்லை என்ற எண்ணம் அவளுக்கு மிக்க வருத்தத்தைக் கொடுத்தது.

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சுப்பிரமணிய பிள்ளைக்கு நடக்கிற விசயங்கள் புரிய ஆரம்பித்தது. அதே சமயம் அதைச் சுட்டிக் காட்டிச் செம்பகத்தின் மனதை வேதனைப்படுத்த விரும்பவில்லை. என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்போமே என்று பேசாமல் இருந்தார். அவருடைய மனத்தில் வேறு ஒரு திட்டம் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல பெருமாளின் போக்கில் ஒரு மாறுதலைக் காண ஆரம்பித்தாள். எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் பெருமாளின் ஒவ்வொரு நிபந்தனைக்கும் ஒத்துக்கொள்ள ஆரம்பித்தாள். வீட்டில் வைத்திருந்த பணம், சின்னச் சின்ன வெள்ளிப் பாத்திரங்கள், பூஜை அறையில் இருக்கும் சின்ன தங்க நகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. வீட்டு வேலைக்காரியைப் பற்றி ஒரு சந்தேகம் இருந்தது. பின்னர் அந்த சந்தேகமும் தீர்ந்து விட்டது.

இதற்கிடையில் பெருமாள் ஒரு நாள் வந்து தன்னுடைய தங்கச் செயின் ஆத்துல குளிக்கும்போது விழுந்து விட்டது என்று சொன்னான். முதலில் கோபமடைந்த செம்பகம், பின்னர் போனால் போகட்டும் என்று விட்டு விட்டாள். அடுத்த வாரமே டவுனின் ஒரு நகை வியாபாரி சுப்பிரமணிய பிள்ளையிடம் வந்து, பெருமாள் ஒரு 3 பவுன் தங்கச் செயினை விற்றதாக வந்து சொல்லவே, செம்பகத்துக்குப் பெருமாள் மேல் கோபமும் வெறுப்புமாக வந்தது. மறு நாளே அவனிடம் “ஏன் இப்படிப் பொய் சொல்லி என்னை ஏமாற்றுகிறாய். நான் உனக்கு என்ன குறை வைத்தேன். உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் இல்லைன்னு சொல்லாமல் நானும் மாமாவும் வாங்கித் தருகிறோம் இந்த நகையை விற்ற பணத்தை என்ன செய்தாய், அப்படி என்ன செலவு உனக்கு” என்று நன்றாகத் திட்டிக் கண்டித்தாள். உடனே அவன் “ஏன் அத்தை ரொம்பக் கத்திக் கூச்சல் போடுறே. எங்க ஆத்தா என்னை ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டா. இனி நான் இங்கு இருக்க மாட்டேன். நான் கோட்டாற்றுக்கே போறேன்” என்று கோபித்துக் கொண்டு சென்று விட்டான். பிறகு செம்பகம் அடுத்த நாளே கோட்டாற்றிற்குப் போய் ஐயாவு பிள்ளையிடம் அழுது நடந்தவற்றைச் சொன்னாள். அவரும் பெருமாளைச் சமாதானப்படுத்தி அவளுடன் அனுப்பி வைத்தார். இப்படி அடிக்கடி நடக்க ஆரம்பித்தது.

ஒரு நாள் வீரமாகாளி செம்பகத்திடம் “மதனி, நான் பெருமாளை உங்களுக்குத் தத்து கொடுத்தது அவனை இப்படித் திட்டிக் கொடுமைப்படுத்துறதுக்கில்ல. இப்படி நீங்க பண்ணினால் அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்“ என்று கோபத்துடன் சொல்லிவிட்டுப் போனாள். செம்பகத்துக்கு ஒரே வருத்தம் இந்த மாதிரி பேசி விட்டாளே என்று. ஐய்யாவு பிள்ளையிடம் நடந்த விஷயத்தை அழுது கொண்டே சொல்லி வருந்தினாள்.

நாளடைவில் செம்பகத்துக்குப் பெருமாள் பேரில் உள்ள கண்மூடித்தனமான பாசம் குறைய ஆரம்பித்தது. பெருமாளுடைய நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதை ஊரார் வாயிலாக அரசல் புரசலாகக் கேட்டாள். ஒரு நாள் மத்தியானம் கோட்டாற்றுக்குச் சென்று விட்டு வரும் வழியில் ஐயாவைப் பார்க்கலாம் என்று தோணியதும், அப்படியே ஐயாவு பிள்ளையின் வீட்டிற்குச் சென்றாள். வீட்டின் வெளிக்கதவு திறந்திருந்தது. வீட்டினுள் வீரமாகாளியின் பேச்சுச் சத்தம் கேட்கவே மறைவாக நின்று கொண்டு என்ன பேசுகிறார்கள் என்று கேட்டாள். அறையில் வீரமாகாளியும் அவங்க ஆத்தாளும் குசு குசுவென்று பேசிக் கொண்டிருந்தனர்.

”ஆத்தா இப்போ பெருமாளு நான் சொல்றபடியெல்லாம் கேக்க ஆரம்பித்து விட்டான். ‘அத்தை கிட்டே கேட்டுப் பணம் வாங்கி வா, அதே சமயத்திலெ நான் சொன்னேன்ன்னு அத்தைக்கு தெரியப்படாது’ என்று அவனிடம் சொல்லி வச்சிருக்கேன். போன மாசம் எனக்குக் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு இருந்தது. பெருமாள் தான் அவனுடைய தங்கச் செயினை விற்றுப் பணம் கொடுத்தான். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு இருக்கிறதினாலே எனக்குச் சௌகரியமாப் போச்சு. கொஞ்சம் கொஞ்சமா அவனிடம் என் பாசத்தைக் காட்டி அதே சமயத்தில் அத்தையிடம் நெருங்க விடாமல் இருப்பதற்கு என்ன பண்ண முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறேன். நீ சொன்ன திட்டங்கள் எல்லாம் நல்லாப் போயிட்டிருக்கு பெருமாளை வச்சு அவ சொத்தையெல்லாம் எப்படியாவது சுருட்டணும். கொஞ்ச நாள்லெ அதையும் எப்படி செய்யணும்ன்னு எனக்கு தெரியும். நான் அதைச் செய்து காட்டலேன்னா என் பேர் வீரமாகாளி இல்லை“ என்று சொன்னாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டதும் செம்பகத்திற்கு அழுகையாகவும் வீரமாகாளியின் மேல் வெறுப்பாகவும் வந்தது. அப்படியே கிளம்பி ராமவர்மபுரத்திற்கு வந்தாள். அன்று ராத்திரியே சுப்பிரமணிய பிள்ளையிடம் தான் மறைந்து இருந்து கேட்டதையெல்லாம் ஒன்னு விடாமல் கூறினாள்.

”செம்பகம் நீ ஒன்னும் கவலைப்படாதே.. எனக்கு அப்போதே இப்படி நடக்கும் என்று ஒரு பொறி தட்டியது. உன் மனதை நோகடிக்கப்டாது என்ற ஒரே காரணத்திற்காகவே நான் மாமாவிடம் பெருமாளைத் தத்து எடுக்கும் மாமாவின் எண்ணத்திற்குச் சரி என்று சொல்ல வேண்டி வந்தது“.

”எதுக்கும் இன்னைக்குச் சாயங்காலம் மாமாவை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லறேன். அவர் கிட்ட எல்லாத்தையும் விவரமாச் சொல்லுவோம். அவுக என்ன சொல்லுறாகன்னு கேக்கறோம். இதற்கு வீரமாகாளியும் அவங்க ஆத்தாளும் தான் மூல காரணம். ஐய்யா இந்த விஷயத்துல எந்த அளவுக்கு தலையிடுவார் என்று எனக்கு தோணல்லை. சொடலைகிட்டே சொல்லறதுலே ஒரு பிரயோசனம் இல்லை. அவன் ஒரு பாவம் வாயில்லாப் பூச்சி. எதுக்கும் நான் அழகியபாண்டிபுரத்துக்கு போய் உன் மாமாவிடமும் அண்ணன் வீரப்பனிடமும் நடந்த விஷயத்தைச் சொல்லி அவுக என்ன சொல்லுறாகன்னு கேட்டுகிட்டு வாரேன். அது வரைக்கும் நீ கவலைப்படாம இரு. எல்லாம் அந்த செந்தூராண்டவன் பார்த்துப்பான்“ என்று சொன்னார் சுப்பிரமணிய பிள்ளை.

அடுத்த நாள் மத்தியானம் 11 மணிக்கு சுப்பிரமணிய பிள்ளை அழகியபாண்டிபுரத்துக்குப் போய் விட்டு வந்தார். சாயங்காலம் ஐயாவு பிள்ளையும் வந்தார். நடந்த விஷயங்களையும் அழகியபாண்டிபுரத்துக்குப் போய் விட்டு வந்த விஷயஙளையும் ஒன்று விடாமல் சொன்னார். ஐயாவு பிள்ளையும் ரொம்ப வருத்தப்பட்டார். “மாப்பிள்ளே/செம்பகம் இதுக்கெல்லாம் மூல காரணம் வீரமாகாளியும் அவங்க ஆத்தாவும் தான். சரியான பணத்தாசை பிடிச்சவங்க. நான் அவளைக் கண்டிச்சு வைக்கறேன். எதுக்கும் நாமே ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து பெருமாளுக்குத் திருமணம் செய்து வைக்கிறோம். அப்புறமாவது பொறுப்பு வந்து அவன் திருந்துவான் என்று எனக்கு ஒரு அசட்டு நம்பிக்கை இருக்கு.” என்று சொன்னார்.

“மாப்பிள்ளை எனக்கு இன்னொரு யோசனை தோணுது. நீ உன் கிட்ட இருக்கிற எல்லா சொத்துகளுக்கும் வாரிசு செம்பகம். அவளுக்கு அப்புறம்தான் பெருமாளுக்குச் சேரும். அதற்கு முன்னால் அந்தச் சொத்தை விற்பதற்குள்ள முழு உரிமையும் செம்பகத்தைத்தான் சேரும் அவளுடைய ஒப்புதல் இல்லாமல் ஒன்னும் செய்ய முடியாது என்று ஒரு பத்திரம் எழுதி அதை ரெஜிச்டர் ஆபீஸில் ரெஜிச்டெர் பண்ணி வைத்து விடு. அப்புறம் யாராலும் ஒன்னும் பண்ண முடியாது. எதுக்கும் உன் குடும்ப வக்கீலைப் பார்த்து வேண்டிய ஏற்பாடுகளை உடனே தாமதிக்காமல் செய்து விடு“ என்று சொன்னார். சுப்பிரமணிக்கும் செம்பகத்துக்கும் அவர் சொன்னது சரி என்று பட்டது.

இதற்கிடையில் ஒரு அசம்பாவிதச் சம்பவம் ஒன்று நடந்து விட்டது. ஒரு நாள் மாலையில் சுப்பிரமணிய பிள்ளையின் இரண்டாவது மனைவி கற்பகம் மார்த்தாண்டத்தில் தொழிற்சாலையிலிருந்து வயக்காட்டுப் பாதை வழியாக வரும் போது ஒரு நல்ல பாம்பு கடித்து விட்டது. எந்த சிகிச்சையும் பயனில்லாமல் போகவே அவள் காலமானாள். விதி இப்படி விளையாடுகிறதே என்று சுப்பிரமணிய பிள்ளை நொந்து போனார். அந்தச் சமயத்தில் மகன் சிதம்பரம் கல்லூரி விடுதியிலிருந்து படித்துக் கொண்டிருந்தான். 4 வருடம் முன்பாகவே சிதம்பரத்தைத் தன்னுடைய மகனாக அடாப்ட் (த்த்து) செய்து கொண்டு அதற்கு வேண்டிய பத்திரப் பதிவுகளையும் செய்து விட்டார். கற்பகம் காலமான பிறகு ஒரு நாள் குடும்ப வக்கீலை வைத்துக் கொண்டு இரண்டு உயில் எழுதினார். ஒரு உயில் மார்த்தாண்டத்திலுள்ள தொழிற்சாலை, அங்குள்ள இரண்டு வீடு மற்றும் நிலங்களைச் செம்பகத்தின் பேரிலும் அவளுக்குப் பின் வாரிசாகச் சிதம்பரத்தின் பேரிலும் உயில் எழுதினார். இரண்டாவது உயில் ராமவர்மபுரத்திலுள்ள வீடும், புத்தேரிலுள்ள பூர்வீக வீடும் மற்றும் நன்செய் புன்செய் நிலங்களைச் செம்பகத்தின் பேரிலும் அவளுக்கு வாரிசாகப் பெருமாளின் பேரிலும் கூடுதலாக பெருமாளுக்கு அந்தச் சொத்தை விற்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் உயில் எழுதி இரண்டு உயிலையும் ரெஜிஸ்டர் செய்து வைத்து விட்டார். இரண்டு உயிலின் காப்பியைக் குடும்ப வக்கீலிடம் வைத்திருக்குமாறு செய்து விட்டார்.

இதற்கிடையில் பெருமாளுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணமும் நடத்தினாள் செம்பகம். திருமணத்திற்குப் பிறகு திருந்துவான் என்ற கொஞ்ச நம்பிக்கையுடன் இருந்தாள். ஆனால் பெருமாள் திருந்தவே இல்லை. ஊதாரித்தனமாகச் செலவு செய்து ஒரு வேலையும் செய்யாமல் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு வாச்ச பொஞ்சாதியோ ஒரு பாவம். ஒன்னும் அறியாதவள். பெருமாள் அவளை அடக்கி ஒடுக்கித் தன் பேச்சுக்கு மறு வார்த்தை சொல்ல முடியாமல் ஆக்கி விட்டான். அதே சமயத்தில் அந்தப் பெண் செம்பகத்திடம் நல்ல பாசமாக இருந்தாள். அவளுக்குத் தெரிந்த பெருமாளின் நடவடிக்கைகளைச் செம்பகத்திடம் சொல்லி வருந்துவாள். அதே நேரத்தில் சிதம்பரமோ நன்றாகப் படித்து ஐ.ஏ.ஸ் தேர்வு எழுதி கலெக்டர் ஆகி விட்டான். சுப்பிரமணியும் மார்த்தாண்டத்திலுள்ள அண்டிப்பருப்புத் தொழிற்சாலையைச் சரியாக நிர்வாகிக்க நம்பகரமான ஆள் கிடைக்காததினால் அதை மூடி விட்டார். நாளுக்கு நாள் சுப்பிரமணிய பிள்ளையின் உடல் நலம் ஒத்துழைக்க மறுத்தது. நில புலன்களைக் கவனிக்கும் வேலையை மாத்திரம் செய்து கொண்டிருந்தார். சிதம்பரமோ சுப்பிரமணிய பிள்ளையையும் செம்பகத்தையும் தன்னுடன் வந்து இருக்க எத்தனை முறையோ சொல்லியும் கேட்கவில்லை. அவர் ராமவர்மபுரத்திலே இருக்க விரும்பினார். அடிக்கடி சிதம்பரமும் வந்து கவனித்துக் கொண்டிருந்தான். பெருமாள் சிதம்பரத்தைச் சுப்பிரமணியின் தூரத்து உறவுக்காரன் என்றுதான் நினைத்திருந்தான். அதனால் சிதம்பரத்தைப் பெருமாள் கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையில் ஐயாவு பிள்ளையும் காலமாகி விட்டார்.

தந்தையின் சாவுச் சடங்குகளுக்கு வந்த மலேசியாவில் இருக்கும் ஐய்யாவு பிள்ளையின் மூத்த மகன், பெருமாளின் நடவடிக்கைகள், பெருமாள் செம்பகத்தைக் கஷ்டப்படுத்தி வருகிறான் என்று தம்பி வீரப்பன் வாயிலாகக் கேள்விப்பட்டான். அவனும் தம்பி வீரப்பனுடன் சேர்ந்து கொண்டு ஒரு நாள் பெருமாளை அழைத்து “பெருமாளு நீ அத்தையை ரொம்பக் கஷ்டப்படுத்தறெ என்று கேள்விப்பட்டேன். இனிமேலாவது ஒளுங்கா இருக்கிற வழியைப் பாரு இல்லையான நான் கொலை கூட செய்யத் தயங்க மாட்டேன் என்று கறாராகச் சொன்னதும் பெருமாள் பயந்து விட்டான். ஆனால் அந்தப் பயம் சில நாட்களில் குறைந்து விட்டது. சுப்பிரமணிய பிள்ளையும் சிவலிங்கத்திடமும் வீரப்பனிடமும் சிதம்பரத்தை அறிமுகப்படுத்தி அவன் பின்னணி ரகசியத்தையும் சொன்னார். அவருக்கு மனதில் ஒரு பயம் இருந்தது. தன்னுடைய மைத்துனர்கள் இந்த ரகசியத்தைக் கேள்விப்பட்டால் கோபித்துக் கொள்ளுவார்களோ என்று நினத்தார்.

ஆனால் இரண்டு மைத்துனர்களும் அவருடைய இந்த ரகசியத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. மாறாக அத்தானைப் பாராட்டினார்கள். சிவலிங்கமோ ஒரு படி மேலாகச் செயல்பட்டான். சிதம்பரத்தை அழைத்து “தம்பீ, நீங்க நல்லாப் படிச்சவங்க, கலெக்டெரா இருக்கீங்க. ஒங்க அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் பெருமாளைக் கொஞ்சம் போட்டு வையுங்க. அவனால எங்களுடைய அக்காளுக்கும் அத்தானுக்கும் ஒரு உபத்திரமும் வராமல் பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பும் கடைமையும் கூட” என்று சொன்னதும் “சிதமபரம் நெகிழ்ந்து போய் விட்டான். ”நீங்க ஒன்னுக்கும் கவலப்படாதீங்க. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இந்தப் பெருமாளை உண்டு இல்லைன்னு பண்ணிர மாட்டேன்“ என்று சொல்லவே செம்பகத்துக்கும் சுப்பிரமணிய பிள்ளைக்கும் சந்தோஷமாக இருந்தது.

அந்தச் சந்தோஷம் ரொம்ப நாள் நிலைக்கவில்லை. சுப்பிரமணிய பிள்ளை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். நாளுக்கு நாள் அவரது உடம்பு பலவீனப்பட்டுக் கொண்டு போயிற்று. திருவனந்தபுரத்து பெரிய ஆசுபத்திரி டாக்டரும் அவரைப் பரிசோதித்து விட்டு ரொம்ப நாள் இருக்க மாட்டார் என்று சொல்லி விட்டார். வீட்டிற்கு வந்த இரண்டு வாரங்களில் சுப்பிரமணிய பிள்ளை இறந்து விட்டார். எல்லா சடங்குகளும் ஆன பிற்பாடு ஒரு நாள் வீரமாகாளியும் பெருமாளும் வக்கீலைப் பார்க்கச் சென்றனர். வீரமாகாளிக்கு தனெக்கென்று கோட்டாற்றில் ஐயாவின் வீட்டு பக்கத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது. வக்கீலிடம் ”அண்ணாச்சி ஏதாவது உயில் எழுதி வச்சிருக்காரா? இருந்தா அத எங்களுக்குப் பார்க்கணும்“ என்று சொன்னவுடனே வக்கீலும் ”ஆமாங்க உயில் எழுதி ரெஜிஸ்டரும் பண்ணி வச்சிருக்கார். பார்க்கணுமா?” என்று உயிலின் காப்பியை எடுத்து வாசித்துக் காண்பித்தார். வீரமாகாளிக்கும் பெருமாளுக்கும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ராமவர்மபுரத்திற்கு வந்து இரண்டு பேரும் செம்பகத்தை வாய்க்கு வந்த படி திட்ட ஆரம்பித்தனர்.

இதை எதிர்பார்த்த செம்பகமோ ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள். ”ஏன் மதனி, என்ன நல்லாவே ஏமாத்திட்டே இல்லையா. உனக்கப்புறம்தான் என் புள்ளைக்குச் சொத்து கிடைக்கும் என்று வழி பண்ணிட்டே இல்லையா. நான் என்ன பண்ணுறேன் பாரு“ என்று சொல்லிவிட்டு சென்றாள். அவள் பின்னாடியே சென்ற பெருமாள் “ஆத்தா இப்போ என்ன பண்ணறது. திருநெல்வேலீலே ஒரு நல்ல வக்கீலைப் பார்த்து ஏதாவது செய்ய முடியுமான்னு பாரு. இப்போதைக்கு நான் அத்தையின் வீட்டை விட்டு வெளியில் வர முடியாது. எனக்கு ஒரு வேலையும் இல்லை. நானும் எம் பொஞ்சாதியும் ஒரு வேளை சோத்துக்குக் கூட அத்தையின் கையை தான் எதிர்பார்த்து நிக்கணும். அதனாலே கொஞ்சம் நிதானமா ஆலோசித்து ஏதாவது செய்யணும்” என்று சொல்லி விட்டு பெருமாள் சென்று விட்டான்.

பெருமாள் எப்படியாவது மாமாவின் பூர்வீகச் சொத்தான புத்தேரி வீட்டை விற்பது என்று ஒரு வக்கீலைப் பார்த்து அதற்கான போலி பத்திரம் தயார் செய்வதற்கு முயற்சித்தான். புத்தேரி வீல்லேஜ் ஆபீஸில் யாரையோ பிடித்துப் பழைய பத்திரத்தின் அடிப்படையில் ஒரு போலி பத்திரம் தயார் செய்தான். புத்தேரியின் ஒரு கிராமத்து மைனரைப் பிடித்து அவருக்கு அந்த வீட்டை விற்பதற்கு முயற்சி செய்து அவரிடமிருந்து அட்வான்சாக ஒரு தொகையையும் வாங்கி விட்டான். செம்பகத்தின் கையொப்பத்தை அவள் தூங்கும் போது ஒரு வெற்று காகிதத்தில் அவள் எழுதுவது மாதிரி எழுதி கையெழுத்திட்டு அவளது வலது கையின் பெருவிரலின் கைநாட்டை அதில் பதித்தான்.

அடுத்த நாள் செம்பகத்திற்கு எல்லாம் புரிந்தது. உடனே சிதம்பரத்துக்கும் வக்கீலுக்கும் தகவல் அனுப்பி அவர்கள் வந்ததும் நடந்தவற்றையும் பெருமாளின் திட்டத்தையும் சொன்னாள். பெருமாள் ஒரு தப்புப் பண்ணி விட்டான். பொதுவாக பெண்கள் இடது கட்டைவிரல் கைநாட்டு வைத்தால்தான் கோர்ட்டில் செல்லும் என்பதை மறந்து விட்டான். இதைக் கவனித்த வக்கீல் சிதம்பரத்தின் உதவியுடன் புத்தேரி ரெஜிஸ்டெர் ஆபீஸில் வைத்துக் கையும் களவுமாகப் பெருமாளை போலீசின் உதவியுடன் பிடித்தனர்.

நாகர்கோவில் சிவில் கோர்ட்டில் பெருமாளின் பேரில் போலிப்பத்திர வழக்குத் தொடரப்பட்டு, பெருமாள் வேறு வழியில்லாமல் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான். கோர்ட் அவனுக்கு ஒரு வருஷம் சிறைத் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் செலுத்தச் சொல்லித் தீர்ப்பு வழங்கியது. கோர்ட் என்றும் பார்க்காமல் வீரமாகாளி ஒப்பாரி வைத்து செம்பகத்தை வசவு வார்த்தைகளால் திட்டினாள். சொடலைக்கு அன்று எங்கிருந்து இவ்வளவு கோபம் வந்தது என்று தெரியவில்லை. கோர்ட் என்று கூடப் பார்க்காமல் ”உன்னால தான் என் அக்கா நிம்மதியில்லாம இருக்கா“ என்று அவளைத் திட்டி உதைக்க ஆரம்பித்தான். செம்பகம் தான் அவனைத் தடுத்தாள். போனது போகட்டும் இனிமேலாவது ஆத்தாளும் மகனும் திருந்தட்டும் என்று சொல்லி விட்டுச் சிதம்பரத்தைக் கூட்டிக் கொண்டு சென்றாள். என்னதான் பெருமாள் தப்பு செய்தாலும் முத்தாரம்மன் சன்னதியில் அவனைத் தத்து எடுத்த ஒரே காரணத்திற்காகவும், பாவம் பெருமாளின் பொஞ்சாதி அவளின் பாசத்திற்காகவும் அவன் செய்த தப்பை எல்லாம் செம்பகம் மறக்க முயற்சி செய்தாள்.

இந்தச் சொத்திற்காகத்தானே வீரமாகாளி இந்தப் பாடு படுத்தினாள். தன் அருமைப் பிள்ளையைத் தப்பான வழிக்குச் செல்லும்படி ஊக்குவித்தாள். அந்த சொத்தின் மேல் செம்பகத்திற்கு ஒரு வெறுப்பு வந்தது. வக்கீலை அழைத்து ”நான் இனி பணத்தாசை பிடித்த என் தத்துப் பிள்ளையிடம் இருக்க விருப்பப் படவில்லை. அந்த உறவே வேண்டாம் என்று தீர்மானித்து விட்டேன். என்னுடைய பாசமுள்ள தத்துப் பிள்ளையான சிதம்பரத்தின் கூட தான் இருக்கப் போகிறேன்“ என்று சொல்லி விட்டுச் சிதம்பரத்தின் கூட கிளம்பினாள். அடுத்த 9 மாதத்தில் செம்பகமும் காலமானாள். சிதம்பரம் தான் செம்பகத்தின் ஆசைப்படி கொள்ளி வைத்தான். பெருமாளும் அந்திமச் சடங்கிற்காகப் பரோலில் வந்திருந்தான். எல்லா உறவினர்களும் இருந்தனர். ஒருவரும் அவனைப் பார்த்து எதுவும் பேசவில்லை. 9 மாத ஜெயில் வாசம் அவனை நன்றாக மாற்றி விட்டது.

ஜெயிலில் இருந்து விடுதலை பெற்றதும் ராமவர்மபுரத்திற்கு வந்தான். வீடு வெறிச்சென்றிருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. கதறி அழுதான் “அம்மா நான் தப்பு பண்ணி விட்டேன். அந்த முத்தாரம்மனுக்கே பொறுக்கலை. என்னிடம் இருந்து போய் விட்டாயே” என்று கதறி அழுதான். முன் அறையில் இருந்த போட்டோவில் இருந்த சுப்பிரமணிய பிள்ளை அவனைப் பார்த்துச் சிரித்தபடி இருந்தார். வக்கீல் அவனிடம் பத்திரத்தைக் கொடுத்து “இனி இந்தச் சொத்து, வீடு எல்லாமே உனக்குத்தான், உனக்கு அதை அனுபவிப்பதற்குள்ள உரிமையை உனக்கு அத்தை கொடுத்து விட்டுப் போய் விட்டாள்” என்று சொல்லி விட்டுச் சென்றார். பத்திரம் அவனைப் பார்த்துச் சிரிப்பது போல் தோன்றியது. தான் ஒரு அனாதையாய் விட்டோமே என்ற உணர்வு அவனை வாட்டியது.

படத்திற்கு நன்றி:http://everychildhealthy.com/blog/diffusing-arguments

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தத்து – பாசத்திற்காகவா? பணத்திற்காகவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.