தமிழகப் பெண்களின் சாதனைப் பரல்கள் (3)

1

 

தி.சுபாஷிணி

வீரத்தமிழச்சி வேலு நாச்சியார் சேது நாட்டின் மன்னர் சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் பிறந்தார்.வேலுநாச்சியார். இவர், கல்வியோடு வீரத்தையும், ஆணுக்கு நிகராய்த் தேர்ச்சி பெற்றார். இவருக்குத் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஆங்கிலம், பிரஞ்ச்சு ஆகிய மொழிகளில் புலமை உண்டு. சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார். அப்போது சிவகங்கை முதலான 72 பாளையங்களும் ஆற்காடு நவாப் முகமது அலியின் கட்டுப்பாட்டில் இருந்தன.

பாளையங்கள் அனைத்தும் ஆற்காட்டு நவாப்புக்குக் கப்பம் கட்டி வந்தன. வரிவசூல் செய்யும் அதிகாரத்தை ஆங்கிலேயருக்கு ஆர்க்காட்டு நவாப் கொடுத்திருந்ததால், இருவருக்குமே பாளையக்காரர்கள் அஞ்சவேண்டியிருந்தது. இதைச் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் எதிர்த்துப் போராடினார்.

மன்னர் காளையார் கோவிலில் தங்களது குலதெய்வ வழிபாட்டின்போது நிராயுதபாணியாய் இருக்கும்போது ஆங்கிலேயர்கள் படையெடுத்து மன்னரையும், அவரது இளைய இராணியையும் மக்களையும் கொன்று குவித்தனர். இதைக் கேள்வியுற்ற போது நாச்சியார் வாளெடுத்துப் புறப்பட்டார். காளையார் கோவில் நோக்கி அவர் போகும் வழியில் சந்தித்த நவாப் படைகளையும், ஆங்கிலேயப் படைகளையும் கொன்றவாறே சென்றார். அதற்குள் சிவகங்கை, நவாப் கையில் சிக்கியது.

கொண்ட தலைவன் உயிர் குடித்த கொடூரப் பறங்கியர் சிரம் அறுத்துச் சிவகங்கையை மீட்பேன்’ என்று காளையார் கோவிலில் வேலுநாச்சியார் சபதம் ஏற்றார்.இப்புனிதப் போரில் ‘மருது சகோதரர்கள்’ வேலு நாச்சியாருக்குத் துணையாகி உதவினார்கள். அப்போது திண்டுக்கல் கோட்டையில் இருந்த ஹைதர் அலி உதவியால் சிவகங்கையை மீட்டார் வேலு நாச்சியார். இப்போர் எட்டு ஆண்டுகள் நடந்தது. பின் ஆட்சியில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்தார். இறைவனுக்கும் மக்களுக்கும் சிறப்பாகத் தொண்டாற்றினார்.

இதற்கிடையில் இவரது மகள் மர்மமான முறையில் மாண்டுபட, இவரது இதயம் பலவீனமடைந்தது. கி.பி.1796இல் இருதய நோயின் பாதிப்பினால் இறந்தார். வீரமங்கை வேலுநாச்சியாரது வீரத்தின் மணம் நம் தமிழ்நாட்டில் இன்னமும் மணக்கின்றது.

 படத்திற்கு நன்றி :

http://mukkulathormedia.blogspot.in/2011/03/velu-nachiyar.html

நன்றி : மனோரமா ஆண்டிதழ் வெளியீடு

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தமிழகப் பெண்களின் சாதனைப் பரல்கள் (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.