சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
தி.சுபாஷிணி
சிட்சிட் சிட்டுக்குருவி
பட்டென்று பறந்திடாதே?
பட படக்குது இதயம்! நீ
விட்டுச் செல்லும்
சின்னஞ் சிறிய
சிறகோசை இன்பம்
கிடைக்காது
தவிக்குது
என் இல்லம்!
மென்சிறு பாதங்கள்
மென்மலர்க் காம்பாய்
உன் அலகு
உவக்கும் ஸ்பரிசம்
உணரத் துடிக்கும்
மின் விசிறியும்
நீண்ட நிலைக்
கண்ணாடியும்!
எங்கள் ஊர்க் கொல்லையில்
செங்கட் சுவரில்
வைத்த பிரை
காணாது தவிக்கும்
உன் வாசம்!
சின்னஞ்சிறு முட்டைகள்
சாம்பல் நிறமாய்
வெடித்து வரும்
குஞ்சுகள்
போடும் கூப்பாடுகள்
மெல்லியதாய் மிக
மெல்லியதாய்!
எப்படித்தான் உணர்வாயோ!
யார்தான் உனை அழைப்பாரோ?
விருட்டென்று வந்து விடுவாய்
வாயில் உணவு ஊட்டிடு வாய்!
கண்ணாரக் காணலயே
கவின் அழகுக் காட்சிதனை!
கொல்லையில் குத்துக்கல்லில்
கொட்டிய அரிசிமணிகளில்
போட்ட கோலத்தில்
பதவிசாய் அமரும்
பாங்கைப்
பார்க்கலியே! பார்க்கலியே!
பாவி! நாங்கள்!
என்ன பண்ணி விட்டோம்!
என்ன பண்ணி விட்டோம்!
எல்லா தினங்கள் போல்
உன்னையும்
கொண்டாடும் தினங்களில்
அடக்கி விட்டோம்!
காரணங்கள் காட்டாது
காழ்ப்புணர்வு கொள்ளாது
கொல்லையிலே வந்து விடு!
கூடுகள் தனைக் கட்டிவிடு!
சிட்சிட் சிட்டுக்குருவி
பட்டென்று பறந்துவா!
பாவிகளின் பரிதவிப்பைப்
பாந்தமாய்க் கூறி
உன் உறவுகளைக்
கூட்டிவா!
உன் தினத்தைக் பொய்யாக்கி விடு!
உண்மையாய்
உயிராய்
உறவாய்
நாமிருந்திடலாம்!
சிட்சிட் சிட்டுக்குருவி!
பட்டென்று பறந்திடாதே!
படபடக்குது இதயம்!
arumaiyana kavithai,