சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-1)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

காலை வேளையில் குளித்து முடித்து , தலையில் ஒரு துண்டைச் சுற்றியபடி பரபரவென இயங்கிக் கொண்டிருந்தாள் மங்கை. ஒன்பது மணிக்குள் நான்கு பேருக்கு டிஃபன் கொடுத்து, சாப்பாடு கையில் கட்டிக் கொடுத்து , பள்ளி , கல்லூரி ,மற்றும் அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டுமே. அடுப்பில் ஒரு பக்கம் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. மறு அடுப்பில் ஆவி பறக்க இட்லிகள் தயாராகிக் கொண்டிருந்தன. மங்கை அவற்றை எடுத்துப் பரிமாறு முன் அந்தக் குடும்பத்தைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்.

500 சதுர அடிகளே இருந்த அந்தச் சிறிய வீட்டில் , மொத்தம் மங்கையையும் சேர்த்து ஐந்து பேர். மங்கையின் கணவன் சிவனேசன் , மகன் நிகில் , மகள் நித்திலா மற்றும் சிவனேசனின் தங்கை ப்ரியா. அந்த வீட்டின் சம்பாதிக்கும் நபர் சிவனேசன் மட்டுமே. மங்கை படித்திருந்தாலும் , வீட்டு வேலையே சரியாக இருப்பதால் வெளியில் வேலைக்குச் செல்லவில்லை. மேலும் மங்கைக்கும் நல்ல உடம்பும் இல்லை. மயக்கம் , தலை சுற்றல் என்று படுத்து விடுவாள். குழந்தைகள் இருவரும் பக்கத்தில் உள்ள பள்ளியில் ஏழாவதும் , ஒன்றாவதும் படிக்கிறார்கள். ப்ரியா ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் வருடம் படிக்கிறாள். நடுத்தர ஆனால் மிகவும் மகிழ்ச்சியான குடும்பம் அவர்களுடையது.

“என்ன அண்ணி சாப்பாடு ரெடியாயிடிச்சா?” என்றபடியே உள்ளே நுழைந்த ப்ரியாவை ஏற இறங்கப் பார்த்தவள் “ஏண்டி உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? காலேஜ் போற அன்னிக்குத் தலைக்குக் குளிக்காதேன்னு. இப்போ பாரு ஈரம் சொட்டுது. அப்படியே பின்னல் போட்டுட்டுப் போனீன்னா மண்டையில் நீர் ஏத்துக்கிட்டு , காய்ச்சல் தான் வரும்” என்று பொரிந்தவள் , ஒரு துண்டை எடுத்துப் ப்ரியாவின் தலையைத் துடைக்க ஆரம்பித்தாள்.

“என்ன அண்ணி நான் என்ன சின்னக் குழந்தையா? விடுங்க” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே சிவனேசன் அடுப்படிக்கு வந்தான்.

” ஹ்ம்ம்! குடுத்து வெச்சவ ப்ரியா! என்னிக்காவது ஒரு நாளாவது நீ எனக்கு இந்த மாதிரி தொடச்சு விட்டுருக்கியா? எல்லாத்துக்கும் குடுப்பினை வேணும்”

“ஐயோ! போதுமே ! அசடு வழியுது! அதைத்தான் தொடைக்கணும். வயசுப் பொண்ணை பக்கத்துல வெச்சுக்கிட்டு என்ன பேச்சுப் பேசறீங்க?” என்ற மங்கை ப்ரியா பக்கம் திரும்பி “ப்ரியா இன்னிக்குப் பின்னல் போடாதே! ரெண்டு பக்கமும் முடி எடுத்து ஹேர்பின் குத்திக்க போதும். முடி காஞ்சதும் பின்னிக்கோ” என்று உத்தரவிட்டவள். கணவன் பக்கம் திரும்பி “என்னங்க இட்லி எடுத்து வெக்கட்டுமா? சாப்பிட வரீங்களா? ” என்றாள்.

“இட்லி எடுத்து வை. வரேன். ஆனா இன்னிக்கு மதியம் எனக்கு சாப்பாடு கட்டாதே. எங்க எம்.டி இன்னிக்கு லன்ச் அவர்ல என்னை அவரோட ரூமுக்குக் கூப்பிட்டு இருக்காரு”

“அப்டீன்னா மதியம் அவரோட சாப்பாடா?

“ஆசையைப் பாரு. அவரு எவ்ளோ பெரிய ஆளு. கம்பெனிக்கே ஓனர். நான் சாதாரண மேனேஜர். அதெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. ஏதேனும் ஆபீஸ் விஷயமா பேச வரச் சொல்லியிருப்பாருன்னு நெனக்கறேன். “

“அப்போ எப்போ சாப்புடுவீங்க?”

“அவர்ட்ட பேசி முடிச்சதும் வெளியில போய் ஏதாவது ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறேன். அதப் பத்தியெல்லாம் நீ கவலைப் படாதே” என்றவன் மங்கை எடுத்து வைத்த இட்லிகளைச் சுவைக்கலானான்.

மகள் நித்திலாவுக்கு யூனிஃஃபார்ம் அணிவித்து , பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொடுத்து , மகனுடைய பேனவைத் தேடி எடுத்துத் தந்து , நடு நடுவே அவர்களுக்கு டிஃபனும் பரிமாறி என்று பம்பரமாகச் சுழன்றாள் மங்கை. ப்ரியாவும் பச்சைச் சுடிதார் அணிந்து மயிலென வர , அவளுக்கும் இட்லிகளை எடுத்து வைத்துச் சட்னி ஊற்றினாள்.

“ஏம்மா! அத்தைக்கு சட்னி மட்டும் போடறே? சாம்பரையும் ஊத்து.” என்றான் நிகில்.

” நீ உன் தட்டைப் பாத்துச் சாப்பிடுடா. அதெல்லாம் அண்ணி கரெக்டாதான் போடறாங்க. இட்லிக்கு சாம்பார் பிடிக்காது எனக்கு. அதுக்காகத்தான் அண்ணி சட்னியே அரச்சிருக்காங்க.” என்றாள் ப்ரியா.

“ஏம்மா! சட்னி , சாம்பார் ரெண்டும் செஞ்சு சிரமப்படுறே? அவளுக்குச் சாம்பார் பிடிக்கல்லேன்னா பொடி போட்டுச் சாப்பிடட்டும். ஏன் சட்னி இல்லாம மேடம் சாப்பிட மாட்டாங்களோ?” என்றான் சிவனேசன் பொய்க் கோபத்தோடு.

“ஏங்க நான் என்ன அம்மியிலயா அரைக்கிறேன். மிக்ஸியில ரெண்டு சுத்து சுத்துனா சட்னி ரெடி. இதுல என்ன சிரமம் இருக்கு? பாவம்! இது தானேங்க சாப்பிடற வயசு. நல்லாச் சாப்பிடட்டுமே”

“நீ இப்படியே செல்லம் குடு. நாளைக்கு இவ கட்டிக்கிட்டுப் போற எடத்துல இந்த மாதிரி நடக்குமா?”

“அண்ணே! நீ அதெல்லாம் கவலையே படாதே. நான் சொல்றதுக்கெல்லாம் மாப்பிள்ளையைத் தலையாட்ட வெச்சுடுவேன்.”

“நீ செஞ்சாலும் செய்வே” என்றான் சிவனேசன். “எல்லாம் அண்ணியைப் பாத்துக் கத்துக்கிட்டது தான்” என்றாள் ப்ரியா குறும்பாக. அவளை அடிக்க சாம்பார்க் கரண்டியை ஓங்கினாள் மங்கை. தப்பித்து உள்ளே ஓடியவள் சுவரில் இடித்துக் கொண்டு “அம்மா!” என்று அப்படியே உட்கார்ந்தாள்.

மங்கை சிவனேசன் இருவரும் ஏக காலத்தில் அவளிடம் ஓடினர். “என்னம்மா ப்ரியா? எங்க அடிபட்டுச்சு? காட்டு” என்றாள் மங்கை. முழங்கை கன்றிச் சிவந்திருந்தது. வேறு எங்கேயும் அடிபடவில்லை என்று உறுதியாகத் தெரிந்த பின்பு , உடை மாற்றிக் கொள்ள வேறு அறைக்குச் சென்றான் சிவனேசன். “பாத்து நடக்கணும். கண்ணு மண்ணு தெரியாமே ஓடினா இப்படித்தான்” என்றான் நிதின். “நீ சும்மா இருடா பெரிய மனுஷா. அத்தையே பாவம் வலியில துடிக்கிது. சாப்பிட்டுட்டு , டிஃபன் பாக்ஸை எடுத்துட்டுக் கெளம்பு. அப்படியே பாப்பாவோட டிஃபன் பாக்ஸை அவ பையில வெச்சுடு” என்றவள் ப்ரியாவின் கையில் அயோடெக்ஸ் தேய்ப்பதில் முனைந்தாள்.

“ஆனாலும் நம்ம வீடு ரொம்பச் சின்னது அண்ணி. நம்ம அஞ்சு பேருக்கு இன்னும் கொஞ்சம் பெரிய வீடா இருந்தா நல்லா இருக்கும்” என்றாள்.

“என்ன பண்றது ப்ரியா? சிட்டி நடுவிலே இதை விடப் பெரிய வீடுன்னா வாடகை குடுத்து மாளுமா? புற நகர்ப் பகுதிக்குப் போகலாம்னா பசங்களுக்கும் , உனக்கும் போய் வர்றது ரொம்பக் கஷ்டம். என்ன செய்ய நம்ம மாதிரி நடுத்தரக் குடும்பங்கள் இதையெல்லாம் சகிச்சுக்கத்தான் வேணும். கடவுள் புண்ணியத்துல நீ கல்யாணம் கட்டிப் பெரிய வீட்டுக்குப் போனியானா ஒனக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்காது”

ப்ரியா கண்களில் நீருடன் ” அண்ணி என்ன அண்ணி நீங்க? நான் சாதாரணமாத்தான் சொன்னேன். எனக்கு இந்த வீடு ரொம்பப் பிடிச்சிருக்கு அண்ணி. இந்த வீடு இல்லே, இதை விடச் சின்ன வீடாயிருந்தாலும் நீங்களும், அண்ணனும், குழந்தைங்களும் இருக்கற வீடு எனக்கு சொர்க்கம் அண்ணி. என்னைப் பிரிச்சுப் பேசாதீங்க அண்ணி. மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு” என்றாள்.

நாத்தியின் மறுமொழி மங்கையின் கண்களிலும் நீரை வரவழைத்தது. அதை மறைத்துக் கொண்டு ” சரி!சரி! ரொம்பப் பெரிய மனுஷி மாதிரிப் பேசாதே. ராத்திரி வந்து இன்னம் ஒரு தரம் அயோடெக்ஸ் தேய்ச்சாச் சரியாப் போயிடும். இப்போ நீ காலேஜுக்குக் கிளம்பு. நேரமாச்சு” என்றாள்.

ஒருவர் பின் ஒருவராக அனைவரும் வெளியேறினர். தானும் டிஃபன் சாப்பிட்டு விட்டு மற்ற வேலைகளைக் கவனிப்பதில் முனைந்தாள் மங்கை. துணி துவைக்கையில் , பாத்திரம் விளக்குகையில் அவளுக்குப் ப்ரியாவின் பெரிய வீடு பற்றிய ஆசை மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது. மங்கைக்கும் ஆசைதான். கிராமத்தில் ஒரு பெரிய வீட்டில் பிறந்து வளர்ந்தவள் மங்கை. இங்கே காலாற நடக்கக் கூட இடம் போதாது. இன்னும் எத்தனை நாள் இந்தச் சிறு வீட்டில் ஓட்ட வேண்டுமோ? கடவுள் என்று தான் கண் திறப்பாரோ? என்று எண்ணமிட்ட படியே வேலைகளை முடித்தாள். அவளுக்குத் தெரியாது அவள் ஆசை கூடிய விரைவில் நிறைவேறப் போகிறது என்று.

தொடரும்..

 

படத்திற்கு நன்றி:http://www.istockphoto.com/stock-photo-8233744-beautiful-young-woman-thinking.php

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.