நான் அறிந்த சிலம்பு – பகுதி 12

0

மலர் சபா

புகார்க்கண்டம் – 2. மனையறம் படுத்த காதை

மாசு ஏதுமற்ற
பொன் போன்றவளே! (பார்த்தல்)
இன்பம் ஊற்றெடுக்கும்
வலம்புரி முத்தே! (தொடுதல்)
குற்றமற்ற
மணப்பொருள் தரும்
தெய்வ மணமே! (நுகர்தல்)
இனிமையான
கரும்பு போன்றவளே! (சுவைத்தல்)
இன்மொழியில்
தேன் போன்றவளே! (கேட்டறிதல்)

பெறுதற்கரிய
பெரும்பேறே!
இன்னுயிர் காக்கும்
அருமருந்தே!
பெருங்குடி வணிகனின்
பெருமை வாய்ந்த மகளே!

நின்னை
மலையிடைப் பிறவே
மாணிக்கம்தான் என்பேனா..
அலையிடைப் பிறவா
அமிழ்துதான் என்பேனா..
யாழிடைப் பிறவா
இசைதான் என்பேனா..

நீண்டு தாழ்ந்திறங்கும்
இருள் கூந்தற்பெண்ணே!
நின்னை
என்னென்று பாராட்டுவேன்!

இன்னும் இன்னும்
முடிவற்ற
பாராட்டுரைகள் பலப்பல
நித்தமும் நவின்று

பூமாலை அணிந்து
ஒளிர்கின்ற
கண்ணகி அவளுடன்

கொத்துமலர்
மாலையணிந்த
கோவலன் அவனும்

நித்தமும் களித்து
மனம் மலர்ந்து
வாழ்ந்து வந்த
ஒரு நாளில்..

தம்பதியரின் இனிய இல்லறம்

பண்புகள்
பெருமை சேர்த்திட
நீண்ட கூந்தலுடை
இல்லக்கிழத்தி
கோவலன் அன்னையும்,
அவன் தம் தந்தையும்
தம்பதியர் தமக்காய்த்
தனி இல்லறம்
சமைக்க விழைந்தனர்.

தம்பதியர் தாமும்
தம் கடமை
மறவாமல் தவறாமல்
சுற்றத்துடன் இயைந்து வாழ்தல்
துறவியர் பேணுதல்
விருந்தினர் உபசரித்தல்

இன்னும் இன்னும்
நற்செயல்கள்
பல புரிந்து
இல்லற வாழ்வில்
இனிதே ஈடுபட்டு
வாழ வேண்டி

தம் கண்களால்
திரு அறங்கள்
காண வேண்டி,

தாம் ஈட்டிய பொருட்களின்
பகுதி ஒன்றைப் பிரித்தளித்து,
உரிமைச் சுற்றமாய்ப்
பணியாட்களும் பலர் அளித்துத்
தனிக் குடும்பம்தான்
அமைத்துக் கொடுத்தனரே..

கண்ணகியவள் பேணிய
இல்லறப் பாங்கினைக்
கண்டவர் பாராட்ட,

இவ்வினிய
இல்வாழ்க்கையில்
ஆண்டுகள் சிலதான்
கழிந்தனவே.

 

அடிப்படையாய் அமைந்த சிலம்பின் வரிகள் இங்கே..73-90

கோவலன் கண்ணகி படத்திற்கு நன்றி:http://hindusanghaseidhi.net/?p=1252

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *