மாலையும் புலம்பும்!
கு.பாலசுப்ரமணியன் (கவிஞர் கானவன்)
துணை இயக்குநர் (ஓய்வு),
மொழி பெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு.
(மார்ச் 20ஆம் நாள், பன்னாட்டு ஊர்க் குருவிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, எட்டுத் தொகையிலிருந்து இந்த இனிய பாடலைக் கவிஞர் கானவன், நினைவுகூர்ந்து விளக்கியுள்ளார். அவருக்கு நமது நன்றிகள். – ஆசிரியர்)
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனையுறைக் குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின்நுண் தாது குடைவன ஆடி,
இல்இறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் – தோழி! – அவர் சென்ற நாட்டே?
பாடியவர்: மாமலாடன்.
திணை: மருதம்.
துறை: பிரிவிடை ‘ஆற்றாள்’ எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ‘ஆற்றுவல்’ என்பதுபடச் சொல்லியது.
துறை விளக்கம்: தலைமகனின் பிரிவுக் காலத்திலே, அப்பிரிவைத் தாங்கமாட்டாள் தலைவியெனத் தோழி கலங்கிய பொழுது தலைவி, தான் தலைவன் வரும்வரை பொறுத்திருக்கக் கூடியவள் என்று கூறி, அவளைத் தேற்றுகின்றாள்.
கருத்து:
தோழி! ஆம்பற் பூவினது வாடலையொத்த கூம்பிய சிறகுகளையுடைய, மனையிடத்தே தங்குபவான குருவிகள், தெருவின்கண் விளங்கும் புழுதியிலே குடைந்தாடிக் களித்தபின், மாலையிலே வீட்டிறைப் பினிடத்துள்ள தம்முடைய சேக்கையிற் சென்று, தம் குஞ்சுகளோடும் தங்கியிருக்கும். பிரிந்திருப்பவர்க்குத் துன்பத்தைத் தருவதான அத்தகைய மாலைக்காலமும், அக்காலத்தே வாய்த்த தனிமைத் துயரமும், அவர் சென்றுள்ள நாட்டிடத்தும் இல்லையோ? முற்றத்திலே காயப்போட்டிருக்கும் தானியங்களைத் தின்ற வாய், பொதுவிடத்திலுள்ள அவ்விடத்தும் அவை உளவாதலான் அவர் விரைந்து வருவார் என்பதாம்.
விளக்கம்:
‘தாதெரு மன்றம்’ என்றாற்போல தமக்குரிய இடத்திலே தம் குஞ்சுகளோடு தங்கும் குருவிகளைக் காண்பவர், தாமும் நம்மை நாடி வருவதற்கு விரைவார்: மாலையும் தனிமைத் துயரமும் நம்பால் பேரன்பினரான அவருக்கும் உண்டாம்; ஆகவே, அவர் விரைந்து மீள்வார் என யான் ஆற்றியிருப்பேன் என்பதாம். ‘குரீஇ பிள்ளையொடு வதியும்’ என்றலால், அவளும் புதல்வரைப் பெற்ற பெருநிலையினளாவதற்கு விரும்பினள் என்னலாம்.
சாம்பல்-பூவின் வாடல்,
எருப்படிந்த புழுதி – எருவின் நுண்தாது. நுண் தாதாகிய
[நன்றி: குறுந்தொகை – புலியூர்க் கேசிகன் உரை – பாரி நிலையம்]
சங்க இலக்கியங்களில், ‘எட்டுத் தொகை’ எனப்படும் தொகை நூல்களில் ஒன்று, குறுந்தொகை. இந்நூலில் 46ஆவது பாடலாக இடம் பெறுவது, இப்பாடல். இதை எழுதிய புலவர், மாமலாடன் என்பவர்.
இப்பாடல் நமக்கு அளிக்கின்ற அரிய செய்திகளாவன:
‘மனை உறைக்குரீஇ’ என அழைக்கப்பெறும் ஊர்க்குருவிகள் / சிட்டுக் குருவிகள் மிக இயல்பாக, மக்கள் வாழிடங்களில், மனைகளில், தாழ்வாரங்களில், இறைவாரங்களில் கூடு அமைத்து வாழும்; மக்களிடம் எந்த அச்சமுமின்றிப் பறந்து திரிவன இவை. குறிப்பாக, ஊர்கள் தோறும் இக்குருவிகள் பரவலாகக் கூடுகட்டி வாழ்வதையும், இரைதேடி உண்பதையும், பறந்து திரிந்து மகிழ்வதையும் காணலாம்; இவற்றை அன்போடும் பரிவோடும் பாதுகாத்தனர். இந்த ஊர்க்குருவிகள் என்னும் சிட்டுக்குருவிகள் மகிழ்ச்சியான, வாழ்க்கைக்கு அடையாளமாக இருந்தன. வீடுகளில் வாழ்வோரும் தமது இல்லத்தின் இறைவாரங்களில் குருவிகள் கூடு கட்டுவதைக் கண்டு, அவற்றின் மீது அன்பு காட்டினர். அவற்றை நல்ல சகுனமாக, தங்கள் குடும்பம், மகிழ்வுடன் வளமாக வாழ்வதற்குரிய நல்ல அடையாளமாகக் கருதினர்.
மக்களும் இந்தப் பாடலில் ஒரு வெளிப்படையான, நேரிடையான செய்தி இடம் பெறுகிறது. அதாவது: மனைக் குருவிகள் எனப்படும் ஊர்க்குருவிகள் கூட்டமாகப் பறப்பது, முற்றத்தில் காயும் தானியங்களைக் கொறித்து, மகிழ்ச்சியுடன் வட்டமடித்துப் பறப்பது, தங்களின் பேடைகளுடனும், குஞ்சுகளுடனும் மகிழ்ச்சியாகக் கொஞ்சுவது, ஆகிய காட்சிகள் காண்பவர் உள்ளத்தை கவரும்; அவற்றைக் காண்பதே, பிரிந்திருக்கும் அன்புக் காதலர்கள் உள்ளத்தில், தாம் விரைந்து இணைவோம், இன்புற்று வாழ்வோம் என்னும் உணர்வூக்கத்தை வழங்குவதாக அமையும்.
நகரங்கள் விரிந்து, புறநகர் பகுதிகள் பல்கிப் பெருகி, அவற்றில் நவீனமான, நுட்பத்திறம் மேம்பட்ட பல்வகை கட்டுமானங்களும் பெருகிட, அவை இந்த ஊர்க்குருவிகளின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்னும் அச்சம் எழுந்துள்ள இந்நாளில், இந்த எளிய, இனிய சிற்றுயிரினத்தைப் பாதுகாத்திட, நாம் எல்லா வகையிலும் முயற்சிகள் மேற்கொள்வோம். ஊர்க்குருவியினத்தைக் காக்க உறுதி பூணுவோம்.
படத்திற்கு நன்றி:
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:House_Sparrow_mar08.jpg