பட்ஜெட் ஃப்ஃட்ஃப்டி! ~2
இன்னம்பூரான்
இரு கருத்துக்கள் வந்தன.
1. ‘… அதையும் இந்த உலகம் நம்புதே?அதைச் சொல்லணும்…’
2.’… பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளை – அதன் விழுமிய சாராம்சங்களை அறியாத பாமரர்கள் இருக்கும் வரை –…’ என்ற ஆதங்கம். இருவரும் என்னுடைய ‘மனச்சுமையும், மானப் பிரச்சினையும்’ புரிந்து கொண்டது நல்வரவே. நான் அடித்துப்பிடித்துக் கொண்டு எழுதியதை நியாயப்படுத்துகிறது.
முதலில் தெனாலிராமனின் குதிரைக்கதை. ‘All progress is not forward’ என்றார் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல். அதற்குப் பொருத்தமான உவமை தெனாலிராமனின் குதிரை. சிறார்கள் வினா எழுப்பினால், கவனத்துடன் பதில் அளிக்க வேண்டும். அதற்காக கொஞ்சம் தேடினேன். பிற்காலத்தில் தெனாலிராமனை காப்பியடித்தவர்கள், பலவிதமான கதைகளை படைத்துள்ளனர். படு போர். நான் எழுபது வருடங்களுக்கு முன் படித்தது தான் ஒரிஜினல்.
கதை: குதிரைத்தீனிக்கு மன்னர் கொடுத்த மான்யத்தைக் கபளீகரம் செய்து விட்டு, அவன் குதிரையை அரைப்பட்டினியாக வைத்திருந்ததால், அது நோஞ்சானாக இருந்தது. எப்போதும் பசியா? இரண்டடி முன் வைத்தால், நாலடி பின் வைத்து, சிந்திய கொள்ளை தின்ன, லாயத்திற்கு வந்து சேரும். மன்னர் கிருஷ்ணதேவராயர் ஒரு நாள் கூப்பிட்டு அனுப்புகிறார். பரியேறி வா என்றார். தெனாலிராமனும் கிளம்பினான். ஆனால், அரண்மனை சேரவில்லை. வீட்டில் இருந்தான். அரசர் ஆளனுப்பி இந்த ‘பின்னோட்டம்’ பிரச்சனையை அறிந்து கொண்டார். என் நினைவிற்கு வந்ததை எழுதுகிறேன். எனக்குப் பிடித்த உவமை போலும் பல இடங்களில் இதை பிரஸ்தாபித்திருக்கிறேன்.
உதாரணத்திற்கு: https://www.vallamai.com/literature/articles/15992/ & http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_நவம்பர்_23 ‘சிந்திப்போமா’ இழையிலும் தான், மின் தமிழில். மாண்புமிகு. பிரனாப் முகர்ஜி அவர்களின் பட்ஜெட், இந்த ‘பின்னோட்டம்’ பிரச்சனையை முன்வைக்கிறது! இந்த ‘பட்ஜெட்’ டின் கொள்கையென்ன? கோட்பாடு என்ன? இலக்கணம் என்ன? பட்ஜெட் இல்லையெனில் நாட்டின் செல்வநிலை அடிபடுமா? பட்ஜெட் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமா? அவரவர்கள் தனக்கு புரிந்து கொண்டதை, தயங்காமல் பகிர்ந்து கொண்டால், மக்களிடையே பொருளாதார பிரஞ்ஞையை, விளக்குத்திரியை நிமிண்டு விடுவது போல், தூண்டிவிடலாம். இல்லையெனில், இத்துடன் ‘பட்ஜெட்டை’ உறங்க வைக்கலாம். எல்லாம் வல்லமை வாசகர்களின் இஷ்டம். அவசரமில்லை.
(தொடரும்?)