ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

உயிருக்குயிராய்ப் பழகிய நண்பர்கள்.

உறவின் உரிமையில் கெழுமிய சொந்தங்கள்.

ஓருயிருக்கு இரண்டு உடல் என்னலாம்படியான சகோதர பாசங்கள்.

ஆனால் காமத்துப்பால் ஒவ்வோர் உயிரையும் தன் இன்பத்தை நாடி ஓடும் ஓட்டத்தில் தனிமையாய் ஆக்கி, நட்பு, சொந்தம், உடன்பிறப்பு அனைத்தையுமே தொந்தரவாய்க் கருத வைத்து விடுகிறது.

ஆனால் ஏதோ ஒரு நல் வாய்ப்பில், ஜனார்த்தனன் கண்கள் அமலங்களாக விழிக்கும் பார்வையில் படும் கணத்தில் ஒரு ஜீவன் திடீரென பகவானின் நினைவு ஏற்படத் தான் அதுவரை அலைந்தது எல்லாம் திசை மாறிக் கடவுளை நோக்கிச் செல்லத் தொடங்குகிறது.

காமம்தான் பெரிய வேகம் என்று நினைத்தால் அந்த வேகத்தையும் அர்த்தம் அற்றதாக ஆக்கி ஓர் ஆகர்ஷணம் ஆராவமுதன்பால் தள்ளுகிறது.

ஆனால் என்ன ஆச்சரியம்!

தான் மட்டும் தனிமையாகப் போய் அனுபவிக்க வேண்டியதுதானே அந்த ஆதிப் பெரும் சுகத்தை…..!

இல்லையே…..அந்த ஜீவன் உறங்கும் பல ஜீவன்களை எழுப்பி, அவற்றின் கால்களில் விழுந்தாவது அந்தப் பரம சுகத்தின்பால் போகக் கூட்டம் சேர்க்கிறது.

இறந்து போனவர்களை எழுப்ப வழியில்லையே என்று ஏங்கி ‘வையத்து வாழ்வீர்காள் !’ என்று வாழும் ஜீவர்களே என்று அனைவரையும் கூட்டம் சேர்க்கிறது.

காம சுகம் தனிமைப் படுத்துகிறது. ஆனால் கடவுள் சுகமோ கூட்டம் சேர்க்கிறது.

உலக இன்பமோ அடுத்தவன் கழுத்தை நெரிக்கப் பண்ணுகிறது.

உத்தம ஆனந்தமோ உயிர்களின் காலில் விழுந்து அவற்றுக்கான நித்ய வாழ்வை அடைய வைக்கத் துடிக்கின்றது.

உயிரை உயிர் அனுபவிக்கும் போது பிற உயிர்கள் பகைகளாய்த் தோன்றுகின்றன.

உயிருக்கு உயிரை அனுபவிக்கும் போது அனைத்து உயிர்களும் கூடினாலும் போதாதோ என்று தோன்றுகிறது.

உயிர் உடலை அனுபவிக்கும் போது தன் இயல்பு கெட்டுத் தடமாடுகிறது.

உயிர் ’தான் உத்தமனுக்கு உடல்’ என்பதை உணரும் போது உயிர்க்குல ஒற்றுமையை நாடுகிறது.

காம சுகத்திற்கு அபிமத விஷயம் என்று ஒரு பெயர் வியாக்கியானங்களில் காட்டப் படுகிறது.

‘அபிமத விஷயத்திற்குத் தனிமை தேட்டமாக இருக்கும்; பகவத் விஷயத்திற்குக் கூட்டம் தேட்டமாக இருக்குமிறே’

என்பது ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானங்களில் ஆசார்ய புருஷர்களால் காட்டப்படும் ஒரு கருத்து.

***

படத்திற்கு நன்றி :

http://www.guy-sports.com/humor/videos/inspirational_philosophy.htm

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தனிமையும் கூட்டமும்!

  1. ஐயா! வருக! ஒரு வியப்பை பகிர்ந்து கொள்கிறேன். இன்று காலை, நானும், என் மருமகளும் செளதாம்டன் சென்று, ஒரு தத்துவபோதனை உரை கேட்டோம். மூவர் இந்தியர். மற்ற நூறு பேரும் ஆங்கிலேயர்கள். முதலில், சாஸ்த்ரோக்தமாக, தியானம். சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள். உரை:’Life is a Struggle?’ அங்குமிங்கும் சிந்தனைகள் உலா வந்த பின், கிட்டத்தட்ட ஏகோபித்த முடிவு:‘உயிரை உயிர் அனுபவிக்கும் போது பிற உயிர்கள் பகைகளாய்த் தோன்றினாலும், அது உண்மை நிலை அன்று; உயிருக்கு உயிரை அனுபவிக்கும் போது அனைத்து உயிர்களும் கூடிவது என்னமோ திண்ணம்’  என்ற வழித்தடத்தில். மனதில் பட்டதைச் சொன்னேன்.இன்னம்பூரான்

  2. \\‘வையத்து வாழ்வீர்காள் !’ என்று வாழும் ஜீவர்களே என்று அனைவரையும் கூட்டம் சேர்க்கிறது.
    காம சுகம் தனிமைப் படுத்துகிறது. ஆனால் கடவுள் சுகமோ கூட்டம் சேர்க்கிறது.\\

    சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்குமான வேறுபாட்டை,
    சிறிய வார்த்தைகளால் பெரியதொரு விளக்கம் அளித்து, உணரச் செய்துவிட்டீர்கள்,

    நன்றி ஐயா,
    அன்பன்
    கி.காளைராசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *