தற்காலிகமாய் ஒரு சின்ன மரணம்
பிச்சினிக்காடு இளங்கோ
ஓட்டை விழுந்த பாத்திரத்தில்
நீர் நிரப்ப முயல்கிறீர்கள்
துவாரங்கள்
இருப்பது அறியாது
கன்னம் புடைக்க ஊதுகிறீர்கள்
பழுதடைந்ததில்
பயணிகளை அமர்த்துகிறீர்கள்
அமாவாசை இருட்டில்
அளவற்ற ஆசை
நிலாவைத்தேடி
மயக்கம்
அறுவைச்சிகிச்சைக்கு மட்டுமல்ல
அன்றாட வாழ்க்கைக்கும்
இனி அவசியம்.
உளைச்சலில் மிதக்கும்
மூளை
வியர்வை தீர்ந்த
சடலம்
கட்டாயம் அதுதான்
நிவாரணி
எலிகளாய் சுரண்டாமலும்
பேய்களாய் மிரட்டாமலும்
முதலைகள் விழுங்காமலும்
நச்சரிப்பு இல்லாமலும்
ஒரு சின்ன மரணம்
தற்காலிகமாய்
விடிந்து இருண்டு
விடிந்து விரட்டுமிந்த
மூச்சுப் பயிற்சியின் முடிவென்ன?
முற்றுப்புள்ளிக்குமுன்
சற்றே ஒரு சின்ன மரணம்
‘சாதியை ஒழிப்போம்’
போன்றது உங்கள்
முடிவும் முழக்கமும்
இந்த உலகத்தில் அல்ல
இனியொரு உலகத்தில்
அந்த விதி செய்வோம்
படத்திற்கு நன்றி:http://www.layoutsparks.com/1/173666/death-with-a-blur-31000.html