சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-3)
ஸ்ரீஜா வெங்கடேஷ்
கடந்த சில நாட்களாகவே நிகிலால் வீட்டில் ஒரே பிரச்சனை. சிவனேசன் வரை விஷயம் போகாமல் பார்த்துக் கொண்டாள் மங்கை. அவன் செய்ய விரும்புவது நல்ல விஷயமாக இருந்தாலும், மங்கையினால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.
விஷயம் இது தான். நிகில் படிக்கும் பள்ளி வாசலில் ஒரு பிராமண மூதாட்டி வடை சுட்டு விற்பாளாம். அந்தக் கிழவிக்கு யாருமே இல்லையாம். இளம் வயதிலேயே விதவையான அந்தக் கிழவி இப்படிப் பள்ளி வாசல்களில் வடை சுட்டு, இட்லி சுட்டு பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். அந்தக் கிழவி குடியிருக்கும் வீட்டைக் காலி செய்யச் சொல்லி விட்டார்களாம். வேறு எங்கும் வாடகை கொடுத்துத் தங்க முடியாத நிதி நிலைமை. அதனால் அவளை வீட்டோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிகில் பிடிவாதம் பிடித்தான்.
“எனக்கு ஒரு பாட்டி இருந்திருந்தா நீங்க அவங்களை வீட்டுல தானே வெச்சுப்பீங்க? இவங்களையும் அப்படி நெனச்சுக்கோங்களேன். நம்ம வீட்டுலயும் பெரியவங்கன்னு யாரும் இல்லே” என்றான்.
கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வருமா? அந்தப் பாட்டி பிராமணச் சாதி, இவர்கள் வீட்டிலோ அசைவம் விருப்ப உணவு. எப்படிச் சரி வரும்? அதுவும் தவிர இந்தக் காலத்தில் யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்றே தெரியவில்லையே? என்று என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தாள் மங்கை. ம்ஹூம்! மகன் மசியவேயில்லை.
“நம்ம வீட்டுல தான் ஒரு ரூம் ஸ்பேர் இருக்கே அதை அந்தப் பாட்டிக்குக் குடுத்துடுவோம். பாட்டி அந்த ரூம்லயே சமச்சிச் சாப்பிடட்டும். அப்போ உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லேல்லே? ” என்றான் மகன்.
“அது சரிடா! இதுக்கு அப்பா ஒத்துக்கணுமே. ஒரு வேளை அந்தப் பாட்டி கெட்டவங்களாயிருந்து நாம இல்லாத நேரம் பாத்து நம்ம வீட்டுல இருக்கற நகை நட்டை எடுத்துட்டுப் போயிட்டா? அதையெல்லாம் யோசிக்கணும் இல்லையா?” என்றாள் மங்கை பதிலுக்கு.
“அதெல்லாம் அப்பா சம்மதிப்பாங்க. நான் செய்யறது ஒரு சமூக சேவை. நான் அந்தப் பாட்டியை 5 வருஷமாப் பாத்துக்கிட்டு இருக்கேன். அப்டி அவங்க திருடியா இருந்தா ஏன் இந்த வயசான காலத்துல வடை சுட்டுக் கஷ்டப் படப் போறாங்க? ப்ளீஸ் சரின்னு சொல்லும்மா. அவங்க ரொம்ப நல்லவங்க. உனக்கும் உதவியா இருப்பாங்க. நீ அடிக்கடி நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லுவியே அப்போல்லாம் வீட்டை அவங்க பாத்துப்பாங்க. அம்மா ப்ளீஸ் சரி சொல்லும்மா” என்று கெஞ்சி சம்மதம் வாங்கி விட்டான். சிவனேசனும் முதலில் தயங்கினாலும் மகனின் உறுதி கண்டு அவனும் விட்டுக் கொடுத்தான். சந்தோஷம் தாங்காமல் நிகில் இருவரையும் சுற்றி சுற்றி வந்தான்.
நிகில் விஷயத்தைச் சொன்னதும் அந்தப் பாட்டி அவர்களை நேரில் கண்டு பேச வந்து விட்டாள். செக்கச்செவேலென்ற நிறம். நரைத்தும் நரைக்காத தலை. ஒல்லியான உடல் வாகு. மொத்தத்தில் பார்த்தாலே மரியாதை வரும் தோற்றம். மங்கைக்கும் அவளைப் பிடித்துப் போய் விட்டது. பாட்டி பெயர் கோமதி என்பதும் மாமி என்று கூப்பிட வேண்டும் என்று சொன்னாள். கோமு மாமி வெளிப்படையாகவே பேசினாள்.
“இதோப் பாரும்மா, எனக்கு இந்தச் சாதி, மதம் இதுலெல்லாம் நம்பிக்கையே கிடையாது. நான் சந்தோஷமா உங்காத்துல வந்து தங்கறேன். கொழந்தை அவ்ளோ ஆசையோட கூப்பிடறான். இந்தச் சின்ன வயசுல எவ்ளோ பெரிய மனசு அவனுக்கு. அவன் சொன்னான்னு நீங்களும் சம்மதிச்சிருக்கேளே நீங்கள்ளாம் ரொம்ப உத்தமமானவா. உங்க கூட இருக்கறது தான் எனக்கு சந்தோஷம். ஆனா ஒரு கண்டிஷன்…” என்று நிறுத்தினாள்.
எல்லோர் விழிகளும் கோமு மாமியை ஆவலோடு நோக்கின.
“நான் உழைச்ச கட்டை. யாராத்துலயும் சும்மா உக்காந்து சாப்பிட முடியாது. இந்தாத்து சமையல் வேலை, பாத்திரம் தேய்க்கறது, துணி தோய்க்கறது எல்லாம் இனி என்னோட வேலை. அதுக்குக் கூலியா ரெண்டு வேளை சாப்பாடும், தங்கறதுக்கு எடமும் குடுங்கோ. என் காலம் ஆனதுக்கப்பறம் நிகிலை விட்டு எனக்குக் கொள்ளி போடச் சொல்லுங்கோ. அது போறும் எனக்கு. எனக்கென்ன குடும்பமா? குழந்தையா? குட்டியா? ஏதோ இந்த அனாதைக்கு அடைக்கலம் குடுத்த புண்ணியம் உங்களுக்கு” என்றாள்.
கேட்டுக் கொண்டிருந்த மங்கைக்கு கண்களில் நீர் வந்து விட்டது. அனைவரும் மாமியை அன்றே சாமான்களுடன் வந்து விடும்படி சொல்ல மாமியும் தன் சொத்தான ஒரே ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாள். நாட்கள் உருண்டோடின. பாட்டியின் சுவையான சமையல் அனைவருக்கும் பிடித்துப் போனது. அசைவம் மட்டும் மங்கை செய்து கொள்வாள். அந்த நாட்களில் மாமி வெறும் மோர் சாதம் சாப்பிட்டுக் கொள்வாள். யாருக்கும் மாமி வெளியாள் என்றே தோன்றவில்லை. மாமியும் அந்தக் குடும்பத்தோடு ஒன்றி விட்டாள்.
ஆனால் இப்போதெல்லாம் மங்கைக்கு அடிக்கடி நெஞ்சு வலி வரத் தொடங்கியது. தலை சுற்றும், நெஞ்சை அடைக்கிறாற்போல் இருக்கும். அப்போது எதுவும் செய்யாமல் படுத்துக்கொண்டு விட்டால் சற்று நேரத்தில் சரியாகி விடும். இது குறித்து மாமிக்கும், மங்கைக்கும் மட்டுமே தெரியும். மாமி “மங்கை இப்படியே வெச்சுண்டு இருக்காதே. நல்ல டாக்டராப் பாத்துக் காமி” என்று எவ்வளவோ சொன்னாலும் மங்கை அது சாதாரண வாயுக் கோளாறு தான் என்று சாதித்தாள். வலி வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவள் சாதாரணமாக இருந்ததால் மாமியும் வாயுக் கோளாறு என்று முடிவு செய்தாள்.
நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன. சிவனேசன் ஜிஎம் ஆகி ஒரு வருடம் முடிந்து விட்டது. கோமு மாமி வீட்டுக்கு வந்து 6 மாதங்கள் ஓடி விட்டன. அவர்கள் குடும்பத்தோடு ஒரு முறை திருப்பதி சென்று வந்தார்கள். கார் வாங்க வேண்டும் என்று பணம் சேர்த்தார்கள். கார் வாங்குவதை விட ஒரு பெரிய சந்தோஷமும், தொடர்ந்து அதிர்ச்சிகளும் வரப் போவதை அந்தக் குடும்பம் அறிந்திருக்கவில்லை.
(குறிப்பு: குங்குமச்சிமிழ் இதழில் தொடராக வெளி வந்தது)
படத்திற்கு நன்றி:http://commons.wikimedia.org/wiki/File:Old_Tamil_Woman.jpeg
