இந்தியாவின் தனி மனித உரிமைகள் கேள்விக்குறியாகிறது….!

 

சித்திரை சிங்கர்
சென்னை.

வங்கிகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்தது உண்மை என்றாலும், அந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட வடநாட்டு வாலிபர்கள் வாடகை வீட்டில் இருந்தார்கள் என்ற ஒரே காரணத்தால் வாடகை வீட்டில் இருப்பவர்களை எல்லாம் சந்தேகப்படுவது நியாயமாகப்படவில்லை. பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களும் / வாடகைதாரர்களும் சரி தங்களைப் பற்றிய விபரங்களை காவல் நிலையத்தில் பதிவு செய்யபப்டுவதை விரும்புவதில்லை. சொந்த வீடு என்றாலும் வாடகை வீடு என்றாலும் குடும்ப அட்டை / புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை / பாண் கார்டு மற்றும் இப்போது புதியதாக முளைத்துள்ள ஆதர்ஷ் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் இருக்கின்ற நிலையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் திருடப் போவதில்லை. இது போன்ற பொத்தாம் பொதுவான அறிவிப்புகள் சுதந்திர இந்தியாவின் தனி மனித உரிமைகளை கேள்விக்குறியாக்குகிறது என்பதுதான் உண்மை. இதனால் பல இடங்களில் வீடுகளை காலி செய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர்கள் சொல்வதும் நடைபெற்று வருகிறது.

ஓன்று காவல்துறை, சந்தேகப்படும்படியாக தங்கியிருப்பவர்களின் விபரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றோ … அல்லது வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தனியாக/ கும்பலாக தங்கியிருந்தால் தகவல் தர வேண்டும் என்றோ அறிவித்து இருக்கலாம். இப்போது பெரும்பாலான ஹோட்டல்களிலும் காவல் பணியில் ஈடுபடும் பணியாளர்களும் அடுக்குமாடி வீடுகளைக் கட்டும் தொழிலாளர்களும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். இதுவும் இல்லை என்றால் அரசு வழங்கும் குடும்ப அட்டை / புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை / பாண் கார்டு மற்றும் இப்போது புதியதாக முளைத்துள்ள ஆதர்ஷ் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் இல்லாதவர்கள் வாடகை வீட்டில் தங்கி இருந்தால் அவர்களைப்பற்றிய விபரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பாவது வெளியிட்டிருக்கலாம். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய காவல்துறை இது போன்ற மொட்டையான அறிவிப்புகளைக் கொடுத்து மக்களை குழப்பத்தில ஆழ்த்தக் கூடாது என்பதுதான் பெரும்பாலான மக்களின் விருப்பம். இது பச்சைப் புடவை கட்டியவள் எல்லாம் எனது பொண்டாட்டி என்று யாரோ சொன்னது எனது மனதில் உலா வருகிறது. இல்லை இது போன்ற விபரங்களை, காவல் நிலையம் அல்லாமல் வேறு இடங்களில் பதிவு செய்யலாம். சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தவே சிரமப்படும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் கண்டிப்பாக மகிழ்ச்சியைத் தராது என்பதே உண்மையாகிறது. இதில் உடனடியாக காவல்துறை முறையான அறிவிப்பை செய்து வாடகை வீட்டில் வசிப்பவர்களின் நலன் காக்க வேண்டும் என்பதே வாடகை வீட்டில் வசிப்பவர்களின் மற்றும் வீடு உரிமையாளர்களின் விருப்பம்…! காவல்துறை தகுந்த மாற்றங்கள் செய்யுமா…? மக்கள் மானம் காக்குமா…?

பதிவாசிரியரைப் பற்றி