எவரெஸ்டும் தொட்டு விடும் தூரம்தான்

சாந்தி மாரியப்பன்

நறுக்.. துணுக் (22)

நேபாள-திபெத்திய எல்லையிலிருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை புரிய வேண்டுமென்று ஆசைப்படாத மலையேறுபவர்களே இருக்க முடியாது. அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது இம்முயற்சியில் இறங்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களைத்தவிர உலகிலேயே மிக உயர்ந்த அந்தச் சிகரத்தைக் கண்ணால் கண்டு திருப்திப் பட்டுக்கொள்ளும் நம்மைப் போன்ற சாமானியர்களும் இனிமேல் எவரெஸ்டைத் தொடலாம். தொடுவதென்ன?.. நம் கையிலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். ஆம்,.. எவரெஸ்டிலிருந்து எடுத்து வரப்பட்ட கற்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்கள் இப்போது விற்பனைக்கு வந்திருக்கின்றன. “கோபோல்ட் ஹிமாலயா வாட்சஸ்” என்று பெயரிடப்பட்டிருக்கும் அக்கடிகாரங்களை, கைக்கடிகாரங்கள் உற்பத்தியில் பெயர் போன கோபோல்ட் கம்பெனியினர் தயாரித்திருக்கின்றனர்.

கம்பெனியின் உரிமையாளரான மைக்கேல் கோபோல்ட் என்பவர் இரண்டாண்டுகளுக்கு முன் நேபாளத்தைச் சேர்ந்த Ang namgel, Lakpa Thundu ஆகிய இரண்டு மலையேறும் வீரர்களின் துணையுடன் எவரெஸ்டுக்குச் சென்று அங்கிருந்து சில கற்களைக் கொண்டு வந்தார். இக் கம்பெனியின் தயாரிப்புப் பொருட்களுக்கான தூதுவரான Sir Ranulph Fiennes-ன் யோசனையின்படி, எவரெஸ்ட் கற்கள் முகப்பில் பதிக்கப்பட்டிருக்கும் இக்கடிகாரங்களின் விலை அதிகமில்லை. இந்திய மதிப்பில் வெறும் 8.42 லட்சங்கள் மட்டுமே.

இக்கடிகாரங்கள் எவரெஸ்ட் சிகரம் இருக்கும் நேபாளத்தில் தயாரிக்கப்பட்டிருப்பதால் அங்கே மட்டும் மலிவு விலையில் விற்கப்படுகிறது. எவரெஸ்டின் உயரத்தை நினைவு படுத்தும் வகையில் $ 8,848(இந்திய மதிப்பில் 4.5 லட்சம்)என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இக்கடிகாரங்கள் மொத்தம் 25 மட்டுமே தயாரிக்கப்பட்டிருப்பதால் விற்றுத் தீருமுன் வாங்கி விடுதல் நல்லது.

 

படத்திற்கு நன்றி:http://forums.watchuseek.com/f35/any-new-kobold-watches-coming-out-667839.html

2 thoughts on “எவரெஸ்டும் தொட்டு விடும் தூரம்தான்

  1. கட்டுரை நல்வரவு ஆகுக. இனி நான் சொல்வதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவும். தொடுவது வேறு. தொட்டுக்கொள்வது வேறு. கோபால்டாரின் ஆர்வத்தையும், வணிகத்திறனையும் மெச்சினாலும், இத்தனை காசு கொடுத்து கைக்கட்டு போட்டுக்காமல், எவெரெஸ்ட் ஏறி விடலாம். அது முடியாவிட்டால், தொட்டா பெட்டா. அதுவும் முடியாவிட்டால், மொட்டை கோபுரம். அதுவும் முடியாவிட்டால், மனதளவில் தொடுவானம். காசையும் பத்ரப்படுத்திக்கொள்ளலாம். 27 கைக்கடியாரம் வாங்கி எனக்கு அனுப்புங்கள். அமெரிக்காவில், பெவெர்லி ஹில்ஸ் மாமிகள், சிகாகோ இந்திய டாக்டர்களிடம் விற்று, லாபத்தில் 22.576% உங்களுக்கு கமிஷன் அனுப்பிவிடுகிறேன். டாலர் வேணுமா? சைனா காசு வேணுமா? ரூபாய் வேணுமா? ரூபாய் நோட்டு கறுப்புக்கலர். இதை தந்தியாக பாவித்து உடனே பதில்.இன்னம்பூரான் 

  2. கருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி இன்னம்பூரான் ஐயா,

    முன் பணமும், 58.157648% கமிஷனும் கிடைக்குமானால் இந்த ஒப்பந்தத்தை எவரெஸ்ட் உச்சியில் போய் கையெழுத்திட்டு ஏற்படுத்திக் கொள்ளலாம் 🙂

    //ரூபாய் நோட்டு கறுப்புக்கலர்.//

    தப்பித்தவறி பெயிண்ட் சிந்திய நோட்டாக இருக்கப்போகிறது. எதற்கும் நல்ல வெள்ளைப்பணமாகவே அனுப்பி வைக்கவும். கம்பெனி ஏற்றுக்கொள்ளும். தேவைப்பட்டால் நாம் கறுப்புக்கலர் அடித்துக்கொள்ளலாம் 🙂

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க