முகில் தினகரன்

மட்கிப் போன காகிதமானாலும்
மதிப்பு மிக்க நிலப் பத்திரம்…

இந்த முன்னோர்கள் பரம்பரை பூமியைப்
பண்படுத்தி ஓய்ந்த முன் ஏர்கள்….

காலதேவனின் காலண்டர் சுருக்கத்தில்
மேனித் தோல் சுருங்கிய
மாதிரி மனிதர்கள்…

மூப்பைத் தொட்டு விட்ட காரணத்திற்காய்
முதியோரில்லக் கிடங்கினுள்
முடக்கப்பட்ட முற்றல் கொப்பரைகள்…

ரேஷனுக்குப் போய் வர உதவும்
ரத்தமுள்ள ரோபோட்கள்…

எலக்ட்ரிக் பில் கட்டித் தரும்
இரைச்சலில்லா எந்திரங்கள்..

குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும்
குறைந்த விலை ஆயாக்கள்…

அவசர உலகின்
அரத்தமில்லா அசைவுகளை
அவஸ்தையாய் ஜீரணிக்கும்
அஹிம்சைப் பூக்கள்..

கொள்ளி போடுவான் என்பதற்காய்த்
தள்ளி வைத்த தனயனையும்
தன்மையாய் நோக்கும்
தளர்வு கண்ட தவிட்டுக்குருவிகள்…

நடப்புலக நாகரீகத்தை
நாற்றப் புழுவென்றெ
வார்த்தை அலகால் குத்திக் கிழிக்கும்
புராதனப் புனிதர்கள்..

ஆகஸ்ட் 15ஐ மிட்டாய் தினமாக்கி
காம்ப்ளக்ஸ் தியேட்டரில்
கறுப்பு டிக்கெட் கைப்பற்றும்
கலிகாலத்தில்
சுத்த மனதுடன் சுதந்திரம் கொண்டாடும்
சுதேசியின் சகோதரர்கள்..

தங்கள் வார்த்தைத் தடவல்கள்
இளைய நாக்குகளுக்குக்
கசப்புச் சுவையானதால்
சொந்த நாக்கையே தின்று விழுங்கிய
ஊமை பாரதிகள்..

தலைவலித் தாண்டவத்தில்
நெற்றிச் சுவர் விரிகையிலும்
குரோசின் குடையுடன்
கூட்டுச் சேராதவர்கள்
கசாயக் கவசம் மீதே
கான்கிரீட் நம்பிக்கை…

உண்மை அன்பை மட்டும்
உணவாய்ச் சமைக்கும்
யதார்த்தச் சமையல்காரர்கள்

கள்ளங் கபடத்தின்
கால் சுவடு பதியா
கர்ப்பக்கிருகங்கள்…

மண்ணுக்கு இன்னும்
மழைத்தூரல் கிடைப்பதிந்த
மாசற்ற மனங்களின்
மடிப் பிச்சையால்தான்..

பழுத்து விழும் இலைகள்
முடிவுரையல்ல…
புது விருட்சத்தின்
அடிக்கல் நாட்டு விழா…

ஆம்…. பெருசுகள்
முடிவல்ல…
ஆரம்பத்தின் ஆத்திச்சூடிகள்.

 

படத்திற்கு நன்றி:http://www.lawisgreek.com/indian-laws-and-popular-faqs-related-to-the-senior-citizens-act-2007

4 thoughts on “பெருசுகள்

 1. வயோதிக அடிமைச்சங்கிலியால்
  வாட்டமுறும்
  ஊமை பாரதிகளின் நிலைபேசும்
  உண்மை பாரதியாய்..
  நன்று…!

       -செண்பக ஜெகதீசன்…

 2. Just ageing does not make a person a perfect one as this poem says. There are so many aged persons still wicked.

 3. What Srija says, maynot be correct always..
  Jail of oldage makes men to wither their wickedness mostly..
                                            -Shenbaga Jagatheesan…

Leave a Reply

Your email address will not be published.