விளம்பரங்கள் படுத்தும் பாடு…..?
தலையங்கம்
பளபளப்பான, மொழுமொழுவென்ற வண்ணக்காகிதம். கண்டவுடன் மனதைக் கவரும் வெளித்தோற்றம். அழகான படங்கள். அடுத்து, கவர்ச்சியான வாசகம், ‘இது சொந்த வீட்டுக்கான சொர்க்க வாசல்’, அதற்கு அடுத்த கொக்கி, மாதம் 1000 ரூபாய் மட்டுமே மாதத் தவணை… இது போதாதா.. மொத்தமாக வீழ்வதற்கு. 30×40 , 1200 ச்துர அடி மனை, விலை ரூ.79,000 மட்டுமே. குலுக்கலில் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு ஸ்கூட்டி வேறு காத்திருக்கிறது… தங்கத் திட்டத்தில் வெறும் ரூ40000 மட்டுமே செலுத்தி 12வது மாதம் முடிவில் மனையை கிரயம் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் வெள்ளித் திட்டத்தில் ரூ 25000 மட்டும்(?) செலுத்தி, 36 வது மாதம் முடிவில் மனையை கிரயம் செய்து கொள்ளலாம். (12வது மாதம் முடிவில் உங்கள் விருப்பம் போல(?) உங்கள் மனையை தேர்வு செய்து கொள்ளலாம்.. இப்படி இன்னும் சில திட்டங்களும் உண்டு. இதெல்லாம் அழகாகக் கொடுத்தவர்கள் பாவம், அவர்களுடைய நிரந்தர முகவரியையோ, பதிவு செய்துள்ள விவரமோ, எதுவும் கொடுக்க மறந்து விட்டார்கள். ஏதோ ஒரு முகவரி தனிப்பட்ட முறையில் ஒரு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில் போய் பணம் கட்டிவிட்டு நீங்கள் பல மாதங்கள் காத்திருந்து அவர்கள் பத்திரமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பத்திரங்களை அதான் கிரயப்பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்…… அப்பட்டமாகத் தெரியும் இதன் பிரச்சனைகள் புரியாமல் இந்த மாயத்தோற்றத்தை நம்பி எத்தனை ஏழை, எளிய மக்கள் தங்கள் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சேர்த்தப் பணத்தை இழந்துவிட்டு அரசு அலுவலகத்தை வந்து முற்றுகையிட்டு அழுது புலம்பிவிட்டு, வழக்கமான டெம்ப்லேட் விமர்சனங்களைக் கேட்டுவிட்டு, கொஞ்ச நாட்களில் மனதைத் தேற்றிக் கொண்டு, அடுத்த பிரட்டிற்குத் தயாராகப் போகிறார்களோ தெரியவில்லை!
அடுத்த கொடுமை…. இளைஞர்களைக் கவரும் ஐ.போன், ஐபாட் , புதிய புதிய மொபைல் போன்கள், போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களின் கவர்ச்சி விளம்பரங்கள். இந்த விளம்பரங்கள் அவர்களைப்படுத்தும் பாட்டிற்கு ஒரு சிறந்த காட்டு, சமீபத்தில் சீனாவில், ஒரு பதின்மப்பருவ மாணவர் எடுத்த ஒரு அதிர்ச்சியான முடிவு….
பெய்ஜிங்கில், பதினேழு வயதான உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவர் வாங் என்பவர் இணையத்தில் வரும் விளம்பரங்களின் கவர்ச்சியில் மதிமயங்கி, எப்படியும் தானும் ஐ-போன் மற்றும் ஐபாட் என்ற இரண்டையும் வாங்கியேத் தீருவது என்று முடிவுசெய்து அதற்கான தரகரை அணுகி விலையைக் கேட்டிருக்கிறார். 22,000 யுவான் அதாவது நம்ம ஊர் பணத்தில் 1.76 இலட்சம் ரூபாய், ஆகும் என்பதை தெரிந்து கொண்டு பணம் பிரட்டுவதற்கு வேறு வழி தெரியாமல், தன் சிறுநீரகத்தில் ஒன்றை பண்டமாற்றாக கொடுப்பதாகப் பேரம் பேசியிருக்கிறார். ஏற்கனவே சூதாட்டத்தில் நிறைய இழந்து பிரச்சனையில் இருந்த அந்த தரகரோ, மிக மகிழ்ச்சியாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டு, மளமளவென செயலில் இறங்கி காரியத்தை முடித்து விட்டார்.
ஆம், வாங்கிடம், அவருடைய சிறுநீரகத்திற்கு, 22000 யுவான் (1.76 லட்சம்) மதிப்பிலான பொருட்களைக் கொடுப்பதாக பேரம் பேசிவிட்டு, அதனை 220,000 யுவான் (17.6 லட்சம்) என்று சம்பந்தப்பட்டவர்களிடம் பேரம்பேசி விற்று விட்டு , இந்த மாணவருக்கு அந்த பொருட்களைக் கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை அனைவரும் பிரித்துக் கொண்டுள்ளார்கள். உடல்நிலையில் பிரச்சனை வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போதுதான் பெற்றோருக்கு இந்த அதிச்சியான தகவல் கிடைத்துள்ளது. பெற்றோரிடம் கேட்டதற்கு அவர்கள் வாங்கிக் கொடுக்காதலால்தான் இப்படிச் செய்ய வேண்டியதாகிவிட்டது என்றிருக்கிறான் அந்த மாணவன். கவர்ச்சியான விளம்பரங்கள் படுத்தும்பாடு இதில் மட்டுமல்ல… நகைக்கடை விளம்பரம் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் விளம்பரம் போன்றவைகளெல்லாம், மக்களுக்கு இவற்றின் மீதெல்லாம் ஒரு வெறியையே ஏற்படுத்தி சில நேரங்களில் திருட்டு, கொள்ளை போன்ற தீய வழிகளிலேனும் அவைகளை அடைய வேண்டும் என்ற அபாயகரமான எண்ணத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டாலொழிய இது போன்ற அரக்கர்களிடமிருந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் காத்துக் கொள்ள முடியாது.