பாரதிப் பெருங்கடல் 12
பாஸ்கர பாரதி
உலகெங்கும் பல நூறு மொழிகள். பல்லாயிரமும் இருக்குமோ? கால வெள்ளத்தில் சிக்குண்டு சிதைந்து போயின சில. கல்வி வளர்ந்ததில் தானும் வளர்ந்து சிறந்தன சில. இளைத்தன சில; முளைத்தன சில; கிளைத்தன சில. முன்னதற்கும் முன்னதாய்த் தோன்றி, வேரூன்றி, விழுது விட்டு, விண் முட்ட உயர்ந்து நின்று உண்மையாய் உறுதியாய் நின்றது ஒன்றுண்டு. -தமிழ்-
காலங்கடந்தும் கட்டுக்கலையாக் கவின்மிகு கோயிலது;
மாற்றார் பகைவர் யார்க்கும் யார்க்கும் அடங்கா வண்திமிர் காளையது;
ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆயினும் முதிருறாக் கன்னியது;
புல்லாரின் சூழ்ச்சியைப் புன்னகை சிந்தியே வென்றிடும் பிள்ளையது.
சுற்றி வரும் வினைகள் நீக்கி இவ்வையகம் துலங்க இம்மொழி ஓங்கும்.
தொல்லைகள் ஏதும் தாக்கிடா வண்ணம் தன் தொள்களில் இம்மொழி தாங்கும்.
வான் அளவுக்கு மதி சேர்த்து புகழ் கூட்டி மேன்மேலும் வளர்ந்து செல்லும் இம்மொழி’
வாழ்க வாழியவே எனப்பாடுவதிலேதான் எத்துணை மகிழ்ச்சி!
வாழ்த்துப்பா வுக்கே உரிய மென்மையைச் சற்றே ஒதுக்கி விட்டு முரசறைந்தாற்போல்
மிடுக்கு நடையில் பாரதியின் இப்பாடல் நாடி நரம்புகளில் முருக்கேற்றுகிறது.
சொல்லிப் பாருங்கள். புது ரத்தம் பாயும்.
இதோ அப்பாடல்..
தமிழ் மொழி வாழ்த்து
தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
படத்திற்கு நன்றி :
http://www.keetru.com/rebel/bharathi/23.php