சு.கோதண்டராமன்

மனக்கவலை மாற்றிய மகான்

தனக்குவமை இல்லாதான் தாளைப் பற்றுவது ஒன்று தான் மனத்துயர் நீக்கி மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதைச் சுவாமிகள் வலியுறுத்திச் சொன்னார்கள்.

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றே என் உள்ளத்தினுள் அடைத்துவைத்தேன் –ஒன்றே காண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொன்னொளிசேர்
அங்கையாற்கு ஆளாம் அது.

என்று காரைக்கால் அம்மையார் கூறியபடி இறைவனுக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டுவிட்டால் நமக்குத் துன்பம் ஏது?
சுவாமிகள் இறைவனைக் குறிப்பிடுவதற்கு உடையவன் என்ற சொல்லை மிகுதியும் பயன்படுத்தினார். ஸ்வாமி என்ற வடசொல்லின் நேர் மொழிபெயர்ப்பாக இருப்பினும் தமிழில் கூறும்போது அதன் முழுப்பொருளும் வெளிப்படுகிறது. இறைவன் உடையவன் என்றால் நாம் அவனது உடமை என்றாகி விடுகிறது. உடமைப் பொருளைக் காத்தல் உடையவனுக்கு அல்லவா கடமை? அவன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே நாவுக்கரசர் கூறியபடி சுவாமிகள் இறைவனிடம் மாறாத பற்றுறுதி கொண்டிருந்தார். அதையே நமக்கும் உபதேசிக்கிறார்.

இறைவனை உடையவனாகக் கருதிவிட்டால் பின் நமக்கென்று எந்தக் கவலையும் படத் தேவையில்லை. நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்று கவலையற்று இருக்கலாம். இறைவன் பேராது நின்ற பெருங் கருணைப் பேராறு. அடியார்களுக்கு எவ்வெப்போது எதை எதை அளிக்க வேண்டும் என்று அவன் அறிவான். அவன் நமக்குத் தருவது நல்லதாக இருந்தாலும் கெட்டதாகத் தென்பட்டாலும் நாம் அதை ஏற்றுக் கொள்வது தான் உண்மையான பக்தியின் அடையாளம். இதை விளக்கும் வகையில் சுவாமிகள், “வந்ததை ஒப்புக் கொள்வாய் மனமே” என்றும் “வந்ததுவே சிவன் தந்தது” என்றும் பாடுகிறார். நமது உறவினரோ, நண்பரோ இறந்துவிட்டால் வருந்துதலும் அழுதலும் கூடாது என்று அவர் விதித்ததும் இந்த அடிப்படையில் தான். நோய் வந்த காலத்தில் மணி மந்திர ஔடதங்களை நாடுதல் உடையவனின் கணக்குக்கு மாறான குறுக்கு வழிகள் என்பது அவரது உபதேசம்.

 படத்திற்கு நன்றி :

http://en.wikipedia.org/wiki/File:Sri_Reddiapatti_Swamigal.jpg

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *