அதிகாலைப்பல்லவன் கவிதைப்புதினம் (3)

 

 

பிச்சினிக்காடு இளங்கோ

கல்லக்குடிசந்திப்பு-3

தோழி
தோழிக்குச் சொல்வதுபோல்
ஒரு கடிதம்
கல்வெட்டாய்ச் செதுக்கிக்
கலைவெட்டாய்
அனுப்பிவைத்தேன்

அடுத்தநாள் காலை
அதேவேளை
மீண்டும்
ஒரு கடிதம்
மேசையில் இருந்தது

உள்ளுக்குள் கரைபுரளும்
உற்சாகம்தான்

சொல்லமுடியாத
சுதிகூடித்
துடித்தது நாடி

இன்றைக்குப்
புயலில்லை
தென்றல்தான்

மந்தமான வானிலைபோல்
அமைதியான மனநிலை

பரபரப்பில்லாத
பக்குவம் வந்தது

உறையைப் பிரித்து
உள்ளதைப் படித்தேன்
உள்ளத்தைப் படித்தேன்

நேற்று
கவிதையோடு
இருந்த கடிதம்

இன்று
எல்லையைத் தகர்த்து
நெகிழ்ந்து
நகைத்தது

கடிதம்
வரைந்த பாங்கும்
தோழி வேடத்தில்
சொன்னமுறையும்
புதுவெளிச்சம்
முகத்திற்கும்
புதுத்தெளிவு
மனத்திற்கும் வந்ததாம்;
தந்ததாம்

நலம்
நலமறியக் கேட்டும்
நன்றியும் வாழ்த்தும்
இரண்டறக் கலந்தும்
திருமுகம் சிரித்தது

எப்படி
என்கவிதை
படிக்கக்கிடைத்தது?

எப்படி
என்முகம் தெரியவந்தது?
என்ற கேள்வி
எனக்கிருந்தது.

கேட்டுத்தெளிய
இன்னொரு கடிதம்
எழுதவேண்டிய
நெருக்கடி இருந்தது;
எழுந்தது

நெருக்கடியான
சூழ்நிலைமுடிச்சை
நெருக்கடி இல்லாமல்
அவிழ்த்தது கடிதம்;
அவிழ்ந்தது விளக்கம்

தொடரும்

படத்திற்கு நன்றி:

http://m.teleflora.com/mt/www.teleflora.com/flowers/bouquet/love-letter-roses-247370p.asp

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.