நாகேஸ்வரி அண்ணாமலை

கற்பு என்பதற்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு விதமாக விளக்கம் தரப்படுகிறது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பொறுத்த வரை கற்பு என்பது பெண்களுக்காக மட்டும் வரையறுக்கப்பட்டது போல் இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் பெண்களின் கற்பை மூன்று விதமாகப் பிரித்தனர். கணவன் இறந்த உடனே மனைவியும் உயிர் துறத்தலைத் தலையாய கற்பு என்றனர். அவன் இறந்த பிறகு அவன் சிதையோடு உடன்கட்டை ஏறியதை இரண்டாவது வகைக் கற்பு என்றனர். கணவன் இறந்த பிறகு உடனேயே உயிர் துறக்காமலும் அவனுடைய சிதையோடு உடன்கட்டை ஏறாமலும் இருந்தாலும் கைம்மை நோன்பு இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடம்பை வருத்தி உயிர் விடுதல் மூன்றாவது வகைக் கற்பாகக் கருதப்பட்டது. இந்த மாதிரிச் செயல்கள் எல்லாம் ஆணுக்கு இல்லை. . கணவன் இறந்த பிறகு மனைவி இப்படி நடந்துகொண்டாள் என்றால், அவனோடு வாழ்ந்து வந்தபோது அவனுடைய செயல்கள் யாவற்றையும் முழுவதுமாக ஆதரித்தாள்; அவன் தவறு செய்திருந்தாலும் அதைத் தட்டிக் கேட்டிருக்க மாட்டாள் என்றும் கொள்ளலாம். இதுதான் தமிழ் மரபு. கணவன் செய்த தவறுகளைத் தட்டிக் கேட்க முடியாமல் மனம் புழுங்கிக்கொண்டு அவனுடன் கடனே என்று வாழ்ந்து வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அவர்களும் மேலே கூறியபடி உயிரை விட்டுத் தாங்கள் கற்புக்கரசிகள் என்று காட்டிக்கொண்டார்களா?

தமிழுக்குப் பெருமை தேடித் தந்த, உலகம் பூராவும் புகழப்படும் திருகுறளைத் தந்த திருவள்ளுவர் ‘பிறன்மனை நோக்காப் பேராண்மை’ என்று கூறியிருப்பதை வேண்டுமானால் ஆண்களுக்குரிய கற்பாக கூறியிருக்கிறார் என்று கொள்ளலாம். ஆனால் திருக்குறள் முழுவதும் ஆங்காங்கே கற்பு பெண்களுக்கு மட்டுமே உரியது என்பது போல் கூறுகிறார். ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் எனப் பெய்யும் மழை’ என்று கூறியிருக்கிறார் திருவள்ளுவர். இறைவனைத் தொழாவிட்டாலும் கணவனைத் தொழுது நடப்பவளுக்கு இயற்கை கூட மதிப்புக் கொடுக்கும் என்று திருவள்ளுவர் சொல்கிறார் என்று அப்படியே அதற்கு அர்த்தம் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் கூட கணவனை மனைவி மதிக்க வேண்டும் என்று கூறுகிறார் என்பது உறுதி. மனைவி கணவனை மதிக்க வேண்டும் என்று சொல்லும் திருவள்ளுவர் ஒரு இடத்திலும் கணவன் மனைவியை மதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மனைவியின் பேச்சை மதித்து நடக்காதீர்கள் என்று ஒரு முழு அத்தியாயம் (பெண்வழிச்சேறல்) மூலம் கணவன்மார்களுக்கு அறிவுரை கூறுகிறார். ‘பெண்கள் எல்லாம் மண்டூகங்கள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்களின் அறிவுரையைக் கேட்டால் சமூகத்தில் உங்களுக்கு இடமில்லை’ என்று சொல்லாமல் சொல்கிறார்.

திருவள்ளுவர் காலத்தில் பெண்களுக்கு வெளியில் சென்று கல்வி கற்கவோ, உலகத்தைப் புரிந்துகொள்ளவோ வாய்ப்பு இல்லை என்றும் அதனால்தான் அப்படிக் கூறியிருக்கிறார் என்று கொள்ளவும் முடியவில்லை. ஏனெனில் அந்தக் காலத்திலும் பல பெண் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள்; அரசர்களுக்கே கூட அறிவுரை கூறியிருக்கிறார்கள். இவர்களின் கணவன்மார்களும் இவர்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்கிறாரா திருவள்ளுவர்? ‘குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்’ என்று ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் பிரித்துக் கூறாதவர் ‘தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச்செயல்’ என்று ஆண் குழந்தைகளை மட்டும் படிக்க வைத்துப் பெரியவர்கள் ஆக்கவேண்டும் என்கிறார். பெண்களுக்குப் படிப்புத் தேவையில்லை என்கிறாரா அல்லது பெண்களால் படிக்க முடியாது என்கிறாரா? வாழ்க்கைத் துணைநலம் என்னும் அத்தியாயத்தில் மனைவி மாண்புடையவளாக இருக்க வேண்டும் என்கிறார். கணவன் சொல்லே மந்திரம் என்று பெண்கள் நடந்துகொண்டால்தான் அவள் மாண்புடையவள் என்று அர்த்தமா? எந்த நல்ல குணங்களும் இல்லாத கணவனை வெறுத்து ஒதுக்கு என்று ஒரு இடத்திலும் கூறவில்லையே. ஆண்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று அனுமானித்துக்கொண்டாரா?

எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தக் கூடிய அறிவுரைகளைக் கூறிய திருவள்ளுவரே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். கற்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான் என்பது போல்தான் புலவர்கள் எழுதி வந்திருக்கிறார்கள்.

‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா?’ என்று இன்றைக்கும் பட்டிமன்றம் போட்டுப் பேசத் தமிழாசிரியர்களும் மாணவர்களும் இருக்கிறார்கள். கோவலன், கட்டிய மனைவியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணிடம் உறவு கொண்டது எந்தக் கற்பில் சேர்த்தி என்று யாரும் விவாதித்ததாகத் தெரியவில்லை.

இலக்கியத்தை விடுங்கள். நம் தமிழ் சினிமாக்களை எடுத்துக்கொள்வோம். கணவனே கண்கண்ட தெய்வம் என்றுதான் சொன்னார்களே தவிர மனைவியே கண்கண்ட தெய்வம் என்று சொல்லவில்லை. மணாளனே மங்கையின் பாக்கியம் என்று சொன்னவர்கள் அந்த மணாளனின் பாக்கியமும் ஒரு மங்கையிடத்தில்தான் இருக்கிறது என்று சொல்லவில்லை. ஒரு பெண்ணிற்கு கணவன் முக்கியம் என்று சொன்னவர்கள் ஒரு ஆணிற்கு மனைவி முக்கியம் என்று ஏன் சொல்லவில்லை?

மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் கணவனும் மனைவியும் திருமணத்திற்குப் பின் இடது கை மோதிர விரலில் மோதிரம் அணிந்துகொள்வார்கள். இந்தியக் கலாச்சாரத்தில் ஆண் தன் மனைவியாகப் போகிறவளுக்குத் தாலி அணிவிக்கிறான். பெண் தனக்கு கணவனாகப் போகிறவனுக்கு அப்படி எதுவும் செய்வதில்லை. மனைவி அணிந்துகொள்ளும் தாலிக்குத் தனி மதிப்பு வந்துவிடுகிறது. ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் காதலனை மறக்க முடியாத கதாநாயகி திருமணத்திற்குப் பிறகு தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள். அதன் காரணத்தை அறிந்துகொண்ட கணவன் காதலனைத் தேடிக் கண்டுபிடித்து தன் மனைவியைக் கூட்டிச் செல்லுமாறு கூறுகிறான். அதற்கு அந்தப் பழைய காதலன் இப்போது அவள் தன்னுடைய பழைய காதலி இல்லை என்றும், கணவன் அணிவித்த தாலியை அணிந்துகொண்டிருக்கிறாள் என்றும் கூறி, தன்னுடைய பழைய காதலியிடம் தாலியைக் கழற்றிவிட்டு வேண்டுமானால் தன்னுடன் வரும்படி கூறுகிறான். ஆனால் மனைவியால் அதைக் கழற்ற முடியவில்லையாம். கணவனோடு வாழ விரும்பாத மனைவிக்கு அவன் கட்டிய தாலி மட்டும் புனிதமானதாம். இது எந்தக் கற்பில் சேர்த்தி? வெறும் சடங்கிற்காகக் கட்டப்பட்ட தாலியைக் கழற்றிவிட்டு தன்னுடைய உண்மையான அன்பிற்குப் பாத்திரமான காதலனுடன் சென்றுவிடுவதில் என்ன தவறு இருக்கிறது?

பெண்ணின் பெருமை, மனைவியின் மாண்பு என்று பேசிப் பேசியே பெண்களைச் சிந்திக்கவிடாமல் செய்துவிட்டார்கள். பெண்கள் தாங்களாகச் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார்கள். காலம் இப்போது எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. இருப்பினும் இன்னும் பெண்கள் – அவர்கள் படித்து வெளியில் வேலைக்குச் சென்றாலும் – கணவன்தான் தங்களுக்கு எல்லாம் என்பது போல் நடந்துகொள்கிறார்கள். கணவன் செய்யும் தவறுகளுக்குக் கூட தான் ஏன் உடந்தையாக இருக்கவேண்டும் என்று எந்தப் பெண்ணும் யோசிப்பதில்லை. கணவன் செய்யும் எதுவும் சரியாகத்தான் இருக்கும் என்று இவர்களாக வைத்துக்கொள்கிறார்கள்.

இது வரை ஆண்கள் உங்களை ஆதிக்கம் செலுத்தியது போல் நீங்கள் அவர்களை ஆதிக்கம் செலுத்துங்கள் என்று நான் பெண்களுக்கு அறிவுரை கூறவில்லை. குட்டக் குட்டக் குனியாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். உங்களுக்கும் அறிவு இருக்கிறது, சிந்திக்கும் திறன் இருக்கிறது என்று உங்கள் கணவன்மார்கள் உணரும்படி நடந்துகொள்ளுங்கள். அவர்களின் மனச்சாட்சியைத் தேவைப்படும்போது தட்டி எழுப்புங்கள். ஆணின்றிப் பெண்ணில்லை என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு பெண்ணின்றி ஆணில்லை என்பதும் உண்மை. பெண்ணின் உரிமைகளுக்காகப் பாடுபடுங்கள் என்று சொல்லும் போது ஆண்கள் இதுவரை செய்த தவறுகளை நீங்களும் செய்ய வேண்டும் என்பதில்லை. அவர்கள் செய்த, செய்துவரும் தவறுகளைத் திருத்துங்கள் என்றுதான் அர்த்தம். ஆண்கள் திருந்தினால் பெண்ணுரிமைகள் தாமாகக் காப்பாற்றப்பட்டுவிடும். இதுதான் பெண்ணுரிமை இயக்கங்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.

படத்திற்கு நன்றி :

http://indulekha.com/colours/2006/01/ravivarma-painter-prince.html

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பெண்ணுக்கு ஏன் தனி நீதி?

  1. அருமையான கட்டுரை. இதனை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை இங்கே  பொருத்தினால், பெண்களின் நிலைக்குப் பெண்களே காரணம் ஆகிவிடும். பெண்கள் காரணம் எனில், அவர்களின் உடல் வலுக் குறைவாலா எனில், இல்லை. மனத் திண்மை இல்லாமையே காரணம். இங்கே உளவியல் ஆய்வு நிகழ்த்தினால், அவர்களுள் பெரும்பான்மையானோர் இன்று வரை சார்ந்து வாழ்வதையே விரும்புகின்றனர். பொது வாழ்வில், வீட்டிற்கு வெளியே வந்து, பெரிய பொறுப்புகளை ஏற்பதற்கோ, சவால்களையும் சிக்கல்களையும் சந்திப்பதற்கோ, உயர்ந்த இலக்குகளை அடைவதற்கோ அவர்கள் முன்வருவதில்லை. 

    வசதியான / திறமையான கணவனை மணந்து, அவன்வழி சமூக அங்கீகாரங்களைப் பெறுவதே பெண்ணின் இலக்காய் இருக்கிறது. நீ எதை விரும்புகிறாயோ, அதையே அடைகிறாய் என்ற பொன்மொழியை இங்கே பொருத்திப் பார்க்கலாம். பெண்கள் இன்றுள்ள நிலையையே அவர்கள் விரும்புகிறார்கள். இதைத் தாண்டிச் செல்ல  அவர்கள்  விரும்பினால் அதுவும் சாத்தியமாகும். அவரவர் உயர்வும் தாழ்வும் அவரவர் கைகளிலேயே உள்ளது.

  2. அன்பின் திரு அண்ணாகண்ணன்,

    பெண்களின் குணம் சார்ந்து வாழ்தல்தான் என்பதை ஒப்புக் கொண்டாலும், அதற்கு காலங்காலமாக நடைமுறையில் உள்ள நம் பண்பாடுதான் காரணம். வீட்டிற்கு வெளியே வந்து பொறுப்புகளை ஏற்பதற்கும் சவால்களைச் சந்திப்பதற்கும் துணிச்சலும், வல்லமையும் இருந்தாலும், இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் அது சாத்தியமாக இல்லை. தன்னை மிஞ்சி பெண்கள் வளர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களை எப்படியும் ஒடுக்கியேத்தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, அதற்கான பல வழிகளையும் முயற்சிக்கிறார்களே சாமர்த்தியமாக.. இதனை ஏன் உங்களால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியவில்லை? இதே காரணம்தான் தங்களுடைய அடுத்த வாதம்.. தனக்கு வளரத் தடைகள் வரும்போது, அதையே விரும்பி ஏற்றுக் கொள்ளப் பழகிவிடுகிறார்கள்… கட்டாயமாகிவிடுகிறது.. சமூகம் என்பதே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல்தானே…  அந்தச் சார்தலை மிக எளிதாக சாதகமாக்கிக் கொள்வதிலும் வல்லவர்கள் ஆடவர்கள்….

  3. தடுக்கி விழுந்த குழந்தையின் அழுகையை நிறுத்த, தரையை அடிக்கிறாள் தாய். தங்கள் நிலைக்குக் காரணம் சமுதாயமே எனக் குற்றம் சுமத்துகின்றனர் பலர். (அகமொழி 307)

  4. தடுக்கி விழுந்த குழந்தையை சமயோசிதமாக அழுகையை நிறுத்தும் அந்தத் தாய் பெற்ற குழந்தைதானே அது….  !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.