மணமுள்ள மரபுக்கவிதைகள்!

 

 

ஷைலஜா

ஏப்ரல் 18ஆம் நாள், உலக மரபு தினமாகக் கொண்டாடப்படுகிறது! இதற்காக, பழைய நினைவுச் சின்னங்கள், புதையல்கள், பொக்கிஷங்கள் இவற்றைப் போல பெயரிலேயே மரபினைக் கொண்ட மரபுக் கவிதைகளையும் நாம் நினைத்துப் பார்க்கலாம்.

முன்பெல்லாம் அரங்க சீனிவாசன், திருலோக சீதாராம், சக்தி சரணன், மீ.ப.சோமு, மஹி, நா.சீ.வரதராஜன் இவர்களுடன் இங்கு குறிப்பிடத்தவறிய பலமரபுக் கவிஞர்கள் தமிழ்ப் பத்திரிகையுலகைத் தங்களின் இலக்கணம் சார்ந்த மரபுக் கவிதைகளால் பெருமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்போதும் சில நேரங்களில் தீபாவளி மலர்களில் மரபுக் கவிதைகளைப் பிரசுரிக்கிறார்கள்.

சௌந்தரா கைலாசத்தின் இனிய மரபுக் கவிதைகளை மறக்க முடியாது.

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன் போன்ற ஆழ்ந்த இலக்கியவாதிகளெல்லாம் மரபுக் கவிதை அன்பர்கள் தான்.

திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் சிதம்பர ரகுநாதன் எழுதிய உயர்தர மரபுக் கவிதைகளை யார்தான் மறக்க முடியும்?

பெற்றோர்கள் கலைத் துறையில் இருந்தால் சிறு வயதிலேயே அவர்களின் வாரிசுகளுக்கு கலைத் துறையில் பலரது சகவாசம் கிடைத்துவிடும். அப்படி எனக்குக் கிடைத்த பலரில் ஒருவர்தான் அரங்க சீனிவாசன் என்னும் அற்புதக் கவிஞர், அப்பாவின் அருமை நண்பர்.

இவர் அந்நாளில் சிறந்த மரபுக் கவிஞர். தமிழ் இவரது வாயில் வற்றா கங்கை! வீட்டிற்கு வந்தவரை அந்தப் பத்து வயதில் அரங்கநகர் கோயிலைச் சுற்றிக் காட்ட நான் அவருடன் கோயிலுக்குப் போனேன்.

அரங்கனைச் சேவித்து அன்னையை மற்றும் ஆழ்வார்களை அடியார்களின் சந்ததிகளை வணங்கி, கம்ப மண்டபம் அருகே வந்தபோது கம்பனின் பாடலுக்கு அன்று சிரக்கம்பம் செய்த மேட்டு அழகிய சிங்கநரசிம்மப்பெருமானின் சந்நிதியை நோக்கியவர் அடுத்த கணம் கண்மூடி இப்படிப் பாடலைப் பொழிந்து விட்டார். கேட்டுக் கொண்டிருந்த என் மனதில்அந்தப் பாடல் அன்றே பதிந்துவிட்டது!

இதுதான் அந்தப் பாடல்!

பாட்டியலறி கம்பத் திருநாடன்
நாட்டிய தமிழ் கண்டிட் டருளாலே
ஆட்டிய சிரகம்பப் பெருமானே!
மோட்டழகிய சிங்கப் பெருமாளே!

அன்றைய ஆழ்ந்த இலக்கியவாதிகளில் பலர் மரபுக் கவிதையை ஆதரித்ததோடு மரபுக் கவிதையை எழுதவும் செய்தார்கள்.

இப்போதும் அமுதசுரபி போன்ற பத்திரிக்கைகள் வெண்பாப் போட்டிகளை நடத்துகின்றன. ஈற்றடி கொடுத்து வெண்பாப் போட்டிகளை வெளியிட்டு வருகிறார்கள். அதற்கு மரபுக் கவிதை ஆர்வலர்கள் வெண்பாக்களை எழுதியும் வருகிறார்கள். இலக்கியபீடம் போன்ற சிற்றிதழ்கள் சில மரபுக் கவிதைகளை அவ்வப்போது வெளியிடுகின்றன. ஆயினும் புதுக்கவிதை எனும் சுனாமி முன்பு மரபுக் கவிதை எனும் மலர்கள் காணாமலே போய்விடும் அபாயமும் தெரிகிறது.

க்ரேசி மோகன் அருமையாக வெண்பா எழுதுவதில் வல்லவர்.. திருவாளர்கள் சிவசிவா. யோகியார் வேதம்,ஆசாத், ஹரிக்ருஷ்ணன், ரமணன், பசுபதி, இலந்தை ராமசாமி, எழிலரசு,மோகனரங்கன்.ஜீவ்ஸ் நம்ம ப்ரசாத், துரை, சந்தர் இவர்கள் எல்லாம் இப்போதும் எப்போதும் மரபில் கொடிகட்டிப் பறக்கிறவர்கள்! லக்கி ஷாஜகான், அண்ணாகண்ணன், அகரம் அமுதா, இப்னு, கேவிராஜா போன்றவர்களின் மரபுக் கவிதைகள் என்னை ஈர்த்திருக்கின்றன.

மரபுக் கவிதை என்பது புள்ளி வைத்த கோலம்போல. ஓர் இலக்கில் ஆரம்பித்து இலக்கில் முடிந்துவிடும். சிக்கல்களையும் புள்ளி எனும் இலக்கணம் இணைத்துவிடும்.

எந்தக் கவிதையாயினும் அதனை அழகுபடுத்துவது அல்லது கவிதையைக் கவிதையாக்குவது மூன்று. அவை:

உருவம்

உள்ளடக்கம்

உணர்த்தும் முறை

அப்பரின் தேவாரக் கவிதையை இங்கே பார்க்கலாம்

“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமங்கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே!”

பெண் ஒருத்தி, காதலனை நேசித்த பாங்கைப் படிப்படியாக இப்பாடல் விளக்குகிறது. காதலனின் பேர், ஊர், இயல்பு கேட்டு, அவனையே நினைத்து வாடும் காதல் பைத்தியமாக ஒரு பெண் மாறியதை இப்பாட்டு எடுத்துக் காட்டுகிறது.

நெஞ்சைச் சுழல அடிக்கும் காதல், இப்பாடலின் கருப்பொருள் – உள்ளடக்கம்.

அவனைக் கண்டு, கேட்டு, பழகி, நேசித்து, உறவைத் துறந்து ஏன் தன்னையே மறந்து, தலைவன் மயமாகி ஆகிவிடும் ஒருமைப்படுதலை நிலையை உணர்த்தும் பாவமே கவிஞனின் உணர்த்தும் முறை.

காதற்பொருள் நினைவில் நிலைக்கும் பாவத்தில் சொல்லப்பட விருத்த யாப்பு வடிவம் கையாளப்பட்டிருக்கிறது. எண்சீர் விருத்தம் யாப்பே இங்கே பேசப்படும் உருவம் ஆகும்

குறிப்பிட்ட சீர், தளை, அடி முறைகள் வரம்பு மீறாமல் இங்கே பின்பற்றப்பட்டுள்ளன. பாட்டின் ஓசை ஒழுங்கை, முன்னம் பின்னை அன்னை தன்னை என்ற எதுகைகளும் வரிதோறும் அமைந்துள்ள மோனைகளும் நிமிரச் செய்துள்ளன.

படத்திற்கு நன்றி :

http://indulekha.com/colours/2006/01/ravivarma-painter-prince.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.