ஒரு சனிக்கிழமையும்…விண்ணைத்தாண்டி வந்த ஒரு வித்தியாசமான விருந்தினரும்…
வெசீரா…
சனி 07-04-2012, அன்று காலை சுமார் 10 மணி அளவில், ஓர் அடர் சாம்பல் நிறப் புறா என் மாடி ஓரத்தில் வந்து அமர்ந்திருக்கக் கண்டேன். நலமின்றி இருந்திருக்கலாம். (இல்லையெனில் அவை அருகே வருமா?!).
அறையினுள் கொணர்ந்தேன். அது சிறிது பறந்து என் பெற்றோர் படத்தின் மீது பற்ற முயன்று ,சரிந்து கீழே வந்து என் நூல்அலமாரியில உட்கார்ந்து விட்டது.
நீர்.வாழைப்பழம் ,கேரட்,தர்பூசணி துண்டுகளை ஒரு தட்டில் வைத்து நீட்டினேன். ஆனால் அது எதையும் தொடவில்லை.எங்கோ வெறித்தவாறே இருந்தது
ஓரிரு முறை தண்ணீரையும், சிறிது தர்பூசணி சாற்றையும் தேக்கரண்டியில் நான் நீட்ட ஆர்வமாய்க் குடித்தது.
தீனிகளோடு வசதியாய் இருக்கட்டுமே என்று தரையில் இறக்கி விட்டேன். ஆனால் அது எதையும் சாப்பிட ஆர்வங்காட்டவில்லை.
அறை ஓரத்தில் சென்று ஊன்றி அமர்ந்து கொண்டுவிட்டது. மூச்சு என்னவோ இயல்புதான்.
இதற்கிடையில் பிராணி நல அமைப்புகளுக்கு குறுந்தகவல் அனுப்பியபடி இருந்தேன் – ஏதும் யோசனை கிடைக்கலாம் என. ஆனால் எந்த பதிலும் இல்லை.
நான் விரும்பியது, ஒன்று அது நலம்பெறவேண்டும் .இல்லை அமைதியாய் ………
பி.ப.02:15-க்கு ஒருமுறை படபடத்தது. உடல் சற்றே குலுங்கியது, இறக்கைகளை விறைப்பாக்கிற்று .
மெல்ல
மெல்ல
தலையை தரையில் சாய்த்தது. உடல் அசைவு நின்றது. கண்கள் திறந்தபடியே….
03:30 அளவில் கீழே வீட்டு வாசல் சென்று சிறு பள்ளம் செய்து, இட்டு, அமைதியாய் விடைகொடுத்தேன்….
(நண்பர்கள் சொன்னது: “சரியான நேரத்தில்,சரியான இடத்துக்கு ,சரியான நபரிடம்தான் அது வந்து சேர்ந்திருக்கிறது.” அவர்களுக்கு நன்றி.)
[இதை எழுதி முடித்ததும் ஓர் அதிசயம்:
பல ஆயிரம் பாடல்களில் .Win M Player-இல் தற்செயலாய் ஒலிக்கத் தொடங்கியது : நானும் உந்தன் உறவை …நாடி வந்த பறவை…!! அட.!.]