அவ்வை மகள்

படிப்பில் சிறந்த குழந்தைகள் மட்டுமே வேண்டும் என்று கல்விக்கூடங்கள் எவ்வாறு கோர முடியும்?

எந்த ஒரு பெற்றோரும் தமது குழந்தை தம்மை விடவும் கூடுதலான கல்வியறிவு பெற்றுச் சிறக்க வேண்டும் என்றே பிரயாசைப்படுவர். “தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது தானே!

இது பெற்றோர்களின் இயற்கையான சுபாவம். இந்த ஒரு சுபாவம் தான், இந்த ஒரே ஒரு சுபாவம் தான் கல்வி நிறுவனங்களுக்கு வெல்லக் கட்டியாக அமைந்து விடுகிறது! தான் பெற்ற குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும் என்கிற ஒரு துடிப்பும் பறப்பும் கொண்ட பெற்றவர்கள் தனது சக்திக்குக் கொஞ்சம் மீறிச் செலவு செய்தாலும் பரவாயில்லை எனக் கல்வி எனும் களத்துக்குள் குதிக்கிறார்கள். பெற்றோர்களின் இந்த இயற்கை உந்துதலை வணிக முதலீடாக்கிக் கொள்ளும் நிறுவனங்களின் கல்வித் தந்திரம் எனும் மாய வலையில் இவ்வாறு தான் அவர்கள் வசமாய் மாட்டிக் கொள்ளுகிறார்கள்!!

இவ்வாறு நான் சொல்லும்போது பலர் கேட்கலாம், “இவர்களை வந்து சேரச் சொல்லிக் கல்வி நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கவில்லையே! இது பெற்றோர்கள் விருப்பப்பட்டுச் செய்கிற முடிவல்லவா? அவர்கள் செய்த முடிவுக்கு அவர்கள் தானே அவதிப்பட வேண்டும்?” என்று.

பார்க்கப் போனால், இவ்விஷயத்தில், பெற்றோர்களைக் குறை சொல்ல ஒன்றுமில்லை! அவர்களைக் குறை காணுவதில் எவ்வித நியாயமுமில்லை. ஏனெனில் பெற்றோர்கள் பழுதற அறிந்து கொள்ளும்படியாக இங்கே தகவல் வெளிச்சம் இல்லை! எல்லாமே பூடகமாக நடக்கும் மந்திர உலகமாக – எந்திர உலகமாகக் கல்விக்கூடங்கள்!!

இது மேல் அது மேல் என்று கேள்விப்படலாமே ஒழிய –ஏதோ இங்கொன்றும் அங்கொன்றும் என்பதை விடுத்து – ஏறக்குறைய எல்லாக் கல்விக்கூடங்களுமே ஒரே லட்சணம் தான்!! இந்நிலையில் பெற்றோர்களால் எவ்வாறு நல்ல முடிவு எடுக்க முடியும்?

ஒரு எடுத்துக்காட்டாக, ஒரு சாதாரண அரசுப் பள்ளியையும் ஒரு சாதாரணத் தனியார்ப் பள்ளியையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பின்னது முன்னதை விடப் பல விஷயங்களில் கொஞ்சம் ஒசத்தியாகத்தான் தெரியும். ரிசல்ட்டும் கூட அரசுப் பள்ளியை விட மேம்பட்டதாகவே இருக்கும். அந்தக் கொஞ்சம் பளிங்கரத்திற்கு, அந்தக் கொஞ்சம் வசதிக்கு- மேம்பட்டதாகத் தெரியும் படிப்புக்கு – பணத்தைச் செலவழித்தால் பரவாயில்லை எனப் பெற்றோர் நினைப்பது இயல்பான விஷயமே.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில நல்ல அரசுப் பள்ளிகள் இருக்கின்றன என்றாலும், எல்லா அரசுப் பள்ளிகளும் போதுமானதாய்க் கல்விப் பரிமாற்றம் செய்வதில்லை (அடிப்படையானதான கழிவறை வசதி கூட பற்பல அரசுப் பள்ளிகளிலே இல்லவே இல்லை)

கூடுதலான உண்மை என்னெவென்றால், மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்கும்படியான எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகள் இல்லை!

இந்நிலையில் தான் பெற்றோர்கள் தனியார்ப் பள்ளிகளை நாட வேண்டியிருக்கிறது. தனியார்ப் பள்ளிகளை நாடும் நிலைமை இவ்வாறு நியாயப் படுத்தப்படும்போது, பெற்றோர்களுக்கு இருக்கிற இரண்டு சுபாவங்களைப் பற்றிப் பேசுவது பொருத்தமாயிருக்கும்.

சுபாவம் (1): ஒரு பள்ளிக் கூடம் கூடுதலாகப் பீஸ் கேட்கும்போது பீசுக்கேற்ற அளவுக்கு அங்கு கல்வியின் தரம் அதிகமாக இருக்கும் என எண்ணுவது.

சுபாவம் (2): தனது சொந்தக்காரர்கள் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள் – நண்பர் தனது குழந்தையை இந்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் – என நம்பிக்கை அடிப்படையில் – சில பள்ளிகளை நோக்கி ஓடுகிறார்கள்.

தன்னையொத்த பிறரைப்போல “நானும் புகழ் பெற்ற தரமான பள்ளியில் என் குழந்தையைச் சேர்த்திருக்கிறேன்” – என்கிற ஒரு விதப் பாதுகாப்பு வளையம் தேடி மட்டுமே பெற்றோர்கள் ஓடுகிறார்கள். ஏனெனில் குழந்தை என்பது பெற்றோருக்கு அத்தனை அரிய சொத்து!

இவ்வாறாகத் தமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் தம் குழந்தைகளுக்கு, நல்ல கல்வி வழங்க எத்தனிக்கும் சைக்காலஜியைத் தனியார்ப் பள்ளிகள் வெகு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

காளான் பூத்த வகையாக, காணுமிடமெல்லாம் உள்ள கல்விக் கூடங்களில், கல்வியின் பெயரால் நடக்கும் ரகளையும் அக்கப்போரும் ஏராளம் தாராளம்!!

முதலில் ஒரு விஷயத்திற்கு வருவோம்: தனியார்ப் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு வைத்து அதில் “பாஸ்” செய்கிறவர்கள் மட்டுமே அனுமதி என்கிற ஏற்பாடு இருக்கிறது. அதுவும் அவர்கள் எதிர்பார்ப்பது நுழைவுத்தேர்வில் 95 லிருந்து 100 வரை மட்டுமே!

இது ஏன் என்று எவரேனும் கேட்டதுண்டா?

இவ்வாறு நுழைவுத் தேர்வு வைத்து குழந்தைகளை வடிகட்டித் தேர்ந்தெடுத்துத் தத்தம் பள்ளியில் சேர்த்துக் கொள்கிற ஏற்பாட்டின் மூலம் அப்பள்ளிகள் சொல்லுகிற சேதி என்ன என்று எவரேனும் யோசித்ததுண்டா?
சிந்தித்துப் பாருங்கள்!

நுழைவுத் தேர்வில் வெற்றி பெறாதவர்களை நாங்கள் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றால், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு நாங்கள் படிப்பு சொல்லித் தரமாட்டோம் என்று தானே பொருள்?

அப்படியென்றால், எங்கள் பள்ளியில் மெத்தப் படிப்பவர்களுக்கே இடம் – படிப்பில் பலவீனமானவர்களுக்கு இங்கு நாங்கள் படிப்பு சொல்லித் தருவதில்லை என்றல்லவா பள்ளிகள் சொல்லுகின்றன?

வியாதியஸ்தர்களுக்கு நாங்கள் மருத்துவம் பார்க்க மாட்டோம். நல்ல உடல் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே இங்கே உள்ளே நுழைய முடியும் என்று மருத்துவமனைகள் கூறினால் என்னாவது?

நுழைவுத்தேர்வில் 95 லிருந்து 100 வரை எடுத்தால் மட்டுமே இன்டர்வியூ நடத்துவோம் – அதற்குப் பிறகு தான் அட்மிஷன் முடிவாகும் என்று பள்ளிக் கூடங்கள் சொல்வது போல, இத்தனை இரத்த அழுத்தம், இத்தனை நாடித் துடிப்பு, இத்தனை சுவாசக் கொள்ளளவு, இத்தனை மில்லிக்ராம் இரத்தச் சர்க்கரை அளவு, சரியான உடல் உயரப் பருமன் விகிதாச்சாரம் கொண்ட பற்கள் யாவும் ஒழுங்கு வரிசையில் இருக்கிற, திடகாத்திரமான நபர்களுக்கு மட்டுமே இங்கே நாங்கள் மருத்துவம் பார்ப்போம் என மருத்துவமனைகள் கூறுமேயானால் அது எத்தனை அராஜகமோ – அது எத்தனை துக்கிரித்தனமான செயலோ – அது எவ்வகையான அதர்மமோ அதே போன்ற அராஜகமும் – துக்கிரத்தனமும் – அதர்மமும் – தானே இந்த பள்ளிக்கூட நுழைவுத் தேர்வு முறையில் வெளிப்படுகிறது?

கல்வி தேடி வருகிற குழந்தைகள் மெத்தப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பது கல்விப் பணியிலே ஒரு இலக்கு என்றால் அது இழுக்கல்லவா? கல்வியில் சிறந்த குழந்தைகள மட்டுமே வேண்டும் என்று கல்விக்கூடங்கள் எவ்வாறு கோர முடியும்? அவ்வாறான கல்விக்கூடங்களின் விருப்பமே அடிப்படையற்ற தவறான சிந்தனையல்லவா? கல்வி போதிக்க வேண்டிய கல்விக்கூடங்கள், கல்வி கற்க வரும் மாணவர்கள் கல்வியையும் சுமந்து கொண்டு உள்ளே நுழைய வேண்டும் என்று கட்டளையிடுவது தகுமா? இது உண்மையில் அசிங்கமல்லவா?

மாணாக்கர் எவரேயாகினும், அவரது அறிவுத்திறன் எதுவேயாகினும் அவருக்குக் கல்வி வழங்கும் பெருமையுடையது எங்கள் பள்ளி என்று வந்தாரை வரவேற்று, தனது ஒப்பற்ற அணுகுமுறையால் கல்விப் பயிற்சியால் அந்த மாணாக்கர்களுக்குக் கல்வி போதிக்க வேண்டியது பள்ளிக்கூடங்களின் கடமையல்லவா? அதுவும் இவர்கள் தர்மப் பாடசாலையா நடத்துகிறார்கள்? இவர்கள் கேட்ட பீஸைக் கட்டத் தயார் என்றாலும் கூட அங்கே நிராகரிப்பு நடக்கிறதே! – அதற்கு நுழைவுத் தேர்வு ஒரு வக்காலத்து போலப் பயன்படுகிறதே!

அதே நேரத்தில் நுழைவுத் தேர்வில் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தும் டொனேஷன் என்ற பெயரில் தாராளமாய் பள்ளி கேட்கும் பணத்தை நீங்கள் அள்ளி வழங்கினால் அங்கே உடனடி அட்மிஷன் கிடைக்கிறதே! இந்த ரெட்டை நாடகத்தை எவரேனும் கேட்பதுண்டா?

பல பள்ளிகளில் நுழைவுத் தேர்வு மட்டுமே அஸ்திரமில்லை. பெற்றோர்கள் எவ்வளவு படித்திருக்கிறார்கள் – என்ன தொழில் செய்கிறார்கள் என்பதும் கூட இணைத் தகுதிகள்.

இந்த யுக்திக்குப் பின்னே இருக்கிற சூட்சுமத்தையும் கூடப் பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை.

பொத்தம் பொதுவில் எல்லோரையும் வகுப்பில் ஒன்று கூட்டி வைத்து மளமளவென்று இரைந்து – பாடத்தை அள்ளி வாரி வீசி விட்டால் – அதனை மாணாக்கர்கள் இயன்றால் கொஞ்சம் பிடித்துக்கொள்ள, மிச்சத்தைப் பெற்றோர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று சாமர்த்தியமாக உறுதி செய்து கொள்ளும் இது எச்சரிக்கை ஏற்பாடு!

ராங்க் வாங்கும் குழந்தைகளில் மிகப் பெரும்பாலோர் பெற்றோர்களின் சிரத்தையால் மட்டுமே ராங்க் வாங்குகிறார்கள். பள்ளிக்கூடத்தால் அல்ல. அறிவியல் கண்காட்சிகளில் பரிசு வாங்கும் குழந்தைகள் கூட பெற்றோரின் முதலீட்டில் பெற்றோரின் சார்புடன் செய்த ப்ராஜெக்ட்டுகளால் மட்டுமே பரிசுகள் வாங்குகிறார்களே தவிர பள்ளியின் ஒத்துழைப்பால் அல்ல – கட்டுரைப் போட்டியோ – பேச்சுப் போட்டியோ – நாட்டியம் – இசை போன்ற இன்னபிற போட்டிகளோ – இவற்றின் வெற்றி பெறும் குழந்தைகளின் பின்னணியில் பெற்றோர்கள் இருப்பார்களே தவிர – பெரும்பாலும் பள்ளிகள் இருப்பதில்லை. ஆனால் பரிசுகள் பெற்று வந்தால் அதற்குச் சொந்தம் கொண்டாட மட்டும் பள்ளிகள் தப்பாமல் வரும். பல் சமயங்களில் குழந்தைகள் பெற்று வரும் கோப்பைகள், கேடயங்கள் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்காமல் – பள்ளியில் இருத்தி – காட்சியில் வைக்கும் உன்னதப் பள்ளிகளும் உண்டு. இங்கே பாருங்கள் ஒரு குழந்தையின் ஒப்பற்ற கலை அறிவியல் திறனை!

http://www.boingboing.net/2012/04/09/9-year-olds-diy-cardboard-ar.html

இதுவே நம் ஊராக இருந்தால் இக்குழந்தைக்கு இன்ன பள்ளி மாணவன் என்று முத்திரைக் குத்தி இருப்பார்கள். இக்குழந்தைக்குச் சுய ரூபம் இருந்திருக்காது. தன் பள்ளியின் முக படாத்தைப் போட்டுக்கொண்டு இவன் முகமூடியாய்ப் போயிருப்பான்!!

ஆக ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் “baby sitting” என்பார்களே அது போல சுமார் ஏழு மணி நேரம் கொட்டிலில் அடைத்த கன்று காலிகளைப் போல ஒரு கட்டிடத்தில் மாணாக்கர்களை இருத்தி வைத்து அனுப்பும் கதையாகவே நம்மூரில் பல பள்ளிக் கூடங்களின் இயக்கங்கள் இருக்கின்றன. இதில் கல்வி என்பதான சாயல் தெரியலாம், சம்பிரதாயங்கள் இருக்கலாம், சடங்குகள் நடத்தப் படலாம். ஆனால் “விசுவாசத்தோடு இக்கல்விக் கூடத்தில் வழங்கப்பட்ட கல்வியால் மட்டுமே ஒவ்வொரு குழந்தையும், அவ்வாண்டிற்குரிய வகுப்புப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்தது” என்று சொல்லத் தகுதி இல்லாத நிலையிலே தான் பள்ளிக் கூடங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இரு வருடங்களுக்கு முன்பு ஒரு நபர் சென்னையிலிருந்து ஒரு உதவி கேட்டு எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தன்னுடைய மகளை ஒரு பள்ளியில் சேர்க்க ஆயிரம் ரூபாய் கொடுத்து விண்ணப்பப் படிவம் வாங்கி வந்திருக்கிறார். (அது அக்டோபர் மாதம். அடுத்தக் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பம் அது.) டிசம்பரிலேயே அடுத்த ஆண்டுக்கான சேர்க்கையை முடிவு செய்து விடும் பள்ளியாம். அந்த ஆண்டு விண்ணப்பப்படிவம் கிடைத்ததே பெரிய விஷயமாய்க் குறிப்பிட்டிருந்தார். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து, தளராது முயன்று, இந்த ஆண்டு விண்ணப்பத்தை வெற்றிகரமாக வாங்கி விட்டாராம்.

அவ்வாறு விண்ணப்பம் வாங்கிய சந்தோஷத்தில் விண்ணப்பத்தை நிரப்பி உடனே சமர்ப்பித்து முந்திக்கொள்ளலாம் என ஆசை ஆசையாய் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்பட்டதோ அதிர்ச்சி! விண்ணப்பத்தில் கேட்டிருக்கிற பல கேள்விகளுக்கு அவரால் பதிலிறுக்க முடியவில்லை. ஒரு நாள் இரண்டு நாளல்ல – ஒருவாரம் ராப்பகலாய் அந்த விண்ணப்பத்தோடு போராடியிருக்கிறார் – இருப்பினும் அவரால் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு விடையிறுத்து, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. எனக்கு விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து அனுப்பி, விடைகள் தந்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டிருந்தார்! (உயர் பதவியில் இருப்பவர்.) அது மட்டுமல்ல சிறப்பான – சாதகமான பதிலை வழங்குங்கள் – என் குழந்தைக்கு அட்மிஷன் கிடைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். முரண்பாடான பதில் வேண்டாம் எனவும் பின் குறிப்பிட்டிருந்தார்!

அது என்ன அப்படிப்பட்ட விண்ணப்ப படிவம் என நான் பார்த்த போது எனக்குத் தூக்கி வாரிப் போட்டது!

மேலும் பேசுவோம்..

 

படத்திற்கு நன்றி:http://www.financialexpress.com/news/massive-rush-on-first-day-of-nursery-admissions-season/894842

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *