மாதவி

பக்கத்து வீட்டுப் பரிமளாவை ரொம்ப நாட்கள் கழித்து அன்று பார்த்தேன். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சகஜம் தான். ஒருவரையொருவர் பார்த்து புன்னகையுடன் நலம் விசாரித்துக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமையாதலால், பேச பொழுதிருந்தது! பேச்சின் இடையே, “உங்களுக்குத் தெரியுமா, லதாவுக்கு, அதாங்க, உங்க வீட்டுக்காரர் ஆஃபீசிலே வேலை பார்க்கிறாங்களே, அவங்களுக்கு மறு கல்யாணமாம்!” என்றார். இது எனக்குத் தெரியாத விஷயம். லதாவை இதே காலனியில் இருப்பவர் என்ற வகையிலும் என் மகனின் கிளாஸ்மேட்டின் அம்மா என்ற வகையிலும் எனக்குத் தெரியும் “அப்படியா! ரொம்ப நல்ல விஷயம்!” என்று பரிமளாவிடம் சொன்னேன். பேச்சு வேறு பகுதிகளில் திரும்பியது. எங்கள் சிறு அளவளாவல் முடிந்து, ஞாயிறின் மற்ற வேலைகளுக்குத் திரும்பினோம்.

என் மனம் லதாவின் மறுமணம் குறித்து யோசிக்க ஆரம்பித்தது. விதவை விவாகத்துக்கு நான் ஆதரவானவள் தான். நான் வேலை பார்த்த பழைய அலுவலகத்தில் நடந்தது நினைவுக்கு வந்தது. படித்து முடிந்த கையோடு வேலைக்குச் சேர்ந்த போது, ஒழுங்காக எனக்கு சேலை கட்டக் கூடத் தெரியாது; வெறும் கழுத்தோடும், ரப்பர் வளையல்களோடும் அலுவலகம் சென்ற எனக்கு, புடவையை எப்படி ஒழுங்காகக் கட்டுவது, கழுத்துக்கு மெல்லிய செயின் போடவேண்டும் என்ற விஷயங்களை பானு என்ற பெண் தான் கற்றுக் கொடுத்தாள்(ர்). எனக்கு 4 அல்லது 5 வயது தான் மூத்தவராக இருந்ததால், என்னாலும் ஃப்ரீயாக அவரிடம் பழக முடிந்தது. அவரது வாழ்க்கைக் கதையைப் பின்னால் தெரிந்து கொண்டேன். மலேஷியாவில் வேலை பார்த்த அவரது தந்தை, இந்தியாவில் தம் மனைவி அவசரப்படுத்தியதால், பானுவை சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுத்தார். பானுவின் கணவர் வேலையில் இருந்த போது ஒரு சின்ன விபத்தில் மேலிருந்து கீழே விழுந்து அடிபட்டு மரணமடைந்தார். அப்போது தான் அவர்கள் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களாகி இருந்தன. பின்னர் கருணை அடிப்படையில் பானுவுக்கு வேலை கிடைத்தது. நான் வேலைக்குச் சேர்ந்த போது, பானு வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்களாயிருந்தன.

பானு ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தார். வார விடுமுறை நாட்களில் தனது ஊருக்குச் சென்று வருவார். தாயாரும் தம்பியும் ஊரில் இருந்தனர். தம்பிக்கு வரன் பார்க்கலாமா என்று அம்மா யோசித்து வருவதாக என்னிடம் பானு கூறினார். நான் தயங்கியவாறே, “பானு, நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது?” என்று கேட்ட போது, “அப்பா, அம்மாவின் ஆதரவு இருக்கிறது. தம்பியும் என்னைக் கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கு” என்றார். “அப்பா, அம்மா அவர்கள் காலம் முடியும் வரை பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு மட்டும் தம் மகள் இப்படி தனியே நிற்பது பிடிக்குமா என்ன? உங்கள் தம்பி அவருக்கு கல்யாணம், குடும்பம் என்று வந்த பின் தம் குடும்பத்துக்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டியிருக்கும் – அதுவும் வெளியூர் வேறே..” என்று சொல்லிப் பார்த்தேன். முதலில் சரியாகப் பதில் சொல்லாத பானு, மறுபடி மறுபடி தொந்தரவு செய்ததில், இதே ஊரிலேயே இருக்கும், தன் சொந்தக்காரர் ஒருவர், தம்மை மறுமணம் செய்து கொள்வாயா எனக் கேட்டதாகவும் தான் மறுத்து விட்டதாகவும் கூறினார். இதற்குள் அலுவலக்த்தில் என் தரப்புக்கு இன்னும் சில சிநேகிதர்களைப் பிடித்திருந்தேன். அவர்களும் பானு குறிப்பிட்ட அந்த நபரைப் பற்றி விசாரித்து, நல்லவரே என்று தீர்ப்பும் சொல்லி விட்டனர்! பிறகென்ன, கரைப்பார் கரைக்க, கல்லும் கரைந்தது! தம் பெற்றோரிடம் பானு சொல்ல, பானுவின் அப்பா மலேஷியாவிலிருந்து விடுப்பில் வந்து கல்யாணத்தை நடத்தி விட்டுச் சென்றார்! என் வீட்டுக்கு வந்து, என் அப்பாவிடம், “உங்கள் மகள் தான் இந்தக் கல்யாணம் நடக்கக் காரணம். நல்லா வளர்த்திருக்கீங்க” என்று நன்றி சொல்லிப் போனார்!

லதாவின் விஷயமே வேறு. லதாவின் மகனுக்கு ஐந்து வயதான போது அவர் கணவர் இறந்து விட்டார். மிதமிஞ்சிய குடிப் பழக்கம் காரணமானது. தம் பெற்றோர், உடன் பிறந்தோர் எனப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருந்தார். இப்போது அவர் மகன் விடலைப் பருவம் – டீன் ஏஜில் நுழைந்து கொண்டிருக்கிறான்! அவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?

ஞாயிறு மாலைப் பொழுது. கரண்ட் இல்லாத குடும்பப் பொழுதானது. அப்போது தயங்கியபடியே லதாவின் தந்தை வீட்டுக்குள் நுழைந்தார். “வாங்க” என்று வரவேற்று அமர வைத்தோம் “லதாவுக்கு கல்யாணம் பண்ண நிச்சயம் பண்ணியிருக்கோம். அவளுக்கும் பின்னால் ஒரு ஆதரவு வேணும். பார்த்திருக்கும் வரன் தெரிந்தவர் தான். ஏற்கெனவே டிவோர்ஸ் ஆனவர். லதாவையும் பேரனையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களோடு தான் அவரும் இருப்பார். வரும் புதன் கிழமை வீட்டில் தான் கல்யாணம். கட்டாயம் வந்து கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று என் கணவரையும் என்னையும் அழைத்துச் சென்றார்!

*****

திருமணம் நிறைவுற்றது. நாட்கள் பறந்தோடின. என் மகனிடம் அவனது கிளாஸ்மேட் எப்படி இருக்கிறான் என்று அவ்வப்போது கேட்பேன். அவ்வப்போது தென்படும் அந்தப் பையனின் முகத்தில் ஒரு தெளிவையும் நம்பிக்கையும் பார்ப்பதாக எனக்குள் தோன்றியது. இருந்தாலும் என் மனத்துக்குள் எழுந்த பயம் இருந்தது. லதாவை அவர் கணவர் அலுவலுகத்துக்கு டூ வீலரில் கொண்டு விடுவதைப் பார்த்த போதும் பயம் தீரவில்லை!

*****

இன்று என் மகனின் பள்ளியில் மாலை 4.30 மணிக்குப் பெற்றோரை வரச் சொல்லியிருக்கின்றனர். என் கணவரின் அலுவலகத்தில் பெர்மிஷன் கிடைக்காது. நான் என் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் அனுமதி பெற்று, அந்த ‘பேரண்ட்ஸ் மீட்டிங்’க்குக்குச் சென்றேன். ஆடிட்டோரியத்தில் நடக்கும் மீட்டிங்கில் கிட்டத்தட்ட 500 பேராவது இருப்பார்கள். நான் தான் கடைசியோ?! நிகழ்ச்சியில் பிள்ளைகளை இந்த வயதில் பெற்றோர் எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பள்ளியின் நிர்வாகி விரிவாக எடுத்துரைத்தார். வழக்கம் போல் கரண்ட் இல்லாததால் அவர் மிகவும் சத்தமாகப் பேச வேண்டியிருந்தது. குழந்தைகளைத் தனியாக மாடியில் அமர வைத்திருந்தனர். ஒரு வழியாக வியர்வை சொட்டிய மீட்டிங் முடிந்து வெளியே வந்தேன். மாணவர் கூட்டத்தில் என் மகனைத் தேடிப் பிடித்து அவனுடன் நடந்தேன். மீட்டிங்கில் என்ன சொன்னார்கள் என்று அவன் கேட்க, சொல்லிக் கொண்டே வந்தேன். என் மகன் அவன் சைக்கிளைத் தள்ளியவாறே என்னுடன் வந்தான். அப்போது எங்களைத் தாண்டி ஒரு பைக் சென்றது. அதில் என் மகனின் கிளாஸ்மேட் – லதாவின் மகனைப் பின்னால் உட்கார வைத்து ஓட்டிச் சென்றார், பேரண்ட்ஸ் மீட்டிங்கை அட்டெண்ட் செய்த லதாவின் கணவர்.. இல்லையில்லை, அந்தப் பையனின் தந்தை!! என் மனம் இப்போது லேசானது. எங்களைப் பார்த்துச் சிரித்தவாறே கையாட்டிச் சென்ற அந்தப் பையனைப் பார்த்து நானும் சந்தோஷமாகச் சிரித்தேன்!

 படத்திற்கு நன்றி :

http://www.turnhimintoabetterdad.com/blog/?tag=daughter

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க