தமிழகப் பெண்களின் சாதனைப் பரல்கள் (9)
தி.சுபாஷிணி
அம்புஜம்மாள் (1889-1983)
செல்வம் செழித்த, விடுதலை வேட்கை நிறைந்த வீட்டில் பிறந்த அம்புஜம்மாளுக்கு மகாத்மா காந்தியடிகள் வாழ்வின் வழிகாட்டியாய்த் திகழ்ந்தார். 1929இல் தன் சித்தி ஜானம்மாவுடன் இணைந்து ‘சுதேச லீக்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன் மூலம் இவர் கதர்த்துணி, சுதேசிப் பொருட்களை விற்றார்.
இராட்டையால் நூல் நூற்கும் திட்டத்தைக் கொணர்ந்தார். தினந்தோறும் சென்னைத் தெருக்களில் கொடி பிடித்துக் கொண்டு, பாரதியார் பாடல்களைப் பாடிச் செல்வது இச்சங்கத்தின் அன்றாட வேலையாகும். சுயராஜ்ய நிதிக்காக ஒரு பெருந்தொகை திரட்டித் திலகரிடம் கொடுத்தார். மேலும் அன்னியத்துணி விற்கும் கடைகள் முன் மறியல் செய்ததால், கைது செய்யப்பட்டார். பின் மகாத்மாவுடன் வார்தா ஆசிரமத்தில் பணிபுரிந்து, காந்தியின் செல்லமகள் எனப் பெயர் பெற்றார்.
‘தேச சேவிகா’ என்ற இளைஞர் அமைப்பை ஏற்படுத்தி காங்கிரஸ் மாநாட்டுக் கூட்டங்களிலும், திருவிழாக் காலங்களிலும் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தனர். 1941இல் தந்தை இறந்ததும், தம்மை முழுவதும் நாட்டுப் பணிக்காக ஒப்புக் கொடுப்பதாய்க் கூறித், தம்மிடமிருந்த நகைகளைக் காந்தியடிகளிடம் கொடுத்த இன்றைய ‘பெண்கள் சுய உதவிக்குழு’விற்கு முன்னோடியாக, பெண்களுக்கென்று தனிக் கூட்டுறவுச் சங்கங்களை 1946- இல் ஏற்படுத்தினார். சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கும், 2ஆம் உலகப் போரில் பாதிக்கப்பட்ட பர்மா அகதிகளுக்கும், நிவாரணப் பணிகளில் தம்மை அர்ப்பணித்தார்.
1948இல் மகாத்மா இறந்ததும் இவரது மனம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தம் தந்தை நினைவாகவும், காந்தியின் பெயராலும் ‘ஸ்ரீனிவாச காந்தி நிலையம்’ என்று பெண்களுக்காக நிரந்தர சேவை நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தினார். பெண்களுக்கு மருத்துவம், தொழிற் பயிற்சி, இசைப்பயிற்சி, முதியோர் பாதுகாப்பு, ஏழைக் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி ஆகிய சிறந்த சமூகப்பணிகளை ஆற்றினார். இன்றும் இவ்வமைப்பு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சிறப்புறக் காந்திய வழியில் செயல்பட்டு வருகிறது
படத்திற்கு நன்றி:
http://www.indianetzone.com/50/women_during_civil_disobedience_chennai.htm