விதைக்கப்பட்ட எதிர்காலம்..

யுகநிதி, மேட்டுப்பாளையம்
Yuganidhi

“வெள்ளி மொளச்சி
ரெண்டு நாழி ஆயிடுச்சி
ரெண்டாங்கோழியும்
கூவ தொடங்கிடுச்சி
நான் பெத்த மகளே
இன்னும் நீ உறங்குதியோ..

நீ
பொறந்த இடம்
புழுதிமண் காட்டோரம்..
சோம்பல் வைக்கலாமோ
ஏழ மக உன் தேகம்..?

எழுந்து வாடிபுள்ள
குப்பைகள அள்ளிடணும்
கோமியத்த கழுவிடணும்..

வாசல
பெருக்கிடணும்
சோறுதண்ணி பொங்கிடணும்..

பொழுது
முளைக்குமுன்னே
களவெட்ட
போகவேணும்..

வேல முடிச்சி
வந்தாதான்
நாளையபாடு நடக்குமடி..
கண்முழிச்சி வாடிபுள்ள
காலமது நமக்கில்ல..”

அன்னை
எழுப்புகிறாள்
அன்றலர்ந்த மலரான
தம் மகளை..

“அம்மா..நான்
பள்ளிகூடம் போகவேணும்
புத்தகம்
படிக்கவேணும்..
பக்கத்து வீட்டு
அக்கா போல வாத்தியாரம்மா
ஆகவேணும்..

எஞ்சோட்டு
புள்ளைகளாம்
எட்டாம் வகுப்பு
முடிச்சிட்டாங்க..

எதிவீட்டு மல்லிகா
ஏழாம் வகுப்பு முடிச்சிட்டா
நான் மட்டும்
படிக்கலையே
ஏக்கமா இருக்குதம்மா..”

“உன்னோட ஆசைய
நீ சொல்லிப்புட்ட
எனக்கு மட்டும்
இல்லையாடி உன்ன
ஒசத்திவெச்சுப் பாப்பதற்கு..

உன்னப்பெத்த மவராசன்
இருந்திருந்தா
நமக்கெதுக்கு இந்தக் கவல
வெளியில ரெண்டு
வயித்துல ஒன்னுன்னு
கொடுத்துப்புட்டு
வயித்தாலங்கிற பேர்ல
வானதேசம் போயிட்டாரே..

உனக்குங்கீழ
பொறந்திருகிற இந்த
ரெண்டுகளுக்கும்
அரவயிறு கஞ்சி ஊத்த
இருக்கிறது யாருபுள்ள..?

பாழும் வயிறு
பொறுக்கலையே
பாவிமனசு கேக்கலையே
காட்டு வேல
செஞ்ச காசு
காவயிறு நிறம்பலையே..”

வாய் விட்டு
அழுத தாயின்
கண்ணீரைத் துடைத்த மகள்..

“அம்மா.. நீ அழுவாத
என்ன நெனச்சு
புழுங்காத..
உனக்குத் துணையா
நானிருக்கேன்..
எங்களுக்கு நீ
மட்டும்போதும்மா..

என்னோட ஏக்கத்த
எம்பொறப்புகள வெச்சு
தீத்துக்கிறேன்..

பொறப்படும்மா வேலைக்கு
பொழுதிருக்க வந்திடலாம்..”

வாரியணைத்த
தாயின் இருதயத்தில்
ஒரு
வளமான எதிர்காலம்
விதைக்கப்பட்டுவிட்டது..!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “விதைக்கப்பட்ட எதிர்காலம்..

 1. வறுமை குடிகொண்டிருக்கும் மனதில்
  விதைக்கப்பட்ட இந்தவிதை நிச்சயமாய்
  வழிகின்ற கண்ணீராலே முளைத்துவிடும்…

  வருங்காலம் இனி பார்த்து
  வளரும் புள்ள நிச்சயமாய்
  வாழ்ந்து காட்டவே பிழைத்துவிடும்…

  ஓ.கே. விஜயகுமார், மேட்டுப்பாளையம்

Leave a Reply

Your email address will not be published.