முடிவு

எல்.கார்த்திக்

L.Karthikஅன்று காலையில் இருந்தே அவளது மனம் குழம்பிக்கொண்டிருந்தது. தான் செய்வது சரியா, தான் எடுத்த முடிவு சரியா என்று புரியாமல் சில காலமாய்க் குழம்பிக்கொண்டிருந்தாலும், அன்று அவளின் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. அதைப் பற்றி யாரிடம் பேசுவது என்றும் புரியவில்லை அவளுக்கு. தான் எடுத்த முடிவு தன் அக்கம்பக்கத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்று தெரிந்தாலும் அதன் விளைவுகள் எத்தனை தூரம் இருக்கும் என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.

முதலில் ஏதோ ஒரு துணிச்சலுடன் ஒத்துக்கொண்டவள், பின் அது சம்பந்தமான விஷயங்களைப் படித்த பின் குழப்பம் அடையத் தொடங்கினாள். தான் செய்யவிருக்கும் செயலின் விளைவுகள் எத்தகையதாய் இருக்கும்? யோசிக்க யோசிக்க, அவளுக்குக் குழப்பமே மிஞ்சியது.

குழப்பத்தில் என்ன சமைத்தோம், என்ன சாபிட்டோம் என்றுகூடத் தெரியாமல் அமர்ந்து இருந்தவளை வாசலில் கதவு திறக்கும் ஓசை உலகுக்குத் திருப்பியது. அவளின் அடுத்த வீட்டுத் தோழி கமலா, வீட்டிற்குள் அழுது வீங்கிய கண்களுடன் நுழைந்தாள்.

“என்னக்கா ஆச்சு?”

“புதுசா என்ன ஆகப் போது? பொழுது விடிஞ்சு பொழுது போனா, வழக்கம்போல ஆரம்பிச்சுடுவாங்க எங்க வீட்ல. அதே பிரச்சனைதான்.”

“என்ன குழந்தை இல்லைன்னு மறுபடியும் பிரச்சனையா? ”

“அதேதான் கலா. நான் என்னடி பண்ண? குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க. தத்து எடுக்க நாங்க ரெடியா இருந்தாலும் என் மாமியாரும் மாமனாரும் தயாராய் இல்லை. வேறு ஏதாவது வழி இருக்கானும் எனக்குத் தெரியலை. தினம் தினம் நரகமாய்ப் போகுது. ஏன்டா பிறந்தோம்னு தோணுது எனக்கு.”

கலா அங்கு குடிவந்த புதிதில் இருந்து அவளுக்கு பேச்சுத் துணைக்கும், உதவி செய்வதற்கும் தோழியாய் இருப்பவள் கமலாதான். கமலாவிற்கும் கலாவை விட்டால் தன் வேதனைகளை சொல்ல வேறு யாரும் இல்லை. கலாவிடம் மனம் விட்டுச் சிறிது நேரம் பேசினால், கமலாவிற்கு மனம் லேசாகும். எனவே வீட்டில் பிரச்சினைகள் வரும் பொழுது அவள் வீட்டிற்கு வந்து புலம்புவது வழக்கம்.

இன்றும் அதே போன்றுதான். கமலாவிற்குக் கர்ப்பப் பையில் பிரச்சினை இருப்பதால் குழந்தை பிறக்க வாய்ப்பு மிகக் குறைவு என்றும், குழந்தை பெறுவது அவள் உடலுக்கு நல்லது அல்ல என்றும் டாக்டர் கூறி விட, பழமையில் ஊறிய அவள் மாமியாரும் மாமனாரும் தத்து எடுக்கவோ, மற்ற முறைகளை உபயோகிக்கவோ விரும்பவில்லை.

அவளுக்கு ஆறுதலாய் வார்த்தைகள் கூறி அனுப்பிய பின் கலாவின் மனது, தெளிவடைந்து இருந்தது. குழந்தை இல்லாத தம்பதியருக்கு தன்னால் ஆன உதவியாய் அவர்கள் கருவைச் சுமக்க இருக்கும் வாடகைத் தாயாய்ச் செல்வதை நினைத்து, மகிழ்ச்சியே இருந்தது அவளிடம். தன்னால் கமலாவிற்கு உதவ இயலவில்லையே என்ற சிறு வருத்தம் மட்டும் உறுத்தியது.

சமூகம் என்ன சொல்லும் என்ற பயம் விலகிவிட்டது அவளுக்கு. குழந்தை இல்லா ஒரு பெண்ணுக்கு தான் செய்யும் உதவிக்கு யார் என்ன சொன்னாலும் கவலைப்படத் தேவை இல்லை என்று முடிவு செய்தாள்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “முடிவு

 1. இந்தக் கருவை வைச்சு தங்கைக்காக அக்கா கருவைச் சுமக்கிறாப் போல் பாலசந்தரும் ஒரு நெடுந்தொடர் எடுத்திருந்தார். முழுதும் பார்க்கலை. என்றாலும் இது சம்பந்தப்பட்ட இரு குடும்பங்களின் முழு ஒத்துழைப்போடு நடக்கவேண்டும். அதோடு குழந்தையைச் சுமக்கும் தாயின் மனநிலை பெரும்பாலும் குழந்தை பிறப்புக்குப் பின்னர் கொஞ்சம் பாதிக்கப்படுவதாயும் கூறுகின்றனர். அது பற்றி உறுதியான தகவல்கள் இல்லை. குஜராத்தில் மகளுக்காகக் குழந்தையைச் சுமந்த தாயார்கள் இருக்கின்றனர். அங்கே இது அதிகம்.

 2. தானே சுமந்து குழந்தை பெற்றாலும் காலம் ஒரு நாள் பிரிக்கிறது

  குழந்தையை யார் சுமந்தாலென்ன

  தாய்மை உணர்வை எல்லோராலும் சுமக்க முடியுமா?

  யார் சுமந்தாலென்ன? ”தாய்மையை” விட ”தாய்மை உணர்வு” தான் புனிதம்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published.