சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-6)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

சில சமயங்களில் காலம் இறக்கை கட்டிக் கொண்டு ஓடுவது போலவும், சில சமயங்களில் நத்தையை விட மெதுவாக நகர்வது போலவும் நமக்குத் தோன்றும். இதற்குக் காரணம் நம் மனம்தானேயன்றி காலத்தின் மேல் பிழையில்லை. சிவநேசன் குடும்பத்தினருக்கு இப்போது காலம் மிகவும் மெதுவாகச் செல்வதாகத் தோன்றியது. டாக்டரிடம் மங்கையைக் காட்ட வேண்டும் என்று தீர்மானம் செய்த பிறகும் கூட ஒரு முறை மங்கை நெஞ்சு வலி தாளாமல் மயங்கி விழுந்தாள். அப்போது அவசரத்திற்குப் பக்கத்தில் இருந்த டாக்டரிடம் காட்டிய போது அவர் “இப்போதைக்கு வலி குறைய ஊசி போடறேன். நீங்க ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் கிட்டக் காட்டி ஒரு ஒப்பீனியன் வாங்கிக்கறது பெட்டர்” என்றார்.

ப்ரியாவுடன் படிக்கும் ஒரு பெண்ணின் அப்பாவே ஒரு பெரிய டாக்டர். ஆனால் அவர் இதய சிகிச்சை டாக்டர் இல்லை. அவர் தனக்குத் தெரிந்த ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்டிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்தார். அவர் மிகவும் பிரபலமான மருத்துவர் என்பதால் 15 நாட்களுக்குப் பிறகு தான் அவரைப் பார்க்க முடியும். இதற்கிடையில் ப்ரியாவுக்கும் , மாமிக்கும் ஏகப்பட்ட யோசனைகள். உள்ளே ரூமில் படுத்திருந்த மங்கையின் காதில் அவர்கள் பேசிக் கொள்வது தெள்ளத் தெளிவாகக் கேட்டது.

“ஏன் மாமி? ஒரு வேளை அண்ணிக்கு சீரியஸா ஏதாவது இருந்து, ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டா பணத்துக்கு என்ன பண்றது மாமி? அண்ணன் வேற ஊர்ல இல்லை?”

“உங்கண்ணா ஊர்ல இல்லேன்னா என்ன? ஒரு ஃபோன் போட்டு விஷயத்தைச் சொன்னா பணம் அனுப்பிட்டுப் போறார். இப்போல்லாம் நெறையப் பணம் கெடைக்கறதுன்னு அவர் சொன்னதா மங்கை சொல்லியிருக்கா”

“ஏன் மாமி இப்படி யோசனை இல்லாமேப் பேசறீங்க? அண்ணனுக்கு விஷயம் தெரிஞ்சுதுன்னா அவரு எல்லா வேலையையும் விட்டுட்டு ஒடனே கெளம்பி வந்துருவாரு. அது அவரோட கேரியருக்கு நல்லதில்லே. முதலாளி ரொம்பத் தப்பா நெனப்பாரு. மேலும் அண்ணியும் அதுக்குச் சம்மதிக்க மாட்டாங்க. அதனால நாம வேற ஏதாவது தான் யோசனை பண்ணணும்”.

கேட்டுக் கொண்டிருந்த மங்கைக்குப் பாசத்தில் நெஞ்சை அடைத்தது. என்னதான் ப்ரியாவை அவள் சிறு வயதிலிருந்தே எடுத்து வளர்த்திருந்தாலும், ப்ரியாவுக்குத் தன் மேல் இத்தனைப் பாசம் இருக்கும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. மேலும் மங்கையைப் பொறுத்தவரை ப்ரியா இன்னும் சிறு குழந்தை தான். அவள் இத்தனை பொறுப்பாகப் பேசுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயம் தான் குடும்பத்திற்கு ஒரு பாரமாகி விட்டோமே என்ற எண்ணமும் எழுந்தது.

அடுத்து மாமி நினைவில் வந்தாள். “யார் அந்த மாமி? அவர்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் ஒட்டா உறவா? தனக்கு ஒன்று என்றதும் மாமி தவித்துப் போய் விட்டாளே? ஆபத்துச் சமயத்தில் தான் உண்மையானவர்கள் யார்? மேலோட்டமாகப் பழகுபவர்கள் யார்? என்பது தெரியும் போலும்”. மேலும் கன்னங்கள் நனைந்தன மாமியின் நினைவில். என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்? ஒரு வேளை அவர்கள் பயப்படுவது போல் தனக்குப் பெரிதாக ஏதாவது இருக்குமோ? சிந்தித்தபடி படுத்திருந்தவளை மாமியின் குரல் உசுப்பியது.

“நான் நெனச்சேன். நீ தூங்கியிருக்க மாட்டேன்னு. தேவையில்லாமேக் கவலைப் படாதே மங்கை. ஆத்துக்குப் பெரியவளா நான் இருக்கேன். எனக்கு அடைக்கலம் குடுத்த குடும்பத்தை அப்படி விட்டுட மாட்டேன். உனக்கு ஒண்ணும் இல்லை. நன்னாத் தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிடும். உனக்குத் தூக்கத்துக்கு ஊசி போட்டுருக்கா அதனால பேசாமே தூங்கு. எதானாலும் நாளைக்கு டாக்டர் என்ன சொல்றார்னு பாத்துண்டு முடிவு பண்ணிக்கலாம்” என்றாள்.

மறு நாள் டாக்டர் மங்கையைப் பலவித பரிசோதனைக்கு உள்ளாக்கினார். ஈசிஜி, எக்கோ இன்னும் என்னென்னவோ வாயிலேயே பெயர் நுழையாத பரிசோதனைகள். அத்தனையையும் பொறுமையாக எதிர் கொண்டாள் மங்கை. டெஸ்ட் ரிசல்ட் வந்து விட்டது. ப்ரியாவையும், மாமியையும் மட்டும் அழைத்து டாக்டர் பேசினார்.

“அம்மா அவங்களுக்கு மைட்ரல் வால்வுல கொஞ்சம் பிரச்சனை இருக்கு” என்றதும் பதறிப் போனார்கள். “அதுக்கு என்ன டாக்டர் செய்யணும்? அதனால உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே? என்று வாய் குழறக் கேட்டவர்களை டாக்டர் சமாதானப் படுத்தினார்.

“அம்மா இந்த மைட்ரல் வால்வுங்கறது இதயத்துக்கு நல்ல ரத்தத்தை பம்ப் பண்ணக் கூடியது. அது பழுதாயிடிச்சின்னா இதயத்துக்கு நல்ல ரத்தம் போகாது. அதனால் ஆக்ஸிஜன் கம்மியாகி மாரடைப்பு வரலாம். ஆனா ஒரு ஆபரேஷன் செஞ்சா இத சரி பண்ணிடலாம். என்ன சொல்றீங்க? என்றார்.

“டாக்டர் எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை அந்த ஆபரேஷனைப் பண்ணிடுங்க டாக்டர்.” என்றாள் ப்ரியா. “ஏன் சார்? அந்த ஆபரேஷன் முடிஞ்சப்புறம் மங்கை எல்லோரையும் போல சாதாரணமா இருக்கலாம் இல்லையா? அதுக்கப்புறம் எந்தப் பிரச்சனையும் வராதே? என்று கேட்டாள் மாமி.

“அந்த ஆபரேஷன் முடிஞ்சு மூணு மாசம் வரைக்கும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். எந்த அதிர்ச்சி தரும் தகவல் அது சந்தோஷமா இருந்தாலும் சரி, துக்கமா இருந்தாலும் சரி அவங்களுக்குத் தெரியக் கூடாது. அப்டி ஜாக்கிரதையா இருந்துட்டா அதுக்கப்புறம் எந்தக் கவலையும் இல்லே. சாதாரணமா இருக்கலாம். ஆனா வெயிட் மட்டும் தூக்கக்கூடாது. ரொம்பக் கஷ்டமான வேலைகளைச் செய்யக் கூடாது. அதாவது எப்படீன்னா வேகமா ஓடிப்போய் மாடிப்படி ஏறுரது, இந்த மாதிரி வேலைகள் மட்டும் செய்யக் கூடாது. மத்தபடி தினசரி வேலைகள் எல்லாம் செய்யலாம்” என்று நீளமாகப் பேசி முடித்தார்.

“ஏன் டாக்டர் இந்த ஆபரேஷனுக்கு எவ்ளோ பணம் செலவாகும்?”

“எப்படியும் 3 லட்ச ரூவா ஆகும். அதுக்கப்புறம் மருந்துச் செலவு, தங்கற ரூம், இதெல்லாம் சேர்த்து ஒரு லட்சம் ஆகும். நீங்க எதுக்கும் ஒரு அஞ்சு லட்ச ரூபா ரெடி பண்ணிக்கோங்க. அப்டீன்னா கவலை இல்லாமே இருக்கலாம்” என்றார்.

சொன்ன டாக்டரையே வெறித்துப் பார்த்தபடி இருந்தனர் மாமியும், ப்ரியாவும். என்ன செய்வார்கள் அவர்கள்? அவ்வளவு பணத்துக்கு எங்கே போவார்கள்? மாமி இப்போது ஒன்றும் பேச வேண்டாம் மங்கையை வீட்டுக்கு அழைத்துச் சென்று பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டாள். முன்னேற்பாடாக மங்கையிடம் அவளுக்கு ஒன்றுமில்லையென்றும், ஒரு சிறிய ஆபரேஷன் செய்தால் எல்லாம் சரியாகி விடுமென்றும் டாக்டர் கூறியதாகத் தெரிவித்தாள் மாமி. மங்கை அதற்கு எவ்வளவு பணம் செலவாகும்? என்று கேட்டதற்கு ஒரு லட்ச ரூபய்க்குள் தான் ஆகும் என்பதாக பொய் சொல்லி விட்டாள் மாமி. ப்ரியாவும் மங்கையின் நன்மை கருதி ஆமாம் சாமி போட்டாள்.

மங்கையைப் படுக்க வைத்து விட்டு இருவரும் மொட்டை மாடிக்கு வந்தனர். பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை இருவரையும் வாட்டியெடுத்தது. அப்போது அவர்களுக்குத் தெரியாது பணக் கவலை தவிர வேறோரு பெருங்கவலையும் சேர்ந்து கொள்ளப் போகிறது என்று.

 

குறிப்பு: குங்குமச்சிமிழ் இதழில் தொடராக வெளி வந்தது)

(தொடரும்)

படத்திற்கு நன்றி:http://www.shutterstock.com/pic-84680113/stock-photo-business-woman-feeling-heart-pain-and-holding-her-chest.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *