அவ்வை மகள்

பிரமாணப் பத்திரமாக ஒரு சேர்க்கை விண்ணப்பம்

சென்ற பகுதியில், சென்னை நண்பர் அனுப்பியிருந்த பள்ளிக்கூடச் சேர்க்கை விண்ணப்பத்திலே கேட்கப்பட்டிருந்த கேள்விகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

அந்த விண்ணப்பப் படிவத்தில் இருந்த பல கேள்விகளில் ஒரு பகுதி:

1) பள்ளிக்குக் குழந்தையை அனுப்புவதில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பு வைத்திருக்கிறீர்கள்?
(அ) பாடங்கள் மட்டும் படித்தல் போதும்
(ஆ) படிப்புக்குக் கூடுதலான கற்றலும் வேண்டும்.

(2) குழந்தை ஒரு நாளில் பள்ளியில் இருக்கும் நேரத்தையும் வீட்டில் இருக்கும் நேரத்தையும் ஒப்பிடுக:
பள்ளி: —- மணி நேரம்;
வீடு மற்றும் வீடு சார்ந்த இடம்: —— மணி நேரம்.

(3) குழந்தையின் படிப்பின் மீது அதிகமான கவனம் செலுத்த வேண்டிய இடம்:
பள்ளியா? இல்லமா? உங்கள் விடை: ———–

(4) நாளொன்றுக்கு உங்கள் குழந்தையின் படிப்பிற்காக எத்தனை மணி நேரம் ஒதுக்குகிறீர்கள்? உங்கள் விடை: ———- மணி நேரம்.

(5) குழந்தையின் நடத்தை பற்றிய உங்கள் கருத்து என்ன?
(அ) நடத்தை படிப்பை விட முக்கியமானது
(ஆ) படிப்பு நடத்தையை விட முக்கியமானது

(6) குழந்தையின் நடத்தை என்பது எவருடைய பொறுப்பு? பள்ளியினுடையதா/பெற்றோர்களுடையதா? உமது விடை எதுவாகினும் அதனை விவரிக்க:
————————————————————————————————————————————————————————————————————————————————————————–
—————————————————————————————————————————-
(7) உங்கள் குழந்தைக்கு விளையாட்டு முக்கியம் என நினைக்கிறீர்களா?
(8) ஆம் எனில் உங்கள் குழந்தைக்கு என்னென்ன விளையாட்டுக்கள் தெரியும்?
(1) ——————–; (2) ————–; (3) —————–; (4) —————–(5) ————-; (6) ————–

(9) நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிற விளையாட்டுக்களில் குழந்தை, தொடர்ந்து பயிற்சி செய்யவும் தேர்ச்சி பெறவும் எவ்வாறு உதவுவீர்கள்?
——————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————

(10) உங்கள் குழந்தைக்கு விளையாட்டுகளில் ஆர்வம் இல்லை அல்லது விளையாட்டு எதுவும் தெரியாது எனில் – எவ்வாறு ஆர்வத்தை ஊட்டுவீர்கள்?
——————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————–

(11) Extracurricular activities பற்றிய உங்கள் கருத்து என்ன?
(அ) முக்கியமானது
(ஆ) முக்கியமானதல்ல

(12) Extracurricular activities என்பது கல்வியில் கூடுதலான பொறுப்பு அல்லவா?
(அ) ஆம்
(ஆ) இல்லை

(13) உங்கள் குழந்தைக்கான Extracurricular activities – இதில் உங்கள் பங்கு பணி என்ன?
—————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————–
(14) எங்கள் பள்ளியில் Extracurricular activities, கலை நிகழ்ச்சிகள், ஆகியன நிகழ்த்த நீங்கள் விரும்புகிறீர்களா?
(அ) ஆம் (ஆ) இல்லை
(15) ஆமெனில் விவரிக்கவும்:
————————————————————————————————————————————————————————————————————————————————————————–
—————————————————————————————————————————-
இக்கேள்விகள் யாவும் ஆங்கிலத்தில் இருந்தன.

தமிழில் எழுத ஒரு மாதிரி தெரியும் இதே கேள்விகள் ஆங்கிலத்தில் அத்தனை நாசூக்காய்த் தெரியும். இக்கேள்விகளைப் பார்த்தபோது எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சி ஏற்பட்டதென்றால், அப்பாவியான பெற்றோர்களை என்னென்பது?

சிந்தித்துப் பாருங்கள்!

இத்தகைய கேள்விகளைப் பெற்றோரிடம் கேட்பது தகுமா?

இத்தகைய கேள்விகளுக்குப் பெற்றோர் பதிலுரைக்க வேண்டிய அவசியம் ஏதாவது இருக்கிறதா?

பார்க்கப் போனால் இந்தக் கேள்விகள் உண்மையிலேயே இக்கட்டான கேள்விகள் – இவற்றிலே பள்ளிகளின் சாதுர்யம் பொதிந்து கிடக்கிறது – எப்படிப் பதிலிறுத்தாலும் – பெற்றோர்களை மாட்டி விடுகிற விஷமம் நிறைந்த கேள்விகள் இவை – எப்படிப் பதிலிறுத்தாலும், எந்த ஒன்றிற்கும் பள்ளிகளைப் பொறுப்பாளிகளாக ஆக்க முடியாத புத்திசாலிக் கேள்விகள் இவை.

இந்தப் பள்ளியில் குழந்தையைச் சேர்ப்பதால், நானே அனைத்துக்குமாய்ப் பொறுப்பேற்று, பாரம் சுமந்து சிலுவை அறைப்பாடாய் எம்மை ஒப்படைக்கிறேன் என்பதாகப் பெற்றோர் இருவரும் கையொப்பம் இட்டு சமர்ப்பிக்கும் பிரமாணப் பத்திரமாக ஒரு சேர்க்கை விண்ணப்பம் இருக்கும் என்றால், இந்த அக்கிரமத்தை என்னென்று சொல்வது?
எல்லாம் சுமுகமாகப் போகும் பட்சத்தில் ஓகே!

அதே நேரம், ஏதேனும் பிரச்சனை எனப் பள்ளியை பெற்றோர் அணுகினால், இதே விண்ணப்பப்படிவத்தை வைத்துக் கொண்டே அப்பெற்றோரை அப்பள்ளி மடக்க முடியும்!! அலைக்கழிக்க முடியும்!!

இது போன்று எத்தனையோ அஸ்திரங்கள் பெற்றோருக்கு எதிராக!

அது மட்டுமா? ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு ஆண்டும் நிதி திரட்டப்படுகிறது! அச்சடித்த கூப்பன் புத்தகங்களைக் குழந்தைகளின் தலையில் கட்ட, குழந்தைகளும் பெற்றோர்களும் நிதி திரட்ட, ஆலாய்ப் பறந்து, நாயாய்த் திரிந்து, பிச்சை எடுக்காத குறையாக அல்லாடும் காட்சிகளைக் காண அத்தனை வேதனையாக இருக்கிறது!

ஒரு பள்ளியில் ஒரு குழந்தை கல்வி பெற இவையெல்லாம் ஏன் என்று கேட்க இங்கே நாதி இல்லை! இவ்வாறான எதிர்பார்ப்புகளை ஒரு பள்ளி கோரும்போது அங்கே முறையாய்ப் படிப்புச் சொல்லிக்கொடுக்கும் யோக்கியதை தெரியவில்லையே! என்று கூட சுருக்கென்று உரைக்காத பெற்றோர்கள் வாழும் பாமர பூமி இது!

பீஸ் அதிகம் வாங்கும் பள்ளியில் கல்வியின் தரம் அதிகமாக இருக்கும் என நினைக்கும் பெற்றோர்களின் சுபாவம் பற்றி, சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன்.

உண்மையில் பார்க்கப் போனால், கட்டுகின்ற பீசுக்கும் பெறுகின்ற வசதிகளுக்கும் – கல்வித்தரத்திற்கும் நேரடியான தொடர்பு இல்லை. ஏனெனில், வசதிகளும், புது மோஸ்தர் கலாச்சாரமும் வழங்குவதால் மட்டுமே பள்ளிகள் கல்வியை வழங்கி விட முடியாது.

ஷூக்கள், டை, பெல்ட், யூனிபார்ம் ஆகியன கல்விக்கு எத்தனை ஒத்துழைப்பு செய்கின்றன என்று இங்கு ஆய்வு செய்ய ஆட்கள் இல்லை. ஆனால் இவை உடுத்திக் கொள்வதில் பிசகு அல்லது பிழை ஏற்படும்போது குழந்தைகள், பள்ளிகளிலே தண்டனை பெறும் வேதனை சொற்களில் வருணிக்க இயலாதது!

வெப்பப்பிரதேசமான ஒரு நாட்டில் – அதுவும் வருடத்தில் பத்து மாதங்கள் வெயில் கொளுத்தும் தென் மாநிலத்தில், குழந்தைகள் செயற்கை இழை ஸாக்சும், இறுக்கமான ஷூக்களும், அணிவதால் ஏற்படும் – வசதிக் குறைவை உடல் நலக்கேட்டைப்பற்றி இங்கு கவலைப் படுவார் எவரும் இல்லை. விரல்கள் இறுக்கப்பட்டு தேய்மானம் அடைந்து உருமாற்றம் அடைந்து, ஏன் ஆரோக்யமாக வளராமலேயே கால் விரல்கள் சூம்பிப் போய்விடுகிற அவல நிலையைப் பற்றி இங்கே நினைத்துப் பார்க்கக் கூட எவருக்கும் நேரமில்லை! ஷூ அணிவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னும் இரு பிரச்சனைகள் உள்ளன: (1) நகம் நொறுங்குதல் (nail pitting); (2) உள்நோக்கி நகம் வளருதல் (inward growth of nail). இந்த இரு பிரச்சனைகளுமே மிகவும் கஷ்டத்தைத் தருபவை . பின்னது முன்னதைவிட அதிக உபாதை தருவது. எதிர் திசையிலே நகம் வளர்ந்து அது தரும் நோக்காட்டை அனுபவிப்பவர்கள் மட்டுமே அறிவர்.

அடிபட்டு அடிபட்டே! நொறுங்கிச் சிதிலமடைந்து சுருண்டு உள்ளே செருகி

படத்திற்கு நன்றி: chennaionline.com; health-qna.com; primehealthchannel.com

டையும், பெல்ட்டும், மேலே பொருந்தி இருக்கும், ஒய்யார (?) செயற்கை இழை யூனிபார்ம்களை அணிந்த குழந்தைகளின் உடல், காற்றோட்டம் காணாது, தகிக்கும் வெப்பத்தில், குளமாய் வியர்த்து – அவ்வியர்வை வெளியேறாது உள்தங்கி – ஏற்படுத்தும் உபாதைகள் ஒன்றா இரண்டா? நாற்றமும் – பல்வேறு தோல் வியாதிகளும் இதன் உடன் விளைவே தானன்றோ?

இவ்வளவு அவஸ்தைகளையும் தாண்டி, நமது குழந்தைகள் படிக்க வேண்டியிருக்கிற வேளையில், அவர்கள் பொதி சுமக்கும் விலங்குகள் போல மூட்டை நிறைய புத்தகம்-நோட்டுப் புத்தகங்களையும் – அதனுடன் கொசுறு போல் ஒரு எக்ஸ்ட்ரா பையும், சாப்பாட்டுக் கூடையும் தண்ணிப்புட்டிகளுமாய் நடக்க முடியாமல் நடந்து செல்லும் அந்தக் காட்சிகளைக் காணும்போது – இந்தப் பிஞ்சுகள் எது குறித்து இவ்வாறு சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன என்ற கேள்வி நம்மைத் துளைக்கிறது.

 

மேலும் பேசுவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *