புதுமைப்பித்தனின் “சிற்பியின் நரகம்” – ஓர் அனுபவம்

0

 

 

 

தி.சுபாஷிணி

ஏற்கனவே மஞ்சள் நிற வர்ணம் தீட்டிய பலகையில் பிரவுன் நிறத்திலும், அதைவிட அடர்த்தியாயும், மஞ்சள் ஆர்க்கர் வண்ணமும், ஒரு ஒழுங்கில் இருப்பது போலவும், இல்லாது போலவும் வண்ணம் தீட்டப்பட்டது. நடுவில் விடப்பட்ட இடத்தில் மஞ்சள் ஆர்க்கர் நிறம் வடித்த வடிவம் சூரிய ஒளியில் ஒளிரும் தங்கமாய் உட்- குழிவோடு காணப்பட்டது. அதைச்சுற்றி, கறுப்பு நிறக் கோட்டால், வளைந்த நெற்றியுடன் கூர்மையான சற்றே பெரிய நாசியும், சிறிது தடித்த பெரிய இதழ்களும், வழிந்து ஓடிய நீள் கண்களுமாய் ஒரு முகம் ஒன்று வரையப்பட்டது-. ஆம். ஓர் அழகியப் பெண்ணின் தீர்க்கமான முகம். நெற்றியிலிருந்து விடுபட்டக் கூந்தல் வழிந்து, காதை மறைத்து முன் கழுத்து வழியாக முன்பக்கம் விழுந்து அவளை முழுமையாக்குகிறது. கூந்தல் மறைத்த காதுகளில் காதணி ஒன்று கூந்தலின் மேல் அமர்கிறது. வளைந்து நெளிந்து விழுந்த கூந்தலுக்கு மலர் சூட்டப்படுகின்றது. அம்முகம் தன்னைப் பார்த்துப் பெருமிதம் கொள்ள ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று பாந்தமாய் வடிவம் பெறுகின்றது. இவ்வடிவங்களைக் காண கிளியொன்று நேர்த்தியாய் வந்து சிறகை விரித்த வண்ணம் வருகின்றது. இக்கிளி வந்தமர்ந்த அழகையும், இப்பெண்ணின் எழிலையும் கண்டு தாமரையொன்று மலர்கிறது. ஓ! இத்துடன் அவ்வளவுதான் என்று எண்ணும்போது, ஒரு பிளேடின் உதவியால் அவளுடைய கூந்தலின் அலைகளைக் கீறி, வடிவம் கொடுக்கப்படுகிறது.

அவள் முன்னால் விழுந்த கூந்தலில் சுருள் சுருளாய், வளையம் வளையமாய் … அப்பப்பா என்ன அழகு! என்ன அழகு!! வண்ண ஓவியத்தைக் கீறியே உருவாக்கப்படுகிறது. ஆஹா! வளைந்து நெளிந்து வளையமாய் முடிவில்… அக்கூந்தல்தான் எத்தனை எழில் பெறுகிறது. அவளுக்கு அழகே இக்கூந்தல் தானோ என்று எண்ணும்படி மிளிர்கின்றது. இவ்விதம் கீறிப்பெறும் வடிவம் இத்துடன் முடியவில்லை. அவள் முகம், அதன் வடிவத்திற்கு ஏற்றாற்போல், நின்றும், நிமிர்ந்தும், சாய்ந்தும் கீறல்களை வடித்து, மஞ்சள் முகமாகி உருவாக்கி விடுகிறது. இக்கீறல்கள் அவளுடைய இதழ்களுக்கிடையே புன்னகையை ஒளிரச் செய்கின்றன. அவளது கண்களுக்கு கருணையை அள்ளித் தருகின்றன. அந்த எடுப்பான நாசியில் ஒரு தெளிவை எதிரொலிக்கச் செய்கின்றன. அவளது கூந்தலுக்கிடையே தோன்றும் காதணிகள் வடிவழகு பெறுகின்றது.

இதுபோன்றே கிளியும் தாமரை மலரும் கீறல்களின் வடிவமாய்த் திகழ்கிறது. ஓவியங்களின் பின்னணியும் கீறிக்கீறியே கொண்டுவரப் பெறுகின்றது. மொத்த உருவமும் பெரிய சிற்பங்களின் பின்னணியில் இருக்கின்றது. கூந்தலின் சுருள் சுருளான வளையங்களும் இக்கீறல்களில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாடுகின்றது. “எங்கே என்னைக் கண்டுபிடி என்று”! ஆங்காங்கே பெரிய பெரிய வளைவுகளாய்க் கீறல்கள் இடம் பெறுகின்றன. சரி. இத்துடன் அவ்வளவுதான் என்று நினைக்கையிலேயே சிறிது தடிமனான கீறல்கள் அவ்வோவியம் முழுவதும் ஆங்காங்கே பெய்யப்படுகின்றன. மிகவும் மென்மையாய் அமைதியாய் ஒரு பெண் வடிவம் எடுத்து, வளர்ந்து வளர்ந்து திண்மையுடன் தெளிவானப் பெண்ணாய் வடிவம் பெறுகிறாள். இத்திண்மையை இறுதியாய் பெய்யப்படும் தடிமன் கீறல்கள் அழுத்தமாய்ப் பகர்கின்றன. முகம் உணர்த்தும் மென்மை, இதழ்கள் வடிக்கும் புன்னகை, கண்கள் பொழியும் கருணை, நெளிந்து வழிந்த கூந்தலின் எழில் எல்லாம் அவ்வோவியத்தில் இருக்கின்றன. தேடித் தேடி கண்டு இன்புறலாம். இவ்வோவியம் ஒவ்வொரு படிநிலையின் போதும் ‘இவ்வளவுதான்’ என நினைக்கும்போது அது அடுத்தபடி நிலைக்கு கொண்டு சென்றது. அது பிறக்க பிறக்க நாமும் பிறந்தோம். அது செல்லச் செல்ல நாமும் சென்றோம். அந்தக் கீறல்களுடன் நாமும் பயணித்தோம்.

ஆம். இவ்வோவியத்தைப் படைத்துக் கொண்டிருந்தது பிரபல ஓவியர் திரு.நெடுஞ்செழியன் ஆவார். அவருடைய விரல்கள் வடித்த கீறல்களுடன் பயணித்தவர்கள் 100 பேர்கள். அவர்களது கண்களும் உள்ளங்களும் அவர் வடித்த வண்ணங்களிலும், வடிவங்களிலும் பதிந்து இருந்தன. படைப்பாளியும் படைப்பும் ஒரு தியானத்தில் இருந்தார்கள். அவர்களுடன் இணைந்து வந்திருந்த 100 பேர்களும் தியானித்திருந்தனர். அங்குள்ள வாதா, மா, தென்னை ஆகிய மரங்களும் மற்ற அனைத்தும் தியானம் கலையா வண்ணம் பார்த்துக் கொண்டன. காகங்களும் நம்முடன் கரையா ஓவியமாய் அமர்ந்து இருந்தன. வழக்கமாய் கமகமக்கும் சரவணபவனில் அரைபடும் காபிக்கொட்டையும் தன் மணத்தை விடாது அடக்கிக் கொண்டது. அக்கம்பக்கம் வெளிவரும் சப்தமும் யார் செவியிலும் எட்டவில்லை. அனைத்தும் அவ்வோவியருடன் பயணம் செய்து கொண்டிருந்தன. என்றுமில்லாது ஒரு புதிய அனுபவத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது அன்று ‘கேணி’ என்னும் வாசகர் அமைப்பு. (இது பத்திரிக்கையாளர் ஞாநியும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் ஒவ்வொரு மாதம் 2வது ஞாயிறு நடத்தும் நிகழ்வு). ஓவியம் முடிவடைந்தது என்பதற்கு அடையாளமாக ஓவியர் நெடுஞ்செழியன் தன் கைகளைத் துணியால் துடைத்துக் கொண்டார். ஆனால் பார்வையாளர்கள் தங்கள் கண்களை ஓவியத்தைவிட்டு அகற்றவில்லை. இக்கீறல்களின் வடிவமைப்பாய் அப்பெண் வைக்கோல் குச்சியால் வடிவமைக்கப்பட்டு ஒரு மிடுக்கோடு ஒளிர்ந்தாள். அதற்கு மேலும் அனைவரும் அவ்வோவியத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். அன்று கூடியிருக்கும் கிணற்றடி முழுவதும் அவ்வோவியம்தான் வியாபித்து இருந்தது. ஓவியர் இல்லை, பார்வையாளர்கள் மறைந்தனர். கிணறு, மரம் எதுவும் இல்லை. விஸ்வரூபமாய் அந்த ஓவியம்தான் கீறல்களின் வடிவமாய் வியாபித்து இருந்தது.

இந்த அனுபவம், இன்றிலிருந்து சற்றே பின்னோக்கி 1935ஆம் ஆண்டிற்கு அழைத்துச் செல்கிறது. அந்த வண்ணக் குழைவுகள் வார்ப்புக் குழைவிற்குக் கூட்டிச் செல்கின்றது.

சாத்தன், தன் வாழ்நாட்களை செலவழித்து, சிற்பம் ஒன்று வடிக்க விழைகின்றார். அதற்காகத் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழிக்கின்றான். சிலையின் வடிவத்தை முதலில் உள்ளத்தில் வடிக்க முயல்கின்றான். அவ்வடிவம் பெற பல இடங்களுக்குச் செல்கின்றான். பாண்டிய நாட்டு கொல்லிப் பாவையைக் காண்கின்றான். அங்கு நடக்கும் கூத்த்தைப் பார்க்கின்றான். அக்கூத்துக் கட்டுபவர்களின் அங்க அசைவுகளை உற்று நோக்குகின்றான். அதில் நடித்த மாறன் ஒருவன் பிடித்த கால் வளைவுகளைத் தன் கரங்களில் பிடித்துக் கொள்கின்றான். அங்கிருந்து, அமைதி உவக்கும் முகத்தைத் தேடித் தேடி அலைந்தான். பின் மலையாளத்து நடிகை ஒருவருடைய முகத்தில் அந்த அமைதியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அது உணர்த்தும் அர்த்தமற்ற அர்த்தத்தைக் கண்டான். அமைதி தேடி இமயத்தில் அலைந்து திரிந்தவனுக்கு, தன் மனைவி அங்கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது. ஓரளவு வடிவம் பெற்றுவிட்டது. ஆனால் அனைத்தையும் கலைக்கும் சௌந்தர்யம் கிட்ட வேண்டுமே. மீண்டும் ஆட்கள் தேடி அலைகின்றான். எத்தனை எத்தனை ஆட்களைக் கவனிக்கின்றான். அவன் தேடும் சௌந்தர்யத்தின் ஒரு சாயை, பத்து வருடங்களுக்கு முன் சிரச்சேதம் செய்யப்பட்ட நீல மலைக் கொடுங்கோலனின் இடைத் துவளுதலில் காண்கின்றான். அலைந்து அலைந்து தன் எண்பதாவது வயதில், தெய்வத்தை, அதன் அர்த்தத்தைத் தன் சிலையில் வடித்து விடுகின்றான். அதைக் காட்டி, தன் வாழ்நாளின் அர்த்தத்தைப் பகிர்ந்து கொள்ள பைலார்க்ஸையும், துறவி ஒருவருடன் அழைத்துச் செல்கிறான் சாத்தன். இது என் பூர்வஜென்ம பலன். என் பின்னாலிருந்து அர்த்தமுள்ள வஸ்து என்னை தூண்டாவிட்டால் அதை எப்படி சாதிக்க முடியும் என்று பைலார்க்ஸிடமும் துறவியிடமும் சாத்தன் கூறுகிறான்.

அதற்கு பைலார்க்ஸ், சாத்தனிடம், “நீதான் சாதித்தாய், நீதான் பிரம்மா, உன் சாதனைதான் அது. சிருஷ்டி! மயங்காதே! பயப்படாதே! நீதான் பிரம்மா! சிருஷ்டித் தெய்வம்” என்று அடுக்கிக் கொண்டே போகிறான். இது 1935ஆம் ஆண்டில் புதுமைப்பித்தன் படைத்த “சிற்பியின் நகரம்” என்னும் கதை கூறும் காவியம்.

கதை நடக்கும் களம் காவிரிப்பூம்பட்டினம். சூரியாஸ்தமன சமயம். இத்திரவிழாவின் சமயத்தில் மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ஸ்நானக் கட்டடிடத்தின் படிக்கட்டில் பைலார்க்ஸ் என்ற யவனன் கடலை நோக்கியபடி அமர்ந்திருந்தான். அவனுடைய எண்ணங்கள் கடலில் லயித்து இருந்தது. அங்கு அடிக்கும் காற்றும் வந்து வேகமாய்த் தழுவிச் செல்லும் அலைகளும் அவனுக்குச் சிறிதும் சலனம் ஏற்படுத்தவில்லை. மனம் ஒன்றில் லயித்துவிட்டால் காற்றுதான் என்ன செய்ய இயலும்? அலைகள்தான் என்ன செய்ய முடியும் என வினவி நிற்கிறார் ஆசிரியர் புதுமைப்பித்தன்.

பைலார்க்ஸின் குவிந்து விழுந்து சிதறிய சிந்தனைகளையுடைய கனவுகள் அவனை அலைக்கழித்து வெறியாய் விழித்த விழிகளையும் தமிழ்நாட்டுப் பரதேசி ஒருவரின் அழைப்பால் அமைதிப்பட்டு நிற்கின்றது.

“யவனரே! உமது சித்தம் உமக்குப் பிரியமான ஒன்றுமற்ற பாழ்வெளியில் லயித்ததோ? நான் நேற்று சொன்னது உமக்குப் பதிந்ததா? எல்லாம் மூலசக்தியின் திருவிளையாடல், அதன் உருவம் / கொல்லிப் பாவையும் அதுதான்; குமரக் கடவுளும் அதுதான். எல்லாம் ஒன்றில் லயித்தால்……?

‘உமது தத்துவத்திற்குப் பதில் ஒரு கிண்ணம் திராட்சை மது எவ்வளவோ மேலானது. அதுவும் ஸைப்பிரஸ் தீவின் திராட்சை…. அதோ போகிறானே, அந்த காப்பிரியும் ஏதோ கனவை நம்புகிறான். உமது முதல் சூத்திரத்தை ஒப்புக் கொண்டால், உமது கட்டுக்கோப்பில் தவறு கிடையாதுதான்…. அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஒவ்வொருவனுடைய மனப்பிராந்திக்கும் தகுந்தபடி தத்துவம்…… எனக்கு அது வேண்டாம்.

நாளங்காடியில் திரியும் உங்கள் கருநாடிய நங்கையும் மதுக்கிண்ணமும் போதும்….
சிவ! சிவ! இந்த ஜைனப் பிசாசுகள் கூடத் தேவலை, கபாலி வெறியர்கள் கூடத் தேவலை… உம்மை யார் இந்த அசட்டு மூட்டைகளைக் கட்டிக் கொண்டு யவனத்திலிருந்து வரச் சொன்னது-?”

“உம்மைப் போன்றவர்கள் இருக்குமிடத்தில் நான் இருந்தால்தான் அர்த்தமுண்டு. எங்கள் ஜூபிட்டரின் அசட்டுத் தனத்திற்கும் உங்கள் கந்தனின் அசட்டுத்தனத்திற்கும் ஏற்றத் தாழ்வில்லை…..” என்று சிரித்தான் பைலார்க்ஸ். பரதேசிக்கும், யவனன் பைலார்க்ஸுக்கும் இடையே நடந்த உரையாடல். இது என்னைக் காவடிச்சிந்துவில் கொண்டு போய் விடுகிறது.

“உள்ளம் மெள்ள மெள்ள
உருகுதே! முத்தம் தருகுதே!
கண்ணீர் பெருகுதே!
காமப்பித்தம் உச்சிக்கேறி
கிறு கிறு என வருகுதே!”

ஆனால் உடனே, இக்காதல் மயக்கமே அவனுடைய திருவிளையாடல்தானே என்கின்ற அந்தப் பரதேசியின் கூற்று, அலகிலா விளையாட்டுடையவன். அனைத்தும் அவனுடையதே.

“பைலார்க்ஸும் பரதேசியும் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு சாத்தன் வந்து விடுகிறார். தொண்டு கிழவன். ஆனால் வலிமை குன்றவில்லை. கண்களின் தீட்சண்யம் போகவில்லை. பிரம்மன் வடிவம் பெற்றதுபோல் காணப்பட்டான்” என்று சாத்தனை வர்ணிக்கின்றான் புதுமைப்பித்தன்.
சாத்தன் பைலார்க்ஸையும் பரதேசியையும் தன் வாழ்நாளை அர்ப்பணித்து வடித்த சிலைதனைக் காட்ட அழைத்துச் செல்கிறான். இதுதான் என் வாழ்க்கையென சிலைமறைத்த திரையை விலக்குகிறான் சாத்தன்.

“இருவரும் ஸ்தம்பித்து நின்றனர். அந்த மங்கிய தீபவொளியில் ஒற்றைக்காலைத் தூக்கி நடிக்கும் பாவனையில், ஆள் உயரத்தில் மனிதவிக்ரகம். விரித்த சடையும் அதன்மீது விளங்கும் பிறையும், விரிந்து சின்முத்திரைகளைக் காண்பிக்கும் கைகளும் அந்த அதரத்தில் தோன்றிய அபூர்வ புன்னகையும் மனத்தில் அலைமேல் அலையாகச் சிந்தனைக் கற்பனைகளைக் கிளப்பின. மூவரும் அந்த சிலையையேயாயினர். சிலையின் ஒவ்வொரு வளைவிலும் ஒவ்வொரு அங்கத்திலும் என்ன ஜீவத்துடிப்பு”

புதுமைப்பித்தனின் சிலை பற்றிய வர்ணனை.
சன்னியாசி தம்மையறியாது

“பனித்தசடையும், பவளம் போல்
மேனியும், பால் வெண்ணீறும்
குனித்த புருவமும் கொவ்வைச்
செவ்வாயும் குமிண் சிரிப்பும்
இனித்தங்கசிய எடுத்த பொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே”

என பாடத்துவங்கி விட்டார். சாத்தன் இதை மறுக்கிறார். இது கலையா! இது சிருஷ்டி! என பைலார்க்ஸ் கூறுகிறான்.

நம்முன் இவ்வடிவக்காட்சி விரிகிறது. நம்மனம் மேலும் விரிவடைகிறது.

ஆனந்தம் ஆடரங்கு
ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் வாக்கியம்
ஆனந்தம் பல்லியம்
ஆனந்த மாக
அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக்
கூத்துகள் தரனுக்கே

சாத்தனின் சிருஷ்டியில் ஆனந்தமாய் காட்சியளிக்கிறான் அவன்.

ஆதிபரன் ஆட, அங்கை கனல் ஆட
-ஓதும் சடை ஆட, உன்மத்தம் உற்றாடப்
பாதி மதி ஆடப், பார் அண்டம் மீதாட
நாதமோடு ஆடினாள் நாதந்த நட்டமே.
என்று அவன் திருநடனம் புரிய, அவள் ஆட ஆட அவன் கைகள் ஆடுகின்றன. மாலையும் ஆடுகிறது. அங்கவஸ்திரமும் ஆடுகிறது: அதோடு நிறுத்த முடியுமா! இந்த அகிலமே அவள்தானே! அவன் அசைந்தால் அகிலமும் அசையுமே! அவள் ஆட ஆட சந்திர சூரியர்கள் ஆடுகிறார்கள். நட்சத்திரங்கள் ஆடுகின்றனர். அண்டமே ஆடுகின்றது.

அணுவும் ஆடுகின்றது. துகள்கள் ஆடுகின்றன. நம்மோடு ஆடுகின்றான், நம் உணர்வோடு ஆடுகின்றான்.

“தேவரோடு ஆடித் திரும்அம் பலத்தாடி
மூவரோடு ஆடி முனிசனத்தோடு ஆடி
பாவினுள் ஆடி பராசக்தி யில்ஆடி
கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே”

பரமனோடு ஆடிய திருமூலரோடு ஆடிய அனுபவத்திற்கு அழைத்துச் சென்றது.பைலார்க்ஸ் பரபரக்கின்றான். அச்சிலையைச் சாத்தன் எங்கு வைக்கப் போகிறான் என்று? அரசன் கோவிலுக்கு…. இதென்ன கேள்வி! என்று பதில் கூறுகிறான் சாத்தன். இச்சிருஷ்டியை அரசனின் அந்தப்புரத்தில் வைத்தாலும் அர்த்தம் உண்டு. இல்லை உடைத்து குன்றின் மேல் எறிந்தாலும் அதன் ஒவ்வொரு துளிக்கும் அர்த்தம் உண்டு. ஜீவன் உண்டு என்று வெறிபிடித்தவன் போல் கத்திவிட்டு, இந்த வெறிபிடித்த மனிதர்களை விட கடலுக்கு எவ்வளவோ புத்தியிருக்கின்றது என்று கோபித்துக் கொண்டு பைலார்க்ஸ் வெளியேறிவிடுகிறான்.

காலம் கடக்கிறது. கும்பாபிஷேகம் நடக்கிறது. சிலையை பிரதிஷ்டை செய்த தினம். அர்த்த ஜாமம் தாண்டி வீடு திரும்புகிறான் சாத்தன். பைலார்க்ஸை இத்தினத்தில் இல்லையே என்றும் வருத்தம் மேலோங்கி இருந்தான். வயதின் முதிர்ச்சி அவனைத் தளர்த்தியது. சோர்ந்து படுத்தான். அயர்ந்து விட்டான்……
“அப்பா! என்ன ஜோதி! அகண்டமான எல்லையற்ற வெளி! அதிலே சாத்தனின் இலட்சியம், அந்த அர்த்தமற்ற ஆனால் அர்த்த புஷ்டி மிகுந்த ஒரு புன்சிரிப்பு! மெதுவான ஹிருதய தாளத்தில் நடனம்! என்ன ஜீவன்! என்ன சிருஷ்டி!

திடீரென்று எல்லாம் இருண்டது! ஒரே கன்னக்கனிந்த இருள். ஹிருதய சூனியம் போன்ற பாழ் இருட்டு. பிறகும் ஒளி…. இப்பொழுது தங்கத்திலான கோவில். கண்கள் கூசும்படியான பிரகாசம்… கதவுகள் மணியோசையுடன் தாமே திறக்கின்றன. உள்ளே அந்த பழைய இருள்!
சாத்தன் உள்ளே செல்கிறான். இருட்டின் கரு போன்ற இடம். அதில் மங்கிய தீபவொளி தோன்றுகிறது. என்ன? இதுவா பழைய சிலை.. உயிரில்லை. கவர்ச்சிக்கும், புன்னகையில்லையே…. எல்லாம் மருள்……. மருள்…..!

அந்தகார வாசலில் சாயைகள்போல் உருவங்கள் குனிந்தபடி வணங்குகின்றன.
“எனக்கு மோட்சம்! எனக்கு மோட்சம்” என்ற எதிரொலிப்பு அந்தக்கோடிக் கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை. இப்படியே தினமும்…

நாட்கள், வருஷங்கள், நூற்றாண்டுகள் அலைபோல் புரளுகின்றன. அந்த அனந்த கோடி வருஷங்களில் ஒரு சாயையாவது ஏறிட்டு பார்க்க வேண்டுமே!

எனக்கு மோட்சம்…. இதுதான் பல்லவி பாட்டு எல்லாம்… சாத்தன் நிற்கிறான். நாமும் இங்கு நிற்போம். புதுமைப்பித்தனையும் நிறுத்தி வைப்போம். பைலார்க்ஸ் யதார்த்தவாதி. ஆனால் படைப்பின் ரகசியத்தை உணர்ந்தவன். ஆராதிப்பவன். அந்த சிலையில் ஜீவனைப் பார்த்தவன். அதை வெறும் சிலையாய், இதன் அருமை அறியா ஜனங்களிடம் விட்டுவைக்க விருப்பமில்லை. தொலைநோக்குப் பார்வை உள்ளவன். தன்னலமிக்க ஜனங்களை விட கடல் மேல் என்று வெளியேறிவிட்டான். அவன் பொருளியல்வாதியாய் இருந்தாலும், காதலின் மணத்தை, அலையின் அர்த்தத்தை, சொல்லாமல் சொல்லும் படைப்பின் உன்னதத்தை உணர்ந்தவன். அந்த நடனத்தின் அசைவில் மேன்மையை, அந்தப் புன்னகையை அறிந்தவன் அவன்.

சாத்தன் அந்த நடனத்துக்கே, அவ்வடிவத்திற்கே தன்னை அர்ப்பணித்தவன். தன் உடல்,பொருள், ஆவி அனைத்தையும் அளித்து வடித்த சிலை ஜீவன் இழந்து நிற்கும் காட்சியைக் காணப் பொறுக்கவில்லை. அதை வெறும் மோட்சம் அளிக்கும் கருவியாய் மக்கள் மாற்றியதை எண்ணி மனம் புலம்புகின்றான்.

“அவனுக்கு வெறிபிடிக்கிறது. உயிரற்ற மோட்ச சிலையே! உன்னை உடைக்கிறேன்! போடு! உடை! ஐயோ தெய்வமே! உடைய மாட்டாயா? உடைந்து விடு. நீ உடைந்து போ! அல்லது உன் பழு என்னைக் கொல்லட்டும். அர்த்தமற்ற சத்து” என்று சாத்தனுடன் புதுமைப்பித்தனும் வெறியாய்ப் புலம்புகிறார்.

மனித இதயத்துள் எத்தனையோ அன்பு ஊற்றுக் கண்கள். அவற்றுள் ஒன்று திறந்தாலே போதும். அன்பானது பெருக்கெடுத்து ஓடும். கர்வம் பொங்கும். நட்பாய் மிளிரும். காதலாய் மலரும். காதல் முதிர முதிர எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும். பின் தன்னையே அர்ப்பணிக்கும். அதுதான் பக்தி. அதுதான் பரவசம். இந்த அன்பு உண்டாவதற்கு ஏதாவது காரணம் உண்டா? அன்புதான் காரணம். வேறு ஒரு காரணமும் இல்லை. அன்புக்கு லட்சியம் அர்ப்பணிப்பு தான். அதனால்தான் அன்புக்கு இடம் கொடுத்த உள்ளம் ஏங்கும், தவிக்கும், உருகும். அந்த தவிப்பில், உருகலில் உருவாக்குகிறான் தன் படைப்பை. சாத்தன் அப்படித்தான் தன் அன்பை அர்ப்பணித்து உருவாக்குகிறான். அதன் உயிரை எடுத்ததும், அது உமிழந்த குமிண்சிரிப்பைப் போக்கியதும் அரற்றுகிறான்.

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இரப்பகல் ஏத்துவன்;
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே!

இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்து, அன்பால் உருகி அழுது அரற்றி, அவனைப் பிடித்து கடித்து அவன் உதறித் தள்ளினாலும் அப்படியே அவனை என்னுள் படைத்துப் பிடித்து வைத்துக் கொள்வேன் எனப் பாடிய திருமூலர் நினைவில் வருகிறார். சாத்தனும் திருமூலரின் நிலையில்தான் இப்போது இருக்கின்றான். சாத்தனது அரற்றலில் சிலை புரள்கிறது. சாத்தன் அப்படியே சிலையை ஆலிங்கனம் செய்கிறான். அவனது இரத்தத்தில் அச்சிலை தோய்கிறது. இரத்தம் அவ்வளவு புனிதமா! பழைய புன்னகை….. மிளிர்கின்றது.

இரத்தம் புனிதமா? அந்த ஆலிங்கனம், தன்னலம் இல்லா அந்த ஆலிங்கனம், எதையும் எதிர்பார்க்காது அவனுக்கு அர்ப்பணித்த அந்த அன்பை மட்டும் அளித்த அந்த ஆலிங்கனம், அது உகுத்த இரத்தம் அன்பின் உயிர்ப்பை அந்த சிலைக்கு அளித்தது, அதுதான் படைப்பு, அதுதான் சிருஷ்டியின் ரகசியம்.
“பைலார்க்ஸ்…. பாவம் அவன் இருந்தான்….. சாத்தனின் மனம் சாந்தி பெறவில்லை” என புதுமைப்பித்தன் இந்தக் கதையை முடிக்கிறான்.
கதை முடியவில்லை. வாழ்வின் தத்துவத்தைக் கூறுகிறது. ஒரு படைப்பு ஒரு தத்துவ தரிசனத்தைத் தர வேண்டும். அதிலிருந்து உயிர்பெற்று சொல்லாதனவற்றைச் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் ‘சிற்பியின் நரகம்’ ஒரு தத்துவ தரிசனம். அன்புக்கு அன்பையே அர்ப்பணிக்கும் அருள் தத்துவம். எனவேதான் இக்கதை எனக்கு திருமூலருடன் ஒரு உறவை நல்கியிருக்கின்றது. கடவுளுக்கும் நாம்தான் உயிர் கொடுக்கின்றோம். நம் அன்பு, அர்ப்பணிப்பு, தன்னலமில்லாப் பண்பு, அனைத்தையும் கொடுத்து அவனை ஆனந்தமாய் ஆட வைக்கிறோம். அவனுக்கு எத்தனை பெயர்கள் சூட்டினாலும் அவ்வளவும் இறைவனேதான். அவனுடைய ஆடரங்குகள் நாம்தான். ஒரே நடனம்தான். ஆனந்த நடனமே.

“காளியோடு ஆடிக் கனகா சலத்தாடி
கூளியோடு ஆடிக் குவலயத்தே ஆடி,
நீளிய நீர்தீக்கால் நீள்வான் இடைஆடி
நாள்உற அம்பலத் தேஆடும் நாதனே”

இப்போது புதுமைப்பித்தன் இல்லை. சாத்தன் இல்லை. பைலார்க்ஸ் இல்லை. பரதேசி இல்லை. எல்லோரும் நடனத்தில் ஆனந்தத்தின் அசைவுகளில் கலந்துவிட்டோம். ஆனந்தம். ஆனந்தக் கூத்துகள்தான். இவ்வானந்த மயமாய் நாம் மாறியது போல்தான், படைப்பின் பயணத்தில் அந்தப் படைப்பாகவே மாறிவிடுகிறோம். ஓவியர் நெடுஞ்செழியனின் ஓவியமாகவே நாம் அன்று மாறிய ரகஸ்யமும் அதுதான். இதுதான் அன்பின் ரகசியமும் கூட.

புதுமைப்பித்தனின் எழுத்து நடையும், கதைக்கருவின் உன்னதமும், அதிலிருந்து மேன்மேலும் சிந்திக்கத் தூண்டிய வகையும், காலத்தை வென்று நிற்கும் தன்மையும், அவரது படைப்பின் ரகசியங்களாய்த் திகழ்கின்றன.

படத்திற்கு நன்றி :

http://sarwothaman.blogspot.in/2011/10/blog-post.html

 http://www.lotussculpture.com/nataraja1.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.