காற்றில் ஆடும் தீபங்கள்
பவள சங்கரி
வாழ்வியல் வண்ணங்கள் (2)
நிறம் மாறிய பூக்கள்!
கருப்பினவாதத்தின் உச்ச நிலையில் தம் பள்ளிப் பருவத்தில் தாம் பட்ட துயரில் மனம் நொந்து, ஒதுக்கப்பட்ட சிறுவனாக, பலூன் விற்கும் தன் தாத்தாவிடம் சென்று முறையிட, அவரும் மற்ற பலூன்களுடன் ஒரு கருப்பு வண்ண பலூனில் சற்று காற்றை அதிகமாகவே பிடித்து, மேலே பறக்க விட, அந்த பலூன் மற்றவைகளைவிட மிக உயரமாக பறக்க ஆரம்பிக்கிறது.. அதைக்கண்ட அந்த சிறுவனின் மனதில் உற்சாகம். அப்படி என்றால் இந்த கருமை நிறம் என் செயல்களுக்குத் தடையில்லையா என்று கேட்க, தாத்தாவும், நிறத்திற்கும் செயலுக்கும் என்ன சம்பந்தம், சாதனைகள்தான் ஒருவரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துகிறது என்ற அந்த ஆக்கப்பூர்வமான பேச்சுதான் ஆப்பிரகாம் லிங்கனை வாழ்க்கை முழுவதும் போராட வைத்தது. தம்முடைய 59வது வயதில்தான் தம் கனவுக்கோட்டையின் உச்சியைத் தொட்டார். அதுவரை அவர் ஓயவே இல்லை. இப்படி இந்த நிறபேதம் குறிப்பிட்ட அந்த இனத்திற்கு மட்டுமல்லாமல், மனிதராய்ப் பிறந்த பலருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதும் மறுக்க இயலாத உண்மை. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு. வெள்ளை தோல் உள்ளவர்கள் மட்டுமே அழகு, கருப்பு நிறமாக இருப்பவர்கள் அழகு என்று ஒப்புக் கொள்ள்பபடுதில்லை. இதற்கு கிளியோபாட்ரா போன்ற ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு. நம்ம ஊர் பெண்கள் நிறம் சற்று மட்டமாக இருந்தால் உடனே தான் அழகே இல்லை என்று கற்பனை செய்து கொண்டு, அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையினால் ஏதாவது தவறான முடிவு எடுத்து விடுவதும் உண்டு. குடும்பத்தில் ஒளியூட்டும் விளக்காக இருக்க வேண்டிய அந்த தீபம் உறவுகளைச் சுட்டெரிக்கும் நெருப்பாக மாறியது எங்கனம்?
தீபம் – (2)
’கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு’ என்று பாடுவது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பெண் கருப்பாக பிறந்துவிட்டால் சில பெற்றோருக்கு அன்றே தலைவலி பிடித்துவிடும். சில குடும்பங்களில் அந்தப் பெண்ணை கரைசேர்ப்பதற்காக அப்போதிருந்தே காசு பணம் சேர்க்க ஆரம்பிப்பார்கள். பெண் எவ்வளவுதான் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தாலும், நல்ல குணவதியாக இருந்தாலும், கருப்பாக இருந்தால் முதல் பார்வையிலேயே முகம் சுளிக்கும் வழக்கம் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது ஒரு சிலரிடம். இதனாலேயே பல பெண்கள் தங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். இது தேவையில்லாத ஒன்று என்பதை பிற்காலத்தில் உணர்ந்தாலும் அந்த பருவ வயதில் இந்த வெளித்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அப்படித்தான் நிறைமதியின் நிலையும்! வீட்டில் திருமணம் பார்த்து பேசி முடித்தார்கள். உடன் படிக்கும் மாணவன் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியபோது கூட, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைக்குத்தான் கழுத்தை நீட்டுவேன், அவர்கள் மனம் நோக விட முடியாது என்று மறுத்தவள்., அடுத்து எடுத்த சில விபரீதமான முடிவுகளால் குடும்பமே ஆட்டம் கண்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு காரணங்களும் இருந்தது.
பிறந்த வீட்டில் குழந்தையாக இருந்தபோது முதல் கருவாச்சி என்று செல்லமாகக் கூப்பிட்டு கொஞ்சியிருந்தாலும், அதையே வாழப்போகும் வீட்டில் கிண்டலாகச் சொல்லிக் கொண்டிருந்தால் எந்த பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியும்? சுயகௌரவம் பார்க்கக்கூடிய எந்த பெண்ணும் இதை ஒப்புக்கொள்ள மறுப்பாள். ஊரைக்கூட்டி நிச்சயதார்த்தம் முடித்து, பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் விநியோகமும் செய்த பின்பு, திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் யாரைப்பற்றியும் துளியும் கவலைப்படாமல், அதிரடியாக ஒரு முடிவு எடுத்து விட்டாள். தன்னை முழுமையாக விரும்பிய, உடன் படித்த மாணவரை ஒருவரிடமும் சொல்லாமல் போய் திருமணம் முடித்துக்கொண்டு வந்து விட்டாள். குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது.
சிறு வயதிலிருந்து தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்காத பெற்றோரின் தவறா, தன் வீட்டிற்கு வரப்போகிற மகாலட்சுமியை அவள்தம் சுயம் பாதிக்கும் அளவிற்கு நிலையில்லாத அந்த வெற்று வெளித்தோற்றத்தைக் குறித்து அடிக்கடி கிண்டல் செய்து பேச, காலம் முழுவதும் இப்படிப்பட்ட பிரச்சனையை எதிர்கொள்வதைவிட தன்னை விரும்பியவனை மணந்து கொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ சுயநலமான முடிவெடுத்தவளின் தவறா…… யார் தவறு இது? அத்தனை உறவுகளையும் பகைத்துக் கொண்டு ஒரு பெண் நிம்மதியாக வாழமுடியுமா? அவளை இந்த முடிவெடுக்கத் தூண்டிய சமுதாயமும்தானே இதற்கு காரணம்.?