தூண்டா விளக்கு
வீட்டுடன் கூடிய
தென்னந்தோப்பில் அமர்ந்து
படித்துக்கொண்டிருக்கிறேன்
சாலையில்
பள்ளி மாணவர்கள்
சைக்கிளில் தேர்வுக்காகப்
பேசிக்கொண்டே செல்கிறார்கள்
சற்றுப்பார்வையைத்
திசை மாற்றினால்
திருப்பினால்
என்னையும் புத்தகத்தையும்
பார்க்கக்கூடும்
இவர் ஏன் படிக்கிறார்
என எண்ணக்கூடும்
வயதான இவரே
படிக்கும் போது
நாம்
படித்துத்தான் ஆக வேண்டும்
என்ற
உந்துதல் எழக்கூடும்
எந்தத்தேர்வுக்காகப்
படிக்கிறார்?
இனி தேர்வெழுதி
என்ன ஆகப்போகிறது?
படிப்பது
தேர்வுகளைக் கடந்தது என்பது
புரியக்கூடும்
அது
மரணம் வரை தொடர்வது
எனத் தெளியக்கூடும்
குறைந்த பட்சம்
படிப்பது என்ற படிமம்
மன வெளியில் தோன்றக்கூடும்
தூண்டா விளக்காகத்
தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள்
தூண்டிய விளக்காக மாறக்கூடும்
படத்திற்கு நன்றி:http://boyscell.com/2011/02/28/your-word-is-a-lamp-to-my-cheesy-feet/