நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’- தொடர்-9

7

பெருவை பார்த்தசாரதி

நூல்கள்

கண்ணில் காண்பெதெல்லாம் கனிவாகத்தோன்றும், ‘சிந்தனை செய் மனமே’ என்று கட்டளை இடும், ‘நாமும் ஒரு நாள் மாற வேண்டும்’ என்று நினைக்கச் சொல்லும், என்னைப் பூஜை அறையிலே வைத்து பிறகு புத்தக அலமாரிக்கு மாற்று, என்று கூட அதிகாரம் செய்யும், என்னுடன் பழகி விட்டால் ‘உன்னை விட்டு நான் பிரிய மாட்டேன்’ என்பது போல உறுதிமொழி எடுக்கச் சொல்லும், ‘நானும் உங்களில் ஒருவர்’ என்று எப்போதும் உங்கள் நினைவுடனே உறவாடும்.

இவையெல்லாம் கவிதையோ, பொன்மொழியோ அல்ல. நீங்கள் விரும்பிப் படிக்கின்ற நூல் ஒன்று உங்களிடம் பேசினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை வரிகள்.

நல்ல குடும்பம், நல்ல மனைவி, நன்மக்களைப் போல…..ஒரு “நல்ல புத்தகம்” ஒன்று நம் கையில் கிடைத்து, சிந்தனை சிதறாமல், அப்புத்தகம் முழுவதும் படித்து முடித்த பிறகு, மேலே சொன்னதெல்லாம் நினைவுக்கு வரும். ஒரு நல்ல புத்தகத்தை நாம் படிக்க ஆரம்பித்தால், நேரம் போவதே தெரியவில்லை என்று சொல்கிற அளவுக்கு அதில் ஈடுபாடு வந்து விடுகிறது. ஒரு நீண்ட பிரயாணத்தின் போது புத்தகம் வாசிப்பதைப் பழக்கமாகக் கொண்டால், நேரம் போவது தெரியாவிட்டாலும், புத்தகத்தில் நாம் படித்த செய்திகள் நம் மனதில் அதிகத் தாக்கத்தை உண்டு பண்ணும்.

நல்ல புத்தகம் என்றால் எது?.

•முன்னேற வேண்டும் என்று துடிக்கும் தன்னம்பிக்கை உள்ளவனுக்கு வழிகாட்டும் விதமாக அமைந்த சுயமுன்னேற்ற நூல்கள்,

• படிப்பவரின் சிந்தனையைத் தூண்டி இதயத்துக்குத் தெவிட்டாத இன்பத்தை அளிக்கும் திறனாய்வுக் கட்டுரைகள்,

• நாமும் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிற, வாழ்க்கையின் உச்ச நிலைக்குச் சென்றவர்களின் வரலாற்று நூல்கள் தவிர, இலக்கியம், சமயம் மற்றும் உலக வரலாறுகள்.

• இதிகாசங்களிலும், புராணங்களிலும் வரும் கதாபாத்திரங்களை விளக்கி அறநெறிகளைக் கூறும் நன்னூல்கள். இவை மனிதனின் தீய எண்ணங்கள் விலகி நல் வாழ்க்கை வாழ உதவுகிறது. மூளை வளர்ச்சி பெறும் போதே நல்லெண்ணங்களும் விதைக்கப் படவேண்டும் என்பதால்தான், பள்ளி முதற்கொண்டு நீதி நூல்களும், நன்னெறி நூல்களும் பாடங்களாக வைக்கப்படுகின்றன.

• அறிவியல் சார்ந்த புதினம், ஆய்வுக் கட்டுரைகள், எல்லோருக்கும் எளிதில் விளங்கும் வகையில் கதைகளுடன் பயிற்சி நூல்கள்.

நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்றால், படிப்பறிவு மிக அவசியம். நமக்கு முன்னர் வாழ்ந்த ஆன்றோர், சான்றோர், போன்றோர்களின் வாழ்க்கையைப் பற்றிப் புத்தகங்கள் மூலமாக அறிந்து கொள்ளும்போது, மற்ற அனுபவங்களோடு, படிப்பறிவால் பெற்ற அனுபவமும் நமக்கு நல் வாழ்க்கை வாழ உதவுகிறது.

சாதனை படைத்தவர்கள், சரித்திரத்திலே இடம் பெற்றவர்கள், பெரியபுள்ளி, முக்கியஸ்தர் என்ற அடைமொழியோடு உலகெங்கும் உலா வருபவர்கள், தங்களது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது, அவர்கள் முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது, தங்கள் படித்த நல்ல புத்தகமும் வாழ்க்கைக்கு உதவியதாகப் படித்திருப்போம். ‘இவர் எழுதிய புத்தகம்தான்’ என்னைத் திசை மாற்றியது, வாழ வகுத்தது, எனக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தது என்றெல்லாம் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம்.

லிலியன் இச்லர் வாட்சன் (watson) எழுதிய லைட் ப்ரம் மெனி லாம்ப்ஸ் (Light from many lamps) என்ற புத்தகம் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் என்று சொல்லி இருக்கிறார் இந்திய விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்.

புத்தகத்தைப் படிக்கின்ற போதே நாடி நரம்புகளில் ஒருவிதத் தாக்கத்தை உண்டு செய்கின்ற நூல்களைப் படைத்த ஜான் ரஸ்கின், லியோ டால்ஸ்டாய், மற்றும் சுதந்திர தாகத்தையும், சுதந்திர வேட்கையையும் ரத்தத்தோடு கலக்கச் செய்கின்ற, வால்டர் ரூசோ போன்றவர்களின் எழுத்துக்கள்தான் எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்று சொல்லியிருக்கிறார் தேசப்பிதா அண்ணல் காந்தி

புத்தகம் படிப்பவர்கள்,

‘இன்ன விஷயத்தை மட்டும் தான் படிப்பேன்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு படிக்காமல், ‘இப்படித்தான் எழுதுவேன்’ என்று ஒரே ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்தும் ஒரு சில எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டும் படிக்காமல், எல்லா நன்மைகளும் நம்மை நாடி வந்து சேருமாறு ‘உபயோகமான கருத்துக்களைச் சொல்லும்’ பல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க பழகிக்கொள்ள வேண்டும் என்பதே ஆன்றோர்களின் அறிவுரை. ஒரு தேர்ந்த எழுத்தாளனது எழுத்துக்கள், ஒரு வாசகனைத் “தொடர்ந்து படி” என்று விடாமல் துரத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு உறுதுணையாக, அவனது படைப்பு உண்மையான வாழ்வியல் அனுபவங்களைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

படிக்க வேண்டிய புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, நல்ல புத்தகங்களை எவ்வாறு தேர்வு செய்வது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்? தேர்வு செய்த நூல்கள் அனைத்தையும், நம் வாழ்க்கையின் குறுகிய காலத்திற்குள் படித்து முடித்துத் தெளிவு பெற முடியுமா? என்ற கேள்வியும் கூட வரும்.

தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது, கிடைக்கும் நேரத்தின் ஒரு சிறு பகுதியை ‘நூலகத்திற்காக’ செலவிட வேண்டிய கட்டாயமும் வந்து சேரும். லட்சக்கணக்கான நூல்களில் எது சிறந்தவை என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? எனும் போது வரலாற்றில் இடம் பெற்றவர்கள் ‘மேற்கோளாகக் காட்டும் நூல்களைத்’ தேர்வு செய்து படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நல்ல நூல்களைப் படிக்கும் போது நமது மனது ஒரு முத்துச் சிப்பியைப் போல் செயல்பட வேண்டுமாம். அதாவது முத்துச் சிப்பியானது எப்போதும் வாய் திறந்தே இருக்கும் நிலையில் ஏதாவது ஒரு மழைத்துளி ஒன்று வாய்க்குள் விழுந்தாலே மூடிக்கொள்ளும் தன்மை கொண்டது. படிக்கின்ற செய்திகள் பலவாக இருந்தாலும் முத்துச்சிப்பியைப் போல, நன்மை தரக்கூடிய செய்திகளை மட்டும் மனதிலே இருத்திக்கொள்ள பழகிக்கொண்டால், வளர்ந்து வரும் சிறார்களுக்கு வழிகாட்ட உதவுமல்லவா!…..

நல்ல அரிய நூல்களை எல்லாம் எழுதித் தமிழுலகுக்குத் தொண்டு செய்த தமிழ் அறிஞர்கள் பலர் இன்று நம்மிடையே இல்லை. அவர்கள் மறைந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியங்களையாவது கட்டிக்காக்க முயல வேண்டும். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ‘அப்துல் கலாம்’ அவர்கள் சொன்னது போல “ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை இருப்பது போல், நூலகத்துக்கென்று ஒரு இடம் வேண்டும்” என்றார். அறிஞர்கள் எழுதிய அரிய நூல்கள் எல்லாம் நம் வீட்டுப் புத்தக அலமாரியை அலங்கரித்தாலே, அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும் என ஒவ்வொருவரும் எண்ண வேண்டும்.

நாம் பழகுகின்ற சில நண்பர்களில் வீட்டில், கண்ணாடி அலமாரியில் பளபளவென்று ஜொலிக்கும் விதத்தில் புத்தகங்களை அட்டை கிழியாமல் அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்திருக்க முடியும். அதில் எத்துணைப் புத்தங்கள் நல்ல புத்தகங்கள் என்பதும், அதில் எந்தப் புத்தகத்தையாவது முழுவதுமாகப் படித்து விட்டுத்தான் அவர் அலமாரியில் அடுக்கியிருப்பாரா? அல்லது அழகுக்காக அடுக்கி வைத்திருக்கிறாரா? என்பதை அவர் மட்டுமே அறிவார். ‘நாய் வாய்ப்பட்ட தேங்காய்” என்று சொல்வார்களே, அதைப்போல, ஒரு சில நண்பர்கள், தானும் படிக்க மாட்டார்கள், படிக்கின்ற வேட்கை உள்ளவர்களுக்கும் கொடுத்து உதவ மாட்டார்கள். நூல்களைப் படித்து முடித்த பிறகு, யாருக்கும் பயன்படாமல் மூடி வைப்பதை விட, படிக்கும் பழக்கமுள்ள நண்பர்களின் பிறந்த நாள் பரிசாக வழங்கலாம் அல்லவா? இதர வழக்கங்களில் இதையும் ஒன்றாக நாம் கடைப்பிடிக்கலாமே? நல்ல யோசனை என்றாலும் கடைப்பிடிப்பது கடினம்.

பல அரிய தமிழ் நூல்களைச் சேகரிக்கச் சென்று, இம்மாதிரி அவலங்களைத் தனது வாழ்வில் அனுபவித்தவர் தமிழ்த்தாத்தா உவேசா அவர்கள். இதே மாதிரி அனுபவத்தையும் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பெற்றிருப்பீர்கள். அறிவைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஈகை குணம் இல்லாத நண்பர்களுக்குப் பல தமிழ் மூதறிஞர்கள் செப்பிய அறநெறிகளெல்லாம் எவ்வகையில் பொருந்தும்? இவர்களால் கற்பித்தலுக்கு என்ன பயன் வந்து சேரும்?. எல்லோருமே யோசிக்க வேண்டிய விஷயம்.

இன்று, ஒரு குறிப்பு எடுக்க வேண்டுமானால் பல புத்தகங்களின் பக்கங்களில் தேட வேண்டிய நிலை இல்லை. நமக்கு வேண்டிய ஒரு தகவலைப் பெற, வலைத்தளத்தைத் தட்டினால் போதும், ஒரு முயற்சியும் எடுக்காமல் அனைத்து விஷயங்களும் அருவி போலக் கொட்டுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், பல தமிழறிஞர்கள் பட்ட துன்பங்களை அனுபவித்து, நல்ல புத்தகங்களிருந்து விஷயங்களைச் சேகரிக்க வேண்டிய நிலை இன்றைய உலகில் இல்லை. தமிழுக்காகப் பாடுபட்ட இவர்களுடைய அறிவுப் புதையல்களைச் சற்றும் நினைவில் கொள்ளாமல், சட்டென்று ‘நேரமில்லை’ என்று வெட்கப்படாமல் சொல்லி விட்டு, யாரோ ஒருவர் இரவு பகலாக உழைத்து உபயோகமுள்ள பல தகவல்களை வலைத்தளத்தில் கொட்டி வைத்திருப்பதை, ஒரு கைம்மாறும் திரும்பச் செய்யாமல், சொடுக்கும் நேரத்தில் அவ்வளவு தகவல்களையும் அள்ளி எடுக்கிறோமே?, டீவீட்டர், பிளாக், வலைப்பூக்கள் போன்றவற்றிலிருந்து ஒரு பைசா செலவில்லாமல், நமக்கு வேண்டிய தகவல்களைப் பெற்று விடுகிறோமே?, நமக்கு வேண்டிய தகவல்களைப் பெற்ற பிறகு, ஒரு அரை நிமிடம் செலவிட்டு, நம் நன்றியைப் பின்னூட்டமாக அந்தப் பதிவாளருக்குத் தெரிவித்திருக்கிறோமா?. இவற்றால் பலனடைந்தவர்களுக்குப் பதில் தர வேண்டிய கடமை இருக்கிறது என்பதைப் பலரும் மறந்து விடுகிறோம்.

சிறந்த ஓவியங்களைக் கண்டு ரசிக்கக் கண்கள் அவசியம், வாசனையின் தன்மையை உணர மூக்கின் நுகர்வுத் தன்மை தேவை, பல வகையான அறிவியல் சாதனங்களை உபயோகப்படுத்துவதற்கு அதைப் பற்றிய விளக்கவுரை வேண்டும், இவற்றைப் போலவே அறிவுப் பசியைப் போக்க நல்ல நூல்களின் வழித்துணை கட்டாயம் வேண்டுமல்லவா?…

நூல் எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள், நிறையப் படிக்க வேண்டும். படித்தால் மட்டும் போதுமா? படித்த விஷயங்களை எளிதில் அறியும் வகையில் அவைகளுக்கு எழுத்துருவம் கொடுக்க வேண்டும். இத்தகைய கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவாகும் புத்தகங்கள்தான், சாதனை படைப்பவர்களுக்கு உறுதுணையாக அமைந்து விடுகிறது. ஒரு வரலாறு இன்னொரு வரலாற்றை உருவாக்கும் என்பதற்கு இணங்க, மஹாகவி பாரதியார், வீர் சவர்க்கார் (வினாயக் தாமோதர் சவர்க்கார்) போன்ற விடுதலைப் போராட்டத் தியாகிகளைப் பெரிதும் கவர்ந்தது மாஜினியின் (Mazzini) வரலாறு. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியின் சுதந்திரத்துக்காகப் போராடிய இவர் ஒரு போராளி மட்டுமல்ல, கவிஞர், சொற்பொழிவாற்றுபவர். படிப்பாளி என்ற பட்டமெல்லாம் இவருக்கு உண்டு. சிறு வயதிலேயே புத்தகம் படிப்பதில் நாட்டம் உள்ளவர். ஒரு முறை அரசாங்கம் இவரைக் கைது செய்து சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றபோது, “எனக்கு பிடித்தமான புத்தகங்கள் சிலவற்றை என்னிடம் கொடுத்து விட்டுப் பிறகு என்னைச் சிறையிலடையுங்கள்”, என்று சிறைச்சாலை அதிகாரிகளிடம் கூறினார் என்று படித்திருக்கிறேன். மஹாகவி பாரதி, வீர் சவர்க்கார், மாஜினி மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், மூவரும் தனது நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடு பட்டவர்கள் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர்களாக விளங்கி, தமக்குப் பின்னால் வரும் இளைய சமுதாயத்திற்கு நல்வழி காட்டியவர்கள்.

நூல்களைப் படிக்கும் பழக்கம் அன்றாடம் தொடர வேண்டுமெனில், ஒரு பயனும் இல்லாத பொழுது போக்குகளில் அதிக நேரத்தைச் செலவிடாமல், பள்ளிப் பாடங்களைத் தவிர, நல்ல புத்தகங்களைப் படிப்பதற்காக கொஞ்ச நேரம் செலவிட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பழக்க வேண்டும்.

வரும் இதழ்களில், ஆங்கிலப் பேரறிஞர் பிரான்ஸிஸ் பேக்கன், தாமஸ் ஜெஃபர்ஸன் இவர்களைப் போல் இன்னும் பல அறிஞர் பெருமக்கள், படிப்பாளர், சிந்தனையாளர், எழுத்தாளர் என்ற பட்டங்களை வாங்கியவர்கள், நூல்களைப் படிக்கின்ற போது நமது சிந்தனைத் திறன் எவ்வாறு செயல் படுகிறது என்பதையும், நன்னூல்கள் நமக்கு எவ்வாறு வழிகாட்டுகின்றன என்பதையும் இனி வரும் இதழ்களில் காண்போம்.

(தொடரும்)

லியோ டால்ஸ்டாய் படத்திற்கு நன்றி:http://www.linguadex.com/tolstoy/chapter3.htm

ஜான் ரஸ்கின் படத்திற்கு நன்றி:http://en.wikisource.org/wiki/Author:John_Ruskin

மாஜினி படத்திற்கு நன்றி:http://en.wikipedia.org/wiki/Giuseppe_Mazzini

லைட் ஃப்ரம் மெனி லாம்ப்ஸ் புத்தகப்படத்திற்கு நன்றி:http://openlibrary.org/books/OL7661107M/Light_from_Many_Lamps

அப்துல் கலாம் படத்திற்கு நன்றி:http://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam

மகாத்மா காந்தி படத்திற்கு நன்றி:http://en.wikipedia.org/wiki/Mohandas_Karamchand_Gandhi

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’- தொடர்-9

  1. அன்பு உள்ளம் கொண்ட பெருவை சாரதியே!
    அடியேனிடம் புத்தகங்கள் நிறைய உள்ளது.
    படிக்கிறேன்,பிறர்க்கு உபதேசமும் செய்கிறேன்.
    படிக்க கேட்பவர் யாராயினும் கொடுக்கிறேன்.
    பெரும்பாலும், திரும்ப வருவதில்லை. என் செய்வது என்பதை தெரிவித்தால் மிக்க நன்றி.

    அடியேன்,
    நா.விஜயராகவன் 

  2. தமிழ் வானில் அண்ணாகண்ணன் கார்மேகமென திரண்டுவந்து அமைதிசாரலின் தென்றலால்

    பவள வாய் ( பவள சங்கரி)திறந்து திருநாவுக்குஅரசர்

    மின்னலாய் வல்லமையில் மின்னக் கண்டேன்.

    வல்ல மை கொண்டு எழுதுவதால் ” வல்லமை”

    வல்லமையுடன் மின்ன கண்டேன்.

  3. அன்புடைய திரு விஜயராகவன் அவர்களுக்கு :  உண்மை.  புத்தகம் வாங்கிச் செல்பவர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றவுடன் (படிக்கிறார்களோ இல்லையோ) அதனை தங்கள் வீட்டு நூலகத்திற்கு உடமையாக ஆக்கிக் கொள்வார்கள்.   இவ்விஷயத்தில் எனக்கும் அனுபவம் உண்டு.  நாம் யாரிடம் கொடுத்தோம் என்ற் நினைவும் மறந்து போய்விடும் பொழுது என்ன செய்வது.  ஒன்று செய்தால் என்ன? சில உணவகங்களில் பாத்திரங்களில் “இது ……….உணவகத்திலிருந்து திருடப்பட்டது” என்று பதித்து விடுவார்கள்.  அவ்வளவு மோசமாக் இல்லாவிட்டாலும், “இப்புத்தகம்………………..ரிடமிருந்து இரவலாகப் பெறப்பட்டது, திரும்பக் கொடுக்கவேண்டும்…………….. தேதிக்குள்”   இந்த தேதியை நாமே எழுதிக் கொடுத்துவிடலாம்.    ஆனால் இது கிழிக்கக்கூடாத ஒரு நல்ல பக்கத்தில் எழுதப் பட வேண்டும்.   எப்படி யோஜனை?

  4. அன்பர் திரு ராமசாமி அவர்கள் சொன்னதுபோல் நான் புத்தகத்திலேயே எழுதிக் கொடுக்காமல், தனியே குறித்து வைப்பேன். ஒரு சிலர் எவ்வளவு காலமானாலும் படிக்காமலேயே திரும்பக் கொடுத்து விடுவர். இன்னும் சிலர் நீங்கள் கொடுத்த புத்தகம் தொலைந்து விட்டது என்று சொல்லி, அதற்குப் பதில் வேறொரு புத்தகம் வாங்கித்தருவதாக சமாதானம் செய்வதும் உண்டு, இன்னும் சிலர் “எங்கோ வைத்துவிட்டேன், தேடிக் கொடுக்கிறேன்” என்பார். இப்படிப்பட்ட வேடிக்கை நண்பர்களும் நம்மிடையே உண்டு.

  5. book reading is a very good topic.
    Below is one of my favorite sayings I found while reading a book.

    “A good book on your shelf is a friend that turns its back on you and remains a friend. ~Anonymous”

    I think reading book not only provides experiences that can get without moving around it will also keep the brain active.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *