அதிகாலைப்பல்லவன்-கவிதைப்புதினம்(7)
செங்கல்பட்டுநிறுத்தம்-7
அது
வானொலி நிலையத்தின்
வரவேற்பு அறைக்கு
வந்துவிட்டது!
யாருடன் பேசவேண்டும்?
என்று கேட்க
என்பெயரை
உச்சரிக்க
நீங்கள் யார்?
மீண்டும் கேட்க
மனைவி என்றுசொல்லி
அவர்களை
அவசரப்படுத்தியது
நினைவுக்கு வருகிறது
அவசர அவசரமாய்
என்னை அழைத்தார்கள்
உங்கள் மனைவி
தொலைபேசியில் என்றார்கள்
எனக்கோ ஆச்சர்யம்
என் மனைவியா!
தொலைபேசியா?
ஐயம் எழுந்தது
என்ன அவசரமோ
என்ற பதட்டமும்
இணைந்துகொண்டது
என்மனைவி
என்னுடன் தொலைபேசியில்
பேசிப்பழக்கமில்லை
பேசுவதும் வழக்கமில்லை
இன்றுபோல்
அன்று கைப்பேசி இல்லை
அதுதான் எனக்கு
கவலையைத் தந்தது
செய்த பணியை
அப்படியே விட்டுவிட்டு
ஓடோடி வந்தேன்
தொலைபேசியை எடுத்தால்
‘ரதி’ என்கிற
ஆச்சர்யம் இருந்தது
என்ன விளையாட்டு?
என்று கேட்டேன்
காதல் விளையாட்டு
என்று பதில் சொல்லவில்லை
இதைவிட
வேறுவழியில்லை என்பது
பதிலாய் வந்தது
நலமா?
நலம்தான்
விசாரணை
விசாரிப்பு
உரையாடலாய்
உருவெடுத்தது
சரிசரி
கடிதத்தொடர்பு
போதுமென்றேன்
கடிதத்திலேயே
காலம்
கடத்தமுடியாது
முடிவுக்கு வருவது
முறையாகுமென்றேன்
பரவாயில்லை
எழுதிக்கொண்டிருப்பேன்
எழுதி எழுதித்தான்
என்னைத்தேற்றுகிறேன்
எத்தனை நாளைக்கு
இப்படித்தொடர்வது?
படிப்பில் கவனம்
செலுத்தவேண்டாமா?
படிப்பை முடித்து
அடுத்தக்கட்டத்திற்கு
ஆளாகவேண்டாமா?
ஆளாகி நானோ
நாளாச்சு
பெற்றோர் சொல்லெல்லாம்
வேலாச்சு
கொடுக்கும்தொல்லை
பெருக்கெடுத்த வெள்ளமாச்சு
தினம் தினம்
திருமணம்
திருமணம்
நச்சரிக்கிறார்கள்
அடிக்கடி
எச்சரிக்கிறார்கள்
நானோ
கைப்பந்து விளையாட்டு
வீராங்கனை
விளையாட்டரங்கில்
கைநீட்டி விளையாடும் நான்
இன்னும் சாதிக்க
நிறைய இருக்கையில்
இப்பவே கழுத்தை நீட்ட
இம்மியும் மனமில்லை
வீடு
கல்லூரி
விளையாட்டு
அதற்குமேலே
எதுவும் கூடாது
இதுதான்
என்வீட்டுக்கட்டளை.
பெற்றோர் கவலை
என்பது அதுதான்
பெற்றோரின் கவலை
அப்படித்தான் இருக்கும்
பெண்ணுக்கு எப்போதும்
வேலி வேண்டுமே
வேலி இல்லாப்பயிர்
வீணாய்ப்போகுமே
வளர்ப்பதும் காப்பதும்
கடமை அல்லவா?
ஆகவே
அவர்களின் கண்டிப்பு
கரிசனமானது
அர்த்தமுடையது
அழுத்தம் நிறைந்தது
அடர்த்தியானது
அலாதியானது
“காவல்தானே பாவையர்க்கு
அழகு”
ஒளவை சொன்னதும்
நியாயமானது
அதன்படி நடப்பது
அனைவர்க்கும் நல்லது
என்பது
என்னுடைய அறிவுரையானது
எதையும் கேட்காமல்
கடிதம் தொடர்ந்தது
எனக்கும் அது
வழக்கமானது
“மனம் சமநிலையிலும்
ஆடும்”
காண்டேகர் சொன்னது
உண்மையானது
அலுவலகத்திற்கு மட்டுமே
வந்த கடிதம்
அதிர்ச்சியாய் ஒருநாள்
வீட்டுக்கும் வந்தது
(பயணம் தொடரும்-8)
படத்திற்கு நன்றி
http://petergrovesblog.wordpress.com/2011/12/04/a-note-from-india-ilango-and-satanyas-invitation-27th-november/