ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 4)

வெங்கட் நாகராஜ்

சென்ற பகுதியில் சொன்னது போல, ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை பார்த்த பிறகு நாங்கள் சென்றது “[B]பேடா [G]காட்” என்று அழைக்கப்படும் சலவைக்கல் பாறைகள் இருக்கும் இடத்திற்கு. தங்கியிருந்த ”கல்சூரி ரெசிடென்சி” –யிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது இந்த இடம். நர்மதை நதிக்கரையில் நிறையப் படகுகள் இருக்கின்றன. அனைத்துமே துடுப்புப் படகுகள் தான். இருபது பேர் மற்றும் நான்கைந்து பேர் அமரும் படகுகளும் இருக்கின்றன.

நாங்கள் மொத்தமாக 37 பேர் என்பதால் இரண்டு படகுகளை ஏற்பாடு செய்திருந்தார் ரோஹித். இரு குழுக்களாகப் பிரிந்து இரண்டு படகுகளிலும் அமர, படகுகள் கிளம்பின. ஒரு பக்கத்தில் ஒரு நபர் அமர்ந்து படகினைத் திருப்பும் வேலையினைப் பார்க்க மறு பக்கத்தில் இரண்டு நபர்கள் அமர்ந்து துடுப்புப் போடுகிறார்கள். நர்மதை நதியின் அமைதியான நீரோட்டத்தினை எதிர்த்துப் படகு செல்கிறது. இரண்டு பக்கங்களிலும் சலவைக்கல் பாறைகள் அணையாக இருக்க, நர்மதை நதி குறுகி ஓடிக்கொண்டிருக்கிறது.

சில இடங்களில் மிகவும் குறுகலாக இருக்கிறது. ஓரிடத்தில் ஒரு பக்கப் பாறையிலிருந்து இன்னோர் பக்கப் பாறைக்கு குரங்கு தாவும் அளவுக்கே இருப்பதால் அந்த இடத்திற்குப் பெயரே ”பந்தர் கூத்னி”. ”அமைதியான நதியினிலே ஓடம்” என்று பாடத் தோன்றியது. ஓடத்தினைச் செலுத்தும் நபர் தொடர்ந்து ஹிந்தியில், நகைச்சுவையோடு அழகிய வர்ணனை செய்ததை ரசிக்க முடிந்தது.

நதியின் நடுவே இருக்கும் இரு பாறைகளில் சுயம்பு லிங்கங்களைக் காண முடிந்தது [ஒன்று கருப்பு வண்ணத்திலும் மற்றொன்று வெள்ளை நிறத்திலும்]. சில இடங்களில் பாறைகள் தண்ணீரால் அரிக்கப்பட்டு இயற்கையாக முனிவர், நந்தி, போன்ற வடிவங்களில் உருவான சில சிற்பங்களையும் காண முடிந்தது. ஒரு பாறையில் அழகிய வட்ட வடிவம் இருந்ததை இயற்கை மோதிரம் என அழைக்கிறார்கள்.

நதி மட்டத்திலிருந்து ஐம்பது-அறுபது அடி இருக்கும் ஒரு பாறை மேல் இரு சிறுவர்கள். படகுகள் அந்தப் பாறைகளுக்கு சற்று அருகில் செல்லும் போது வரும் பயணிகளைப் பார்த்து “பத்து ரூபாய் தாங்க, இங்கே இருந்து நதியில் குதிக்கிறேன்” என்று உச்சஸ்தாயியில் கூற, அதற்கு படகிலிருக்கும் சிலர் சம்மதிக்க, உடனே அங்கிருந்து குதிக்கின்றனர் இருவரும். பின் நர்மதையில் நீந்தி, படகின் அருகே வந்து பணம் வாங்கிக் கொள்கின்றனர்.

அதற்குள் படகுக்காரர் ‘படகைப் பிடிக்காதே’ என்று அவர்களை மிரட்டுகிறார். பணம் முழுவதும் நனைந்து போனாலும், அதை வாயில் கவ்வியவாறே மீண்டும் நீச்சலடித்து பாறைகளுக்கு அருகில் சென்று மேலே ஏறுகிறார்கள். முழுதும் நனைந்த ரூபாய்த் தாள்களைப் போலவே எங்கள் மனமும் நனைந்தது. படிக்க வேண்டிய வயதில் இப்படி உயிரைப் பணயம் வைத்து ஒரு ஆபத்தான வித்தையை செய்து காண்பித்து அவர்களைச் சம்பாதிக்க அனுப்பியது யார் குற்றம்? இந்தக் கேள்விக்குத் தான் இன்னும் விடை கிடைத்த பாடில்லை.

ஆங்காங்கே பாறைகளில் சில பழைய துணிகள் மரங்களில் மாட்டிக்கொண்டு காற்றில் படபடக்கின்றன. படகோட்டிகள் சுவாரசியத்திற்காக, ஒரு சிவப்புத் துணியைக் காட்டி இது தான் கரிஷ்மா கபூரின் துப்பட்டா, இங்கே தான் ஹிந்திப் படமான ”அசோகா” எடுக்கப்பட்டது, இந்த இடத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது என ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டே வருகிறார்.

பாறைகளுக்கு நடுவே இரண்டு வழிகள் தெரிகிறது. இடப்பக்கம் செல்வதா, வலப்பக்கம் செல்வதா என்ற குழப்பம் விளைவிக்கும் இடம். அதனால் இந்த இடத்தினை ‘[B]புல்[B]புலையா” பாறைகள் என்று அழைக்கிறார்கள். ஒரு பக்கம் சென்றால் திரும்பலாம், இன்னுமொரு பக்கம் சென்றால் “எள்ளும் தண்ணீரும் இறைக்கச் சொல்லி விடலாம்!”. நாங்கள் திரும்பினோம்.

45 நிமிடங்கள் போனதே தெரியாமல் இயற்கை அன்னையின் எழில் கோலத்தினைக் கண்டு ரசித்து விட்டுப் படகுத் துறைக்குத் திரும்பினோம். எல்லாப் படகுகளையும் அந்தக் கிராமத்து நபர்களே இயக்குகிறார்கள். இருந்தாலும் லைஃப் ஜாக்கெட் போன்ற எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை என்பதை மாற்றம் செய்ய வேண்டிய ஒன்று எனத் தோன்றியது.

படகு துறையிலிருந்து வெளி வந்தால் வரும் வழி முழுதும் நிறையக் கடைகள். மார்பிள் கற்களில் பெயர் எழுதித் தருபவர்கள், ஊதுவத்தி ஸ்டாண்ட், சப்பாத்திக் கல், மாலைகள், தலையில் அணியும் க்ளிப் என பலவும் கிடைக்கிறது. எல்லாவற்றையும் பார்த்து, சிலவற்றை வாங்கிக் கொண்டு எங்கள் அடுத்த இலக்கினை நோக்கிப் பயணித்தோம்.

அடுத்தது எங்கே என வினவும் நண்பர்களுக்கு… சற்றே காத்திருந்தால் உங்களை ஒரு பழமையான இடத்திற்கு அழைத்துச் செல்வேன்!

மீண்டும் சந்திப்போம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க