காதல் தெய்வம்
விசாலம்
சரோஜாவிற்குப் பெண் பார்க்கும் படலம் முடிந்தது. வீட்டின் மூத்த தலைவி, அதாவது நம்ம பாட்டி சொல்கிறாள் “பையன் ரொம்ப அழகு, மன்மதன் மாதிரி இருக்கான்.”
“நம்ம சரோஜாவுக்கு என்ன குறைச்சல் அவளும் ரதிமாதிரி தான் இருக்கா” என்கிறாள் தாய்.
அது சரி. யார் இந்த மன்மதன், ரதி?

பிரும்மா தன் மனத்தால் சிருஷ்டித்த புத்திரன் இந்த மன்மதன் என்று சிவபுராணத்தில் வருகிறது. பிரசுதியின் சகோதரர் என்றும் பிரும்மாவால் சிருஷ்டிக்கப்பட்ட ஷட்ரூபர் என்பவரின் மகன்கள் என்றும் சொல்லப்படுகிறது.
“ஸ்ரீ”யின் மகன் என்றும் சொல்கிறார்கள். கிருஷ்ணன் – ருக்மிணியின் மகன் பிரத்யும்னன், மன்மதனின் மறுபிறப்பு என்றும் சொல்கிறார்கள்.
ரதி என்பவள், தட்சனின் மகள் என்றும் தட்சனின் வியர்வைத் துளிகளால் உண்டாக்கப்பட்டவள் என்றும் தெரிய வந்தது.
ரதி மிகவும் அழகு. ஐச்வர்யத்துடன் சர்வ லட்சணமும் பொருந்தியவளாம் அவள், வீணையை அடிக்கடி மீட்டுவாளாம். அலங்கார பூஷிதையாக எல்லோரையும் வசீகரிக்கும் சக்தியுடன் மன்மதனிடமே தன் மனமுழுவதும் ஒப்படைத்த சிறந்த மனைவி. சிவபெருமானின் மூன்றாவது கண்ணால் தன் கணவர் எரிக்கப்பட்டபோது படாத பாடுபட்டு, மனவேதனையினால் துடிதுடித்து, ஒரே வைராக்கியத்துடன் சிவனை விடாது வேண்டி,
மன்மதனை மீண்டும் பிழைக்க வைத்தாள்.
மன்மதன் காதல் தெய்வம். மன்மதனுக்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் சில…….. காமதேவன், வசந்தன், காந்தர்ப்பன், மனசிஜா, ராகவிருந்தா, புஷ்பவனம், புஷ்பதன்வா, ரதிகாந்தா, அனங்கன்.
சர்வ லட்சணமும் தன்னகத்தே கொண்ட மன்மதன், மிகவும் அழகான புருஷனாக வர்ணிக்கப்படுகிறான். அவன் வருகை தந்த காலமோ, வசந்த காலம். எங்கும் பசுமை. எங்கும் பூக்கள். அதன் சுகந்தம் தென்றலில் வர, பல பறவைகள் இசை பாட, எங்கும் ஆனந்தம் உல்லாசம். மன்ம்தனும் கிளி வாகனத்தில் வருகிறான். அவன் கையில் ஒரு வில்லும் அம்பும் இருக்கின்றன. ஆனால் மிகவும் வித்தியாசமான வில், அது. கரும்பை வளைத்துச் செய்யப்பட்ட வில். பின் அதைக் கட்டும் கயிறோ, சுவையான தேனைக் கொடுக்கும் தேனீக்களால் ஆனது. அம்புகளோ ஐந்து மலர்கள். {பஞ்ச பாணம்] தாமரை, அசோக மலர், மாம்பூ, மல்லிகை, குவளை. இவனுக்கு மிகவும் பிடித்த பறவை, குயிலாம். தென்றல் வீச அவன் மிகவும் மகிழ்வான். இந்த மன்மதனை மதுரா தொல்காட்சி நிலையத்தில் காணலாம்.
மன்மதனின் சரித்திரமே ஒரு தியாகம்தான். உலக நன்மைக்காக, தேவர்களின் நன்மைக்காகத் தன் உயிரையே கொடுத்தான். தட்சனின் மகள் தாட்சாயினி, தனக்கு ஏற்பட்ட அவமானத்தினால் தீக்குளிக்க, சிவன் கோபத்தினால் ருத்ர தாண்டபம் ஆடி, தாட்சாயினியின் உடலைச் சுழற்ற, பல பாகங்கள் சிதறி, ஒவ்வோர் இடத்தில் விழுந்தன. மன வேதனையில் சிவபெருமான் தியானத்தில் அமர, சர்வ லோகங்களும் ஸ்தம்பித்து நின்றன.
இதன் நடுவே தாரகாசுரனின் இம்சை தாங்க முடியாமல், இந்திரனும் தேவர்களும் சென்று வேண்டினர். சிவனுக்கும் பார்வதிக்கும் பிறக்கும் மகனே தாரகாசுரனை வதம் செய்ய முடியும் என்று தெரிந்துகொண்டனர். இதனால் பிரும்மாவினால் சிருஷ்டிக்கப்பட்ட மன்மதன், சிவனது தவத்தைக் கலைக்க முயன்றான். இதனது பின் விளைவு என்ன என்று அவனுக்குத் தெரிந்திருந்தும் பொதுநலச் சேவை ஒன்றே தன் குறிக்கோளாக எண்ணி,
தன் பஞ்ச பாணத்தினால் அம்பு எய்ய, சிவன் தவம் கலைந்,து கண்கள் விழித்துப் பார்க்கையில் பார்வதி தெரிய, இரு மனம் பார்வையால் அங்கு ஒன்று கூடுகின்றன. ஆனாலும் பரமேஸ்வரன் இதற்கெல்லாம் காரணம் மன்மதனே என்று தன் நெற்றிக் கண்கள் திறக்க, அவனை எரித்துவிடுகிறார்.
தான் தன் அன்பு மனைவியை விட்டுப் பிரிய நேரிடலாம். மேலும் தன் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் எனத் தெரிந்தும் மன்மதன், லோக க்ஷேமத்திற்காக தன் உயிரையும் கொடுத்து, பெரிய தியாகம் செய்திருக்கிறான்.
பிரும்மா சொன்னவுடனே சற்றும் யோசிக்காமல் காரியத்தில் இறங்குகிறான். இந்த அரிய செயலைச் செய்து, அவன் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்டான் என நான் நினைக்கிறேன்.
காதல் தெய்வம் இல்லையெனில் வாழ்க்கையில் பிடிப்பு இராது. காதல் தெய்வம் அன்பைப் பரப்பி வாழும் தெய்வம். இந்த அன்பு, தாய் மகனிடம் வைக்கும் அன்பு, தம்பதிகளிடம் இருக்கும் அன்பு. பெற்றோர்கள் குழந்தைகள் மேல் வைக்கும் அன்பு, பக்தன் தன் இஷ்ட தெய்வத்தின் மேல் வைக்கும் அன்பு, குரு சிஷ்யன் அன்பு என்று பலவகைகளாகும். காதல் தெய்வம் என்றால் “லவ் மேட்டர்” என்று மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
இதனால்தான் ரதிக்கும் மன்மதனுக்கும் திருமணம் செய்துவைத்தால், நல்ல ஐஸ்வர்யம், மழலைச் செல்வம், திருமணம், மனச்சாந்தி எல்லாம் பெறலாம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
=====================================
படத்திற்கு நன்றி – http://nellaicharal.blogspot.com
