ஆத்மார்த்தமான தேடல்களும் அனுபவப் புரிதல்களும்

சக்தி சக்திதாசன்

sakthidasanதேடல்! சில, பல வருடங்களுக்கு முன்னால் மட்டும் எனக்கு இந்த வார்த்தையின் உள்ளார்த்தம் சரியாகப் புரியவில்லை. புரியாத காரணத்தினால் மனிதனின் தேவைகளும், அதற்கான் தேடல்களின் அவசியங்களும் புரியவில்லை..

மனித வாழ்க்கையில் அவரவர் தேவைகளுகேற்ப தேடல்களின் வகைகள் வித்தியாசப்படுகின்றன. ஒவ்வொருவரும் வாழ்க்கை எனும் ஏணியில் தாம் நிற்கும் படிக்கு ஏற்ப, தமது தேடல்களை வகுத்துக்கொள்கிறார்கள்.

உதாரணமாக பதின்ம வயதுகளில் இருக்கும் இளைஞனின் தேடல், காதல் உணர்வுகளும் கல்வியறிவும். அது போல வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் உள்ள மனிதர்களின் தேவைகள் அவர்களின் அப்போதைய நிலைக்கேற்ப வேறுபடுகிறது.

இங்கேதான் “ஆத்மார்த்தமான தேடல்” என்பதன் அர்த்தத்தை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். வாழ்வின் நிலையாமையை உணர்ந்து வாழ்வில் நிலையானவற்றை அறிந்து, அவற்றைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியே நான் குறிப்பிட்ட “ஆத்மார்த்தமான் தேடல்” ஆகும்.

பொதுவாக இவ்வகையான தேடல்கள், வாழ்வின் மையப் பகுதிகளிலேயே ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமாகப் படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் குறிப்பாக, “நடு வாழ்க்கைத் தவிப்பு”. ஆங்கிலத்தில் “Midlife Crisis” என்பார்கள்.

இதன் கருத்து என்னவென்றால் இதுவரை தாம் வாழ்ந்து வந்த முறையில் ஒரு தொய்வு ஏற்பட, வாழ்வில் சோர்வு ஏற்பட்டு மீண்டும் வாழ்வை சுவாரஸ்யம் மிக்கதாக்க, ஏதாவது ஒரு புதிய வழியைத் தேர்ந்தெடுப்பது. இத்தகைய உணர்வுகளுக்கு அநேகமாக எவரும் ஒரு காலக்கட்டத்தில் உள்ளாவது தவிர்க்கப்பட முடியாதது. ஆனால் தமது வாழ்வைச் சுவாரஸ்யமிக்கதாக ஆக்குகிறோம் என்று எண்ணி தவறான ஒரு பாதையில் அடியெடுத்து வைப்பது தவிர்க்கப்படக் கூடியதே.

அத்தகைய ஒரு நிலையில் எமது தேடல்களை ஆத்மார்த்த தேடலுக்குள் வரையறுத்துக் கொள்வோமாகில் மற்றையோருக்கு இடையூறின்றி, எமக்கும் உபயோகமானதொரு பாதையை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

எம்மைச் சுற்றி எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்கின்றன. சிலவற்றிற்கு நாம் பொறுப்பாக இருக்கிறோம், வேறு சில ஏன் நிகழ்கின்றன என்ற காரணம் புரியாமல் தவிக்கிறோம். எமது கட்டுப்பாடின்றி எம்மைப் பாதிக்கும் நிகழ்வுகள் எம்மைச் சுற்றி நிகழும் போது எமது மனத்தில் விரக்தி குடி கொள்கிறது. இந்த விரக்திக்குக் காரணம், “நான்” என்னும் எண்ணம் எமக்குக் கொடுக்கும் ஒரு வகை கர்வமே.

ஏன் என்கிறீர்களா?

தன்னம்பிக்கை, கர்வம் இரண்டிற்கும் உள்ள இடைவெளி மிகவும் நுண்ணியதே. தன்னம்பிக்கை என்னும் கோட்டிலிருந்து கர்வம் என்னும் கோட்டிற்குள் மிகவும் இலகுவாக எம்மையறியாமல் பிரவேசித்து விடலாம். இதுவே அநேகம் பேரின் மனத்தில் தமது கட்டுப்பாட்டிற்குள் இல்லாத நிகழ்வுகள் தமக்கு நிகழும் போது விரக்தியைத் தோற்றுவிக்கிறது.

இங்கேதான் ஆத்மார்த்தமான தேடல்கள் எமக்குக் கை கொடுக்கின்றன. ஒரு மனிதனின் செயல்கள், அவன் எண்ணத்தின் வழி விளைபவை. அந்த எண்ணங்கள் அவன் மனத்தின் அடித்தளத்தில் ஊற்றெடுக்கின்றன. அந்த ஊற்றின் அடித்தளத்திற்குச் சென்று எண்ணங்களின் ஆரம்பத்தை அலசினால் அவனது செய்கைகளுக்கு ஆத்மார்த்தமான விளக்கம் கிடைக்கிறது.

இங்கேதான் வெங்காயம் ஒரு நல்ல உதாரணமாகிறது. வெங்காயத்தை கையில் பிடித்திருக்கும் போது ஒரு பெரிய பொருளாகக் கையில் மிளிர்கிறது. அதை உரித்திக்கொண்டே போனால் இறுதியில் அனைத்தும் போய், எமது கைகளே மிஞ்சுகின்றன.

அது நமக்கு என்ன கூறுகிறது? எமது வாழ்க்கையில் எமக்குப் பூதாகாரமாகத் தென்படும் நிகழ்வுகளுக்கு ஏதோ ஒரு வகையில் நாம் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதுவே..

இந்தத் தேடல்களின் மூலம் எமக்கு நடக்கும் நிகழ்வுகளின் அனுபவங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் புரிதல்கள் வாழ்வில் எமக்கு மற்றையோர் மீது ஏற்படும் கோபத்தைக் குறைத்து, எதையும் யதார்த்தமாக, தத்துவரீதியில் அணுக உதவுகிறது.

இந்தத் தேடலின் போது, நாம் பயணப்படும் பாதையில் எமக்குப் பல சுகானுபவங்கள் காத்திருக்கும். அவை அனைத்தும் எமக்குச் சாதகமான முடிவுகளைக் கொண்டிருக்கும் என்பது என் கருத்தல்ல. அந்த அனுபவங்களைப் புரிந்துகொள்ளும் போது ஏற்படும் ஆத்மார்த்தமன உணர்வு, எமது உள்ளத்தை நீவி, ஒரு சாந்தத்தை மனத்தில் ஏற்படுத்துகிறது.

எனது இந்தப் பதிவு, எவ்வகையிலும் தன்னம்பிக்கையைத் தகர்ப்பதாகக் கொள்ளக் கூடாது. மனித வாழ்க்கை இயங்குவது தன்னம்பிக்கையிலேயே. தன்னம்பிக்கையே மனித வாழ்வின் ஆதாரம். ஆனால் தன்னம்பிக்கை, கர்வமாக உருமாறுவது வெகு சுலபம். தன்னம்பிக்கையின் எல்லைக் கோட்டைப் புரிந்துகொண்டு அதனை அக்கோட்டிற்குள் வைத்திருந்தால் அதுவே வாழ்வின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.

ஆத்மார்த்த தேடல்களின் மூலம் அடையும் அனுபவங்களின் புரிதல்கள், மனத்தின் எண்ண ஓட்டத்தைச் சீரான பாதையில் வைத்திருக்க உதவுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *