மின்னஞ்சல் கண்டுபிடித்தவர் வாழ்க
முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
கணினிகள் உபயோகத்திற்கு வந்து அறுபது வருடங்களுக்கும் மேலாகின்றன. முதலில் 1936இல் கணினி என்னும் கருவியைக் கண்டுபிடிக்கும் சாத்தியம் தோன்றியபோது அவை கால்குலேட்டரின் மேம்பட்ட வடிவாகத்தான் இருந்தது. பின் 1942 வரை அவற்றைத் தங்கள் வணிகத்திற்குப் பயன்படுத்தலாம் என்பதை வணிகர்கள் உணரவில்லை. 1953இல்தான் முதல்முதலாக இன்டெர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் (IBM) என்னும் கம்பெனி, அதைத் கம்பெனி வேலைகளுக்காக உபயோகப்படுத்த ஆரம்பித்தது. 1955இல் பேங்க் ஆஃ அமெரிக்கா என்னும் அமெரிக்க வங்கி, ஸ்டான்ஃபோர்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியுட் என்னும் நிறுவனத்தோடு சேர்ந்து ஆராய்ந்து, கணினிகளை வங்கிகளில் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தது. 1959இல் இந்த வங்கி, கணினிகளைத் தன் கிளைகளில் உபயோகிக்க ஆரம்பித்தது.
இந்தக் கணினிகளின் உருவத்திற்கும் இப்போதைய தனிநபர் கணினிகளின் (PC என்று அழைக்கப்படும் personal computer) உருவத்திற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. அவை ஆறடி உயரத்திற்குப் பெரிய அறைகளில் வைக்கப்பட்டிருக்கும். அவற்றிற்கு உஷ்ணம் எல்லாம் ஒத்துக்கொள்ளாது. அவை இருக்கும் அறைகள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அதனால் அந்த அறைகள் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைகளாக இருக்கும். இந்தக் கணினிகளோடு பேசுவதற்கு ஒரு வகையான கார்டுகளைத்தான் உபயோகிக்க வேண்டும். அந்தக் கார்டுகளில் உள்ள துவாரங்களை வைத்து அவை என்ன எழுத்துகளைக் குறிக்கின்றன என்று கணினி கண்டுபிடிக்கும். அவற்றை இயக்குவதற்கு அதற்கென்று பயிற்சி பெற்றவர்கள் இருப்பார்கள். பெரிய அலுவலகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் கணினி அறை என்று ஒன்று தனியாக இருக்கும். அங்கு ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் கணினிகளைக் கவனித்துக்கொள்ள ஆட்கள் இருப்பார்கள்.
ஒரு கணினியிலுள்ள விபரங்களை இன்னொரு கணினிக்கு மாற்றலாம், அவற்றை ஒன்றோடொன்று இணைத்து அவை தங்களிடையே விஷயங்களை பரிபாறிக்கொள்ளும்படி செய்யலாம் என்று கண்டுபிடித்த பிறகு அவற்றை ஒன்றாக இணைக்கத் தொடங்கினர். ஒரு கம்பெனி அலுவலகத்தில் உள்ள எல்லாக் கணினிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, அந்த அலுவலக விபரங்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைப்பதற்கு வழிசெய்யப்பட்டது. ஒரே இடத்தில் உள்ள கணினிகள் தங்களுக்குள் விபரங்களைப் பரிமாறிக்கொண்டிருப்பதற்குமேல் போய், பல இடங்களிலுள்ள கணினிகளையும் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளச் செய்யலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, கணினிகளின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்பமாக இணையம் உருப்பெற்றது.
இணையம் தோன்றியவுடன் உலகெங்கிலும் செய்திகளைப் பரிமாறிக்கொள்வது மிக வேகமாக நடந்தது. இணையத்தின் ஓர் அங்கமாக, தனி மனிதர்களுக்கிடையே செய்திகளைப் பரிமாறிக்கொள்ள மின்னஞ்சல் தோன்றியது. அதையொட்டி 1974-77களில் தனித் தனியாக ஒவ்வொருவரும் உபயோகிக்கத் தக்க தனிமனித கணினிகள் பெருமளவில் சந்தைக்கு வந்தன. இந்தத் தனிமனிதக் கணினிகள் உபயோகத்திற்கு வந்த புதிதில் அளவில் மிகப் பெரியதாக இருக்கும். அவற்றை ஒரு இடத்தில் நிலையாக வைக்க வேண்டும். கணினிகளின் அடுத்த தலைமுறை மடியில் வைத்துக்கொள்ளக் கூடிய, எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய மடிக் கணினிகளாக (laptop) உருப் பெறத் தொடங்கின.
இணையத்தின் பகுதியாக, தகவல்களைப் பதிவு செய்யவும் உலகில் எங்கிருந்தும் அவற்றைப் பெறவும் அகில உலக இணையத்தளம் (world wide web) அமைக்கப்பட்டது. இருந்த இடத்தில் இருந்தபடியே உலகின் எந்த மூலையிலிருந்தும் விஷயங்களைச் சேகரிக்க இந்த இணையத்தளம் உதவுகிறது. இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக இப்போது ஃபேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் என்று பல வகை இணையத்தளங்கள் தோன்றியுள்ளன.
தொலைப்பேசிகளின் வழித்தோன்றல்களாகத் தொடங்கிய செல்போன்கள், இப்போது கணினியின் தொழில்நுட்பத்தோடு சிறு கணினிகளாகவும் பணியாற்றத் தொடங்கியுள்ளன. வீட்டிலிருந்தபடியே உலக வலைத்தளத்திலிருந்து திரைப்படங்கள், பாட்டுகள் ஆகியவற்றையும் கணினிக்குள் கொண்டுவந்து பயன்படுத்தலாம். மனிதனின் கற்பனைத் திறனுக்கும் ஆக்க சக்திக்கும் அளவே இல்லை என்பதுபோல் கணினி பல உருவங்களை எடுத்து வருகிறது.
கணினியினால் மனித இனத்திற்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகளைப் பற்றிக் கூறி மாளாது. ‘மின்னஞ்சல் கண்டுபிடித்தவர் வாழ்க’ என்று ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது நான் கூறாமல் இருப்பதில்லை. கடிதம் எழுதுவதில் உள்ள சிரமங்களில் பல, மின்னஞ்சல் எழுதுவதில் இல்லை. நாம் நினைத்த நேரம் அதை எழுதலாம். அதைப் படிப்பவர்கள் அவர்களுக்கு வசதியான நேரத்தில் அதைப் படிக்கலாம். தொலைப்பேசியில் ஒருவரோடு தொடர்பு கொள்ளும்போது கூட நாம் தொடர்புகொள்ள விரும்புபவர்களுக்கு இது சரியான நேரமா என்று யோசிக்க வேண்டியிருக்கும். மின்னஞ்சலில் இந்த மாதிரியான எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கடிதங்கள் மட்டுமின்றி இசையும் படமும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடிகிறது. உலகின் எந்த இடத்தில் இருக்கும் விஷயங்களையும் சில நொடிகளில் நாம் இருக்கும் இடத்திற்குக் கொண்டுவந்து விடலாம்.
எண்களை மட்டுமே கையாளுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட கணினிகள் இப்போது எல்லா விஷயங்களையும் கையாளுகின்றன. சென்ற வாரம் அமெரிக்காவில் நடந்த ஜெப்படி (Jeopardy) என்னும் பொது அறிவைச் சோதிக்கும் போட்டியில் உலகப் புகழ்பெற்ற இரண்டு வீரர்களோடு கணினி போட்டியிட்டு அவர்களை வென்றுவிட்டது. அந்தச் செய்தியை வெளியிட்ட நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை “மனிதனைக் கணினி வென்றுவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தது. அதே தினத்தில் அதே பத்திரிகையில் இதே செய்தியை ஐ.பி.எம். என்னும் கணினி நிறுவனம், “மனிதன் வென்றுவிட்டான்” என்று விளம்பரப்படுத்தியிருந்தது சுவையாக இருந்தது. மனிதனை வென்ற அந்தக் கணினியை உருவாக்கியவன் மனிதன்தானே! அதைத்தான் ஐ.பி.எம். விளம்பரம் கூறியிருந்தது.
மனிதனை வென்ற இந்தக் கணினியை உருவாக்க ஐ.பி.எம். ஐந்து ஆண்டுகள் எடுத்தது. இதில் நூறு வருட நியுயார்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்திகள், பல கலைக் களஞ்சியங்கள், கிறிஸ்தவ வேதாகமம் மற்றும் இன்னும் பல தகவல்களை இந்தக் கணினிக்குள் உள்ளிறக்கம் (download) செய்திருந்தார்கள். இது பழைய கணினிகளை விட அளவில் பெரியதாக இருந்தது. இப்படி நிறையத் தகவல்கள் அடங்கிய கணினிகளும் சீக்கிரமே சிறிய அளவில் கிடைக்க ஆரம்பித்துவிடும். அப்போது ஒவ்வொருவரும் உலகச் செய்திகள் அடங்கிய கணினியை எங்கு சென்றாலும் தங்களோடு எடுத்துச் செல்லலாம்.
இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் பரவி வரும் ஜனநாயக உணர்வு, அதனால் அவர்கள் முடியாட்சியை எதிர்த்து நடத்தும் போராட்டம் ஆகியவை, ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் கணினியின் மூலம் கிடைத்த விபரங்களின் விளைவு என்று கூறுகிறார்கள். அந்தக் காலத்தில் புரட்சிகள் ஏற்பட்டபோது அந்தப் புரட்சிகளின் தாக்கம் மற்ற இடங்களுக்குப் பரவாமலே இருந்திருக்கலாம்; அந்தச் செய்திகள் பரவுவதற்குப் பல நாள்கள் ஆகியிருக்கலாம். இப்போது புரட்சி செய்வர்களைப் பற்றி அவர்களுடைய அரசுகள் இருட்டடிப்பு செய்துகொண்டிருக்க, புரட்சியாளர்களின் செல்ஃபோன்கள் அவற்றை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன!
இப்போது அமெரிக்காவில் உடல் உழைப்பு தேவைப்படும் வேலை தவிர (இந்த வேலைக்கும் கொஞ்சமாவது கணினி பற்றித் தெரிந்திருக்க வேண்டும்) மற்ற எந்த வேலையும் கணினித் திறன் இல்லாமல் கிடைக்காது. எந்த வேலைக்கும் கணினியை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். கணினியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. கணினியின் உபயோகத்தை அதிகப்படுத்தும் வழிகளை கண்டுபிடிப்பவர்கள் கோடிக்கணக்கில் பணம் பண்ணுகிறார்கள். கணினியைக் கையாளத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று இரண்டு பிரிவுகள் உண்டாகிவிடுமோ என்று நான் பயப்படுகிறேன். ஆறறிவு இல்லாத விலங்கு இனங்களை மனிதன் ஆட்டிப் படைப்பது போல், கணினி அறிவு படைத்தவர்கள் அது இல்லாதவர்களைத் தங்கள் ஆளுகைக்குள் வைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது. மனித குலம் எல்லாம் ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரே இனம் என்பதையே இன்னும் ஒப்புக்கொள்ளாதவர்கள் உலகில் இருக்கும் நிலையில், ஒரு சமூகத்திற்குள்ளேயே புது ஏற்றத் தாழ்வு ஏற்பட்டுவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.
=====================================
படத்திற்கு நன்றி – http://cultblender.wordpress.com