(மே 7 – 13, 2012)  

திவாகர்

சில்லறை விஷயங்கள் என்பதாக ஒரு நகைச்சுவை கட்டுரை ஒன்றினை சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ‘குமுதினி’ 1933 இல் ஆனந்த விகடனில் எழுதி இருந்தார். சின்ன சின்ன விஷயங்களில் நாம் கவனம் செலுத்துவதில்லை என்பதைப் பற்றி நகைச்சுவையாகவும், அதே சமயத்தில் அதில் உள்ள முக்கியத்துவத்தையும் பற்றிய செய்திகளும் அந்தக் கட்டுரையில் இருக்கும். கல்கி மிக விரும்பிப் படித்த கட்டுரையாக பின்னாளில் ஒரு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்..

சரி, எதற்கு வருகிறேன் என்றால் இதோ மே மாதம் முடிந்து ஜூன் வந்தாகி விடும். பிள்ளைகளும் மறுபடி தன் சுமைதாங்கியான மூட்டைகளை சுமந்து கொண்டு, தூக்கி தூக்கிகளோடு பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஒரு காலத்தில் நான் சரியாகப் படிக்கவில்லையென்றால், ‘அடேய்.. ஒழுங்காப் படிக்கலேன்னா அவ்வளவுதான், நீ மூட்டை தூக்கித்தான் புழைக்கப்போறே!’ என்று என் தாத்தாவிடம் வசவு வாங்கியது ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால், இப்போதெல்லாம் ஒழுங்காகப் படிப்பதற்கே நம் குழந்தைகள் அந்த பிஞ்சு முதுகில் பெரும் சுமையாக மூட்டைதூக்கிச் சுமந்து கொண்டு பழக்கப்படுத்தி விடுகிறோம். காலத்தின் கொடுமைதான் என்னே!

இந்த நேரத்தில் அட்லாண்டாவில் இருந்து ;அவ்வை மகள்’ திறந்த மனதுடன் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சில யோசனைகளை ‘செரியாத கல்வியின் சுமை’ என்ற கட்டுரைத் தொடர் வாயிலாக சொல்லியிருக்கிறார்.

https://www.vallamai.com/paragraphs/20091/

நாம் சிந்திக்கக் கூடிய புது வழி, கல்வி சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், அனைவரது சிரமங்களையும், குறைத்து அவர்களது வழிமுறைகளை இலகுவாக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது அடிப்படை. இவ்வாறான புது வழி கண்டுபிடிக்கும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை யாவை என்பதை நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அவையாவன:

(1) நோட்டுப் புத்தகங்கள் வசதிக் குறைவை ஏற்படுத்துகின்றன.

(2) நோட்டுப் புத்தகங்கள் சுமையை உண்டாக்குகின்றன

(3) நோட்டுப் புத்தகங்கள் தாட்களாலேயே ஆனவை.

ஆக, சுமை ஏற்படுத்தாத, தாட்களாலேயே, ஆன ஆவண ஆதாரங்களை நாம் நமது குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

இதனைச் செய்ய அதிக மூலதனமும் தேவைப்படக் கூடாது என்பதும், எல்லா மாணாக்கர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இது எளிதாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

இவ்வாறு நம் சிந்தனையைச் செலவிட்டோமேயானால் ஒரு வழி புலப்படுகிறது:

ஒரு பைண்டர் (ஃபைல்போல்டர்) கொண்டு ஒரு குழந்தையின் அன்றாட நோட்டுப் புத்தகத் தேவையை நாம் சமாளித்து விட முடியும்! குழந்தை படிக்கும் வகுப்பு எதுவாகினும் இம்முறை சரிவரும் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படி பல வழிகளைத் தன் கட்டுரையில் கூறியிருக்கும் இவரது சமுதாய நோக்கு பாராட்டத்தக்கது. ஏனெனில் தற்போதைய பாடத்திட்டம் (அது சரியோ, சரியில்லையோ) ஏகப்பட்ட நூல்களைப் படித்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் சுமையைப் பற்றி பலரும் கண்டிக்கின்றனர்தாம். ஆனால் சிலர்தாம் இதற்கு தீர்வாக சில வழிகளைக் காண்பிக்கிறார்கள். குழந்தைகளின், அதுவும் கல்வி கற்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இவர் எழுதிவரும் இந்தக்கட்டுரையும், அதன் தன்மையும் ஒன்றே இவரை சென்ற வார சாதனையாளராக மகிழ்வுடன் தேர்ந்தெடுக்கவைத்தது.

ஒவ்வொரு வருடமும் தம் குழந்தைகளுக்காக புதுப்புது புத்தகங்களை வாங்குவது என்பது சர்வ சாதாரண விஷயமான ஒரு சில்லறை விஷயம்தான். ஆனால் அது சுமையாகி விட்ட இந்தக் கால கட்டத்தை பெற்றோர் உணரவேண்டி அதற்கான மாற்று நடவடிக்கைகளில் இறங்கவேண்டும். அதுதான் அவ்வை மகள் எழுதி வரும் கட்டுரையின் குறிக்கோள்.

வல்லமை சார்பாக அவ்வை மகள் அவர்களுக்கு ‘சென்ற வார சாதனையாளர் விருது’ கொடுத்து கௌரவிக்கின்றேன். அவர்தம் பணி தொடர்ந்து மாணவச் செல்வங்களுக்குக் கிடைக்கட்டும். வாழ்த்துகள்.

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “வல்லமையாளர் விருது !

  1. எதிகால சமுதாயத்தின்பால் கவலை கொண்டு. அதை உயர்த்த எண்ணி தன் பங்களிப்பை செய்து வரும் அவ்வை மகளுக்கு இவ்விருது மிகப்பொருத்தமானது. அவ்வை மகளுக்கு எனது நல் வாழ்த்துக்கள். இவரைப் போல், நாம் அனைவரும், நாம் சார்ந்திருக்கும் துறைகளில் இருக்கும் குறைகளைக் களைய சிந்திப்போம், உழைப்போம்.

  2. வாழ்த்துக்கள் அவ்வை மகளுக்கும் பொருத்தமாய்த் தேர்ந்தெடுக்கும் திவாகருக்கும் 

  3. வல்லமையாளர்,
    வல்லமைமிக்க சகோதரி அவ்வைமகளுக்கு
    வாழ்த்துக்கள்…!
                             -செண்பக ஜெகதீசன்…

  4. இந்த விருது விஜயதிருவேங்கடம் ஐயா அவர்களுக்கே உரித்தாகுக!

    அன்று வெள்ளென விடிந்த காலை, கணினிக்குள் நுழைகிறேன்
    “வாழ்த்துக்கள்!” என்றார் திருமதி பவளசங்கரி
    எதற்காய் என்றேன் –இணைப்பு அனுப்பினார்.
    பார்த்தேன் – அதிர்ந்தேன்  
    வல்லமை வார விருது 
    எனக்கு? எனக்கு? எனக்கா இது?  
    சூடாய்க் கேள்வி: “ரேணு எப்படி இது? அந்ததத் தகுதி உனக்கு????”
    சுடச் சுட “இல்லை!”  என்றே வந்தது  விடையும்

    திவாகரத் தேர்வில் விறுவிறுப்பாய் விருது வர
    சுறுசுறுப்பாய்ப் பாதை போனது பின்னோக்கி!
     
    எங்கோ நானுண்டு என வேலையுண்டு என ஓரமாய் ஒதுங்கி இருந்தவளை 
    வல்லமை எனும் பண்பணியில் இழுத்துவிட்டவர் திரு விஜயதிருவேங்கடம் ஐயா அவர்கள்!
    “யாரிந்தப் பெண் இத்தனை நன்றாய்த் தமிழ் பேசுகிறாரே!” என்று வானொலி   இயக்குனராய் இருந்தபோது அறிவியல் நிகழிச்சி அதிகாரி திரு செல்வகுமார்  அவர்களைக் கேட்டிருக்கிறார்.  திரு செல்வகுமார் அதனைப் பின்னாளில் ஒருநாள்  என்னிடம் பகிர்ந்து கொண்ட போது அவருக்கு என் வணக்கத்தை – நன்றியைத் தெரிவித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தவள் தான்.  
    ஆனால், இந்த மனிதரை வேறெப்போதும் சந்திப்போம் என்று எண்ணவில்லை! ஆனால் இன்னொரு சமுதாய வானொலியில் மீண்டும் தொடர்ந்த பணியில்– தொடர் சந்திப்பு! – அதுவும் சிறிது காலமே!
    ஆனால் எப்போதாவது அவர் நினைப்பு கட்டாயம் வரும். தொலைபேசியில் பேசுவேன் நலம் விசாரிப்பேன் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே. 
    ஐயா என்ன நினைத்தாரோ – அவரது அமெரிக்க வருகையின் போது, தொலைபேசியில் ஒரு முறையும், கூகுள் டாக்கில் சில முறைகளும் பேசிய காலையில்   நீங்கள் தமிழகத்தில் கல்வி சீரடைய ஏதேனும் செய்யவேண்டும் என்றார். 
    சொல்லுங்கள் எவ்வாறு என்றேன்! 
    என்ன நினைத்தாரோ, சொல்லுவேன் என்றார்.
    அவர் தாயகம் திரும்பிய பின்னர்  கூகுள் டாக்கில் கேட்டேன் அவரிடம் அதே கேள்வியை: சொல்லுங்கள் எவ்வாறு என்றே!
    “முதலில் வல்லமையில் எழுதுங்கள்!” என்றார் 
    அந்தப் பெரியவரின் – பண்பாளரின் பிள்ளையார் சுழியில் தொடங்கிய தொடர் இது!
    சொல்லப்போனால் அவர் சொல்லவில்லை என்றால், வல்லமை பற்றி நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
    எல்லாப் புகழும் அவருக்கே! இந்த விருது விஜய திருவேங்கடம் ஐயா அவர்களுக்கே உரித்தாகுக!
    விஜய திருவேங்கடம் ஐயா அவர்கள் சும்மா எவரையும் சுலபத்தில் பாராட்டிவிடும் தன்மையவர் அல்லர்.  அவரிடம் தகுதிச் சான்றிதழ் பெறுவது சுலபமான விஷயமல்ல.
    இவர் வியக்குமாறு எனது தமிழ் ஆளுமை இருந்ததென்றால் –
    நான் போற்ற வேண்டியவர்கள்:
    முழுமுதல்வர்கள்: என் பெற்றோர்கள்: வீட்டில் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என உறுதியாய் நின்றவர்கள்.
    அடுத்து: 
    (1) என் பள்ளிக்கூடத் தமிழ் ஆசான் மணிவாசகன் (ஒரே ஒரு ஆண்டு தான் படித்தேன்).  
    (2) எஸ் ஐ இ டி கல்லூரி முதல்வர் ராஜம் கிருஷ்ணன் – இரண்டு ஆண்டுகள் என்னைத் தமிழ்மன்றச் செயலராக நியமித்தவர்.
    (3) வேதியியல் மாணவியான நான் என்னுடன் படிக்கும் மாணவிகளுக்குத்   தமிழ்ப் பாடம் நடத்தவேண்டும் என்று பணித்த என் கல்லூரித் தமிழ் ஆசிரியை கனகம் (முரட்டு மிஸ் என்று எஸ் ஐ இ டி பிரபலம்) என்பால் மட்டும் ஏன் அத்தனைக் கனிவு?    
    (4) சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் இ ஆர் பி சண்முகசுந்தரம். (பேசியதில்லை – பார்த்து – கேட்டு மட்டுமே பரவசம் அடைந்தேன் – ஒரே ஒரு நிகழ்ச்சியில்): மாநிலக் கல்லூரியில் நடந்த வேதியியல் கழக விழாவில், தமிழில் நான் படைத்த வேதியியல் ஆய்வுக் கட்டுரையை ஓஹோ என்று பாராட்டி என்னை உற்சாகப் படுத்தியவர். (விழா முடிந்து அவரைப் பார்க்கவேண்டும் என நினைத்தேன் ஆனால் சந்திக்க இயலவில்லை. )
    (5) மறைந்த தமிழ் எழுத்தாளர், பெரியவர், தாமரைமணாளன் (வாசுகி இதழில் என்னைத் தொடர்ந்து எழுதப் பணித்தவர்)
    (6) ஐக்கிய எழுத்தாளர் சங்க நிறுவனர் திரு தியாகராஜன் (எனது முதல் நூலை, சிறந்த நூலாய் அங்கீகரித்தப் பேராளர்)
    (7) ஆன்மீகப் புரட்சி அறிவியலாளர் குன்றக்குடி அடிகளார். 
    இப்போது சொல்லுங்கள்!
    இங்கு எனது படைப்பு எவரால் நிகழ்ந்தது? தானாய் நானே தானா?
    தமிழன்னையின் பொற்பாதங்களில் வணங்கி, என்னையும் கூட ஒரு பொருட்டாக நினைத்து நேரிடையாகவும் , மறைமுகமாகவும் உற்சாகப் படுத்தியிருக்கிற, அனைத்து உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிககளைக்  காணிக்கையாக்குகிறேன்.   

         
      

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.