அவ்வை மகள்

இங்கு பள்ளிகளுக்குள் பன்றி வரும், நரி வரும்!!

பத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் பற்றி இரு வாரங்களாக நாம் தொடர்ந்து பேசிவருகிறோம் ஏனெனில் பிரச்சனையின் தீவிரம் அத்தகையது.

நாம் இவ்விஷயத்தில் இதுகாறும் பேசியிருக்கிற விஷயங்களை ஒரு துரித மீள்பார்வையாகப் பார்த்து விட்டு மேலே தொடருவோம்:

 (1)    குழந்தைகளின் பாடப்புத்தகங்களைக் குழந்தைகள் வீட்டிலிருந்து தாமே பள்ளிக்குச்  சுமந்துகொண்டு சென்று கற்கவேண்டிய  நிலையை முற்றிலும் ஒழித்து, ஒவ்வொரு வகுப்பிலும், அந்தந்தப் பாடத்திற்கானப் புத்தகங்களை, ஆளுக்கொரு புத்தகம் என்ற வகையில், ஒவ்வொரு நாளும், குழந்தைகளுக்கு வகுப்பறையில் வழங்கி, பள்ளிகள் கல்வி போதிக்கவேண்டும்.  

(2)    நோட்டுப்புத்தகங்களை அறவே ஒழித்து, ஒரே ஒரு பைண்டர் கொண்டு, அனைத்து நோட்டுப் புத்தகத் தேவைகளையும் அதில் அடக்கவேண்டும்.

(3)    வீட்டுப்பாடப் பரிமாற்றத்திற்கு என ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு பாடத்திற்குத் தலா ஒரு பைல் போல்டர் என ஆசிரியர் நிர்வகித்து, அந்தந்த  பைல் போல்டரின் வழியே, வகுப்பறையில்  திருத்திய வீட்டுப் பாடத்தை அளித்தும், பெறவேண்டிய வீட்டுப் பாடத்தைப் பெற்றும் பரிவர்த்தனை செய்யவேண்டும்.   

இவ்வாறான ஏற்பாட்டால், குழந்தைகளின் சுமையும், பெற்றோர்களின் சுமையும், வண்டிவாகனங்களின் சுமையும், குறைவதோடு, விபத்துக்கள் தவிர்க்கப்படுவதும், மிகக் குறிப்பாக, குழந்தைகளின்,  Posture  என்று சொல்லக்கூடிய “முதுகுத்தண்டுவடச் சீர்மை” கேடடையாமல் காக்கப் படுவதும் முக்கிய பலன்களாகக் கிடைக்கின்றன என்பதால் இவ்வேற்பாடுகளை, நாம் தாமதியாது, உடனடியாகத் தழுவ வேண்டுமென்பது முக்கியமாகிறது.   

அடுத்ததாக, லாக் புக், அட்லஸ், டிக்ஷ்னரி, போன்ற இத்யாதிகளுக்கு வருவோம். சமையலில் உப்பு, புளி, மிளகாய் போல் இவையாவும், கல்விபோதனையில் அடிப்படை விஷயங்கள்! பாடப்புத்தகங்களாவது, நான்காண்டுகளுக்கொரு முறை மாறும்; லாக் புக், அட்லஸ், டிக்ஷ்னரி – இவை மாறுவது எப்போது? இவை அடிப்படையான பொதுக் கல்விப் பொருட்கள் என்றாவதால் இவற்றைக் குழந்தைகள் பள்ளிக்குச்  சுமந்துகொண்டு வந்துதான் வகுப்பறையில் பயன்படுத்தவேண்டும் என்கிற ஏற்பாடு அடிப்படையிலேயே ஆதாரமற்ற செயலல்லவா?   குழந்தைகளுக்கு, பள்ளிக்கான கல்வியில், இப்பொதுப் பொருட்கள் பள்ளியிலேயே வழங்கப் படவேண்டும் என்பது பள்ளிகள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய தார்மீகக் கடமைப் பொறுப்பல்லவா? இவையாவும் ஒவ்வொரு வகுப்பறையிலும் கட்டாயம் இருந்தே ஆகவேண்டுமல்லவா?

 

இந்த வினாக்களை சிலபல ஆசிரியர்களிடம், சிலபல தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, “பசங்க கிழிச்சுப்புடுவாங்க, இதையெல்லாம் வாங்கிப்போட்டுக் கட்டிப் படியாகாது!” என்று ஒன்றே போல் கூறினார்கள்.

இவர்களது சிந்தனாசக்தி எப்படி ஒன்றேபோல் அடிமட்டநிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை!  

பள்ளிகளுக்கிருக்கும் வசதி வாய்ப்புகளுக்கு, இன்றைக்கிருக்கிற தொழில் நுட்ப வளர்ச்சிக்கு, அட்லஸ், லாக் புக் போன்றவற்றை, ஒவ்வொரு பக்கமும்  லேமினேட் செய்ய முடியும். இவையாவும் ஒரு முறை ஒரே ஒருமுறை முதலீடுகள், வேலைகள்! லேமினேட் செய்து விட்டால், வருடக்கணக்கில் புதுகல் குறையாமல் இவை உழைக்கும். 

அடுத்து அகராதிகளுக்கு வருவோம்-

பொதுவாகவே, ஒழுங்கான பதிப்பாளர்கள், அச்சீட்டாளர்கள் வெளியிடும் அகராதிகள்,  உயர்தரத்தாளில் அச்சிடப்படுகின்றன; தரமான அகராதிகள் பொதுவாக மூன்று  தலைமுறைக்கு பழுப்படையாதவை சிதிலமடையாதவை. 

கடப்பாட்டு உணர்வோடு, இவ்வகை உயர்தர அகராதிகளை வாங்கி, வகுப்பறையில், மாணாக்கருக்குத் தலா ஒவ்வொன்று  என்ற எண்ணிக்கையில் பள்ளிகள் வைக்கவேண்டும். அகராதிகளை அடிக்கடி உபயோகித்தாலும் கூட அவற்றின் அட்டை, சுளையிலிருந்து நெகிழும் ஒரே ஒரு பிரச்சனை நேருமே தவிர, மற்றபடியான பிரச்சனைகள் வராது. நம்மூரில் பாரம்பரியமாகவே நல்ல “பைண்டிங்” தொழில்நுட்பம், சர்வசாதாரணமாய், தாராளமாகவே கிடைக்கிறது. முறையான அச்சுக்கூடங்க்ளை அணுகி, இந்த அகராதிகளுக்கு, பைண்டிங்கை உறுதியாக்க முடியும். மேலும், ஆண்டுக்கொருமுறை, கோடை விடுமுறையில் அகராதிகள் அனைத்தையும் மேற்பார்வை செய்து, தொடர்ப் பராமரிப்பு செய்ய முடியும்.

அகராதிகள் வாங்குவது ஒருமுறை முதலீடுதான். அதிக எண்ணிக்கையில் அகராதிகளை வாங்க முன்வரும்போது, பதிப்பகத்தினர், விலையைக் கொஞ்சம் குறைப்பதோடு, தவணைமுறையிலும் கூடப் பணம் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொள்வார்கள்.

இவ்வகையான ஏற்பாடு, குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் எத்தனை நிம்மதியைத் தரும் என்று எண்ணிப் பாருங்கள்! அதுவும் இந்த ஏற்பாட்டைப் பள்ளிகள் ஏதோ தான தர்மமாகச் செய்யபோவதில்லை. தமது முறையான செய்ல்பாட்டுக்காய் அவர்கள் கட்டாயம் வேண்டிய செய்து கொள்ளவேண்டிய ஏற்பாடாகும் இது.      

வீட்டிற்கு வேண்டிய லாக் புக், அட்லஸ், டிக்ஷ்னரி போன்றவற்றைப் பெற்றோர்கள் தாமே ஏற்பாடு செய்து கொள்வார்கள். இந்த வீட்டுத் தேவையைப் பள்ளி நிறைவேற்ற வேண்டும் என்று யாரும் கோரவில்லை.

அடுத்ததாக, வகுப்பறைகளின் அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு வருவோம்.

நமது பள்ளிகளில் வகுப்பறைகளின் அமைப்பு கல்வி கற்பதற்கு ஏற்றவாறு இல்லை. கல்வி போதிக்கப்படும்போது, மாணாக்கர்கள அனைவரும் கற்றலில் ஈடுபடுவதற்குத் தோதான வகையில், வகுப்பறைகள் அமைந்திருக்கவேண்டும் என்கிற அடிப்படைக் கூறுகூட இல்லாத நிலையில்தான் பல பள்ளிகளும்!

வீட்டில், அறைகள் அமைக்கும்போது, சில அளவீடுகளை முக்கியமாகக் கருத்தில் கொள்வது உண்டல்லவா? அதே அளவீடுகளான, அறையின்  அகல, நீள, உயரங்கள், பகல்நேர  வெளிச்சம், காற்றோட்டம், ஒலி-எதிரொலி இயல்பு, வண்ணப்பூச்சு நிறம் ஆகியனவற்றை, வகுப்பறை அமைப்பிலும் கொள்ள வேண்டும்.  

விளக்குகளைக் காட்டிலும், அறைக்குள் இயல்பாயப் பிரவேசிக்கும் இயற்கை சூரிய வெளிச்சம் கற்றலுக்கு உந்துசக்தியாக இருக்கிறது என்கிற ஒரு பிரபல கண்டுபிடிப்பு 1944ல் வெளிவந்த பிறகு, இங்கிலாந்தில், சூரிய ஒளி உள்ளே வாராத வகையில் பள்ளிவகுப்பறைகளை அமைக்கமுடியாது என்று அரசாணையும் பிறப்பிக்கப் பட்டது. அந்த ஆணையின்படி  பள்ளிப் பணி நேரம் முழுமையும், பருவங்கள் யாவிலும் இயற்கை வெளிச்சம் வருமாறு வகுப்பறைகள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். மழைக்காலப் பருவ நிலையிலும் கூட குறைந்த பட்சம்  2%  இயற்கை வெளிச்சம் இருக்கவேண்டும் என்கிறது  அந்த ஆணை    

அந்நாளிலிருந்து, வகுப்பறைக்குள் சீரான வெளிச்சம் வருவதற்காக வடக்குத்  திசையில் ஜன்னல்கள் அமைப்பது உலகெங்கிலும் பள்ளிக் கட்டிட அமைப்பில் பின்பற்றப்படும் வழக்கமானது, வெப்ப மண்டல நாடுகளில், காற்றோட்டத்திற்காக, வடக்கு ஜன்னல்களுக்கு வாகாகத் தெற்கிலும் மேற்கிலும் ஜன்னல்கள் அமைப்பர். இவ்வகையான ஏற்பாட்டால், காற்று உள்வந்து, தேங்காமல் வெளியேறும் தொடர் சலனமும், சீரான இயற்கை வெளிச்சச் சூழலும், வகுப்பறைக்குள் உறுதிப் படுத்தப்பட்டன.    

இதோடு, வகுப்பிற்குள் வந்து போக ஆபத்தற்ற தாராள வாசற்படிக் கதவு, அவசர வெளியேற்றத் துணை வழி (emergency exit) ஆகியனவற்றோடு கணிசமான உயரம், நீள அகலங்கள் கொண்ட ஆரோக்கியமான வகுப்பறைகள் முறைப்படி அமைக்கப் பட்டன.  

ஆபத்துக் காலங்களில், வகுப்பறையை விட்டு, பள்ளியை விட்டு எவ்வாறு வெளியேவது என்கிற வரைபடம் எல்லா வகுப்பறைகளிலும் பிரதான இடத்தில், பளிச்சென மாட்டப் படவேண்டும் என்பதும் கட்டாயமானது.  இதற்கான பயிற்சியும் மாணவர்களுக்குத் தரவேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது.

பள்ளிக்கூட வகுப்பறைகள் தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டு அடைப்பதற்கோ, அல்லது காய்களைப் பழுக்கப்போடுவதற்கோ பயன்படுத்தப்படும் அறைகள்  அல்லவே என்பதனை உணருமாறு செய்யும் அதே வேளையில், பள்ளிக்கூட வகுப்பறைகள் என்பன  ஞான பீடங்கள் என்பதனை இந்த உலகப் பொது ஏற்பாடுகள காட்டுகின்றன.

தளிர்த்தெழும் துளிர்க் கொழுந்துகளாய் மனித உயிரிகள், கற்றல் எனும் சிந்தனைப் பேராற்றலை உற்பத்தி செய்தவாறு, ஞாபக சக்தி (recall and recognition), புரிந்து கொள்ளல் (understanding), திறன் ஆய்வு  (skill),  உளப்பாங்கு (attitude), தொகுத்தல் (synthesis), பகுத்தல்  (analysis), கட்டுரைத்தல் (interpretation), விரித்துரைத்தல் (extrapolation) ஆகிய அறிவுப் பணிகளை நிகழ்த்தியவாறு, உடல் வளர்ச்சியோடு, உள மலர்ச்சியும், ஞான எழுச்சியும் பெற்று மனித குல இளவல்களாய், உருவாகின்ற இறையுறைத் தலங்களையொத்த புனிதம் கொண்டவை வகுப்பறைகள் எனும் இறையாண்மையும் இங்கே காட்டப் படுகிறது.          

சந்தைக்கு நடுவிலும், மும்முரமான போக்குவரத்துக்கு மத்தியிலும், வீடுகளுக்கு இடையிலும், மருத்துவமனைக்கு அருகிலும், ஆலைகளுக்குச் சேய்மையிலும், மதுபானக் கடைகளின் பார்வையிலும், சினிமா அரங்குகளின் வட்டாரத்திலும், பள்ளிகள் அமையக்கூடாது என்பதிலே உலகப் பொது நியதிகள் உள்ளன.    

அமைதி, தூய்மை, நிரம்பிய விசாலமான இடங்களில், சுற்றிலும், காலி இடங்கள் விடப்பட்டு, தொந்திரவற்ற ஆனால் பாதுகாப்பான இடங்களில், பொறுத்தமான இயற்கைச் சூழலில், முறைப்படி கட்டப்பட்ட பாதுகாப்பான கட்டிடங்களில் மட்டுமே பள்ளிகள் இருக்க முடியும், இயங்க முடியும். அங்குள்ள தாவரங்கள் நச்சுத் தன்மை அற்று, முள் இல்லாதனவாய் இருக்கவேண்டும் என்பதும், மேலும குழந்தைகள் எதேச்சையாக விளையாட்டில் மூக்கு, காது போன்ற உறுப்புக்களில், நுழைத்து, ஆபத்து ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய, கொட்டைகள், கனிகள் தராதனவாய் அங்கு தாவரங்கள் இருக்கவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.      நாய், பூனை போன்ற மிருகங்கள் கூடப் பள்ளிக்குள் தடை செய்யப்பட்டன.

ஆனால் ஐயகோ! நம் நிலையோ வேறு!! பள்ளிகள் எங்கும் இருக்கலாம், எதிலும் இருக்கலாம் என்றவாறு குழந்தைகளை உதாசீனமாகவே கையாளத் தொடங்கி ஆண்டுகள் பலவாகி விட்டன.

வெளிவந்த கும்பகோணக் கதை ஒன்று ஆனால் வெளித்தெரியாத அவலங்கள் ஓராயிரம்! ஜாம்பஜாரின் சந்தைக்கு இடையிலும், பூக்கடையின் சாக்கடைச் சகதியிலும், கூவத்தின் ஓரத்திலும், ஆபத்தான பாலங்களுக்கு அருகிலும், காட்டு யானைகள் மிரட்டும் எட்டத்திலும், தூசி மண்டும் தொழிற்கூடச் சந்திலும், சாராயக் கடையின் சாரத்திலும், அலறும் ரயில்வே ஓரத்திலும், பள்ளிகள் விரவிக் கிடக்கின்றன! இங்கு பள்ளிகளுக்குள் பன்றி வரும், பாம்பு வரும், நரி வரும், நாயும் மாடும் நிறையவே வரும்.  

ஆங்காங்கே கல்வி எனும் வட்டாரம் ஒட்டிப் பரச்சனைகள் பலப்பல!! பத்திரிகைகளின் கவனம் பெற்று, புகழ்பெற்ற டிவி சேனல்களில் வந்தாலொழிய அவை எவையும் வெளித் தெரிவதில்லை. அவ்வாறு வெளித் தெரிபவை பத்தாயிரத்தில் ஒன்று தான். தனிமனிதர்களின் இயலாமையாலும் சங்கோஜத்தாலும், வலுக்கட்டாயமாய் விழுங்கப்பட்டு பல நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுகின்றன.

இம்மாதிரி விஷயங்களை மூடி மறைப்பது கூடாதுதான். ஆனால் பெரும்பாலோர் நடக்கும் (அல்லது தனக்கு நடந்த) விஷயங்களை வெளியில் சொல்ல பயப்படுவதன் காரணம், வெளியில் சொன்னதாலேயே அவர்கள் அனுபவிக்கிற (அனுபவிக்கப் போகின்ற) துன்பத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தான்.

ஸ்கூல் பஸ்சில் சென்றக் குழந்தையின் உடலில் அமிலம் வீழ்ந்தும், நைசாய்க் கழன்று கொண்ட பள்ளியின் சாகசக் கதை – அதைக் கேட்கவே எனக்கு நடுக்கம் வந்தது!!  அக்குழந்தையைப் போல் எத்தனையோ மவுனிகள்!!   அவளது பெற்றோரைப் போல எத்தனையோ வாய் செத்த பூச்சிகள்!

கல்வியால் விடிவு வரும் என்று பார்த்தால் இந்தப் பாழாய்ப் போன கல்விக்கு என்று விடிவு என்பதாய் நம் நிலைமை!

மேலும் பேசுவோம்

 

புகைப்படங்களுக்கு நன்றி:

 

http://i.telegraph.co.uk/multimedia/archive/00799/PD23754144-cow-scho_799981i.jpg

http://www.vri-online.org.uk/photos/india-charity-school-children.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செரியாக் கல்வியின் சுமை-16

  1. ஆத்மார்த்தமாக எழுதப்படும் தொடர். திருமணம் முடிந்து தொலை தூரம் சென்று வாழ்ந்தாலும், எங்கோ கிராமத்தில், வறுமையில் உழலும் தாயைப் பற்றியெண்ணிக் கவலையுறும் ஒரு மகளின் பாசத்தோடு, நம் தாய் நாட்டு மாணாக்கர்களின் நிலையை சிந்தித்து எழுதப்படும் ஒரு அருமையான கட்டுரை. இணையத்தில் வெளியிடப்படுவதால், பட வேண்டியவர்கள் கண்ணில் பட்டு, ஒன்றிரண்டு ஆலோசனைகளாவது நிறைவேற்றப்படுமென்று நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *