திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-7)
விஜயகுமார்
தென் கொரியா
இவ்வளவு தொலைவு வந்ததுதான் வந்தோம் அப்படியே கொரியாவையும் பார்த்துவிட்டு செல்வோமே என்று தாய்பெயில் இருந்து கொரியா செல்ல பிளான். அங்கே ஒரு விதமான லைனிங் துணி பிரபலம். அமெரிக்க குளிரில் எல்லோரும் அணியும் ஜாக்கெட் / ஓவர் கோட் நல்லா சூடாய் இருக்க பிளீஸ் பாபிறிக் அங்கே மிக விசேஷம். மேலும் அப்போது தான் பல தென் கொரிய கார் கம்பெனிகள் சென்னை பக்கம் பார்க்க துவங்கி இருந்தனர்.
பத்து நாட்களில் தாய்பெயில் அந்த நிறுவனத்தில் பலருடன் நட்பு மிகவும் வலுப்பெற்றது. வழி அனுப்ப மேலும் ஒரு பெரிய பட்டாளமே கூடியது. கோல்ப் கையுறை, கோல்ப் பந்துகள் என்று பல பரிசுகளை அன்புடன் தந்தனர். அதனுடல் சில சோவேநீர் என்று சொல்லி கிஃப்ட் பேப்பரில் அழகாக சுற்றித் தந்தனர். அன்புடன் தரும் அவற்றை மறுக்க மனம் இல்லாமல் அப்படியே பேட்டியில் போட்டு மூடி விட்டு விடை பெற்றேன்.
விமானத்தில் ஏறியவுடன்தான் அலுப்பு தட்டியது. பத்து நாட்கள் அலைந்த அலைச்சல், அடிச்ச லூட்டி ஒரே அசதி. அப்படியே கண் அசந்தது தான் தெரியும் விமானம் கொரியா வந்தடைந்து ரன்வேயில் டாக்ஸி செய்து நின்றும் விட்டது. அருகில் அமர்ந்திருந்த இருவர் உலுக்கியவுடன் எழுந்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு வெளியில் வந்தேன். எல்லா இடத்திலும் அறிவிப்பு பலகைகள் இருந்தும் ஆங்கிலத்தில் இல்லை. அப்படியே பேந்த பேந்த முழித்துக்கொண்டே இம்மிக்கிரெசன் முடித்து ஒரு வழியாக பெட்டி வரும் பெல்ட்டுக்கு வந்து சேர்ந்தேன். சிறிது தாமதத்துக்கு பிறகு பெட்டிதென்பட்டது. ஆனால் அதன் மேலே, கைப்பிடியில், ஏதோ ஒரு பெரிய மஞ்சள் நிற பிளாஸ்டிக் பூட்டு போல தொங்கியது. என்னடா அது என்று அதன் மேல் கைவைத்தது தான் தெரியும், அடுத்த நிமிடம் அங்கே ஒரே கலவரம்.
AK47 ஏந்திய கமாண்டோ வீரர்கள் நான்கு பேர் என்னை சுற்றி வளைத்தனர், அது போதாதென்று இருவர் கைகளில் பெரிய பெரிய அல்சேஷன் நாய்கள் – தாவி தாவி கழுத்து பட்டைகள் நெருக்க எப்போ பாயலாம் என்று தயார் நிலையில்! இது என்னடா புது சோதனை என்று கைகளை சிறு வயதில் ஐஸ் பாய்ஸ் விளையாடுவது போல் ” நான் அம்பேல் ” என்று தூக்கி நின்றேன்.
சுற்றி இருந்தவர் அனைவரும் என்னை எதோ இப்போது பின் லேடன் பிடி பட்டால் எப்படி பார்ப்பார்களோ அது போல பார்த்தனர்.
முடிவில் ஒருவன் துப்பாக்கியை ஆங்கில பட சண்டைக் காட்சி போலவே என் முகத்திற்கு நேரே பிடித்து பேசினான்.
‘யு இங்கிலீஷ்?’
‘ஐ அம் இந்தியன் பட் டூ ஸ்பீக் இங்கிலீஷ் ‘ என்றேன் – கான்வென்ட் ஸ்கூல் கிராமர் படித்த குசும்போ என்னவோ, ஆனால் கண்டிப்பாக அவன் நான் படித்த கிராமர் பக்கம் கூட போனதில்லை என்று உடனே புரிந்தது.
‘யு இங்கிலீஷ்?’ மீண்டும் கேட்டான்.
‘எஸ்’ என்று சொல்லி விட்டு தலையை வேறு நன்றாக ஆட்டினேன்.
அதற்குள் இன்னும் மூவர் அங்கே வந்தனர். அவர்களும் கமாண்டோ உடையில்
புதியவனிடம் பழைய கமாண்டோ ‘ஹி செ எஸ் , பட் ஷேக் ஹிஸ் ஹெட் அஸ் நோ ‘ என்றான்
அடப் பாவிகளா, இது தாண்ட எங்க ஊர்ல எஸ் தலை ஆட்டம்.
‘யு இ ங் கி லீ ஷ்?’ எதோ நன்னன் சார் பழைய DD யில் தமிழ் கிளாஸ் எடுப்பது போல நிறுத்தி நிதானமாக மீண்டும் கேட்டான்.
நானும் இந்த முறை தலையை “சரியாக” மேலும் கீழும் மட்டுமே அட்டி – தலைவர் ரஜினிகாந்த் ஸ்டைலில் ‘ எஸ் ‘ என்றேன்.
உடனே அவன் என்னை அந்தப் பக்கம் வர சைகை செய்தான். ஒரு பெரிய பாட்டரி வண்டியில் மிகவும் ஜாக்கிரதையாக எனது பெட்டியை எடுத்துக் கொண்டு பின்னால் வந்தனர். அப்போது கூட அருகில் யாருமே வரவில்லை.
சோதனைக்கூடம் போன்ற ஒரு அறையில் என்னை தனியாக விட்டு விட்டு அனைவரும் வெளியில் சென்றனர். எதிரே இருந்த சுவர் முழுவதும் கண்ணாடியால் ஆனது. அதில் நமது இந்தியன் பேங்க் டெல்லெர் கவுன்ட்டர் போல இரு ஓட்டைகள் இருந்தன. அந்தப்பக்கம் அந்த பெட்டி வந்தது.
“ஓபன் இட்” என்ற அதட்டல் குரல் ஸ்பீக்கர் மூலம் கேட்டது.
எழுந்து சென்று, அந்த கண்ணாடியின் ஓட்டையில் கையை விட்டு பெட்டியில் சாவியை போட்டேன்.
‘ஸ்லோ, நோ சடன் மூவ் ‘ என்றது அந்தகக் குரல்.
மெதுவாக திறந்தேன். ஒவ்வொரு பொருளாக எடுத்து வெளியில் வைத்தேன். முடிவில் மிஞ்சி இருந்தது தாய் பெயில் நண்பர்கள் கொடுத்த சொவிநீர் மட்டும் தான். அதை பிரிக்கவே இல்லை நான்.
‘வாட் இஸ் தட் ‘ என்றது குரல்.
‘சம் கிஃப்ட்’ என்றேன்.
‘ஓபன்’ என்றான்
மெதுவாகத் திறந்தேன். உள்ளே ஒரு கார்ட்போர்ட் டப்பா. அதனுள் அழகிய சமுராய் கத்தி – ஆனால் பொம்மை கத்தி. மொத்தமே அரை அங்குலம் தான் – லெட்டர் ஒபனர் !!!!
‘நல்ல ராசி நமக்கும் விமான நிலைய காவலுக்கும்’ என்று நினைத்துக் கொண்டே திரும்பி பார்த்தேன்.
ஆனால், அதற்குள் அவர்கள் வந்து ‘ சாரி ‘ சொன்னார்கள். போதாக்குறைக்கு அனைவரின் முகத்திலும் பெரிய சிரிப்பு வேறு. அவர்களே வெளியில் கூட்டிச் சென்றனர். மீண்டும் சாரி சொல்லி விடை பெற்றனர்.
ஆனால் எனது கஷ்டம் முடியவில்லை. ஹோட்டல் பிக் அப் சர்வீஸ் ஒரு மணி நேரம் நின்றுவிட்டு கிளம்பிவிட்டான். டாக்ஸி எங்கே என்று தேடி தேடி களைத்து விட்டேன். பிறகு திரும்ப உள்ளே சென்று அதே கமாண்டோ விடம் சென்று நிலைமையை விளக்க அவன் டாக்ஸி அடுத்த தளம் – கீழே போ என்றான். செல்லும் முன்னர் ‘ உ ஸ்பீக் குட் இங்கிலீஷ் – உ வெண்ட் டு அமெரிக்கா டு ஸ்டடி?’ என்று கேட்டான். அப்படி இல்லை ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமையாக இருந்ததற்கு ஒரு நல்ல பரிசு என்று விளக்கினேன். அவன் உடனே, “சோ யு நாட் வெரி ரிச். ரேமேம்பர் டு டேக் பப்ளிக் டாக்ஸி அண்ட் நாட் லிமோசீன் டாக்ஸி ‘ என்று. நல்ல அறிவுரை தான். இன்றுவரை அந்த நல்ல அறிவுரை எனக்கு உதவுகிறது – லிமோசீன் கட்டணம் பொது டாக்ஸியையும் விட பல மடங்கு அதிகம்.
அடித்தளம் சென்றால் ஒரே அதிர்ச்சி. அதுவரை டாக்ஸி என்றால் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரில் கருப்பும் மஞ்சளும் கலந்த அம்பாசடர் காரையே பார்த்த எனக்கு – அங்கே எல்லா டாக்ஸிகளும் ஹயுண்டாய் சொனாட்டா ! பள பள என்று மின்னும் கார்கள், கார் டிரைவர் கோட் சூட் போட்டு, கைபேசி என்று தட புடலாக நின்றனர். மீண்டும் ஒரு முறை இவை லிமோசீன் இல்லை என்று ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு ஏறினேன். வெளியில் சென்றால் இந்திர லோகம் சந்திர லோகம் – இரவு பத்து மணி, எங்கும் வண்ண விளக்குகள், பெரிய பெரிய கார்கள். அப்படியே சென்று ஹோட்டலை அடைந்தேன்.
காலை 3.30 க்கு அலாரம் வைத்தேன். ஆம் இன்னும் கடிகாரம் இந்திய நேரத்தில் தான் ஓடியது. நமக்கும் கொரியா வுக்கும் மூன்றரை மணி வித்தியாசம். எப்படியோ அலாரம் அடித்ததும் எழுந்து ஷேவிங் மற்றும் காலைக்கடன்களை முடித்து – ரெடி ஆகிவிட்டு வெளியில் வந்தேன். வெளியே கும்மிருட்டு! நல்ல விண்டர் காலம். சூரியனைக் காணவே இல்லை. மீண்டும் அறைக்குச் சென்று தெர்மல் வியர் பனியன், அதற்கு மேலே முழு சட்டை, அதற்கு மேலே கோட்டையும் போட்டவுடன் தான் உயிரே வந்தது. இரவில் எப்படி குளிரவே இல்லையே என்று நினைத்து பார்க்கும் போது தான் புரிந்தது – நமது குளிர்சாதன பெட்டி போல அங்கே விமான நிலையம், டாக்ஸி எங்கும் காற்றை சூடு பண்ணி உள்ளனர் !!
நான்கு நாட்கள் இந்த குளிரில் எப்படி தாக்குப் பிடிப்பது என்று திகைத்து நின்ற போது தான் – குளிர் தேசங்களில் சூரியனையே பல மாதங்கள் பார்க்க முடியாமல், குளிரில் வெளியில் செல்ல கூட முடியாமல் இருப்பவர்களின் மன நிலை புரிந்தது. எதற்க்காக அந்த டிசம்பர் மாதத்தில் பனி நடுவில் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள் என்றும் புரிந்தது.
காலை பசியாறச் சென்றபோது இங்கே என்ன ஸ்பெஷல் என்று கேட்டதற்கு அவன் டாக் என்றான். அதன் அர்த்தம் பிறகு தான் புரிந்தது. !!
தொடரும்…